—வளவ. துரையன்
நான் உன்னை முழுதும்
மறந்துவிட்டதாக
நினைக்கிறேன்.
ஆனாலும்
உன் நினைவுகளெல்லாம்
பலாச்சுளைகளை
மொய்க்கப் பறந்து வரும்
ஈக்களாக வருகின்றன.
தண்ணீரில் மிதக்கவிட்டக்
காகிதக் கப்பல்
கவிழ்ந்து விடுமோவெனக்
கலங்கும் சிறுவனின்
மனமாய்த் தவிக்கிறேன்.
மலர்த்தோட்டத்தில்
எல்லாமே
மணம் வீசினாலும்
மனத்தில் ஒன்றுதானே
வந்தமர்கிறது.
இறுதியில் முன்னால்
ஓடுபவனை
வெற்றி பெற விட்டவனாய்த்
தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.