நாவல்  தினை              அத்தியாயம் இருபத்தாறு

This entry is part 8 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

   

ஊர்வலம் பிரம்மாண்டமானதாக இருந்தது.  

கலந்து கொண்ட ஜீவராசிகளில் தரையில் சுவாசிக்க முடியாதவை கூட பெரிய பாலிவினைல் தொட்டிகளில் நீர் நிரப்பி அதில் சுவாசித்து உலாவில் கலந்து கொண்டன. 

நெருப்பின்றி கந்தக உருண்டைகளை நீண்ட குழாய்களில் நிரப்பி  அதிர்வெடிகள் நிலமதிர வெடித்த நூறுகால் பூரான்கள் இரண்டு வரிசையாக அகலவாட்டில் நடந்து வந்தன. 

இசைக்கருவி எதுவோ நாராசமாக ஒலித்தது. நடுவே இரு குழுக்களாக வெல்வெட் போல் மெத்தென வழுவழுத்த உடல் கொண்ட செவிப் பூரான்கள்   அந்த அகண்ட தாளத்துக்கு சுழன்று சுழன்று ஆட வைக்கப்பட்டன. 

பயந்த சில மானுடப் பெண்கள் மானம் மறைக்கும் அளவு மட்டும் உடை உடுத்தி வந்த ஊர்திக்குள் செவிப் பூரான்கள் இழைந்தேறின. அவை அந்தப் பெண்களின் வலது காதுக்குள் புகுந்து  இடது காது வழியாக வெளியேற நடுங்கி அமர்ந்திருந்த பெண்கள் கண்ணீர் பெருக்கியதை வெகுவாக ரசித்த கரப்புகள், செவிப்பூரான்களை இந்தப் பெண்களின் இடுப்புக்குக்கீழ் செயல்படத் தூண்டின. கைகூப்பி அது வேண்டாம் என்று வேண்டிய பெண்களின் தீனமான அழுகுரலை பூரான்களும் மிக விரும்பின. 

அடுத்து அழுக்குச் சிவப்புக் கம்பளம் நெய்து நகர்த்திக் கொண்டு போவதுபோல் அடர்த்தியும், நூறடிக்கு நூறடி நீள அகலமுமான கரப்புக் கும்பல் ஆடிக்கொண்டு போனது. 

அந்தக் கும்பலைத் தொடர்ந்து பச்சோந்திகள் இரு கால் முன்னே உயர்த்திப் பின்கால் ஊன்றி அதிகாலையில் தோட்டத்தில் நடைப் பயிற்சி செய்வதுபோல் நடந்து போயின. அவை ஏழு நிறமும் கொண்ட தட்டுகளை அசைத்து அந்தந்த நிறத்தை உடல் முழுக்கக் கொண்டு வந்து பத்து நொடி நின்றன. 

தேளர்கள் மோகிக்கும் ஒரே உயிரினம் அந்தப் பச்சோந்திகள் தான். நிதி மிகுந்த தேளர்கள்   போட்டி போட்டு நல்ல விலை கொடுத்து வாங்கி வீட்டில் நிறப்பிரிகை நிரம்பியதுபோல் பச்சோந்தி நடனமும் சொன்னபடிக்கு நிறம் மாறச் செய்வதும் நிகழும்.   

அந்த ஓந்திகளை மரப்பல்லிகளோடு கலவி செய்ய வைத்து ரசிப்பதும் உண்டு. பாதி புணர்வில் தலைகளைத் துண்டித்து அப்போது காட்டிய நிறத்தை நிரந்தரமாக்கிப் பாடம் பண்ணிய ஓந்தியுடல்கள் வீட்டு முகப்பில் அலங்காரமாக ஏற்றி வைத்திருப்பது தவிர அந்த உடல்களை உயர்த்திப் பிடித்து ஊர்வலத்தில் எடுத்துப் போவது தட்டுப்பட்டது.  

நிறம் மாறும் பச்சோந்திகளுக்கு அடுத்து வெட்டுக்கிளிகள் கரமரவென்று பற்களை வைத்து உணவாக எதையும் கொஞ்சம் கொஞ்சமாக உண்டபடி வரும் ஓசை சூழ்ந்து செல்லும்போது மற்ற ஓசையெல்லாம் நிலைத்திருந்தன.  

நண்டுகள் பாலிவினைல் தொட்டிகளுக்குள் ஊர்ந்து ஊர்வலத்தில் வந்தன.  பெருந்தேளரும், அடுத்த வரிசைத் தலைவர்களும் அவ்வப்போது கண்காட்ட, நண்டுகளிருந்த தொட்டிகளில் இருந்து நான்கைந்து வெளியே எடுக்கப்பட்டு, தலைவர்களுக்குக் கொறிக்கத் தரப்பட்டன. கரபரவென்று உயிர் நீங்கும் வாதனையோடு அவை தீனமாக அலறத் தேளர்களுக்கு அது சுகமான சங்கீதமாகக் கேட்டது.

கரடி, ஊர்வலத்தில் நண்டைக் கால் காலாகக் கடித்து மென்றபடி வந்தது. அது தேளரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது என்று சகலருக்கும் தெரிய வந்திருக்கிறது. நண்டுகளுக்குத் தெரியுமா, தெரியவில்லை.

பச்சைக்கிளிகளும், குருவிகளும், சத்தம் போடாமல் அமைதி காத்து நான்கைந்து காக்கைகளும், கொக்குகளும் பிரயத்னப்பட்டு நடந்து வந்தன அடுத்து. கடல் ஆமைகளும், ஈமுக்களும் அடுத்த அடுத்த வரிசையில் நடந்தன.

ஆமைகள் மிக மெதுவாக நடப்பதால் அவற்றைக் கடல் தாவரங்கள் கொண்ட தொட்டிகளில் ஏற்றி ஈமுக்கள் இழுத்துக் கொண்டு மிக மெல்ல ஓடி வந்தபோது நிலாக்கால இரவுகளில் படகு செலுத்திப் போகும் கடலோடிகள் போல் அபூர்வமாகக் கானமிசைத்து வந்தன.  அவற்றின் தொண்டை இதற்காக சிகிச்சையில் ஆழ்த்தப்பட்டிருந்தன.

  பெருந்தேளரின் சித்திரம் பொதிந்த பதாகைகளை உயர்த்திப் பிடித்து அங்கங்கே ஜீவராசிகள் கௌரவ பாவம் காட்டி எந்த ஒலியுமின்றி நடந்து வந்தன. 

அப்புறம் தேள்கள். தேள்கள். தேள்கள். 

சிறு செந்தேள்கள் முதலில் வந்தன. பிறந்து ஒரு மாதமே ஆனவை மற்றும் ஒரு வயது ஆனவை அவற்றின் அன்னையரால் தூக்கி வரப்பட்டு, கொடுக்கு உயர்த்திக் காட்டிக் கடந்து போயின. 

கர்ப்பம் தரித்த பெண் தேள்கள் மெல்ல நடந்து நடுநடுவே ஓய்வெடுப்பதையும் ஊர்வலத்தில் காணலாம்.  இரண்டிலிருந்து மூன்று வயது வரையான தேள்கள் மிடுக்காக நடைபோட்டு அடுத்துப் போகும். 

முழுச் சக்தியோடு மூன்றிலிருந்து ஒன்பது வரையான தேள்கள் அடுத்து பிரம்மாண்டமான உடலும் மிடுக்குமாக அச்சுறுத்தும் வண்ணம் கொடுக்கு நிமிர்த்தி வரும். 

தேள் ராணுவம் மிடுக்காக அடுத்துச் சில வரிசைகளில் வர, தேள் அறிவியலாரும், ஒன்றிரண்டு மானுட, கரப்பு அறிவியலாரும் சேர்ந்து அடுத்து வருவது வழக்கம். 

உடல் தளர்ந்து எந்த நேரத்திலும் இறக்கக்கூடும் என்ற நிலை எய்திய பத்து வயதுக்கு மேலான தேள்களுக்குப் பொது ஓய்வு அறிவிக்கப் பட்டாலும் பிடிவாதமாக ஊர்வலம், பெருந்தேளரின் பிறந்த நாள் கொண்டாட்டம், உணவு விழா இப்படி பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் முதிய தேள்கள் பின்வாங்குவதில்லை. 

பெருந்தேளரசரின் தந்தையார் எட்டு வருடம் முன்பு மரித்தபோது அவரது சவ ஊர்வலத்தில் முது தேளர்கள் பெருமளவில் பங்குபெற்றது மட்டுமின்றி துக்கம் தாங்காமல் தத்தம் நெஞ்சில் கால் கொண்டு அறைந்து கொண்டு தாமும் உயிர் விட்டவர்கள் அநேகம். அவர்களில் மானுடரும் சிலர் உண்டு என்பது குறிப்பிடப்பட வேண்டியது. 

தேளரசில் பதவி வகிக்கும் மானுடர்களில் சிலரும், குடிமக்களான மானுடர்களில் கணிசமானவர்களும் இந்த ஊர்வலம் போன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதே போல் மானுடச் சிறாரும் பெருமளவில் பங்கெடுப்பது   அத்தியாவசியமானது. 

இதெல்லாம் கடந்து போக, இறுதியாக தேளரசர் மெய்க்காவலர்கள் சகிதம் எழுந்தருள்வார். அவருக்கு முன் ட்ரம்பெட்களும் பேக் பைப் வாத்தியங்களும் வாசித்தபடி ஒரு பேண்ட் கோஷ்டி நடந்து போகும். 

அந்த இசைக்குழு எப்படிப்பட்ட தாளம் கொட்ட வேண்டும் என்று பெருந்தேளரசர் அப்போதைக்கப்போது தீர்மானிப்பார். அவர் உடல் அசைவைக் கூர்ந்து கவனித்து அப்போது வாசிக்க வேண்டிய தாளக்கட்டைத் தீர்மானம் செய்து உடனே தாளம் மாற பெருந்தேளர் ரதத்தில் இருந்தே ஆடி வருவார். 

இன்றைக்குத் தாளம் மாறவில்லை என்பதோடு இன்னொரு நான்கு சக்கர ரதமும் ஊர்வலத்தில் உண்டு. தேர் ஊர்பவர் நீலன் வைத்தியர்.

 மூன்றாம் நூற்றாண்டு மனிதரைக் காணும் ஆர்வத்தில் ஊர்வலத்திலும் சுற்றியும் பெருங்கூட்டமாக சகல ஜீவராசிகளும் மொய்த்தனர். அதற்கு மேல் அவர் சஞ்சீவினி வைத்தியர். தேளரசின் முக்கியமான குடிமக்களான செந்தேள்கள், அசாதாரணமான ஆற்றல் நிரம்பிய ஒருசில மானுடர் என்று தேர்ந்தெடுத்து ஆயுளை ஒரு நாளில் இருந்து ஒன்பது வருடம் வரை நீட்சி அடையச் செய்யும் அற்புதத்தை நிகழ்த்தப் போகும் மகாப் பிறவி. 

பெருந்தேளர்  வாடிக் கொண்டு மக்கிய வாடையடிக்கும் தன் பூச்சரங்கள் தொங்கும் ரதத்தில் அமர்ந்தபடிக்கே நீலன் வைத்தியர்  ஏமப் பெருந்துயில் பேழையில் நித்திரை போயிருந்த ரதத்தில் அவரது உயிருக்கும் உடலுக்கும் பாதுகாப்பு நல்கியபடி நின்ற குயிலியைப் பார்த்துத் தலையசைத்தார். 

ரதத்தின் கீழ் அறையில் அமர்ந்தபடி வந்த வானம்பாடியையும் அதேபோல் அழைத்தார். நீலன் வைத்தியர் இறுதி யாத்திரை போல் தோன்றக் கிடத்தியிருந்த ரதத்தில் அவ்வப்போது ஜவந்திப் பூக்களைப் பேழைமேல் மரியாதையோடு இட்டபடி அமர்ந்திருந்த கர்ப்பூரய்யனை   பேழைக்குக் காப்பாக வந்து நின்று கொள்ளச் சொல்லிக் கைகாட்டி குயிலி இறங்கி பெருந்தேளர் ரதத்தில் ஏறி தேளரை அடிபணிந்து நின்றாள். வானம்பாடியும் அவ்வாறே செய்தாள். 

 அந்த மரியாதையின் போதை தலைக்கேற பெருந்தேளர் கொடுக்கு கொண்டு குயிலியின் கூந்தலை தனக்கு எப்போதும் பிடித்த செயலாக நூறு பேர் கூடி நிற்கும்போது வருடினார். 

என் தெய்வமே, அழைத்தீர்களே பாதத் தூசு சூட, ஆர்வத்தோடு நிற்கிறேன் என்றாள் தேள்மொழியில், குயிலி. முன்னே போன ராணுவத் தேளர்கள் தரையோடு பாதுகை உராய கால்கள் நான்கு கொண்டு மரியாதையோடு இயங்கி நடந்தனர். 

பெருந்தேளர் ஒரு நிமிடம் ஊர்வலத்தை நிறுத்தச் சொன்னார். அமைதி நிலவியது அங்கே. பெருந்தேளர் சொற்பொழியத் தொடங்கினார் –

வைத்தியரிடம் நாம் கேட்டுக்கொண்டதைச் சொல்லி அன்பால் புரியவைத்து அவரைப் பத்திரமாக இந்தக் காலத்துக்கு அழைத்து வந்ததோடு அவரது பணியாளரையும் சகல மூலிகைகளோடு சஞ்சீவினி மருந்து உருவாக்கித்தரத் தயாராக இருக்கவைத்துக் கூட்டி வந்த முன்யோசனையும் குயிலியுடையது. வானம்பாடி என்ற சிறுமி அவளுக்கு அளித்த உதவியும் குறிப்பிடப்பட வேண்டியதே. 

அவர்கள் சொல்திறனும் செயல்திறனும் பாராட்டி கர ஒலி செய்யுமின் அனைவரும். 

நீளமாகப் பேசியதில் அயர்வு ஏற்பட ரதத்தில் அதிகம் கனிந்து மானுடர்க்குக் குமட்டும் பழவாடையோடு, தேள் வர்க்கத் தலைவருக்கு இன்பமூட்டப் போட்டு வைத்த லகு ஆசனத்தில் அமர்ந்தார். 

கை தட்டுதல் ஒரு பத்து நிமிடம் நீண்டு போனது. நடக்கலாம் என்று தேளரசு கைகாட்ட உலா தொடர்ந்தது.

 பெருந்தேளரின் தகப்பனின் தகப்பனாரைப் புதைத்த இடம் இது. ஊர்வலத்தில் வந்த கிழட்டுத் தேள்கள் ஓவென்று அலறித் துக்கம் தாங்காது தரையில் உருண்டு கொடுக்கு கொண்டு நிலத்தில் அடித்து தேள்மொழியில் ஐயனே உமை மறப்போமோ எனப் பல தரத்திலும் சொல் அடுக்கி ஒப்பாரி வைக்க, வளமான மாரிடத்தோடு நின்ற பெண் தேள்களுக்கு எதிரே துயரத்தோடு நின்று   அந்தக் கிழத் தேள்கள்   மாரடித்து அஞ்சலி செலுத்தியது அடுத்த அரைமணி நேரம் நீண்டது. 

பெருந்தேளர் அந்தப் பெண்தேள்களை நோக்கி துக்கம் கொண்டாட அடுத்து சமிக்சை செய்தார். மண்ணும், கழிவும் ஈரமுமாகக் கிடந்த அந்த வெளியில் உருண்டு புரண்டு துக்கம் வெளிப்படுத்திய தேள்களைப் பார்த்து அருவருத்து ஒரு வினாடி வானம்பாடியோடு குயிலி கண்களால் பரிமாறிக் கொண்டாள். 

வானம்பாடி அவள் பார்வையை வாங்கித் திருப்பும்போது வேறெவரின் பார்வை நடுவே வந்ததைக் கவனித்தாள். சட்டென்று குயிலியிடம் மனதில் பேசி மூன்றாம் நபர் அவர்களுடைய நினைவுத் தொடர்புக்கு நடுவே குறுக்கிடுவதை அவசரமாகச் சுட்டித் தொடர்பைத் துண்டித்தாள். 

இது அஞ்சலி நேரம் என்று பெருந்தேளர் அறிவித்தார். நாளின் எந்த நேரத்தையும் அஞ்சலி நேரமாக அறிவிப்பார் அவர். யாருக்கு அஞ்சலி என்பது சொல்லாவிட்டால் அவருடைய தந்தையார் முதுதேளருக்கு என்று எடுத்துக் கொள்ள வேண்டிவரும். சில நேரத்தில் அண்மையில் காலமான யாராவது அஞ்சலிக்கு உரியவராக இருக்கலாம். 

ஒரு முறை அஞ்சலி நேரம் அறிவித்த பின் யாருக்கு அஞ்சலியோ அவர் இறக்கவில்லை எனத் தெரிய உடனே அந்த நபரை உயிரிழக்கச் செய்தார் பெருந்தேளர். அறிக்கைகளில் தகவல் சரியாக இருப்பதில் அவருக்கு தனி முனைப்பு நீண்ட நெடுங்காலமாக உண்டு. 

அவருடைய மூத்த அண்ணாரையும் அவருக்கான குடும்பத்தையும் கொன்ற தினமும் காலமும் பிழையாக அறிவிக்கப்பட்டதற்கு இறந்து கொண்டிருந்த அண்ணாரின் தலையை அவர் உடம்பில் சேர்க்க முடியாததால் வெட்டுக்கிளி உடம்பில் இசைத்து அவர் வாயாலே நான் முந்தாநாள் ராத்திரி இறந்துபோனேன் என்று சொல்ல வைத்தது.

 அண்ணாரின் மனைவியை உயிரோடு புதைத்து விட்டு அது புதைக்கச் சரியான நேரம் என்று ஜோசியர்கள் சொன்னதால் அப்படிப் புதைத்தேன் என்று சொல்லி முழு மகிழ்ச்சியோடு புதைபடுவதாக அந்த வயோதிகப் பெண் தேள் அறிவிக்க ட்ரம்பெட், பேக்பைப் ஊதி அவளை உயிர்நீக்கம் செய்த சாதனை பெருந்தேளருடையது. 

அவளுடைய பெற்றோரை அஞ்சலிக் கூடத்து சுவர்களுக்குள் புதைத்து மரிக்கச் செய்ததும் அவர் சாதனையே. இன்னும் நடுப்பகல் நேரத்தில் அந்தச் சுவர்களில் இருந்து அந்த முதிய தம்பதி ஓவென்று பல விதமாகவும் காப்பாற்றுங்கள் என்றும் அவர்கள் ஒலியெழுப்புவது பயணிகளையும். பள்ளிச் சிறுவர்களையும் ஆகர்ஷிக்கும் விஷயம் என்று தோன்றுகிறது. 

ராத்திரியும் அவர்கள் அலறினால் இன்னும் அதிகப் பயணிகள் அந்தப் பேசும் சுவர்கள் கட்டிடத்துக்கு வர வாய்ப்பு உண்டு என்று அடுத்த அடுக்கு தேளரசப் பிரமுகர்கள் வேண்டினாலும் பெருந்தேளர் முடிவெடுக்கவில்லை. 

பேசும் சுவர்கள் கட்டிடத்தை நீட்சி செய்து அமைதியும் இருளுமாக முதுபெண்தேளரான பெருந்தேளரின் தாயார் மறைந்த பிறகு கட்டடம் எழுப்பப்பட்டது. அவளுக்கும் அவளுடைய சம்பந்திகளின் சாவோலம் மிகப் பிடித்தது. 

அவள் கணவன் ஏமப் பெருந்துயில் கொள்ளும் துயில் மண்டபம் அடுத்த கட்டிடம் தான் என்பதால அதுவும் அவளது கணவன் துயில் மண்டபத்தை அஞ்சலிக் கட்டிடம் சந்திக்கும் ட போன்ற ஒழுங்கையின் தொடக்கத்தில் முதுபெருந்தேளரும் ஒழுங்கையின் முடிவில் முதுபெருந்தேளம்மா உடல் உறங்குமிடமும் அமைந்திருப்பதால் அஞ்சலி செலுத்த ஆள் தேர்ந்தெடுப்பது எளிதே. 

இப்போது அஞ்சலி நேரம் என்று சொல்லி தொடர்ந்து குடும்பம் என்று சொல்லி நிறுத்தியதால் பெருந்தேளரின் பெற்றோர்,அவர்களுக்கு முந்தைய தலைமுறை வரை மாரடித்துக் கொள்ள பெண் தேள்களின் எதிரே ஆர்வமாக முதுதேளர்கள் நின்றிருந்தார்கள். 

கிட்டத்தட்ட முப்பது நிமிடம் பெருந்தேளர் பார்த்து ரசித்திருக்க அந்த சிருங்கார பிலாக்கணம் நிதானமாக நடந்தேறியது. அது முடிந்ததும் பெருந்தேளர் அடுத்த பிரசங்கம் செய்தார். அதன் சாரம் வருமாறு –

எவ்வளவு கஷ்டப்பட்டு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து நீலன் வைத்தியரைக் கூட்டி வந்தேன் என்று காடு மலை ஆறு கடலெல்லாம் தாண்டித் தான் பிரயாணம் செய்ததாக விவரித்தார் பெருந்தேளர். 

சஞ்சீவினி என்ற இந்த அற்புத மருந்து எல்லா ஜீவராசிகளின் ஆயுளைக் கூட்ட வல்லது. அது சிலபல காரணங்களால் நடக்க முடியாமல் போனாலும், சஞ்சீவினி ஒரு குவளை பருகினால் ஐந்து வருடம் எந்த நோயும் அண்டாமல் நோய் எதிர்ப்பு கூடி இருக்கும். குதத்தில் கட்டி வராது. பல் வலி வந்தால் சிரிப்பு பீரிட்டு வலி குறைந்து பல் நிலைக்கும்.

தன் யோசனையின் பேரில் இந்த சஞ்சீவினி நோய் எதிர்ப்பை நீலன் வைத்தியர் மருந்தில் சேர்த்ததற்காக அவருக்கு நன்றி சொன்னார் பெருந்தேளர். இன்னும் சில அருமையான கருத்துகள் சஞ்சீவினியில் எதெல்லாம் இடம் பெறலாம் என்று பிரபஞ்ச நன்மை குறித்து நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் அசுத்த வஸ்து என்று பலவும் சேரும். 

ஒவ்வொரு அடிப்படைப் பொருளும் பெயர் சொல்லப்பட்ட போது கரகோஷம் வெளியைப் பிளந்தது. 

அசுத்த வஸ்து திங்கணுமா? வானம்பாடி குயிலியின் மனதில் பேசினாள். உவ்வே என்றாள் குயிலி வானம்பாடி மனதில். 

உவ்வேவா இருக்கும் இருக்கும் நாளைக்கு மலத்தை உருட்டித் தின்னச் சொல்லிக்கொடுத்தால் முதல் உணவு கொள்ள நீங்கள் இரண்டு பேர் தான் அழைக்கப்படுவீர்கள்.

ஓ குயிலி வானம்பாடி மேலே அஞ்சலிக் கட்டிடத்தின் மொட்டைமாடியில் கழுகு இரண்டு வந்திருக்கே பார்க்கலியா அதுலே ஒண்ணு நான். குழலன். ஊர்வலத்தைத் தொடர்ந்து வந்துக்கிட்டிருந்தேன். தெரு ஓரமா நின்னு கைதட்டறவங்களும் கண்டிப்பாகச் சொல்லி ஊர்வலத்தில் கலந்துகொள்ள வைத்தும் இங்கே பெரிய கூட்டமாகக் கூடினவங்க பெருந்தேளரை எல்லா மொழியிலும் திட்டித் தீர்ப்பது மனங்களில் நடந்து வருகிறது. ஆனாலும் அவரை இன்னும் பத்து வருடம் அசைத்துப் பார்க்க முடியாது. நான் தலை தனி உடம்பு தனியாகத்தான் சுத்திட்டிருக்கேன்.

குழலன் சட்டென்று நிறுத்தினான். நாற்பத்தைந்து வயதுக்காரிகள் இருபது பேர் ஊர்வலத்தின் கடைக்கோடியில் இருந்து கூடை சுமந்துவர,   அவர்களோடு கூட்டமாக சுகித்திருக்கப் போகிறேன் என்றபடி அருவியென எச்சில் வடித்துப் பறந்து மிதந்தது அந்தக் கழுகு. 

பட்டென்று பெருஞ்சத்தம் எழுந்தது. பெருந்துயில் பேழைக்குள் இருந்து எல்லா நிறத்திலும் புகை வந்து சூழ்ந்தது. அது தணிந்தபோது இன்னொரு தட்டொலி. 

நீலன் வைத்தியர் தன் பேழை மூடியை உள்ளிருந்து எடுத்து வெளியே வந்தார்.  அவர் மூன்று முறை ஏதோ சொல்லி விட்டு மறுபடி பேழையில் உறங்க ஆரம்பித்தார். 

தொடரும்

Series Navigationதுயர் பகிர்வோம்:  ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *