மனிதர்கள்
சந்தித்துக்கொள்ளும்
பாதையில்
சுவர்ண பட்சிகள்
வருவதில்லை.
வறண்டு போன
நதிகளின் கண்ணீர்
கதையை
அவைகள் கேட்ட பிறகு
மனித வாடை
துர்நாற்றம் வீசுவதாக
புகார் கூறுகின்றன.
இடிந்து போன
அரண்மனையின்
கடைசி செங்கல்லில்தான்
பட்சி வளர்த்த
கடைசி மன்னனின்
சமாதி இருந்தது.
இரவில்
பட்சிகள் வந்து
மெளன ராகம் பாடி செல்லும்.
வறண்ட நதியின்
கர்ப்பத்தின்
ஆழமான
சதைப்பிண்டங்களை
அள்ளி சென்றனர்
இரக்கமற்ற மனிதர்கள்.
ஒவ்வொரு மணித்துளிகளில்
காசை வலக்கையில் வாங்கி
கஜான ரொப்பினார்கள்.
மறைந்து போன
நதியின்
ஓரத்தில்
மயானம் அமைத்து
இறந்த பிண்டங்களை
புதைத்தார்கள்.
மூவாயிரம்
ஆண்டுகளுக்கு பிறகு
இதுவும்
மொகஞ்தாரோ ஹாரப்பாதான்.
யாரோ கள்வன்
யாரோ உத்தமன்
யாரோ தவசி
யாரோ சுதேசி
என பிரித்துப்பாட போவது
சுவர்ண பட்சிகள் தான்.
-ஜெயானந்தன்.