வளவ. துரையன்
பாட்டி எப்பொழுதும்
படுத்துத் தூங்கவைக்கும்போது
கதை சொல்வார்.
எல்லாக்கதைகளிலிலும்
எங்கள் பாட்டி தன்
வலைகளை அறுத்துக் கொண்டு
வெளியே வருவார்.
உளுத்துப் போன உத்தரந்தான்
எனினும் இவ்வீட்டை
உறுதியாகத் தாங்குவார்.
கதைகளில் சிலநேரம்
அவர் உள்ளே சென்று
காணாமல் போய்விடுவார்.
பேய்க்கதைகள் சொல்லும்போது
பேயாக மாறிவிடுவார்,
சாமி கதை சொன்னாலோ
சாமியாட்டம்தான்.
கதை முடிந்துவிட்டது
என எண்ணுகையில்
சற்றுநேரம் பேசாமல் இருப்பார்.
திடீரென கதையை
முன்பைவிட வேகமாகத்
தொடங்குவார்.
ஒரு கதையிலிருது
இன்னொரு கதைக்கு
முடிச்சுப் போட்டுத் தாவுவார்.
இப்பொழுது
ஊரின் கிழக்கே
தனியாய்ப் படுத்துக் கொண்டு
யாருக்குக் கதை சொல்கிறாரோ?