எஸ்ஸார்சி
தருமங்குடியில் அழகிய சிவன்கோவில் இருக்கிறது. பஞ்சபாண்டவர்களில் மூத்தவன் தருமன். இந்த ஊருக்கு விஜயம் செய்திருக்கிறான். இதை நான் மட்டுமா சொல்கிறேன். ஊரில் எல்லோருமே சொல்கிறார்கள். தருமனுக்கு இவ்வூர் சிவன் கோவிலில் ஒரு தனிச்சந்நிதி உண்டு. அப்படி எல்லாம் இல்லாவிட்டால் இங்கு எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஈசனுக்குத் தருமைநாதன் என்று பெயர்தான் வந்திருக்குமா என்ன. தருமன் என்கிற யுதிஷ்டிரன் இந்த ஊருக்கு வந்து சிவனை பூஜித்து வணங்கியதால் இது தருமங்குடி. இருக்கட்டும். தருமன் வருவதற்கு முன்பாக இந்த ஊருக்கு வேறு பெயர் ஏதும் இருந்திருக்குமோ?
அன்னையின் திருப்பெயர் தர்மாம்பிகை.தருமங்குடி கிராமத்தில் எப்படியும் ஒரு நான்கு பெண்குழந்தைகளுக்காவது தர்மாம்பாள் என்று திருப்பெயரை வைத்திருப்பார்கள். எங்கள் வீட்டில் மூத்த அக்கா பெயர் தர்மாம்பாள். எங்கள் எதிர் வீட்டில் தக்கிளிபிள்ளை வீட்டு ஆச்சி குடியிருந்தார்.தக்கிளி என்னும் ஊரிலிருந்து அந்த ஆச்சியின் கணவர் இந்த ஊருக்கு மாப்பிள்ளையாய் வந்திருந்தார். ஆகத்தான் தக்கிளிபிள்ளை. யாரெல்லாம் மாப்பிள்ளையாய் வந்து ஆண் வாரிசு இல்லாததால், வீட்டோடு மாப்பிள்ளை எனத் சாசுவதமாய் தங்கிவிட்டார்களோ அவர்களை அவர்களின் சொந்த ஊர் பெயர் வைத்து மட்டுமே அழைப்பார்கள். கடகம் என்கிற ஊரிலிருந்து வந்த கடகத்துப் பிள்ளை, பேரூரிலிருந்து வந்த பேரூர் பிள்ளை இப்படி.
எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடு சாமா குருக்கள் வீடு. அவர்தான் தருமைநாதன் கோவிலில் மணி அடிக்கிறார். பூஜை செய்கிறார் என்பதைத்தான் அப்படிச்சொன்னேன். ஒருநாள் உச்சிகால பூஜைக்கு சாமாமாமா சிவன் கோவிலுக்குப் போயிருந்தார். கோவிலில் வேறு யாருமில்லை கொட்டைகட்டி வாத்யாரும் குருக்களும்தான். கொட்டை கட்டி வாத்யாருக்கு வேறு ஏதும் பெயர் இல்லாமலா இருக்கும், அவருக்கு கழுத்தில்ஒரே ஒரு ருத்திராட்சக்கொட்டை சிவப்புக்கயிற்றில் எப்போதும் தொங்கும்.
சந்நிதகளில் எல்லாம் விளக்குப்போடுவது அவர் வேலை. கருவறை தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் அவர் கூட்டிப்பெருக்குவார்.கோவில் கதவுகள் திறப்பதும் பூஜை முடிந்தபின் கதவுகளை திருக்காப்பிடுவதும் அவர் வேலை. சிவன் கோவில் அருகே நந்தவனம் உண்டு. தென்னமட்டை கொண்டு பின்னிய குடலை ஒன்றில் சிவன் கோவில் பூஜைக்கு மலர் பறிப்பார் முடிந்தவரைக்கும் மாலையாய்த்தொடுப்பார். அந்த மாலையை வைத்து நிரப்பிய அதே பூக்கூடையை கோவிலுக்குக் கொண்டு வருவார். குடலையில் உதிரி புஷ்பங்களும் வில்வ இலைகளும் அர்ச்சனைக்கு என்று எப்போதும் இருக்கும்.
திருக்கோவில் வாயிலில் இரண்டு ஜீப்புகள் வந்து நின்றன. நெடிய ஹாரன் ஒலி.
‘வாத்யாரே அது என்ன புதுசா கார் சத்தம், சித்த பாருமே’
சாமா சிவாச்சாரியார் சொல்லச்சொல்ல கொட்டை கட்டி வாத்யார் கோவில் வாசலுக்கு வந்தார்.
‘இங்க வாரும் வாரும் ஒரு சேதி’
பேண்டும் சூட்டுமாய் மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள்.
‘ஏனுங்க’
‘உம்மைத்தான் அய்யா, கோவில்ல வேல செய்யிற ஆசாமிதானே’
‘ஆமாங்க. குருக்களு அய்யா சந்நிதில இருக்காரு’
‘பூசை ஆயிடுச்சா’
‘ஆயிடுச்சி. அய்யா வந்துகிட்டு இருக்காரு.’
‘யாரு ஓய்’ சாமா குருக்கள்தான் குரல் கொடுத்தார்.
‘வாங்க அய்யா’
சாமாகுருக்கள் சற்று வேக வேகமாக அவர்களிடம் வந்து நின்றார்.
‘நமஸ்காரம் சுவாமி’
‘ க்ஷேமமா இருங்கோ ,சொல்லுங்கோ என்ன சேதி ஏதும் கோவில் அதிகாரி யாரானு வந்திருக்கேளா, கோவில் டிரஸ்டி வெள்ளாழத்தெருவுல இருக்கார். நடு வீடு. வடிவேல் புள்ளன்னு பேர்.’
‘ரொம்ப சரி. இந்த கோவில்ல தருமர் சன்னிதி இருக்காமே கேள்விப்பட்டோம்’
‘ரைட்டா இருக்கே’
‘அதான் வேண்டியது’
‘வேற நீங்க வந்த சேதி’ என்றார் குருக்கள்.
‘ குருக்கள் அய்யா, நாம மொத புள்ள வீட்டுக்கு போயிடுவோம். அங்க அவுரு மின்னால எதுவும் பேசிக்கலாம். எதுக்கும் ஒரு மொற இருக்கு. பெரிய பெரிய அஸ்ஸாமிங்க வந்துருக்குறாங்க. கோவிலு டிரஸ்டியாச்சி அவுங்களாச்சி’ அழுத்தமாய்ச்சொன்னார் கோவில் வாத்தியார்.
‘அப்பப்ப நன்னாதான் பேசறே நீ’ சாமா சிரித்துக்கொண்டார்.
எல்லோரும் டிரஸ்டி வடிவேல்பிள்ளை வீடு நோக்கி நடந்தனர். மாடுகளும் கன்றுகளும் எண்ணிக்கையில் ஒரு ஐம்பதுக்கு வரலாம். அத்தனையும் வடிவேல் பிள்ளை வீட்டு மாடுகள். அவைகளை ஓட்டிக்கொண்டு பண்ணையார் வீட்டில் மாடு மேய்க்கும் ராமசாமி வந்துகொண்டிருந்தான். இடுப்பில் ஒரு சிவப்புக் கயறு. அதனில் வேட்டியைக் கிழித்த கோவணம். தலையில் ஒரு முண்டாசு கட்டியிருப்பான். வெள்ளையும் சொள்ளையுமாக மூவர் வீதியில் நடந்துவர அவர்களோடு சாமா குருக்களும் கோவில் வாத்யாரும் வந்துகொண்டிருந்தனர்.
‘சாமி கும்புடறன்’
‘என்னடா ராமசாமி சவுக்கியமா இருக்கயா’ குருக்கள் ராமசாமியிடம் விசாரித்தார்.
‘சாணி வாருரன், சவுக்கியமா இருக்கன்’
‘புள்ள இருக்காங்களா’ கேள்வி வைத்தார்.
‘வீட்டு திண்ணையில குந்தி பேப்பரு பாக்குறாங்க. போனா பாக்குலாம்’
‘படிக்குறாங்கன்னு சொல்லு. ’
ராமசாமி மாடுகளை எல்லாம் ஒரு ஓரமாக அசமடக்கி இவர்கள் எல்லோரும் நடக்க பாதை ஒழுங்கு செய்து தந்தான். ஊருக்குப் புதியதாய் வந்திருந்த மூவரில் குள்ளமாயிருந்த ஒருவர்’ மாடுவ முட்டுமா’ என்றார்.
‘ஒண்ணு ரெண்டு அப்பிடி இருக்கும். வாயில்லா சீவனுவதானே. நானு பாத்துகறேன். அய்யாமாரு, நீங்க போங்க’ ராமசாமி பதில் சொன்னான்.இரண்டு ஜீப்புகளும் ஊர்ந்து ஊர்ந்து டிரஸ்டி வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தன. மாடுகள் ஜீப்பை பார்த்ததும் மிரண்டு ஓடின. ஜீப் டிரைவர் தொடந்து ஹாரன் கொடுத்துக்கொண்டு இருந்தார்.
‘சத்தம் காட்டாத மாடுவ மெரளும், கோமுணம் கட்டுன மனுஷன்னா கொழா சட்ட போட்டவனுக்கு கும்புடுவான்’ ராமசாமி ஓங்கிச்சொன்னான். சாமா குருக்களோடு செல்லும் மூவரும் ராமசமி சொல்வதைக் கவனித்தனர்.
‘அது வாங்க கெடக்கு’ என்று தன் பங்குக்குச் சொன்னார் கோவில் வாத்தியார்.
எல்லோரும் பிள்ளை வீட்டு வாயிலை அடைந்தனர்.
‘குருக்கள் வந்துருக்கேன்’
‘வாரும், இவா எல்லாம் யாரு என்ன சேதி’
‘நா எதுவும் கேக்கல. கோவில் வாசப்படிக்கு வந்து ஏதோ விஜாரிச்சாங்க. அப்படியே கூட்டிண்டு வந்துட்டன்’
‘இது ரைட்டு’ கோவில் வாத்தியார் சொல்லிக்கொண்டார்.இரண்டு மர பெஞ்சுகளும் நான்கு பிரம்பு நாற்காலிகளும் பிள்ளை வீட்டு வாயிலில் கிடந்தன.
‘வாங்க உக்காருங்க நீங்க எல்லாம் யாரு, என்ன சேதி’
புதியதாய் வந்திருந்த மூவரும் பிள்ளைக்கு வணக்கம் சொன்னார்கள். மூவரில் குள்ளமானவர் ஆரம்பித்தார்.
‘நாங்க நெய்வேலிலேந்து வர்ரம். மூணு பேருமே எஞ்ஜினியருங்க. கார்ப்பரேஷன் காரங்க. என் எல் சி உங்களுக்கும் தெரிஞ்சி இருக்கும். எங்க சேர்மென் ஒரு சேதி சொன்னாரு. அதோட இங்க வந்தம். கோவிலுக்கு போனம். குருக்களய்யா எங்கள இங்க கூட்டியாந்தார். எங்க சேர்மென். போசு. மோனி போசு. கல்கத்தா காரரு. அவர் வீட்டுல ஒரு ஜாதி நாய் ரொம்ப ஆசையா வளத்துகிட்டு இருந்தாரு. அவுருக்கு ஒரே ஒரு பொண்ணு. இதுவ ரெண்டும் ஒரே நாள்ள செத்து போச்சி. ரெண்டுக்கும் ஒரே வியாதி வந்துதாம். அவுரு பொண்ணும் அந்த நாயும் அப்பிடி கட்டி பெறண்டு வாழ்ந்திச்சிங்க. என்ன கெட்ட காலமோ. அந்த மோனி போசு சம்சாரத்துக்கு மலையாள ஜோசியத்துல நம்பிக்கை. பூர்விகம் திருச்சூரு. சோழி போட்டு பிசன்னம் பாக்குற ஒரு ஜோஸியர் அம்மாக்கு ரெம்ப பழக்கம். அவுரு என்ன சொல்லியிருகாருன்னா’ பஞ்ச பாண்டவர்ல நாயை மதிச்ச ஒரே ஆளு தருமரு. அவுருக்கு ஒரு சிறப்பு அபிஷேகம் செய்யிணும். புளிப்பு சுவையா ஒரு பண்டம் செய்து அவுருக்கு நிவேதனம் காட்டி அத ஒரு நூரு பேருக்கு விநியோகம் செய்யணும். அந்த நூறு பேரயும் ஒரு சுத்து சுத்தி வந்து கும்புட்டு ’இனிமேலுக்கு நல்லது நடக்கணும்’னு சொல்லி பிரார்த்தன செஞ்சி பூசைய முடிச்சிகிணும். கால பைரவ தோஷம் அப்பத்தான் நிவர்த்தின்னு சொல்லிட்டாரு. தருமரு சந்நிதி இங்க தருமங்குடில இருக்குங்கறதும் அந்த ஜோசியரு சொல்லிதான் விவரம் தெரியும். சேர்மென் ஜன்ம நட்சத்திரம் ஆருத்ரா. நாளைக்கு வருது. ஆக நாள மதியம் உச்சி கால பூஜையில தருமருக்கு சிறப்பு அபிஷேகம். புளியோதர நிவேதனம். ஒரு நூறு பேருக்கு அன்னதானம்.’
பிள்ளை வாயடைத்து உட்கார்ந்திருந்தார். சிவாச்சாரியாரைப் பார்த்துக்கொண்டார். குருக்கள்ஏனோ கண்களைத் துடைத்துக்கொண்டார். கோவில் வாத்தியாருக்கு பாதி மட்டும் விளங்கியது. பாதி விளங்கவில்லை. திரு திரு என்று விழித்துக்கொண்டிருந்தார்.
‘மேற்கொண்டு’
‘நாளைக்கு சேர்மென் அவரு குடும்பம் இந்த கோவிலுக்கு வருது. அபிஷேகத்துக்கு வேண்டிய ஜாமானுவ எல்லாம் நாளைக்கு பத்து மணிக்கு இங்க வந்து எறங்கிடும். நாங்களும் வருவம். நூறு பேருக்கு புளியோதரை விநியோகமாய் கொடுத்தாகணும். இந்த ஊரு மனுஷாளு ஆணு பொண்ணு கொழந்தைங்க எல்லாரும் ஒரு நூறு பேருக்கு சிவன் கோவிலுக்கு வந்துடணும்’
‘அத நாம சொல்ல முடியாது. யாரயும் கட்டாயப்படுத்த முடியாதுல்ல.’ என்றார் பிள்ளை
‘ சந்தனம் புஷ்பம் பழங்கள் வெத்தில பாக்கு மாலைங்க வருணுமே’ குருக்கள் சேர்த்துக்கொண்டார்.
’ மந்தாரக்குப்பம் கூட்டு ரோடு என் எஸ் கே நாடார் கடையில மளிக சாமான் அபிஷேக சாமான் சொல்லிருக்கு வந்துடும். பழங்க, தண்ட மால கொண்ட மால, புஷ்பம் சந்தனம் இதுக செதம்பரம் மேல வீதியிலேந்து இங்க நேரா வந்துடும், நாங்க மூணு பேரும் அதுக்கு பொறுப்பு’
‘நாங்க என்ன செய்யிணும்’
‘கோவில கொஞ்சம் சுத்த பத்தமா வைக்கணும். சேர்மென் வர்ராரு. இன்னும் பெரிய மனுஷாளு வருவாங்க. மால மரியாத போடணும். நாயன செட் காரங்க இருந்தா நல்லது.’
‘வளையமாதேவி கதிர்வேலு மோளக்காரன வர சொல்லிடுவம். அங்க இருக்குற வேதபுரீஸ்வரர் கோவுலு குருக்களு கல்யாணம் அய்யாவ வரசொன்னா, புளி சோறு கிண்ட கொள்ள சவுகரியமா இருக்கும். அத நா பாத்துகறன்’ என்றார் பிள்ளை.
‘பைரவருக்கும் தருமருக்கும் என்ன சம்மந்தம் குருக்களே’
‘புள்ளே. உங்களுக்கு தெரியாததா’
‘சும்மா சும்மா இப்பிடியே சொல்லாதீரும்’
‘நான் வளர்த்த நாயுக்கு சொர்க்கத்துல இடம் உண்டுன்னு சொன்னாதான், நானு சொர்க்கத்துக்கு வருவேன் இல்லன்னா அந்த சொர்க்கம் எனக்கும் வேணாம்னு’ சொன்ன ஒரே பெரிய மனுஷனாச்சே’ தரும புத்திரன்’.
‘அப்படி ஒரு கதையும் இருக்குல்ல’
‘என்னங்க புள்ள, கதைங்கறீங்க’ என்று வாயை மூடி சிரித்துக்கொண்டார் குருக்கள்.
மூவரில் குள்ளனானவர் தனது விசிடிங்க் கார்டை பிள்ளையிடம் கொடுத்தார்.’ ‘ நிலக்கரி சொரங்கத்துல நான் சீஃப் மேனேஜர் மெயின்ஸ், இவுங்க ரெண்டு பேரும் எங்கீழ வேல பாக்குறாங்க’
’ அய்யா நீங்க எல்லாம் சப் ஜாடா தயார் பண்ணிவையுங்க. நாளைக்கி பத்து மணிக்கு கோவில் பூஜைக்கு வேண்டிய சாமானுக எல்லாம் வந்துடும். யார் யாருக்கு எவ்வளவு தட்சணை தரணும், உண்டியல்ல எதாவது போடணுமா, கோவிலுக்கு எதாவது கட்டவேண்டிய கட்டண உண்டான்னு பாத்து வையுங்க. அன்னதானம் இதுல பிரதானம். ஊர் ஜனங்களுக்கு சொல்லி வரவச்சிடுங்க, அப்புறம் நாதஸ்வரக்காரர் கிட்டயும் சொல்லிடுங்க’
‘அதெல்லாம் நாங்க கரெக்டா பாத்துகறம்’
‘பூஜை நேரத்துக்கு சேர்மென் மோனிபோசு அவுங்க குடும்பம் வருவாங்க’
‘ரொம்ப சந்தோஷம்’
இரண்டு ஜீப்புகளும் பிள்ளை வீட்டு வாயிலில் நின்றுகொண்டிருந்தன. அதன் டிரைவர்கள் தயாராக நின்றுகொண்டிருந்தனர். வணக்கம் சொல்லிக்கொண்டு நெய்வேலி எஞ்சினீயர்கள் மூவரும் விடைபெற்றுக்கொண்டனர்.
பிள்ளை கோவில் வாத்யாரிடம் ‘ வாத்யாரே, கோவில் பிரகாரம் க்ளீனா இருக்கணும். நான் அஞ்சாபுலிய மண்வெட்டி தட்டோட அனுப்பறேன். சுத்தம் பண்ணிடுங்க. தண்ணி தெளிச்சி கோலம் போட்டு வைக்கனும். குருக்கள் வீட்டி மாமிண்ட சேதி சொல்லுங்க, மேளம் சக்திவேலு, ஒரு நாதஸ்வரத்தோட வரட்டும். ஏகாலி சிங்காரம், நாவிதன் நாகலிங்கம் வரட்டும். ஊருல நாலு தெருவுக்கும் சேதி போவுணும். ராஜகோபால் பிள்ளையை தேவாரத்துக்கு சொல்லிடணும், யார் வந்தாலும் கையில ஒரு டிபன் ஏனத்தோட வரணும். புளி சாதம் விநியோகம் இருக்குது. அது ரொம்ப ரொம்ப முக்கியம்’
‘ நா என் தம்பி கல்யாணத்த வரச்சொல்லிடறேன், அவன் போட்டா புளிக்காச்சல் மணக்கும். பொறுப்பு அவனுது’
‘குருக்களே நாளக்கி கொஞ்சம் வெள்ள வேஷ்டியா கட்டிகும்’
குருக்கள் சிரித்துக்கொண்டார். குருக்களும் கோவில் வாத்யாரும் பிள்ளை வீட்டை விட்டுக் கிளம்பினர். மாலையே அஞ்சாபுலி மண்வெட்டிக் கூடையோடு வந்தான். கூட மாட கோவில் வாத்தியார் இருந்தார். கோவில் சுத்தமாகியது. தீப ஆராதனை தட்டுக்களை கழுவி சுத்தமாக்கி பளிச்சென்று வைத்தார் வாத்தியார். தருமர் சந்நிதியை கண்ணாடி போல் ஆக்கி முடித்தார்.
சாமா குருக்கள் அவர் மனைவி சவுந்திரம் இருவரும் பித்தளை நிவேதன தூக்குகளையெல்லாம் புளி போட்டு தேய்த்து வைத்தனர். தருமங்குடி ஊர் முழுவதும் நாளை நெய்வேலி சேர்மென் கோவிலுக்கு விஜயம் செய்வதாயும் அப்போது நிகழவிருக்கும் அன்னதானம் பற்றியும் பேச ஆரம்பித்தனர். கோவில் வாத்யார் தன்னுடைய நாலு முழ வேஷ்டியை சவுக்காரம் போட்டுத் துவைத்துக் காயவைத்துக்கொண்டார்.
மறுநாள் காலையிலிருந்தே தருமங்குடி மும்முரமானது. கோவில் வாத்யார் அதிகாலையிலேயே குளித்து முடித்து விபூதி தரித்து நந்தவனத்தில் பூ எடுத்தார். கோவிலுக்கு வந்ததும் விட்ட குறை தொட்ட குறைகள் பார்த்துக்கொண்டார். நாதஸ்வரக்காரரோடு தவில் சக்திவேல் தன் பையனை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு எட்டு மணிக்கெல்லாம் வந்துவிட்டார். மகா மண்டபத்தில் அமர்ந்து ஒரு முறை மங்கள வாத்யம் வாசித்து முடித்தார். ஏகாலி சிங்காரமும் நாவிதன் நாகலிங்கமும் ஆளுக்கு ஒரு அலுமினிய குண்டானைக் கொண்டு வந்திருந்தனர். தேவாரம் ராஜகோபால் பிள்ளை கையில் பள பளக்கும் வெண்கல தாளத்தோடு சந்நிதிக்கு வந்துவிட்டார். ஊர் ஜனங்கள், வாகடம் காசி, உள்ளூர் புரோகிதர், பம்பை சிவாலிங்கம், உடுக்கை சின்னதம்பி ,மாரிகோவில் பூசை குப்பன் அவன் சம்சாரம் தங்காயா அவர் இரண்டு பெண் மக்கள்,சுருட்டு சடையன் ஆசாரி, காது பூணல் ஆனைய ஆசாரி, கொல்லாசாரி நெட்டை கணேசன், நெல் வியாபாரி திருசங்கு, மளிகைக்கடை மஞ்சக்கொல்லை குப்புசாமி, நாட்டார் ஆதிமூலம், ப்ரெசிரெண்ட் சாமிதுரை, பிச்சமுத்து வாத்யார், என ஊரே இன்னும் திரண்டு சிவன் கோவிலுக்கு வந்து விட்டனர்.
‘ புளியஞ்சாதம் பிசையணும்னு நா ஒன்பது மணிக்கே வளையமாதேவியிலேந்து பொறப்பட்டு வந்தேன். இன்னும் சாமானுக வந்து எறங்குல. இது என்ன சமாச்சாரம். புளிய ஊர போடறது எப்ப’ என்றார் கலியாண குருக்கள். சாமா குருக்கள் புதிய பத்தாறு வேஷ்டியை பஞ்சகச்சமாக கட்டிக்கொண்டு ரெடியாக உட்கார்ந்திருந்தார். பழநி சித்தனாதன் விபூதியை தரித்திருந்தார். அவர் கையில் சிவ சஹஸ்ர நாம புத்தகம் கிரந்த எழுத்தில் எழுதியது இருந்தது. தவில்காரர் சக்திவேல். ’இன்னும் மண்டகப்பொடி செய்ற ஆளுவ வருலியா. மணி ஆவுது, அது ஆயிட்டே இருக்கு’ என்றார்.
‘மணி பன்னிரெண்டு ஆவப்போவுது. இது ஒண்ணும் புரியிலயே’ என்றார் கோவில் வாத்யார். கோவில் சுத்தம் பண்ணி என் ரெண்டு கையும் புண்ணாயிடுச்சி.’
‘அப்பிடி சொல்லக்கூடாது. நம்ப கையிங்க ஆண்டவன் குடுத்தது’ என்றார் குருக்கள்.
கோவில் டிரஸ்டி வடிவேல் பிள்ளை ஸ்வாமி அம்பாளின் வெள்ளி ஆபரண தங்க ஆபரண பெட்டியோடு மூச்சு வாங்க வாங்க கோவிலுள் நுழைந்தார்.
‘இன்னும் நெய்வேலி ஆளுங்க வருலியா’ என்று சத்தம் போட்டார்.கையை விரித்தார் குருக்கள்.
’ இது ஆவுற கதையில்ல’ சொல்லிய நாட்டாமை ஆதிமூல சேதுவராயர் கைத்தடியோடு தன் வீட்டுக்குக் கிளம்பினார். அவரையே பார்த்துக்கொண்டிருந்த சக்திவேல் தவில்காரர் தவிலுக்குச் சட்டை போட்டுக்கட்ட ஆரம்பித்தார்.
‘ மணி ஒண்ணாவப்போவுது. இனி உச்சிகாலம் எப்ப ஆவுறது. குருக்களய்யா ஒங்க வூட்டு மாமி சமைச்சது வெறுஞ்சோறு எடுத்தாந்து பூசைய அசமடக்குங்க. சாமி குத்தம் வந்துடப்போவுது’ என்றார் டிரஸ்டிப் பிள்ளை.
குருக்கள் கடுப்பானார். தன் வீட்டுக்கு நடையைக் கட்டினார். சக்திவேல் மேளக்காரர் ‘ சாயந்திரம் எனக்கு ஒரு முகூர்த்த ஓல இருக்கு. நா கெளம்புறேன்’ என்று சொல்லிப் புறப்பட்டார். மேள செட்டு போவதைப்பார்த்த ஊர் ஜனம் கலைய ஆரம்பித்தது.’என்னா கூத்துடா இது’ சொல்லிய கல்யாண குருக்கள்’ எனக்கு சாயரட்சை துர்கைக்கு சந்தன காப்பு இருக்கு நா பொறப்படறேன். வீணா வெட்டி அலைச்சல் ’ சொல்லிக்கொண்டே தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். அவர் மூக்கு புடைத்திருந்தது.
ஏகாலியும் நாவிதனும் காலி அலுமினிய பாத்திரத்தோடு கோவிலைவிட்டுக் கிளம்பி விட்டனர். குருக்கள் தன் வீட்டிலிருந்து மகா நைவேத்யம்( வெறுஞ்சாதம்) கொண்டு வந்து பூஜையை சட்டென முடித்தார்.கோவில் வாத்யாரும் குருக்களய்யரும் கோவிலில் பாக்கியிருந்தனர்.
‘புள்ள கெளம்பியாச்சா’
‘அவுரு எப்பவோ போயாச்சி’ என்றார் கோவில் வாத்யார்.
‘நக பொட்டி எடுத்துனு போனாரா’
‘ரைட்டா, அத அவுரு யார்கிட்டயாவது குடுப்பாரு’ என்றார் கோவில் வாத்யார். ’
’, கொழா சட்டைய போட்டுகினு ஜீப்புல வந்தானுவ. டிப் டுப்பு ன்னு பேசுனானுவ. நாம தருமங்குடி ஜனம் மொத்தமா ஏமாந்துட்டம் சுத்த கேபுலம்’ இடுப்புத்துண்டை அவிழ்த்துத் தலையில்போட்டுக்கொண்ட சாமா குருக்கள், ஆகாயம் பார்த்துச்சொன்னார். ’அந்தக் கோவில் வாத்யாருக்குப் பதில் ஏதும் சொல்லவில்லை ‘.வைத்தீஸ்வரன் கோவில் கிருத்திகை நாளக்கி, எனக்கு முத்துகுமரசாமி பூஜை மொற இருக்கு நா போவுணும்’ குருக்கள் புறப்பட்டார். தருமங்குடியில் பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகள் கலைந்து போனார்கள்.மாணவர்கள் ஒருவருக்கொருவர் சட்டையில் நீலச் சிவப்பு மை அடித்துக்கொண்டார்கள்.’ நல்லா இருக்குற சட்டைய ஏண்டா இப்படி நாசமாக்கிகிறீங்க’ சத்தம்போட்டுக்கொண்டே வெறுங்குடலையோடு வெறுப்பாய் நடந்தார் கோவில் வாத்யார். அன்று ‘ஏப்ரல் முதல் நாள்’ இந்தச் சேதி எல்லாம் கோவில் வாத்யாருக்குத்தெரியுமா என்ன?
——————————