ஆர். வத்ஸலா
1. வடை
மறைந்தும் மறையாத
மிளகுடன்
வடை
புரிந்தும் புரியாத
கவிதை போல
2 குக்கர்
இரண்டு குக்கரும்
போட்டியிட்டன
சன்னல் வெளியே
சதா கூவும் குயிலுடன்
வென்று விடுமோ என
அச்சத்தில் நான்
3. வடை – பாயசம்
நேற்று அவர் பிறந்த தினம்
வடையை மிகவும் ரசித்தார்
பாசத்தில் இனிப்பு அதிகமென
முகம் சுளித்தார்
தவறு என்னுடையது
அவருடைய கவிதையை
நான் ரசித்த பின்
வடையும்
ஏதோ ஒரு நப்பாசையில்
எனது
நல்ல கவிதையை
அவரிடம் காட்டிய பின்
பாயசமும்
4. நார்
அந்த பாத்திரத்தை
எனக்கு
பிடிக்காது
காரணம் தெரியாது
உருவமாயிருக்கலாம்
அது வாங்கி வந்த அன்று
மகன் தனிக்குடித்தனம் போகப் போவதை
தெரிந்து கொண்டதால்
இருக்கலாம்
அதை மட்டும் ஸ்டீல் நாரால்தான்
தேய்ப்பேன்
கீரல் விழவதை பற்றி
கவலை கொள்ளாமல்
விமர்சகர்
சிலர் கவிதைகளை
மட்டும்
நார் நாராய்
கிழிப்பது போல
5. அவியல்
மறைந்திருந்து
திடீரென
நாக்கை எரிக்கும்
அரித்துப் போட்ட பச்சை மிளகாய்
அவியலில்
விமர்சனத்தில்
ஒளிந்திருந்து
சாடும்
குசும்பை போல
6. கேக்கும் லட்டுவும்
புத்தக ஆணைப்படி
அளந்து சேர்த்த சாமான்களுடன்
கறாராய் கணித்த
நேரம் சூட்டில் உருவான
மகளின் கேக்
இலக்கிய விமர்சகர்
மெச்சிய உள்முகக்
கவிதை போல
நெஞ்சை நிமிர்த்தியது
மனம் என்னவோ
ஏங்கியது
தூக்கத்தில் எழுப்பி
எழுத வைக்கும்
திட்டமிடா கவிதை போன்ற
கண்திட்டத்தில்
விறகடுப்பில்
இடுக்கிய கண்களுடன்
பாட்டி செய்து தரும் லட்டுவிற்கு
7. கறை
பால் காய்ச்சி
தேநீர் தயாரித்து
நேற்றைய பாலை உறையூற்றி
அரைத்து
கரைத்து
சமைத்து
அடுப்பணைத்து
துடைப்பதற்குள்
கொதித்து
பொங்கி
வழிந்து
மனதை கறையாக்கிப் போகும்
கவிதைகள்
8. ஏனோ
அது ஏனோ தெரியவில்லை
அடுப்பில் ஏதானும் வைத்தவுடன்
கவிதை தோன்றுகிறது
அது தீய்ந்த பிறகே
கவிதை
முழுதாய் பிறக்கிறது
9. தேறியது
அடுப்பில் கொதித்த தண்ணீரில்
போட்டேன் முட்டையை கணவனின் ஆசைக்கேற்ப சரியாக
ஆறு நிமிடம் அவிக்க
சமர்த்தாக
என் தலையெழுத்து
ஜன்னல் வெளியே ஒரு காக்கை
தலையை சாய்த்து
ஒரு கண்ணால் என்னை கூர்ந்து நோக்கியது
என் மண்டை குறுகுறுத்தது
கைப்பேசி அலாரம்
செவிட்டு செவியில் விழ
தண்ணீர் சுண்டி
முட்டை
கரிமுட்டையாகி
பாத்திரம் ஓட்டையாகியது
ஆனால் ஒன்று
கவிதை
நன்றாக
உருவாகி இருந்தது
10 நிறைவு
எழுந்தவுடன்
குளியல்
பின்
அவித்த முட்டை
வாழைப்பழம்
உடற்பயிற்சி
பிறகு
பால்கனியில் காதல் புரியும் புறாக்களை ரசித்தபடி
இஞ்சி ஏலம் பட்டையுடைய தேநீர்
குடித்த நிறைவில்
எழுந்ததோர் கவிதை
முன்னறிவிப்பில்லாமல்