ரவி அல்லது
திரும்பி படுத்தபொழுதில்
அழுத்திய
பாயின் கோரைக்கு
நன்றி
விழித்துக் கிடக்கும்
இச்சோம்பலில்.
நினைவகழ்ந்து நெஞ்சுக்குள் புகுந்த
அய்யா வியாபிக்கிறார்
போர்வைக்குள் தலையணை நனைய.
வாய்ப்பு வசதிகளற்ற நாளில்
செக்கிலாட்டிய எண்ணையை
சில்வர் பானைகளில்
காய வைத்து காப்பது
அன்றைய நாட்களில்
கிராமிய வழக்கம்.
விளையாடிய வேளையில்
யாவையும்
எத்தி விழுந்து தட்டிவிட்டதன் கரைகள்
பூமியில்
பல மழைகள் பார்த்தும்
அப்படியேதான் இருந்தது
நோகலின் வடுவாக.
வருட சேமிப்பு
வாசலில் சிதைந்த கோவத்தில்
தொரத்திப் பிடிக்கவியலாத ஆற்றாமையில்
விலாசிய கம்பு
முதுகில்
தோல் தெரித்து
இரத்த கசிவானது
அறுபதுக்கும்
ஆறுக்குமான அணுக்கத்தில்.
துக்க வீட்டின் துயரத்தைப்போல
அய்யாவும்
அக்காக்களும்
அன்றைய பொழுதில்
அழுததைப்போல
பிறகு நடந்த
பேரிழப்புகளெதிலும்
கண்டதில்லை
அவ்வகச்சேர்மான மெய்யை.
வேதனையில்
விழிக்கும் பொழுதெல்லாம்
விளக்கொளியில்
மயிலிறகால்
தடவிய படி இருக்கும்
காட்சி
எந்த ஜென்மத்திலும்
அழியாது
படிமமாகிவிட்ட
அய்யாவின் அன்பின்
திளைப்பால்.
சலிக்காமல்
சமன் செய்து
விளைச்சல் கண்ட
அய்யாவின்
வியர்வை சுவைத்த
நிலங்கள்
எதுவும்
இப்பொழுது இல்லை
என்னிடம்
இந்த உடம்பைத்தவிர.
வாய்த்த
ஏழை விட்டு
முந்தி இருக்கலாம்.
முதல் பிள்ளையாக.
பிள்ளைகளின்
பிள்ளைகளை
அவர்
கொஞ்சி மகிழவெனும்
ஆற்றாமை அழுகைதான்
நின்ற பாடில்லை
அவசர வேலைகள்
அழைத்த
வண்ணமிருந்தாலும்
இப்பொழுதும்
எப்பொழுதும்.
- நின்றாடும் சிதிலங்கள்.
- அழிவுகள்
- ஆய்ச்சியர் குரவை – பாகம் ஒன்று
- அமைதி
- வௌவால் வந்துவிடும்
- போகாதே நில்.
- மழை மேகக்கவிதை