யார் குதிரை?

This entry is part 38 of 45 in the series 9 அக்டோபர் 2011

அது அஸ்தினாபுரத்தை நோக்கிச் செல்லும் இராஜபாட்டை. நாலு கால் பாய்ச்சலில் ஒரு குதிரை வாயு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. ‘டக்டக்’ என்று அதன் குளம்படிச் சத்தம் ஏதோ ஒரு வேக கதியில் இன்னிசை எழுப்பிக்கொண்டிருந்தது.

திடீரென்று குதிரையின் வேகம் தடைபட்டது. ஓடிய வேகத்தில் கொஞ்ச தூரம் மெதுவாகச் சென்ற குதிரையை அதன்மேல் அமர்ந்திருந்த வீரன், கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தி, வந்த வழியில் திரும்பி, குதிரையைக் சிறிது தூரம் நடத்தினான்.

அதோ! அங்கே கிடப்பது யார்? அவனுக்கு என்ன வந்தது? பாய் விரித்து வீட்டிலே படுப்பதற்கு என்ன? அதற்கு வேகாத வெயில் காய்ந்துகொண்டிருக்கும் இந்த இராஜபாட்டைதானா கிடைத்தது? ஏனிங்கே இப்படி விழுந்து கிடக்கிறான்?

வீரன் குதிரையிலிருந்து இறங்கினான். குப்புற விழுந்து கிடந்தவனைப் புரட்டி மூக்கிலே விரல் வைத்துப் பார்த்தான். நல்லவேளை, மூச்சு வந்துகொண்டிருந்தது. தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு குப்பியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை முகத்தில் தெளித்தான். சிறிது நேரத்தில் பிரக்ஞை வந்தது.
“யாரப்பா நீ? என்ன நடந்தது?” என்று கேட்டான் வீரன்.

“என் பெயர் ஆசையப்பன்! உடல் நலமில்லை! வைத்தியரைப் பார்க்கத் தலைநகருக்குப் போய்கொண்டிருந்தேன். வெயில் தாங்காமல் மயங்கிக் கீழே விழுந்துவிட்டேன்!” என்று பதில் சொன்னவாறு படுத்துக்கிடந்தவன் மெதுவாக எழுந்தான்.

“ஆசையப்பன்! நல்ல பெயர்தான்!” இவ்விதம் நினைத்துக் கொண்ட வீரன் அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்டவனாய், “ஆசையப்பா! நோயாளியான நீ தலைநகர் வரைக்கும் நிச்சயம் நடந்து போக முடியாது! அதனால் நீ குதிரையில் ஏறிக்கொள்! நான் குதிரையை நடத்திக் கொண்டு வருகிறேன்” என்று மிகுந்த கனிவோடு சொன்னான்.

இதைக் கேட்ட ஆசையப்பன் அப்போதுதான் மலர்ந்த தாமரையைப் போல் சிரித்தான். அடுத்த கணமே குதிரைமேல் ஏறியமர்ந்து கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டான். வீரன் குதிரையை மெதுவாக நடத்தியவாறு பின்னாலேயே நடந்தான். சில நாழிகை நேரத்துக்கெல்லாம் தலைநகர் வந்துவிட்டது.

“ஆசையப்பா! இனி நீ இறங்கி வைத்தியர் வீட்டுக்குப் போ! நான் என் வழியே போக வேண்டும்!” என்று உதவி செய்த பெருமை பொங்கச் சொன்னான் வீரன்.
ஆனால், ஆசையப்பனோ குதிரையிலிருந்து இறங்கவில்லை.

“காது கேட்கவில்லையா, இறங்கப்பா!”, வீரன் இரைந்தான்.

“என் குதிரையிலிருந்து நான் ஏன் இறங்க வேண்டும்?” ஆசையப்பன் பதில் சொன்னான். வீரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. குதிரை ஆசையப்பனுடையதாமே?
வீரன் எவ்வளவு சொல்லியும் ஆசையப்பன் குதிரையை விட்டு இறங்கவேயில்லை. இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, பெரிய கூட்டம் கூடிவிட்டது. அங்கு வந்த ஊர்க்காவல் வீரர்கள் என்ன என்று விசாரித்தார்கள். வழக்கு என்று தெரிந்ததும் இருவரையும் அரசவைக்கு அழைத்துச் சென்றார்கள்.

வழக்கு அரசருக்கு முன்பு வந்தது.

நடந்தவற்றை ஆரம்பம் முதல் விளக்கமாகச் சொல்லித் தன் குதிரையைத் தனக்கு வாங்கித் தர வேண்டுமென்று அரசரிடம் முறையிட்டான் வீரன்.
ஆனால் ஆசையப்பனோ தன் வழக்கை வேறு விதமாகச் சொன்னான். தான் இராஜபாட்டையில் குதிரைச்சவாரி செய்து வந்தபோது, தன்னந்தனியே நடந்துகொண்டிருந்த அந்த வீரன், தன்னை நிறுத்திப் பேச்சுத் துணைக்குக் கூட வருவதாகச் சொல்லி உடன் நடந்து வந்தானென்றும், தலைநகர் வந்ததும் மலைவிழுங்கி மகாதேவன் போல் தன்னைக் குதிரையிலிருந்து இறங்கும்படிக் கேட்டான் என்றும் சொல்லி, குதிரை தன்னுடையது என்ற வாதிட்டான்.
வழக்கைக் கேட்ட அஸ்தினாபுரத்து அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படித் தீர்ப்புச் சொல்லுவது? வழக்குக்குரிய குதிரையை லாயத்தில் கட்டும்படி உத்திரவிட்ட அரசர், அடுத்த நாள் தீர்ப்புக் கூறுவதாகச் சொல்லி, சிந்தனை வயப்பட்டவராய்ச் சபையைவிட்டு எழுந்து போனார்.

அடுத்த நாள்! விநோதமான வழக்கின் தீர்ப்பைக் கேட்க ஊர் மக்கள் அனைவருமே அரசவையில் கூடிவிட்டனர். அரசர் வந்ததும் தீர்ப்பைச் சொன்னார்.
“ஆசையப்பன் லாயத்திற்குச் சென்று குதிரையை அவிழ்த்துக் கொள்ளலாம்!”

தீர்ப்பைக் கேட்டதும் ஆசையப்பன் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடினான். ஏமாற்றத்தோடு வீரனும் பின்னாலேயே சென்றான்.

குதிரை லாயத்திற்குச் சென்ற ஆசையப்பனுக்கு பெரும் அதிர்ச்சி!

அங்கே வரிசை வரிசையாக ஐநூறுக்கும் மேற்பட்ட குதிரைகள் கட்டப்பட்டிருந்தன. அதில் எது அவன் முதல் நாள் சவாரி செய்த குதிரை? கண்டுபிடிக்க முடியாமல் விழித்துக் கொண்டு நின்றான்.

ஆனால் வீரன்! தன் குதிரையை அடையாளம் கண்டு கொண்டு, தாடையில் கை வைத்து அன்பாகத் தடவினான்! அது நன்றியுடன் கனைத்தது. அதை அவிழ்த்துக்கொண்டு லாயத்தை விட்டு வெளியே வந்தான் வீரன்.

ஆசையப்பன் குட்டு வெட்ட வெளிச்சமாகிவிட்டது! குதிரை ஏற ஆசைப்பட்டான்! இப்போது கம்பி எண்ணப்போய்விட்டான்!

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)இரு கவிதைகள்
author

சகுந்தலா மெய்யப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *