சசிகலா – விஸ்வநாதன்
அந்தி சாயும் நேரம்
தேநீர் கோப்பை கையில்
எதிரே நாற்புறமும் வரிசை கட்டி
நிற்கும்
பச்சையும் நீலமும் ஊதாவும் பழுப்பிலும்
மலைத் தொடர் மடிப்பு;
விரிந்த நீல வானில்
வெண் பனிக்கட்டிகள்
வெண் மஞ்சு மஞ்சம்.
மெல்ல மெல்ல கதிரவன் கீழே இறங்க;
மென் காற்று அலை;
மேனி சிலிர்த்தது.
சாரல் மழையில்;
வானில் வில் ஒன்று தோன்றி மறைவதற்குள்;
துணை வானவில்.
கண்மூடி திறப்பதற்குள்;
கண் முன்னே ஒரு அற்புதம்!
காணுதல் பிழையா?
காட்சி பிழையா?
மலை அசைகிறதே;
இருக்காது;
உறங்கி விட்டேனா?
உறக்க கலக்கமா?
கனவா, நினைவா?
நினைவுதான்…
காற்றின் வேகம்
ஜதி சொல்ல;
மேகத்தின் நடனம்!
மேகத்தின் நிழல்
மலைமேல் அலை போல்
இசைந்து ,சாயும் சூரிய
கதிரொளியில்
ஆனந்த நர்த்தனம்.
மலை அசைவது போல்
காட்சிப் பிழை, ஒன்றை…
கண்டறியாத ஒன்றை இன்று நான் கண்டேன்.