“ஒன்றுமில்லை “,
தெரிந்த பிறகும்
ஒன்றை பற்றிக்கொண்டு வாழ்தல், ஒன்றைத்தான்.
அது எது என்ற தேடுதல்
கடவுளைச்சுற்றியோ,
இஸங்களை சுற்றியோ,
இலக்கியத்தை சுற்றியோ,
இசையை சுற்றியோ,
வனங்களை சுற்றியோ,
போர்களை சுற்றியோ
எது எது என
அறிதலின் பொருட்டு
வாழ்க்கை நகரும்
மெல்ல நத்தையென
எது பொருட்டும்
கவலை இல்லாமல்
நடப்பது
வேதாந்திகள் வேலை.
எதையோ ஒன்றை
பற்றி, சுற்றி
ஊர்வலம் வருவது
சுயம்பிகளின் வாழ்க்கை.
ஆணைச்சுற்றி பெண்ணும்,
பெண்ணைச்சுற்றி ஆணும்
ஆடிப்பாடி வருவது
ஆனந்தக்கூத்தன் சொன்னது.
ஆணிலே பெண்ணை வைத்து
பெண்ணிலே ஆணை வைத்து
சித்து வேலை செய்தவனை
சிதம்பரம் சென்றால் காணலாம்.
“ஒன்றுமே இல்லை “, என சொன்னவரும்
சிதம்பர ரகசியம் காண வாரீர் ஜெகத்தீரே!!!.