கற்றவர் அவையில் கல்லாதவர் அரங்கேற்றமா?

author
0 minutes, 6 seconds Read
This entry is part [part not set] of 4 in the series 15 செப்டம்பர் 2024

கோ. மன்றவாணன்

திருக்குறளில் உள்ள கல்லாமை அதிகாரத்தில் ஒரு குறள் :

கல்லா தவரும் நனி நல்லர், கற்றவர்முன்

சொல்லாது இருக்கப் பெறின்.

கற்றவர் முன் பேசாது இருந்தால் கல்லாதவர்களும் நல்லவர்களே என்பதுதான் இந்தக் குறளின் பொருள். பெரும்பாலான உரையாசிரியர்களின் உரையும் இதுதான். 

கற்றவர் முன் பேசாது இருந்தால் கல்லாதவர்களும் நல்லவர்களே என்றால், கல்லாதவர்கள் கெட்டவர்களா என்றோர் உள் கேள்வி எழுகிறது. கல்லாதவர்களும் என்ற சொல்லில் வருகிற உம்மின் அழுத்தத்தைக் கவனியுங்கள்.

ஒருவர் படிக்கவில்லை என்றால்… கற்கவில்லை என்றால் அவர் கெட்டவராக ஆக முடியுமா? கல்லாதவர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள்.

ஒருவர் படித்து இருப்பதனால்… நிறைய கற்று இருப்பதனால், அவர் நல்லவராக ஆகிவிட முடியுமா? கற்றவர்களில் கெட்டவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், வள்ளுவரின் மெய்யான எண்ணம் என்ன?

ஒருவர் நல்லவர் என்பதை எப்படித் தீர்மானிப்பது? ஒருவரை நல்லவர் என்பதற்குப் பல காரணங்களைச் சொல்ல முடியும். பல வகையான பண்புகளைக் கூற முடியும். 

வாழ்க்கையில் ஒழுக்கமாய் நடத்தல்; பிறருக்குத் தீங்கு செய்யாது இருத்தல் காரணமாக ஒருவரை நல்லவர் என்று கருதுகிறோம்.

பல பண்புகளில் ஏதேனும் ஒரு பண்பில்; பல செயல்களில் ஏதேனும் ஒரு செயலில் ஒருவர் நன்னெறிப் படி நடந்து கொண்டால், அந்தப் பண்பைப் பொருத்தவரையில்; அந்தச் செயலைப் பொருத்தவரையில் அவரை நல்லவர் என்று சொல்லலாம். 

யார் ஒருவரும் எல்லாப் பண்புகளிலும்; எல்லாச் செயல்களிலும் நன்னெறிப்படி வாழவும் முடியாது அல்லவா!

அதன்படி, ஒரு துறை சார்ந்த அறிவைக் கற்றவர்கள் கூடும் சபையில், அந்தத் துறை சார்ந்து கல்லாதவர்  பேசாமல் இருந்தால், அந்தச் சமயத்தில் அவர் நல்லவராகவே கருதப்படுவார். தன் அறியாமை வெளிப்படவும் கற்றவரை அவமதித்தும் பேசினால், அவருடைய செயல் அவரைக் கெட்டவராகக் காட்டிவிடும்.

இப்படி… வள்ளுவர் குறளுக்குப் பொருள் கொண்டால், நல்லவர் என்பதான உரை சரிதான்.

நல்லர் என்ற சொல்லுக்கு நல்லவர் என்றும் பொருள் உண்டு. நன்மை அடைந்தவர் என்ற பொருளும் உண்டு.  ஓரிரு உரையாசிரியர்கள் தங்கள் உரைகளில் நல்லர் என்பதற்கு நன்மை அடைந்தவர் என்றே பொருள் கொள்கின்றனர். அதன்படி மேற்கண்ட குறளுக்கு எவ்வாறு பொருள் சொல்லலாம்?

கல்லாத ஒருவர் கற்றவர் முன் பேசாமல் அடக்கமாக இருப்பாரே ஆனால் அந்தக் கற்றவர் கற்பிக்கும் பல அறிவார்ந்த கருத்துகளைக் கல்லாதவரும் கேட்டு அறிவு பெற முடியும். இது ஒரு நன்மை.

மேலும் கற்றவர் முன்னால் கல்லாதவர் பேசுவதன் மூலம் தன் அறியாமையை வெளிக்காட்டிப் பலரின் ஏளனத்துக்கு உள்ளாகலாம்; அவமானத்துக்கு ஆளாகலாம்.  எனவே கற்றவர் முன்னால் கல்லாதவர் பேசாமல் இருந்தாலே ஏளனத்துக்கு உள்ளாகாமலும் அவமானத்துக்கு ஆளாகாமலும் தன்னைக் காத்துக் கொள்ள முடியும். இது இன்னொரு நன்மை.

ஆக… கற்றுத் தெரிந்தவர்கள் முன்னால் கல்லாதவர்கள் பேசாமல் இருப்பதனால் அவர்களுக்குப் பயன்கள் உண்டு; நன்மைகள் உண்டு என்பதாக அந்தக் குறளுக்குப் பொருள் கொள்ளலாம்.

அடுத்து,

நனி நல்லர் என்பதை நனி நல்ல என்று பாடம் செய்தால் என்ன என்று தோன்றுகிறது. நனி நல்ல என்பதற்கு மிகவும் நல்லது: மிகவும் நல்லவை எனப் பொருள் கொள்ளவும் முடியும்.  அதன்படி பார்த்தால், கற்றவர் முன்னால் கல்லாதவர் பேசாது இருந்தால், அதுவே மிக நல்லது என்று எளிதாகப் பொருள் வரும்.

சிலர் இப்படிக் கேட்கலாம் : “நல்ல என்பது பெயரெச்சம். நல்ல என்பதற்குப் பின்னால் ஏதோ ஒரு பெயர்ச்சொல் எஞ்சி நிற்கிறது. பின்னால் ஒரு சொல் வராமல் நல்ல என்ற சொல் முடிவு பெறாது.”

அவர்களுக்கு நாம் நினைவு ஊட்டுவது இதுதான். நல்ல நல்ல அவை நல்ல நல்ல என்றொரு தொடர், கோளறு பதிகத்தில் வருகிறதே.

இன்னொரு கேள்வி எழுகிறது. கற்றவர் முன்னால் கல்லாதவர் தன் ஐயப்பாட்டைச் சொல்லிக் கற்றுக் கொள்ளக் கூடாதா? ஐயப்பாட்டை எழுப்புவதற்காகக் கற்றவர் முன் கல்லாதவர் பேசத்தானே வேண்டி இருக்கும்! தெரியாதவர், தெரிந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? அறிவைத் தேடும் ஒரு முயற்சிதானே அது. 

அப்படி ஐயம் தெளிவதற்காகக் கற்றவரிடத்தில் கல்லாதவர் கேட்டுத் தெரிந்து கொள்ள முயல்வதை வள்ளுவர் என்னும் பேராசிரியர் எதிர்ப்பாரா?

இதே குறளில் இன்னொன்றையும் நாம் ஆராய வேண்டும். 

“கற்றவர் முன் சொல்லாது இருத்தல்” என்ற வரியைக் கவனியுங்கள். சொல்லாது இருத்தல் என்று பொதுவாகச் சொல்லுகிறாரே தவிர, எதைச் சொல்லாது இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

தன் மடத்தனமான கருத்துகளை வலியுறுத்திச் சொல்லாது இருத்தல் வேண்டும் என்பதுதான் “சொல்லாது” என்ற சொல்லின் உள்பொருள் என  அறியலாம்.  மேலும் கல்லாதவர், கற்றுத் தேர்ந்த ஓர் அறிஞரை அவமானப்படுத்தும் விதமாக,  எதையும் சொல்லக்கூடாது என்றும் ஊகிக்கலாம்.

இதனால்தான் வள்ளலார் மனம் நொந்து நொந்து பாடி இருக்கிறாரோ…. 

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ என வரும் அந்தப் பாட்டில் உள்ள சில வரிகள்…. வள்ளுவர் குறளுக்குப் பொருள் கூறும் வரிகளாக உள்ளன. அவை வருமாறு:

கற்றவர் மனத்தைக் கடுகடுத்தேனோ…

பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ….

மேற்கண்ட ஆய்வின் அடிப்படையில், அந்தக் குறளுக்குச் சுருக்கமாகவும் சரியாகவும் பொருள் சொல்ல வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். 

கற்றவர் முன்னால் கல்லாதவர் தன் மடத்தனமான கருத்துகளைப் பேசாது இருத்தல் நல்லது.

இந்தக் குறளை நேரடியாகப் பொருள் கொண்டு, கல்லாதவர்கள் சார்பில் வள்ளுவரைக் குற்றம் சுமத்தினால், அதில் துளி அளவும் நியாயம் கிடையாது. 

கல்லாதவரைத் தாழ்த்திச் சொல்வதன் மூலம், யார் ஒருவரும் கல்லாதவராக இருக்கக் கூடாது என வலியுறுத்தவே, கல்லாமை என்னும் அதிகாரத்தை வள்ளுவர் எழுதி இருக்கிறார்.

கற்றவர்கள் பங்கேற்கும் ஆய்வு அரங்கில், கல்லாத ஒருவரையும்  ஆய்வுரை நிகழ்த்தச் சொன்னால் எப்படி இருக்கும்? என்ன நடக்கும்?

கோ. மன்றவாணன் 

Series Navigationகஞ்சி வாடை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *