கரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம் ( ”தேவந்தி” என்னும் சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை

This entry is part 25 of 45 in the series 9 அக்டோபர் 2011

பாவண்ணன்

 

குடும்ப வாழ்க்கையைப்பற்றி என் மனம் வரைந்துவைத்திருக்கிற சித்திரம் மிக உயர்வானது.  என் கல்லூரிக்காலத்தில் அது இன்னும் உயர்வானதாக, லட்சியபூர்வமானதாகவும் இருந்தது.  ”நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு”, “நீயாகியர் என் கணவன், ஞானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே”  என்பவைபோன்ற வரிகள் ஊட்டிய மன எழுச்சியால் என் மனச்சித்திரம் மேலும்மேலும் அழுத்தம் பெற்றிருந்தது.  ஆனால், எதார்த்த உலகில், எங்கள் வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் கணவன்மார்களிடம் அடிவாங்கிய வேதனையில் ஒப்பாரிவைக்கிற, கலங்கிய கண்களோடு கைப்பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அகால வேளையில் தாய்வீட்டுக்கு ரயிலேறிச் செல்கிற பெரியம்மாக்களையும் சின்னம்மாக்களையும் அத்தைகளையும் பார்த்தபோது இச்சித்திரம் சிதைந்துவிட்டது. லட்சியத்துக்கும் எதார்த்தத்துக்கும் இடையில் இருந்த முரண் என்னை அசைத்துக் கீழே தள்ளியது. அக்காலத்தில் நான் படிக்க நேர்ந்த மூன்று சிறுகதைகள் இந்த முரண் எவ்வளவு கூர்மையானது என்பதை எனக்கு உணர்த்தின.  ஒன்று மெளனியின் சிறுகதை.  இன்னொன்று புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை.  மூன்றாவது சிறுகதை சுஜாதா எழுதியது.

மெளனியின் சிறுகதையில் வயதில் இளைய பெண்ணை மணந்துகொண்ட ஒருவர் ஒரு திருமண நிகழ்ச்சியை முன்னிட்டு மனைவியோடு செல்கிறார். அவர் மனைவியின் முகத்தில் எப்போதுமே அமைதி குடிகொண்டிருக்கும். அப்படித்தான் அவரை அதுவரை அவர் பார்த்திருக்கிறார். திருமணவீட்டில் தன் சொந்த உறவினர்களைக் கண்ட உற்சாகத்தில் அவள் அடையும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. களிப்பின் உச்சத்தில் அவள் முகம் பூரிப்பில் மின்னுகிறது. குலுங்க்க்குலுங்கச் சிரித்தபடியே அவள் இருக்கிறாள். ஒவ்வொரு உரையாடலும் சிரிப்பிலேயே முடிவடைகிறது. அவளுடைய பூரித்த முகத்தையும் சிரிப்பையும் தற்செயலாக அந்தப்பக்கமாக வருகிற கணவன் பார்த்துவிடுகிறார்.  தான் அதுவரை பார்த்திராத அவளுடைய கோலம் அவரைக் கடுமையாகப் பாதிக்கிறது.  அந்தச் சிரிப்புச்சத்தம் அவரைச் சீறியெழவைக்கிறது.  உடனே உரையாடலுக்கு இடையே புகுந்து ”கல்யாணம் பார்த்ததெல்லாம் போதும், உடனே புறப்படு” என்று கட்டளையிட்டு அழைத்துச் சென்றுவிடுகிறார். புதுமைப்பித்தன் அறிமுகப்படுத்தும் பால்வண்ணம்பிள்ளை இன்னும் குரூரமாகச் செயல்படுகிற கணவனாக இருக்கிறான்.  அலுவலகத்தில் பசுவாகவும் வீட்டில் இட்லராகவும் வலம்வருகிறவர் இந்தப் பால்வண்ணம்பிள்ளை. சத்துக் குறைந்த தன் பிள்ளைகளுக்கு பசும்பால் நல்ல ஆகாரமாக இருக்கக்கூடும் என்ற எண்ணமும் தொடர்ந்து கடையில் வாங்குவதற்கு மாறாக ஒரு பசுவையே வாங்கிவைத்திருந்தால் பிள்ளைகள் வயிறு நிறைய பாலருந்த வசதியாக இருக்கும் என்ற யோசனையும் தூண்ட கையில் இருந்த காப்புகளை விற்று எழுபது ரூபாய் விலையில் ஒரு பசுவை வாங்கிவந்து வீட்டில் கட்டிவைக்கிறாள். அலுவலகத்திலிருந்து திரும்பிய கணவன் வீட்டில் பசுவைப் பார்த்து திகைப்படைகிறான். விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகு காப்பிகூட அருந்தாமல் மெளனமாக வெளியேறிவிடுகிறான். மாட்டு வியாபாரி  ஒருவரை அழைத்துவந்து இருபத்தைந்து ரூபாய்க்கு அந்தப் பசுவை விற்றுவிடுகிறான். தன் குழந்தைகளுக்காகவே என்றாலும் ஒரு பெண் எப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கலாம் என்கிற வெப்பத்தால் அவன் கொதிப்பேறியதெல்லாம் அக்கணம்தான் வடிந்துபோகிறது. சுஜாதா அறிமுகப்படுத்தும் கணவன் படித்தவன். நகர வாழ்வுக்குப் பழகியவன். நல்ல வேலையில் இருப்பவன். கோபம் வந்தால் உணவைப் புறக்கணித்து, மறைமுகமாக தன் எதிர்ப்பைக் காட்டுபவன். ஒரு நாள் அதிகாலையில் வாசல் தெளிக்க கதவைத் திறந்த வேளையில், அறிமுகமில்லாத ஒரு மனிதனைப் பார்க்கிறாள் அவன் மனைவி. பிழைப்பதற்காக வெளியூரிலிருந்து வந்த இடத்தில் உடல்நலக்குறைவால் தன் மனைவி காலையில் இறந்துவிட்டதாகவும் இறுதிச்சடங்குச் செலவுக்கு பணம் கொடுத்து உதவ வேண்டும் என்றும் அவன் கேட்டுக்கொள்கிறான். அவள் மனமிரங்கி, உதவலாம் என்ற எண்ணத்தோடு வீட்டுக்குள் திரும்புகிறாள். விழித்தெழுந்து வருகிற கணவன் விஷயத்தைக் கேட்டு உதவி செய்வதைத் தடுத்து அவனை வெளியேற்றிவிடுகிறான். அவள் எந்த மறுப்பையும் காட்டாமல் ”சரி, விடுங்கோ” என்று சொல்லிவிட்டு அமைதியடைகிறாள். அந்த அமைதி அவனை சீண்டுகிறது. இப்படி தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஊருக்குள் ஏமாற்றுவதற்குக் கிளம்பிவிட்டார்கள் என்று எதைஎதையோ சொல்லி, அவளை நம்பும்படி செய்கிறான். அவள் அமைதி, அவனை மென்மேலும் பதற்றமடைய வைக்கிறது. குளித்துமுடித்து உடைமாற்றிக்கொண்டதும் நேரில் பார்த்து உண்மையை அறிந்துகொண்டு வருவதாக வண்டியெடுத்துக்கொண்டு செல்கிறான்.  உதவி கேட்டு வந்தவன் சொன்ன குறிப்பிட்ட இடத்தில் பிணம் கிடப்பதைப் பார்க்கிறான். அருகில் அவனும் தென்படுகிறான். மெளனமாக வீட்டுக்குத் திரும்பிவந்தவன், அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்த்தற்கான தடயமே அந்த இடத்தில் இல்லை என்று மனைவியிடம் சொல்கிறான். ”சரி, விடுங்கோ” என்பதுதான் அப்போதும் அவள் சொல்லும் பதிலாக இருக்கிறது.

அமைதிக்கும் அன்புக்கும் உறைவிடமாக இருக்கவேண்டிய இல்வாழ்க்கை ஒருவரையொருவர் குதறிக் காயப்படுத்திக்கொள்ளும் களனாக மாறிப்போவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. ”ஒருவரையொருவர்” என்று பொதுவான ஒரு சொல்லைப் பயன்படுத்துவது அவ்வளவாகப் பொருத்தமில்லை என்றே தோன்றுகிறது. முக்கால் பங்குக்கும் மேலான குடும்பங்களில் குதறியெடுப்பவர்கள் ஆண்களாகவும் குதறப்படுபவர்கள் பெண்களாகவும்தான் இருக்கிறார்கள். அடி, உதை, பசியோடு வாடவிடுதல், சரியான மருத்துவத்துக்கு வழிசெய்யாமல் இருத்தல் என உடல்ரீதியாக் குதறியெடுப்பவர்கள் ஒருவிதம். கோபப்பார்வை, வெறுப்பான சொல், வசைகள், தரக்குறைவான உரையாடல் வழியாக மன அளவில் கடுமையாகப் பாதிப்படையும்படி குதறியெடுப்பவர்கள் இரண்டாவது விதம். சிரித்துக்கொண்டே ஊசியால் குத்துவதுபோலப் பேசிக் குதறியெடுப்பவர்கள் மூன்றாவது விதம். அச்சிட்டு வழங்குகிற ஒவ்வொரு திருமண அழைப்பிதழிலும் தொடக்கத்திலேயே ”அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்றொரு திருக்குறள் அச்சிடப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், எதார்த்தத்தில் பெரும்பாலோர் வாழ்வில் அன்பும் இருப்பதில்லை, அறமும் இருப்பதில்லை. சக்கையான வாழ்வையே எல்லாரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதைத்தான் சிறுகதை இலக்கியம் பலவிதமான கோணங்களில், பலவிதமான களங்களின் பின்னணியிலும் ஆண்டாண்டு காலமாக்க் காட்சிப்படுத்தியபடி வருகிறது. இப்போது குறிப்பிட்ட கதைகள் மூன்றும் நாற்பது ஆண்டுகளுக்கும் முன்னால் எழுதப்பட்டவை. ஆனால், இன்றுகூட நிலைமை அப்படியேதான் உள்ளது. பெரிதாக எந்த மாற்றமும் வந்துவிடவில்லை. முற்காலத்தைவிட, இப்போது கல்வி பரவலாகியிருக்கிறது. வேலைவாய்ப்பு பரவலாகியிருக்கிறது. பல கண்மூடித்தனமான மூடப்பழக்க வழக்கங்கள் எல்லாம் வழக்கொழிந்து போயிருக்கின்றன. வெளியுலகம் பல நேரங்களில் இருபாலாருக்கும் பொதுவான வெளியாக இருக்கிறது. இருப்பினும், குடும்பத்தில் ஆண்களால் பெண்கள் காயமடைவதுமட்டும் ஒருசிறிதும் குறையவில்லை. கல்வியாலும் காலத்தாலும் மாற்றமுடியாத அந்த அடிப்படைப்பண்புக்கு என்ன காரணம்?  இந்த இடத்தில் லா.ச.ரா.வின் அபிதா நாவல் நினைவுக்கு வருகிறது. அதில் இடம்பெறும் உரையாடலொன்று மிகமுக்கியமானது. கணவனைப் பார்த்து மனைவி கூறும் உரையாடல் அது. மூத்த வயதில் இளமை அனுபவங்களை அசைபோடும்போது நிகழும் உரையாடல். “ நீங்கள் பெறும் வெற்றி ஒருபோதும் உங்களுக்கு முக்கியமில்லை.  ஒவ்வொருமுறையும் நான் தோற்றுச் சரிவதைக் கண்டு நீங்கள் கொள்ளும் ஆன்ந்தமே உங்களுக்கு முக்கியமாக இருந்தது”. இதே சொற்களில் அந்த உரையாடல் இருக்காது என்றாலும் இதுதான் அந்த உரையாடலின் சாரம். மாற்றமுடியாத ஆண்களின் அடிப்படைப்பண்புக்கான காரணம் இந்த உரையாடலில் இருப்பதாக நினைக்கிறேன். மனைவியை ஒவ்வொரு கணத்திலும் தோல்வியடையச் செய்தபடி இருக்க எண்ணும் ஒருவித நோய்தான் எல்லாக் கோணல்களுக்குமான காரணம். முதலில், வாழ்க்கையை வெற்றி, தோல்விக்கான களமாக எண்ணுவதே ஒரு பிழையான பார்வை. இந்தப் பிழையான பார்வையை அடிப்படையாக்க் கொண்டு வளர்த்துக்கொள்கிற மற்ற எண்ணங்களும் பிழையானவை. கரித்தூளைத் தொட்ட விரலால் தொடப்பட்ட பொருள்கள் அனைத்திலும் கரும்புள்ளிகள் படிந்துவிடுவதுபோல, பிழையான பார்வையால் விளைகிற எண்ணங்கள் அனைத்திலும் கரும்புள்ளிகள் படிந்துவிடுகின்றன.

எம்.ஏ.சுசிலா அவர்களின் சிறுகதைகளைப் படித்துமுடித்ததும் இந்த எண்ணங்கள்தான் உடனடியாக எழுந்தன. பெரும்பாலான கதைகளில் குடும்ப உறவில் உள்ள கரும்புள்ளியை வெளிச்சமிட்டுக் காட்டும் பண்பு படிந்திருப்பதை உணரமுடிகிறது. அவருடைய  அக்கறையை முக்கியமானதாகவே நினைக்கிறேன். 1979 ஆம் ஆண்டில் அவருடைய முதல் சிறுகதை வெளியாகியிருக்கிறது. இத்தொகுப்பின் இறுதிக்கதை 2009 ஆம் ஆண்டில் வெளியாகியிருக்கிறது. முப்பதாண்டு கால இடைவெளியில் எழுதப்பட்ட பல கதைகளில் இப்பண்பு இருப்பதை உணர முடிகிறது. நல்லவிதமாக வாழப்பட வேண்டிய ஒரு வாழ்வை, இப்படி வீணாக்கிக் காலத்தைக் கழிக்கிறோமே என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே அவர் சிறுகதைகள் அமைந்திருக்கின்றன.

”ஓர் உயிர் விலைபோகிறது” என்னும் சிறுகதையில் இடம்பெறும் கணவன் விசித்திரமான சுரண்டல்காரனாக இருக்கிறான். மனைவி கொண்டுவந்த சீர்வரிசைகள், ஆபரணங்கள் அனைத்தையும் கண்டு ஆன்ந்தமடைகிற கணவன், அவள் உடல்நலமின்றி படுத்த படுக்கையானதும் அவளுடைய அலுவலகம் வழங்குகிற மருத்துவச் சலுகைகளுக்கு உட்பட்டு மருத்துவம் வழங்குகிறான். தாக்கியிருப்பது புற்றுநோய் என அறிந்ததும் நோயாளிப்பெண்ணை மணந்துகொண்டதால் தன் இளமை வீணாகக் கழிவதாக உணர்கிறான். இன்னொரு பெண்ணை மணக்க விழையும் விருப்பத்தை, அவனாகவே மனைவியிடம் வெளிப்படுத்துகிறான். அதைச் சொல்வதற்காகவே அவன் அவளைக் காண்பதற்காக மருத்துவமனைக்கு வருகிறான். பணமாற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டதைப்போலவே, மணவிலக்குத் தாளிலும் கையெழுத்து வாங்கிக்கொள்கிறான். இறுதியில், மருந்தால் சீர்ப்படுத்தமுடியாத சக்கையாக தாய்வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகிறாள் அவள். மரணம் அவளை மெல்லமெல்ல நெருங்கிவருகிறது. அவளுடைய இறுதிக்கணம் நெருங்கிவிட்டது என்கிற வேளையில், அவளுடைய கணவன் அந்தத் தெருவுக்குள் இறங்கி நடக்கும் காட்சி சொல்லப்படுகிறது.  ஆனால் அவன் வருகை, இறுதிக்கணத்தில் அவள் முகத்தைப் பார்ப்பதற்காக அல்ல, அவள் இறந்த பிறகு, அவளுடைய கணவன் என்று சொல்லி மரணச்சான்றிதழைப் பெற்றுச் செல்வதற்காக நிகழ்கிறது. அந்தச் சான்றிதழைக் காட்டி, அவளுடைய அலுவலகத்தில் அவளுக்குச் சேரவிருக்கும் தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக. இரக்கமே இல்லாத அவனுடைய சுரண்டல்மூளை விசித்திரமானது. ’கன்னிமை’ சிறுகதையில் இடம்பெறும் கணவன் இன்னும் விசித்திரமானவன். புதுமனைவி கருவுற்றிருக்கும் செய்தியை அறிந்து மகிழ்ச்சியடையாமல், இக்கரு திருமணத்துக்கு முன்பாகவே வேறு யாருக்காவது உருவானதாக இருக்கலாம் என தாயும் சகோதரியும் வழங்குகிற ஆலோசனையை அப்படியே ஏற்றுக்கொண்டு, அக்கருவை உடனடியாகக் கலைத்துவிடவேண்டும் என்று கட்டளையிடுகிறான் அவன். ‘சொல்லில் புரியாத சோகங்கள்’ என்னும் சிறுகதையில் சித்தரிக்கப்படும் கணவனும் விசித்திரப்பட்டியலில் சேர்க்கப்படவேண்டிய ஒருவன். ஆசிரியையாக இருக்கும் மனைவியிடம் வேலையை விடும்படி ஒவ்வொரு நாளும் தூண்டிக்கொண்டே இருக்கிறான் வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணவன். அந்தப் பதவி, மாணவிகளுடன் அவளுக்கிருக்கும் உறவு, அவளுடைய லட்சியம் எல்லாமே அவனுக்கு நகைப்புக்குரியவையாக இருக்கின்றன. அதனால் வேலையை விடும்படி தினமும் அவளை நச்சரிக்கிறான். அந்தத் தொல்லை தாளமுடியாமல் வேலையைவிட்டு நின்றுகொள்வதாக கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறாள். மாணவிகள், சக ஆசிரியைகள் எல்லாரும் தடுத்து கேட்டுக்கொண்டும்கூட தன் முடிவில் அவள் உறுதியாக இருக்கிறாள். தற்செயலாக ஒரு விபத்தில் சிக்கி அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டிய சூழல் உருவாகிறது. இப்போது, தன் மனைவியை நோக்கி அவன், கொடுத்த பதவி விலகல் கடிதத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டு மீண்டும் வேலைக்குச் செல்லும்படி தூண்டுகிறான். விடச்சொன்னால் விடவும் போகச்சொன்னால் போகவும் ஒரு கைப்பாவையைப்போல தன் மனைவியை ஆட்டுவிக்க நினைக்கும் மனநிலை எவ்வளவு கொடுமையானது. உன்னதமான குடும்ப வாழ்வை, அற்பமான பார்வையால் அழித்துக்கொள்கிறார்கள். அன்பைவிட, வேறுவேறு விஷயங்கள் முக்கியத்துவம் பெறும்போது வாழ்க்கைப்படகு மூழ்கிவிடுகிறது.

இந்த மையத்திலிருந்து விலகிய சில சிறுகதைகளும் உண்டு. ”இருவேறுலகம் இதுவென்றால்” ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு. வெகுநாட்களாக வேலை கிட்டாமல் வாட்டத்தில் இருந்த துணை நடிகைகளுக்கு திடீரென ஒரு வாய்ப்பு வருகிறது. நோய்வாய்ப்பட்ட கணவனை அருகிலிருந்து கவனித்துக்கொள்ளும் ஒரு துணை நடிகை ரத்னாவுக்கும் அந்த வாய்ப்பு வருகிறது. ஆனால் யாராவது ஒருவர் அருகிலிருந்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பை எடுத்துக்கொண்டால்தான் படப்பிடிப்புக்குச் செல்லமுடியும் என்கிற நெருக்கடியில் தடுமாறுகிறாள் அவள். அவளுக்கு உதவ முன்வருகிறார் ஒருவர். குறிப்பிட்ட நேரத்தில் அவர்களை அழைத்துச் செல்ல வண்டிகள் வருகின்றன. எல்லோரும் வண்டியில் ஏறிவிடுகிறார்கள். ரத்னாவின் பொறுப்பை எடுத்துக்கொள்வதற்காக அவள் வீட்டுக்கு வருகிறார் அந்த நண்பர். அதற்குள் அவள் கணவன் இறந்துவிடுகிறான். அந்த மரணம் அறிவிக்கப்பட்டால், வேலைக்குச் செல்ல இருக்கிற எல்லோருமே அதை ரத்து செய்துவிட்டு திரும்பிவிடக்கூடும் என்று வருத்தப்படுகிறாள் அவள். அதனால் உண்மையை வெளியிடாமல் வேலையிலிருந்து திரும்பிவரும்வரை, கணவன் உடலுக்குக் காவலாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு வண்டியின் பக்கம் செல்கிறாள் அவள். சொந்தத் துயரத்தைவிட பொதுத்துயரத்தைப் பெரிதென எண்ணும் மனம் முக்கியமானதல்லவா?. ஒரு பெண் தன் குழந்தைக்காக செலுத்தவேண்டிய ஒரு நேர்த்திக்கடனை, அக்குழந்தை வளர்ந்து ஆளாகி, மணம்புரிந்து, அவனுக்கொரு குழந்தை பிறந்தபிறகு செலுத்தி நிறைவடைகிறாள். ஒரு பெண் சின்னஞ்சிறிய ஒரு விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளக்கூட அவள் காத்திருக்கும் காலம் மிக நீண்டதாக இருக்கிறது. வேலைக்காரப்பெண்ணாக மட்டுமே வைத்திருக்க எண்ணும் குடும்பத்திலிருந்து, படிக்கவேண்டும் என்கிற கனவை நனவாக்கிக்கொள்வதற்காக, அக்குடும்பத்திலிருந்தே வெளியேறும் ஒரு சிறுமியின் சித்திரத்தைத் தீட்டிக் காட்டுகிறது “கண் திறந்திட வேண்டும்” என்னும் சிறுகதை.

இக்கதைகளில் கைகூடி வந்திருக்கிற கலைநுட்பத்தைப்பற்றியும் வடிவச்செறிவைப்பற்றியும் நான் பேசப்போவதில்லை. இவற்றில் வெளிப்படும் வாழ்க்கைப்பார்வை இப்போது எனக்கு முக்கியமாகப் படுகிறது. ஆண்களுக்கு இந்த வாழ்க்கையில் கிடைத்த அருந்துணை பெண்கள். அவர்களுடைய அருமையை உணராமல் ஆண்கள் நிகழ்த்தும் கொடுமைகள் வருத்தம் தருகின்றன. ஒரு நாட்டுப்புறக்கதை நினைவுக்கு வருகிறது. அபூர்வமான ஒரு பொருளைக் காட்டுவதாகச் சொல்லி தன் நண்பனை ஒரு நதிக்கரைக்கு வரச்சொல்கிறான் ஒருவன். எங்கெங்கோ அலைந்து திரிந்து, வழிதேடிக் கண்டுபிடித்து அந்த நதிக்கரையை அவன் அடையும்போது நள்ளிரவு நேரம். கரையோரத்திலேயே படுத்து உறங்கிவிடுகிறான். விழிப்பு வரும்போது முகம்தெரியாத கருக்கல் நேரம். கரையில் அமர்ந்து, நீரில் காலைவிட்டு துழாவியபடி கருநீலமான வானத்தையும் கருஞ்சாம்பல் கரைசலான தண்ணீர்ப்பரப்பையும் பார்த்தபடி பொழுதுபோக்கியவாறு நண்பனுக்காகக் காத்திருக்கிறான். ஒரு விளையாட்டைப்போல அக்கம்பக்கத்தில் தென்பட்ட சின்னச்சின்னக் கூழாங்கற்களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து தண்ணீரில் வீசியபடி நேரத்தைக் கடத்துகிறான். கடைசிக்கல்லை வீசப் போகும்போது சூரியோதயம் நிகழ்கிறது. அக்காட்சி கொடுத்த  பரவசத்தில் சில கணங்கள் மனம் லயித்துக் கிடக்கிறான். வெளிச்சக்கற்றைகள் மண்ணைத் தொடுகின்றன. சிரிப்போடு, கையிலிருக்கும் கடைசிக்கல்லை ஆற்றில் எறியும் முன்னால் தற்செயலாக அவன் கண்கள் கவனிக்கின்றன. அது கூழாங்கல் அல்ல, வைரக்கல். இவ்வளவு நேரமும் பொழுதுபோக்காக ஆற்றில் எறிந்தவை வைரக்கற்களா என அவன் மனம் துணுக்குறுகிறது.  குடும்ப வாழ்க்கையில் தனக்குக் கிட்டியுள்ள துணை வைரம் என்று அறியாமல் கூழாங்கற்களாக துச்சமாக நினைத்து,  ஒவ்வொருவரும் வீசியெறிந்து விளையாடுவதிலேயே குறியாக இருக்கிறோம். துரதிருஷ்டவசமாக, நம் துணை வைரம் என்று உணர்கிற கடைசித்தருணத்தில், வாழ்வதற்கு வாழ்க்கை இருப்பதில்லை. சுசிலாவின் கதைகள் இன்னொரு முறை இந்த உண்மையை அசைபோடவைக்கின்றன.

இந்தத் தொகுப்பின் தலைப்புக்கதையான ”தேவந்தி”யைப்பற்றிச் சிறிது சொல்லவேண்டும். இத்தொகுதியில் கூடி வந்திருக்கிற மையப்புள்ளிக்கு நெருக்கமான ஒரு சிறுகதை தேவந்தி. சிலப்பதிகாரக் காலத்துக் கண்ணகியின் தோழி தேவந்தி இதில் தனிப்பாத்திரமாகச் சித்தரிக்கப்படுகிறாள். தேவந்தியை மண்ந்துகொண்டவன் தன்னைத் தெய்வமாக நினைத்துக்கொள்கிறான். அப்படிச் சொல்லிசொல்லி வளர்க்கப்பட்டதாலேயே அந்த எண்ணம் அவனுடைய நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. எட்டாண்டுகள் அவளோடு வாழ்ந்தாலும் ஒருவர் நிழல்கூட அடுத்தவர்மீது படாமல் வாழ்கிறாள் தேவந்தி. உலகத்தின் பார்வைக்குத்தான் அவர்கள் கணவன் மனைவி.  ஆனால், நான்கு சுவர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அறிமுகமே இல்லாதவர்கள். தன் வாழ்வில் உற்றார் உறவினர்களுக்கெல்லாம் உதவுகிறான் அவன். கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெறுகிறான். சான்றோன் எனப் பெயரெடுக்கிறான். குலத்தொழிலில் கொடிகட்டிப் பறந்து கோலோச்சி உயர்கிறான். அவனைப் பெற்றவர்களின் காலம் முடிகிறது. வளர்த்தவளின் காலமும் முடிகிறது. இறுதிச்சடங்ககுகளையெல்லாம்  முறையாகச் செய்து முடித்தபிறகு, தேவந்தியை நெருங்கி உண்மையென தான் நினைத்திருப்பதையெல்லாம் சொல்லி, இறுதியாக கடவுளுடைய கரம்பற்றி வாழ நேர்ந்ததற்காக  மகிழ்ச்சியடைவாய் என்றும் சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறான். மனிதக்கடமைகளையெல்லாம் நிறைவேற்றிவிட்டதாக சொல்பவன், மனிதக்கடமைகளில் மனைவிக்கு ஆற்றவேண்டிய கடமையும் உட்பட்டதுதான் என்பதை ஏன் உணரவில்லை என்னும் கேள்வி தேவந்தியின் மனத்தைக் குடைகிறது. ஊர்வாயில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக, தீர்த்தயாத்திரைக்குச் சென்ற கணவன் நல்லபடியாகத் திரும்பவேண்டும் என்று கோரிக்கையோடு கோவில்கள் சுற்றி, தீர்த்தக்குளங்களில் நீராடி காலத்தைக் கடத்துகிறாள் தேவந்தி. இச்சமூகத்தால் நிராசைக்குட்படுத்தப்பட்ட, நிலைகுலைய வைக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட பெண்களின் படிமமாக விளங்குகிறாள் தேவந்தி.  இப்படிமத்தைக் கண்டெடுத்தது சுசிலாவின் மிகப்பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

 

(வடக்கு வாசல் பதிப்பகத்தின் வெளியீடாக ”தேவந்தி” என்னும் தலைப்பில் பிரசுரமாகியுள்ள சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை)

Series Navigationஆப்பிள்-ன் புதுமைக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்(79) – நினைவுகளின் சுவட்டில்
author

பாவண்ணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    லறீனா அப்துல் ஹக் says:

    ஆஹா! மிக அருமையான பதிவு. அந்தச் சிறுகதைத் தொகுப்பை வாங்கிப் படிக்கும் ஆவல் எழுகிறது. :)

  2. Avatar
    Thenammai says:

    மிக அருமை பாவண்ணன் சார்.. இதற்கான என்னுடைய விமர்சனமும் விரைவில்.. படித்து முடித்து விட்டு அலமலந்து போயிருக்கும் மனதை ஒருமுகப்படுத்தவே இந்த வாரம் எழுத முடியவில்லை.. என் தமிழம்மா சுசீலாவின் கதைகளுக்கு ( 36) தனித்தனியாக எழுதினால் விமர்சனமே இரண்டு மூன்று பாகம் வரும்.. சுருக்கி எழுத வேண்டும். மேலும்அந்த எண்ணங்களின் ஆளுமையில் இருந்து வெளிவந்து எழுத கொஞ்சம் அவகாசமும் தேவை..

    உங்கள் முன்னுரையில் மௌனி., புதுமைப் பித்தன்., சுஜாதா பற்றி படித்து அசந்து போனேன். இன்னொரு கோணத்தில் பெண்களுக்கான தனிப்பரிவுடன் எழுதப்பட்ட உங்கள் முன்னுரையும்., ஜெயமோகனின் மொழியெனும் தேவதை என் அம்மாவின் கரம் பிடித்திருப்பதான உரையும் அருமை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *