காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை

This entry is part 34 of 45 in the series 9 அக்டோபர் 2011


                        காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறி வைத்தன. அவன் பகல் வேளையில் வெளியே வந்தால் போதும். தெருவின் கரண்ட் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகளில், வேலியோரப் பூவரச மரங்களில், வீட்டுக் கூரைகளில், மீன் வாடியிலெனக் காத்திருக்கும் காக்கைகள் அல்லது ஒற்றைக் காக்கையேனும் அவனது தலையைக் குறி வைத்துப் பறந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும். ஒரு முறை கொத்திவிட்டுப் போன காக்கை, திரும்ப அவன் வெளியில் அலைந்து வீடு திரும்பும் வரை கொத்துவதுமில்லை, துரத்துவதுமில்லை. அவன் வீட்டுக்குத் திரும்பி, மறுபடியும் வெளியே வரும் சமயம் வந்து கொத்திவிட்டுப் பறக்கும். அதை அவன் கவனித்திருக்கிறான். ஒருமுறை கழுத்துப்பகுதியில் சிறகுதிர்ந்த, சற்று சாம்பல் நிறம் கலந்த காக்கை இப்படித்தான் செய்தது. எல்லாக் காக்கைகளும் இப்படித்தானென அதிலிருந்து அவன் புரிந்து கொண்டான். தங்களுக்குள் முறை வைத்துக்கொண்டு வந்து கொத்துகின்றனவோ என்று கூட ஐயப்பட்டான்.

 

காக்கை கொத்திவிட்டுப் பறக்கும்போதுதான் அவன் ஆதி முதல் கற்றறிந்த வசவு மொழிகளை வெளியில் உதிர்ப்பதைக் காணக் கிடைக்கும். ஓங்காரமான குரல், தெருவெல்லாம் அலறும். தலையைக் கொத்திப் போன வலி மறையும் வரை மிகக் கொச்சையான சொற்கள் எல்லாம் அவனிலிருந்து காக்கைகளுக்குப் பறந்துகொண்டே இருந்தன. தெருவின் பெரியவர்கள் தமக்கிடையே திட்டிக் கொண்டும், வீட்டுக் கதவு ஜன்னல்களை அடைத்தபடியும் தாங்கொணா அவனது வசவு மொழிகள் தமது வீடுகளுக்குள் நுழைந்திடாதபடி தடுத்துக்கொண்டனர். சிறுவர்களுக்கு அவனது தலையை காக்கைகள் கொத்திவிட்டுப் பறப்பது மிகப் பெரும் வேடிக்கையாயும், அவனுதிர்க்கும் சொற்கள் அவனை மீண்டும் மீண்டும் உசுப்பியும் குழப்பியும் விடப் போதுமானதாயும் இருந்தன. காக்கைகளெல்லாம் கொத்திவிட்டுப் பறந்த பின்னர் அவன் திட்டித் திட்டி ஓய்ந்து, தலையைத் தடவிய படியும், தடவிய விரல்களில் இரத்தச் சிவப்புகளேதேனும் ஒட்டியிருக்கிறதா எனப் பார்த்தபடியும் வரும்போது சிறுவர்கள் ‘கா..கா’ எனக் காக்கையின் மொழியைக் கத்திவிட்டு ஓடுவார்கள். அவன் விந்தி விந்தி ஓடித் துரத்துவான். அவன் ஓடுவதைப் பார்க்க, தவளையின் பாய்ச்சல் போலவும் நண்டின் நகர்வினைப் போலவும் இருக்கும்.

 

ஒழுங்காக ஓட முடியாமல் அவனது முழங்கால்கள் இரண்டும் பிறப்பிலேயே வளைந்திருந்தன. இன்னும் அவன் மிகவும் ஒல்லியானவன். அவனது முகம் போஷாக்கேதுமற்று மெலிந்த ஒரு இரண்டு வயதுக் குழந்தையைப் போன்று சிறியது. நெடிய இமைகளைக் கொண்ட சிறிய விழிகளைப் பார்க்கப் பாவமாகவும் இருக்கும். கருத்த சருமம் உடையவனல்ல. அதற்காக சிவப்பானவனாகவும் இல்லை. ஒரு மாதிரியாக வெள்ளைக் காகிதத்தில் செம்மண் தூசு அப்பியதைப் போன்ற வெளிறிப் போன நிறம். நெற்றியிலிருக்கும் சுருக்கக் கோடுகளை வைத்து மட்டுமே அவனது வயது முப்பதுக்கும் நாற்பதுக்குமிடையிலிருக்குமென அனுமானிக்கலாம். குட்டையானவன். வளைந்த கால்கள் அவனை இன்னும் குட்டையாகக் காட்டின. ஒருபோதும் அச் சிறுவர்கள் எவரும் அவனிடம் அகப்பட்டதில்லை.

 

சாதாரணமாகவே அவன் யாரிடமும் பேசுவதில்லை. எந்தக் கொம்பனாலும் அவனது நாவசைய வைத்து, வாயிலிருந்து ஒற்றைச் சொல்லை உருவியெடுக்க முடியாது. எல்லாக் கேள்விகளுக்கும் ‘ஆம்,இல்லை’ என்ற ஆமோதிப்பு அல்லது மறுப்புக்களைக் குறிக்கும் தலையசைவுதான் அவனிடமிருந்து வெளிப்படும். மிகவும் முக்கியமென்றால் மட்டும் கைகளால் கூடச் செய்கை செய்வான். அவனுக்கு அவர்கள் புரட்டிப் புரட்டிப் பேசும் மொழிகளெல்லாம் நன்கு தெரிந்திருந்தது. அவை அவனிடமிருந்து ஏதோ ஒன்றைக் காற்றுக்கு எடுத்துப்போவதாக நினைத்தானோ என்னவோ அவன் ஏனோ சொற்களை உதிர்க்கப் பயந்தான். ஒருவேளை அவனிடம் நிறைந்திருக்கும் சொற்களையெல்லாம் உதிர்க்க வைப்பதற்காகத்தான் காக்கைகளும் வந்து கொத்திவிட்டுப் பறக்கின்றனவோ என்னவோ? வானொலிப் பெட்டிக்கு அதன் தலையில் ஒரு அழுத்தி இருக்கும். அதை அழுத்திவிட்டால் பேசும். ஒலிக்கும். பாடும். அதுபோல அவனது பேச்சுப் பெட்டிக்கும் தலையில்தான் அழுத்தி இருப்பதாகவும் காக்கைகள் வந்து அழுத்திவிட்டுச் சென்றால்தான் அது பேசுமெனவும் குழந்தைகளுக்குக் கதை சொன்னபடி தாய்மார் உணவூட்டினர்.

 

அவன் ஒரு அநாதை என்றே ஊரில் எல்லோரும் பேசிக்கொண்டனர். எங்கிருந்தோ வந்து சேர்ந்தவன் அவ்வூரில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தான். காக்கைகள் துரத்திக் கொத்துமெனக் கண்டறிந்த நாள் முதல் அவன் பகல்வேளைகளில் வெளியே வரத் தயங்கினான். மிக முக்கியமான தேவைகள் இருந்தால் மட்டுமே பகலில் வெளியே வருவான். அவன் அவ்வூரில் பெரிய ஹோட்டல் வைத்திருக்கும் பெரியவர் ஹோட்டலிலேயே வேலைக்கிருந்தான். அவனுக்கென்று சிறு குடிசையொன்றை ஹோட்டலுக்கருகிலேயே கட்டிக் கொள்ளும் அனுமதியைப் பெரியவர் அவனுக்கு வழங்கியிருந்தார். அவன் அதில்தான் வசித்தான். ஒரு தண்ணீர்க்குடம், இரண்டு அலுமினியப் பீங்கான்கள், ஒரு கேத்தல், ஒரு சிறுகுவளை, ஒரு சாக்குக் கட்டில், ஒரு தலையணை, இரண்டு வெள்ளைச் சாரன்கள், முன் பக்கத்தில் இரண்டு பாக்கெட்டுக்கள் வைத்த இரண்டு வெள்ளை அரைக்கைச் சட்டைகள் அவனது உடைமைகளென அக் குடிசையை நிரப்பின. அடுத்த நாள் ஹோட்டலில் வழங்கும் ரொட்டிக்காக இரவில் மா பிசைந்து ரொட்டி தயாரிப்பது அவன் வேலை. காக்கைகளுக்குப் பயந்து அவையெல்லாம் கூடடைந்த பின்னரான முன்னிரவில் அவன் ஆற்றுக்குப் போய்க் குளித்துவருவான். பிறகு ஹோட்டலுக்குப் போய் பகல் சமைத்து மீதமிருக்கும் சோற்றை உண்டு விட்டு ரொட்டி தயாரிக்கத் தொடங்குவான். வேலை முடிந்த விடிகாலையில் காலை மற்றும் பகலுணவுக்கென சில ரொட்டிகளைப் பார்சலாக எடுத்துக்கொண்டு அவன் குடிசைக்கு வந்தால் இனி அந்தி சாயும் நேரம் வரை உறக்கம்தான். உணவுக்கும் தண்ணீருக்குமென மட்டும் எழும்புபவன் மீண்டும் உறங்கிப்போவான்.

 

எப்பொழுதாவது மிகவும் முக்கியமாகத் தேவைப்பட்டு, பெரியவர் உத்தரவிட்டால் மட்டுமே அவன் பகல்வேளையில் வெளியே வருவான். ஒருமுறை இப்படித்தான் பெரியவர் வீட்டில் விறகு வெட்டித் தரும்படி அவனைக் கூப்பிட்டிருந்தார். வீதி தோறும் விரட்டிக் கொத்திய காக்கைகள், பெரியவர் வீட்டுமுற்ற மாமரத்தில் வசித்த காக்கைகளெனப் பல காக்கைகள் கொத்தியதில் விறகு வெட்டும்போது அவனது வியர்வையோடு சொட்டு இரத்தமும் நெற்றியிலிருந்து கோடாய் வழியலாயிற்று. வசவு மொழிகள் வாயிலிருந்து பெருஞ்சத்தமாக உதிரலாயிற்று. வீட்டின் கன்னிப்பெண்கள் யன்னல் வழி விசித்திரமாகப் பார்த்திருந்தனர். பெரியவரின் தாய்க்கிழவி அவனை விறகுவெட்ட வேண்டாமெனச் சொல்லி அவனது வீட்டுக்கு அனுப்பிவைத்தாள். அவனது சிறுவயதில் குஞ்சுகளிருந்த காக்கைக் கூடொன்றைக் கைகளால் பிய்த்தெறிந்தாகவும் அதற்காகத்தான் காக்கைகள் எப்பொழுதும் அவனைப் பழி வாங்குவதாகவும், காக்கைகள் அவனைக் கொத்துவது குறித்து ஊருக்குள் நிலவி வந்த கதையைக் கிழவி அப்பெண்களோடு பகிர்ந்துகொண்டாள். வரும்வழியில் கொத்தி ஓய்ந்த எந்தக் காக்கையும் அவனைக் கொத்தவுமில்லை. துரத்தவுமில்லை. அவன் அமைதியாகக் குடிசை வந்து சேர்ந்தான். தலையைத் தடவியபடியே உறங்கிப்போனான்.

 

ஹோட்டலில் வெளியே அனுப்ப ஆளில்லாச் சமயங்களில் பெரியவர் அவனை மீன் வாங்க அனுப்பிவைப்பார். அதுதான் அவனுக்கு அவனது வேலைகளிலேயே மிகவும் வெறுப்பான வேலை. மீன் வாடிக்கருகில் எப்பொழுதும் நிறைந்திருக்கும் காக்கைகள் குறித்து அவன் பயந்தான். மீனின் உதிரிப்பாகங்களைக் கொத்தித் தின்று பழகிய அவைகளின் சொண்டுகள் மிகக் கூர்மையானவை என்பதனை அவன் உணர்ந்திருந்தான். அவனைக் கண்டதும் சொண்டிலிருக்கும் உணவுப்பாகத்தைத் துப்பிவிட்டு, அவை ஒரு கடமையை நிறைவேற்றுவது போல அவனது தலையைக் கொத்திவிட்டுப் பறந்தன. சந்தைக்கு வந்திருக்கும் அவனையறியாத புதிய மனிதர்களெல்லாம் அவனை ஒரு அதிசயப்பிராணியாகப் பார்த்தனர். இடுப்பில் குழந்தைகளைச் செருகியிருக்கும் அம்மாக்கள், குழந்தைகளுக்கு அவனை வேடிக்கை காட்டினர். சந்தையிலிருக்கும் ஒரு விசித்திர, வேடிக்கைப் பொருள் என்பதுபோல அக்குழந்தைகளும் அவற்றின் கண்கள் மின்னவும், வாய் பிளந்தும், சிரித்தும் அவனைப் பார்த்து ரசித்தன.

 

இப்படித்தான் ஒருமுறை அவன் சந்தையிலிருந்து மீன் வாங்கி வரும்வேளை பள்ளிக்கூடச் சீருடையோடு ஒரு சிறுமி, புளியங்காட்டுக்குள் தனியாக அழுதுகொண்டிருந்ததைப் பார்த்தான். அவளது இதழ்கள் கோணி, எச்சிலும், மூக்குச் சளியும், கண்ணீரும் ஒரு சேர வடிய கைகளில் இரு புளியம்பழங்களோடு அந்த அத்துவானக் காட்டுக்குள் அவள் தனித்திருந்ததைப் பார்த்தான். நின்று அருகில் போய் என்னவென்று கைகளால் விசாரித்தான். யாருமற்ற காட்டுக்குள் வெண்ணிற ஆடையோடு கால்கள் வளைந்து குட்டையான இவனைப் பார்த்ததும் முதலில் அச்சமுற்ற சிறுமி பின்னர் தான் பழம் பறிக்க வந்து வழி தவறிப் போனதைச் சொல்லி விசித்தழுதாள். அவளை அழைத்துக்கொண்டு மீண்டும் சந்தைப்பகுதிக்கூடாக வந்து அடுத்த ஊருக்கான தெருவிலுள்ள அவளது வீட்டுக்கு அவளைக்கொண்டு சேர்த்தான். இடையில் புளிய மரக் காக்கையொன்று அவன் தலையைக் கொத்திவிட்டுப் பறந்தது. அந்தத் தெருவிலுள்ள ஒன்றிரண்டு காக்கைகளும் அவனது தலையைக் கொத்திப் பறந்தன. காக்கை பறந்துவரும் ‘விஸ்க்’ எனும் ஒலியைக் கேட்டபோதெல்லாம் சிறுமி விம்மியபடி திரும்பி காக்கையைப் பயத்தோடு பார்த்தவாறிருந்தாள். சில சிறுவர்கள் ‘கா..கா’ எனக் கத்திவிட்டு ஓடினர். மிகவும் அதிசயப்படத்தக்கதாக அவன் அச்சிறுமி முன்னால் காக்கைக்கெதிரான வசவு வார்த்தைகள் எதையும் உதிர்க்கவில்லை. அச் சிறுவர்களைத் துரத்தி ஓடத் துணியவில்லை. மௌனமாக, அத்தோடு அச் சிறுமியிடம் கேட்காமலேயே அவளது வீட்டுக்கு அவளை மிகச் சரியாகக் கொண்டு வந்து சேர்த்திருந்தான். அன்றிலிருந்துதான் ஊரில் எல்லோரையும் அவன் நன்றாக அறிந்து வைத்திருக்கிறானென்ற செய்தி ஊருக்குள் பரவியது. காக்கையன் என ஊருக்குள் அழைக்கப்படுபவன் சிறுமியைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்த செய்தி அவன் பற்றிய நல்லெண்ணத்தை ஊருக்குள் விதைத்தது.

 

அன்றிலிருந்து ஊருக்குள் அவனைக் காணும் சிலர் அவனின் நலம் விசாரித்தனர். பதில்களெதுவும் வராது எனினும் அவனைக் காக்கைகள் கொத்தாமலிருக்க வெளியே வரும்போது தொப்பி அணிந்துகொள்ளும் படியும் அல்லது காக்கைகள் பார்த்து மிரளும்படியாக மினுங்கும் ஏதாவதொரு நாடாவைத் தலையைச் சுற்றிக் கட்டியபடி வெளியே வரும்படியும் சிலர் ஆலோசனைகள் கூறினர். சிலர் பலாப்பழத்தோலைப் போல கூறு கூறாய் மேல் நோக்கி வளர்ந்திருந்த அவனது தலைமுடியினை முழுவதுமாக அகற்றி மொட்டையடித்துக் கொள்ளும்படியும், அல்லது நீண்ட கூந்தல் வளர்க்கும்படியும் கூடச் சொல்லினர். இன்னும் சிலர் இது ஏதோ செய்வினை, சூனியமெனச் சொல்லி அவர்களுக்குத் தெரிந்த மாந்திரீகர்களிடம் தாயத்து வாங்கிக் கட்டிக் கொள்ளும்படி கூறினர். அவன் எதுவும் பேசாமல் தலையை அசைத்து ஏற்றுக்கொண்டதாகச் செய்கை செய்தான். அடுத்த முறை பகலில் வெளியே வருகையில் அவர்கள் சொன்னவற்றை நடைமுறைப்படுத்தப் பார்த்தான். எதற்கும் அசையாக் காக்கைகள் அதன் பின்னால் தொப்பியைக் கொத்திப்பறந்தன. ஒரு முறை கொத்திய காக்கைகள் கூட மீண்டும் மீண்டும் சுற்றிவந்து திருப்பித் திருப்பிக் கொத்தின. கூடி நின்று ஒரு சேரக் கொத்தின. அவ்விடத்திலேயே பெருத்த ஓசையுடனான வசவு வார்த்தைகளோடு தொப்பியையும் நாடாவையும் கழுத்தில் ஏறியிருந்த கறுப்புத் தாயத்தையும் கழற்றி வீசியெறிந்தான்.

 

ஒரு இரவில் அவன் ஹோட்டலுக்கு ரொட்டி தயாரிக்க வராததைக் கண்டு பெரியவர் அனுப்பிய ஆள் அவனது குடிசை திறந்து தேடிப்பார்த்தான். தண்ணீர் குடத்தையும், இருந்த ஆடைகளையும் காணப் பெறாதவன் அவன் ஊரை விட்டு எங்கோ போய்விட்டதாக வந்து சொன்னான். அவனைத் தேடிப்போக அலுத்தவர்கள் ஓரிரண்டு நாள் பொறுத்துப்பார்க்கலாம் என இருந்தனர். ரொட்டி தயாரிக்கும் பொறுப்பு நெடுங்காலமாக ஆவலாகக் காத்திருந்த, வேலை தேடிப்போயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டது. மறுநாள் விடிகாலையில் குளிக்கப்போன அவ்வூர் மருத்துவச்சிக் கிழவிதான் கரையோரப் பாறையொன்றில் வழுக்கிவிழுந்து மண்டை உடைந்து பெரிய சிவப்பு எறும்புகள் மொய்க்க, குருதி காயச் செத்துக்கிடந்தவனைக் கண்டு அலறினாள். ஆற்றங்கரையின் மருத மரத்தில், அயல்மரங்களிலென எல்லாவற்றிலும் கருப்புத் திட்டுக்களாய்க் காக்கைகள் அவனைச் சுற்றிலும் கரைந்தபடி இருந்தன. அவன் எழவில்லை. எனினும் அவ்வூர்க் காக்கைகளெல்லாம் ஒன்று சேர்ந்தாப்போலக் கூட்டமாக இருந்து அவனைப்பார்த்துக் கரைந்தன. இரை தேடி அலைதல் மறுத்து அப் பிணம் அகற்றப்படும் வரையில் அங்கேயே கிடந்தன. இனிமேல் அவனது தலை வானொலிப்பெட்டியை அழுத்தி, ஒலிக்கவைக்கச் செய்யமுடியாதென அறிந்தோ என்னமோ, அவை அவனைக் கொத்தவுமில்லை, துரத்தவுமில்லை.

 

 

 

– எம்.ரிஷான் ஷெரீப்இலங்கை

 

 

Series Navigationசிற்சிலநிலாவும் குதிரையும்
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *