யோகா: ஆரோக்கியத்தின் ஆணிவேர்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 4 of 5 in the series 23 ஜூன் 2024

Dr. ரமேஷ் தங்கமணி MSc., PhD., SLET

யோகா என்றால் என்ன?
யோகா என்ற சொல் சம்ஸ்கிருத சொல்லான “யுஜ்” என்பதிலிருந்து உருவானது, இதன் விளக்கம் இணைப்பது அதாவது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது. இது தவிர யோகா என்ற பதத்திற்கு “சங்கமம்” அல்லது “ஒன்று கலத்தல்” என்ற பொருளும் உண்டு. உடல், மனம், உணர்ச்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப்படுத்துவதே யோகக் கலை. இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை நிர்ணயித்து சேர வேண்டிய இலக்கில் கொண்டு போய்ச் சேர்க்க யோகா ஒரு சிறந்த கருவியாகும்.

யோகக் கலையின் நோக்கம்
யோகக் கலையானது உடல், மனம் மற்றும் இயற்கைக்கு இடையே ஒரு சிறந்த ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. யோகாவின் முக்கிய நோக்கம், அனைத்து வகையான துன்பங்களையும் கடந்து அநாதியான சுதந்திரத்தை மனவெளியில் சுயமாக உணர்தலாகும். யோகக் கலையானது வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற மூன்று தோஷங்களை சமநிலைப்படுத்தும் தன்மையுடையது என நம்பப்படுகிறது. மேலும் நவீன விஞ்ஞானத்தின் பார்வையில்; நிம்மதியான வாழ்க்கை, மன ஆரோக்கியம் மற்றும் இயற்கையோடான நல்லிணக்கம் போன்ற அனைத்து அம்சங்களிலும் சுதந்திரத்துடன் வாழ்வதற்கான கலையாக கருதப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் யோகாவின் தேவை
தற்கால மனிதன் வேகமும் மிகை உணர்வும் மிகுந்தவனாக மாறிவிட்டான். மேலும் தன் அக மற்றும் புறச்செயல்களுக்கும் இடையே இருந்த நல்லுறவை இழந்து வருகிறான். மிக அதிகமான வேதியல் மருந்துகள் மற்றும் நச்சுப் பொருள் கலந்த உணவுகளை பயன்படுத்தி இயற்கையின் விதிகளுக்கு முரணாகத் தன் உடலை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறான். அதிதீத உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு மனிதத்தன்மையில் இருந்து விலகிக் சென்று கொண்டிருக்கின்றான். இயற்கைக்கு முரணான நடவடிக்கைகளில்

ஈடுபட்டு, உடல் மற்றும் மனதளவில் பாதிப்பிற்குள்ளாகி நோய்வாய்ப்படுகிறான். நோயிலிருந்து விடுபட நவீன மருத்துவத்தின் துணை கொண்டு வாழ்நாளில் சில வருடங்களை நீட்டித்துக் கொண்டு வாழ்கிறான். இவ்வாறான செயற்கை நிலையிலிருந்து விடுபட்டு அமைதியான மற்றும் தரமான வாழ்க்கையினை வாழ யோகா வழிவகை செய்கிறது.

யோகக் கலையின் வரலாறு
யோகக் கலையானது சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எந்தவொரு மத அமைப்புகளும் தோன்றுவதற்கு முன்னரே மனம் மற்றும் உடல் நலனைப் பேணுவதற்கான ஆன்மீக முறையாக உருவானதாக நம்பப்படுகிறது. சுமார் 3300 (பொ. ஊ. மு.) காலத்தைச் சார்ந்த சிந்துசமவெளி நாகரீகத்தின் முத்திரைகள் மற்றும் புதைபடிவ எச்சங்கள் பண்டைய இந்தியாவில் யோகக் கலையின் இருப்பை முன்மொழிகின்றன. வேத மற்றும் உபநிடத பாரம்பரியம், நாட்டுப்புற மரபுகள், பௌத்த மற்றும் ஜைன மத பழக்கவழக்கங்கள், மகாபாரதம் மற்றும் ராமாயண இதிகாசங்கள், சைவ மற்றும் வைணவ சம்பிரதாயங்கள் மற்றும் தாந்த்ரீக
பழக்கவழக்கங்களில் யோகா குறித்த சிந்தனை இருந்ததற்கான சான்றுகள் காணக்கிடைக்கின்றன. இந்து ஆன்மீக பதிவுகளில் யோகா என்ற சொல் முதலில் கடோ உபநிடதத்தில் வருகிறது. கடோ உபநிடதம் ஐம்பொறிகளை அடக்குவதின் மூலம் மனதின் ஓட்டத்தை நிறுத்தி யோக நிலையை அடைவதைபற்றிக் குறிப்பிடுகிறது. யோகாவின் தத்துவத்திற்கான முக்கிய நூல் ஆதாரமாக விளங்குவது பொ.ஊ.மு. 150 -இல் பதஞ்சலி முனிவர் இயற்றிய யோக சூத்திரம் ஆகும். இந்நூல் யோகா வழிமுறைகளை அறிந்து கொள்வதற்கான வழிகாட்டியாக இன்றளவும் விளங்குகிறது. இத்தகைய புராதான பதிவுகளின் அடிப்படையில் யோகக் கலையானது பன்னெடுங்காலமாக இந்தியாவில் இருந்தது என்பதை அறுதியிட்டு கூற முடியும்.

யோகாவின் பல்வேறு வடிவங்கள்
வேறுபட்ட காலநிலைகளின் அடிப்படையில் யோகக் கலையானது நான்கு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றது. அவையாவன:

  1. பாரம்பரிய காலத்திற்கு முன்புள்ள யோக முறை
    வேத காலம் மற்றும் சிந்து சமவெளி காலத்தைச் சார்ந்த யோக முறைகள் பாரம்பரிய கால யோக முறைகள் என்று வரையறுக்கப்படுகின்றது. இந்த யோக முறைகளை வேதகால ரிஷிகள் உருவாக்கினார். ரிஷிகள் வகுத்தளித்த யோக முறையின் மூலம் ஒருவர் முக்தியை அடைய முடியும் என நம்பினர்.
  2. பாரம்பரிய யோக முறை
    இந்த காலகட்டத்தில் யோக முறை என்பது வேறுபட்ட நம்பிக்கைகள், கருத்துக்கள் மற்றும் நுட்பங்களின் கலவையாக விளங்கியது. இந்த வேறுபாடானது பலவகையான முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. இந்த சூழ்நிலையில், பதஞ்சலி முனிவர் தன்னுடைய சூத்திரங்களால் யோக முறைக்கு ஒரு நிலையான வரையறையை ஏற்படுத்தினார். மேலும் யோக முறையின் வாயிலாக ஆன்மீக உயர்நிலையை (சமாதி) அடைவதற்கு பின்பற்ற வேண்டிய எட்டு உறுப்புகளை பதஞ்சலி முனிவர் வகுத்தளித்தார். இந்த எட்டு உறுப்புகளையும் பின்பற்றுபவர்கள் அஷ்டமா சித்திகளைப் பெற்ற சித்தர்கள் அல்லது யோகிகள் என்று அழைக்கப்பட்டனர்.
    பதஞ்சலி முனிவர் அருளிய இந்த யோகக் கலையானது பாரம்பரிய யோக முறை என்று அடையாளப்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக பதஞ்சலி முனிவர், யோகாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவரது யோகா-சூத்திர செயல்முறைகள், நவீன யோகாவின் பெரும்பாலான பாணிகளில் இன்னும் வலுவாக ஆட்சி செலுத்துகின்றது.
  3. பாரம்பரிய காலத்திற்கு பின்புள்ள யோக முறை
    பதஞ்சலி முனிவரின் காலத்திற்கு சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, யோகாவை கற்பிக்கும் குருமார்கள் பாரம்பரிய முறையிலிருந்து சற்று மாறுபட்ட யோக முறையினை உருவாக்கினார். இந்த முறையில் பழைய வேதங்களின் ஆன்மீக படிப்பினைகளை சற்று மாறுதல் செய்து, உடலை புத்துணர்ச்சி அடையச் செய்யவும் ஆயுளை நீட்டிப்பதற்குமான வழிமுறையாக யோகக் கலையை மறு வரையறை செய்தனர்.
  4. நவீன கால யோக முறை
    நவீன குருமார்கள், யோகாப் பயிற்சி செய்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், யோகாவினை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் யோக முறைகளில் பல மாற்றங்களைச் செய்தனர். நவீன யோக முறையில், யோகாவின் வழியாக இறைவனை அல்லது முக்தியை அடைவது என்ற பாரம்பரிய கருத்தாக்கம் முற்றாக நிராகரிக்கப்படுகிறது. மாறாக, யோக கலை என்பது உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்வினை ஏற்படுத்தும் ஒரு பயிற்சி முறையாக மாற்றம் செய்யப்பட்டது. நவீன யோக முறையில் முறையில் இறைவன், ஆன்மிகம், மதம் போன்ற கருத்தாக்கங்களுக்கு இடமில்லாமல் இருந்தது. இதன் மூலம் யோக முறையானது அனைத்துத் தரப்பினரும் பின்பற்றும் வகையில் எளிமையாக்கப்பட்டது.

யோகாவும் அறிவியல் ஆய்வுகளும்
யோகாவை பின்பற்றுவதன் மூலம் மனிதர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு வாழலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இக்கருத்தாக்கத்தினை அறிவியல் ரீதியாக நிரூபிக்கும் வகையில் பல ஆய்வுகள் உலக அளவில் மேற்கொள்ளப்பட்டன.
அத்தகைய ஆய்வு முடிவுகள் யோகா செய்வதால் ஏற்படும் மருத்துவ பயன்களை ஆதாரங்களோடு நிரூபணம் செய்கின்றது. அவ்வாறு பெறப்பட்ட சில ஆய்வு முடிவுகள் கீழே பட்டியலிடப்படுள்ளது;

அறிவாற்றல் மேம்பாடு
சமீப காலங்களில் அறிவாற்றல் மேம்பாடு சம்பந்தமாக பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சார்ந்த டெக்சாஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டி மாணவர்கள் யோக முறைகள் எவ்வாறு மனிதர்களின் அறிவாற்றல் செயல்பாடு (cognitive functioning) மற்றும் வேலை செய்யும் நினைவகத்தை (working memory) மேம்படுத்துகின்றது என்ற ஆய்வினை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவானது, யோக பயிற்சி செய்வதன் மூலம் மனிதனின் அறிவாற்றல் செயல்பாடு மற்றும் வேலை செய்யும் நினைவகத்தின் செயல்திறன் வெகுவாக மேம்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர்.

மன அழுத்தத்திற்கான தீர்வு
மெக்கால் டி. (2007) என்ற ஆய்வாளர் தொடர்ச்சியான யோகா பயிற்சியானது மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் செரோடோனின் அளவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது என்பதை பதிவு செய்திருக்கிறார்.

தசை மற்றும் எலும்பு வியாதிக்கான தீர்வு
யோகா செய்வதின் மூலம் தசைகளின் நெகிழ்வுத்தன்மையானது அதிகரிக்கின்றது, இதன் மூலம் நாட்பட்ட வலிகள் வெகுவாக குறைகின்றது. யோக பயிற்சி செய்வதன் வாயிலாக, கீல்வாதம், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் முதுகுவலி போன்ற
வியாதிகளில் இருந்து நிவாரணம் பெறலாம் என்று தேசிகாச்சார் கே. (2005) என்பவர் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார்.

உடலில் ஆக்ஸிஜன் உயர்வு
யோகா பயிற்சியானது உடலின் இரத்த ஓட்டம், ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கிறது, இதனால் அதிக அளவு ஆக்ஸிஜன், உடல் செல்களை அடைய சாத்தியம் ஏற்படுகிறது என்று ஆய்வாளர், பர்சங்கர் ஜே.ஆர். (2003) தனது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார்.

நவீன மருத்துவம் பெரும்பாலான உடல் நோய்களைக் குணப்படுத்தும் திறனைக் கொண்டிருந்தாலும், மனிதனின் உணர்ச்சி மற்றும் உளவியல் சீர்குலைவுகளைத் தணிக்கும் விஷயத்தில் குறைவான திறனையே கொண்டிருக்கிறது. அதேசமயம் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதில் யோகாவின் பங்கு தவிர்க்க இயலாததாக விளங்குகின்றது. யோக முறையானது உடல் நோய்கள் அல்லது உடலில் இருக்கும் பாதகமான நிலைமைகளை முழுமையாக நீக்குவதற்கு வழிவகுக்காது என்றாலும், இது நோயினை முழுமையாக குணப்படுத்தும் பாதைக்கு இட்டுச் செல்கின்றது. எனவேதான் ஆய்வாளர்கள் ஒரு நபரின் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும், யோகாவிற்கும் இடையே மறுக்க முடியாத தொடர்பு உள்ளது என்று சான்றளிக்கின்றனர். இதன் காரணமாக யோகா முறையானது உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் பின்பற்றப்பட்டு தொடர்ந்து பிரபலமடைந்து

வருகிறது. யோகா பயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த
விழிப்புணர்வினை உலகம் முழுவதும் ஏற்படுத்தும் விதமாக, சர்வதேச யோகா தினத்தை நிறுவுவதற்கான வரைவுத் தீர்மானமானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய அரசு முன்மொழிந்தது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையானது 11 டிசம்பர் 2014 அன்று, ஜூன் 21 ஐ சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. யோகா பயிற்சியின் பல நன்மைகளை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதே சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமாகும். இந்த ஆண்டிற்கான சர்வதேச யோகா தினமானது “சுய மற்றும் சமூகத்திற்கான யோகா” என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. இந்த யோகா தினத்தில், உடலுக்கும் மனதிற்கும் நன்மை பயக்கும் யோகா கலையை அனைவரும் கற்று ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்போம்.

குறிப்புகள்

  1. கேத்தரின் உட்யார்ட் (2011). யோகாவின் சிகிச்சை விளைவுகள் மற்றும் வாழ்க்கைத்
    தரத்தை அதிகரிக்கும் அதன் திறனை ஆராய்தல். யோகா பன்னாட்டு ஆய்விதழ்,
    ஜூலை-டிசம்பர்; 4(2): 49–54.
  2. மெக்கால் டி. நியூயார்க்: பாண்டம் டெல் ரேண்டம் ஹவுஸ் இன்க் ஒரு பிரிவு; 2007.
    யோகா மருத்துவம்.
  3. தேசிகாச்சார் கே, பிராக்டன் எல், போசார்ட் சி. தி யோகா ஆஃப் ஹீலிங்:
    ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான யோகாவின் முழுமையான மாதிரியை
    ஆராய்தல். இன்ட் ஜே யோகா தெர். 2005; 15: 17–39.
  4. பர்சங்கர் ஜே.ஆர்., பர்சங்கர் ஆர்.என்., தேஷ்பாண்டே வி.என்., கௌரே எஸ்.பி.,
    கோசாவி ஜி.பி. 40 வயதுக்கு மேற்பட்ட பாடங்களில் இருதய அமைப்பில்
    யோகாவின் விளைவு. இந்திய ஜே பிசியோல் பார்மகோல். 2003; 47: 202–6.
  5. கரேன் லிட்ஸ்பா (2017). அறிவாற்றல் மேம்பாட்டிற்கான யோகா திட்டம். PLoS
    ஒன். 2017; 12(8): e0182366.
Series Navigationரவி அல்லது – கவிதைகள்.கியூபிசக் கோட்பாட்டை முன்வைத்து ‘என்ன சொல்லப் போகிறாய்?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *