வளவ. துரையன்
அந்தத் தெருவின் தொடக்கத்திலேயே இருந்த வேப்ப மரத்தின் நிழலில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தினான் சங்கரன். இதுபோன்ற விசாரணைகளுக்கெல்லாம் நேராகப் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்குப் போகக் கூடாது என்பது அவன் பணியில் சேர்ந்தபோது சொல்லப்பட்ட பாலபாடம். வேப்பமர நிழல் சற்றுப் பெரியதாகவே இருந்தது. அங்கு ஒரு சர்பத் கடையும் இருந்தது. நீண்டநாள் பழகியவர் போல அந்தக் கடைக்காரர் ”வாங்கய்யா சர்பத் சாப்பிடுங்க” என்றார்.
சங்கரன் கடைக்கு வெளியே இருந்த பெஞ்சில் உட்கார்ந்தான். “சர்பத்தா; ஜூஸா” என்று கேட்டதற்கு, “சாதாரண சர்பத்தே போதும்” என்றான். அங்கு ஏற்கனவே உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் சர்பத் உறிஞ்சிக்கொண்டிருந்தார். ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காகக் ”காலை பத்து மணிக்கே என்னா வெயிலு” என்று சொல்லிக் கொண்டே கைக்குட்டையால் தன் முகத்தையும் கழுத்தையும் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
”ஆமாங்க” என்று சொல்லிக் கொண்டே கடைக்காரர் சர்பத் கொடுத்தார். கையிலே சற்று நேரம் அதை வைத்திருந்த சங்கரன் அந்தப் பெரியவர் போக வேண்டும் என்று காலம் தாழ்த்தினான். பெரியவர் போன பிறகு சர்பத்தை உறிஞ்சத் தொடங்கினான். ஒரு வாய் உறிஞ்சிய பின் சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் கடையை நோக்கி வரவில்லை.
கடைக்காரரிடம் “கொஞ்சநேரம் வந்து ஒக்காருங்க எவ்ளோ நேரம் நிப்பீங்க” என்றான். பக்கத்தில் வந்து உட்கார்ந்த அவரிடம் ஒரு வாய் சர்பத் குடித்துவிட்டு “வியாபாரம் எப்படிப் போவுது” என்றான்.
“எங்க தம்பி, சுமாருதான். இனிமே பன்னண்டு மணிக்கு மேலதான். பள்ளிக் கூடம் விட்டுப் பசங்க வருவாங்க; ஒரு மணிக்கு வர்ற பஸ்லேந்து யாராவது வருவாங்க” என்றார்.
“ஆமாங்க, கிராமத்துல இப்படித்தான நடக்கும்” என்று சொன்ன சங்கரன், தன் குரலை இன்னும் தாழ்த்தினான்.
“பத்து நாள் முன்னாடி இந்தத் தெருவுக்காரரு ஒருத்தரைத் தான வெட்டிட்டாங்க” என்று கேட்டான். கடைக்காரர் முகம் சற்று மாறியது. அவர் கேட்டார்.
“நீங்க யாரு? போலீஸா”
”இல்லீங்க; நான் ஒரு பத்திரிக்கை நிருபரு. விசாரிச்சு எழுதணும்னு விழுப்புரத்துலேந்து வரேன்”
“அப்டீங்களா? இந்தப் போலீஸெல்லாம் வந்து கேட்டுப் பதில் சொல்லி அலுத்துப் போச்சுங்க; பயமாயும் இருக்குதுங்க; அதான் கேட்டேன்”
”அதெல்லாம் நீங்க ஒண்ணும் பயப்படவேணாம்; அந்தப் பையன் எப்படி?”
”யாரு வெட்டு வாங்கி செத்துட்டான சாரங்கன் அவனைத் தான கேக்கறீங்க”
“ஆமாம்; சொல்லுங்க”
கடைக்காரர் வெளியே சென்று யாராவது வருகிறார்களா என்று பார்த்தார். பாய்லரைச் சற்றுக் கிளறிக் கரித்துண்டுகளைத் தள்ளினார். கட்டம் போட்டச் சிவப்புத்துண்டால் முகத்தில் இருந்த வியர்வையைத் துடைத்தவாறு சொன்னார்.
“நானறிஞ்சவரை நல்லப் புள்ளைங்க அது; ஊர்ல யாரு வம்புக்கும் போகாது. பெரிய வண்டி புல்லட் வச்சிருக்கும்; அதுலதான் காலைல போச்சுன்னா சாயந்திரம்தான் வரும். சில நாளு ’பட் பட்’ டெனச் சத்தம் போட்டுக்கிட்டு பாதிராத்திரியிலக் கூட வரும்”
“என்னா தொழில் செஞ்சாரு”
“தொழில்னு ஒண்ணும் செய்யலிங்க; சாப்பாட்டுக்கு வயல்லேந்து நெல்லு வந்துடும். மாடு ஏழெட்டு இருக்குங்க; அவரு பொண்டாட்டி தங்கம்மாதான் பாலு வியாபாரம் செஞ்சு ஊட்டைப் பாத்துக்கும்”
”புள்ளைங்க இல்லியா?”
”ரெண்டு ஆம்பளைங்க’; பக்கத்துலக் கடலூர்ல ஆஸ்டல்லப் படிக்குதுங்க: லீவு விட்டா இங்க வரும்”
அதற்குள் இரண்டு பேர் கடைக்கு வந்தனர். என்னாங்க வேணும்” சர்பத்தா? ஜூஸா?” என்று கேட்டுக்கொண்டே கடைக்காரர் எழுந்துவிட இனி பேச்சு தொடராது எனச் சங்கரன் உணர்ந்துகொண்டான்.
கடைக்காரிடம் காசைக் கொடுத்துவிட்டு, “ஐயா, வண்டி இங்கேயே இருக்கட்டும் பாத்துக்குங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். கடைக்காரர், “இப்படியே நேராப் போங்க” என்று கையைக் காட்டினார்.
தெருவின் மறுபக்கம் நோக்கிப் புறப்பட்டான். அது சற்றுப் பெரிய தெருதான். ஓட்டுவீடுகளும் மாடி வீடுகளும் மாறி மாறி இருந்தன. சில வீடுகளின் வாசலில் மாடுகள் கட்டப்படும் அடையாளங்கள் இருந்தன. எதிரே வந்தவரிடம்,”சாரங்கன் வீடு எதுங்க?” என்று கேட்டான்.
அவர் பதில் சொன்னார். ‘சாவு விசாரிக்க வந்திருக்கீங்களா? கடைசி ஊட்டுக்கு ரெண்டு ஊடு தள்ளிப் பந்தல் போட்டிருக்கு பாருங்க அதான்”
அந்த வீட்டு வாசலில் சில நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒரு நாற்காலியில் சில தினத்தாள்களும் கிடந்தன. இரண்டு பேர்தாம் உட்கார்ந்திருந்தனர். வீட்டிற்கு எதிர்ப்புறம் பெரிய மாட்டுக்கொட்டகை இருந்தது. அதற்கும் பின்னால் இரண்டு பெரிய வைக்கோற் போர்கள் இருந்தன. அவற்றுக்குப் பின்னால் வயல்கள் இருந்தன.
சங்கரன் அருகில் சென்றதும் உட்கார்ந்திருந்த இருவரும் எழுந்தனர். அவர்களில் வயதான ஒருவர், “வாங்கய்யா, வணக்கம் என்றார்.. பதிலுக்குச் சங்கரனும் “வணக்கம்” என்று கூறிக் கை குவித்தான்.
“உட்காருங்க” என்று சொன்னவுடன் உட்கார்ந்தான்.
அந்தப் பெரியவர் இவன் யாரென்பது போல சங்கரனின் முகத்தைப் பார்த்தார். “ஐயா, நான் பத்திரிகை நிருபர். விழுப்புரத்திலேந்து வரேன். சில விவரங்கள் தெரிஞ்சிக்கணும்.”
இதைக் கேட்ட அவரின் முகம் மாறிவிட்டது. “ஏங்கய்யா, பத்திரிகைக்கும் போலீஸுக்கும்தான் எல்லாம் சொல்லியாச்சே” என்றார்.
”இருந்தாலும் எங்கப் பத்திரிகைக்கு இன்னும் கொஞ்சம் வெவரம் வேணுங்கய்யா; சாரங்கனுடைய மனைவியைப் பாத்துக் கேக்க முடியுங்களா?”
அவர் உடனே எழுந்து உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் வெளியே வந்தார். ”வாங்க தம்பி” என்று சங்கரனை உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளே நடையைத் தாண்டி பெரிய கூடம். ஒரு பக்கம் நிறைய தலைவர்கள் படங்களும், மறுபக்கம் பல சாமிகளின் படங்களும் மாட்டப்பட்டிருந்தன.
“வாங்க” என்று அழைத்துக் கைகூப்பி ”வணக்கங்க” என்று சொன்னார் தங்கம். அவரைப் பார்த்தான். ஓரளவிற்குத் துக்கத்திலிருந்து தேறிவிட்டவர் போல இருந்தார். அழுத்தி வாரிக் கொண்டையிடப்பட்ட கூந்தல். சாயம் போன சிவப்பு நிறப்புடவை. மஞ்சள் நிற ரவிக்கை.
”ஒக்காருங்க” என்று அங்கிருந்த நாற்காலியைக் காட்டியவர், “எனக்கு சொல்லிச் சொல்லி அலுத்துப் போயி அழுகைதான் வருதுங்க; இவருதான் எங்க மூத்தாரு. இவருக்கிட்ட என்ன வேணுமோ கேட்டுட்டுங்க” என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்.
இவன் உட்கார்ந்ததும் அந்தப் பெரியவரும் உட்கார்ந்தார். “ஒங்களுக்கு என்னா தெரியணுங்க?” என்று கேட்டார்.
‘எப்படி ஆச்சுங்க”
“நெறைய தடவை சொல்லிட்டேங்க; அன்னிக்கு பக்கத்து ஊர்லப் புள்ளங்களைப் பாக்கப் போயிருந்தாங்க; பாத்துட்டு ரெண்டாம் ஆட்டம் சினிமா பாத்திருக்கான். வண்டியில வரும்போது பின்னாடியே திட்டம் போட்டு வந்திருக்காங்க”
“யாருங்க”
”அதாங்க தெரியல; அவனுக்கு யார் கூடவும் சண்டையே இல்லிங்க”
“அப்பறம்” என்று அவன் கேட்ட போது, “மோரு குடிங்க” என்று ஒரு பெரிய தம்ளரில் மோர் கொண்டுவந்து கொடுத்தார் தங்கம். அவன் வாங்கிக் கொண்டபின் சென்றுவிட்டார்.
சங்கரன் மோரைக் குடிக்கும்போது, “அவன் என்னைவிட ஐந்து வயது சின்னவங்க; அதிர்ந்தே பேசமாட்டான். காருல வந்தவங்க இவன் வண்டியில மோதிக் கீழ விழவைச்சிட்டாங்க; நாலுபேரு காருலேந்து இறங்கி அருவாளாலக் கூறு போட்டுட்டாங்க” என்று கூறிவிட்டு வாயில் துண்டை வைத்து அழுகையை அடக்கிக் கொண்டார்.
அவர் அமைதியானதும், “ஏதாவது கொடுக்கல் வாங்கலில் தகராறா இருக்குமா? இல்ல நிலத்தகராறா கூட இருக்கலாம்” என்றான் சங்கரன்.
“இல்லீங்க; அதெல்லாம் ஒண்ணுமில்ல; இருந்தா எனக்குத் தெரிஞ்சிருக்கும். நான் வெளிப்படையா சொல்றேனுங்க; பொண்ணு விஷயம் கூட இல்லீங்க” என்றார் அவர் மெதுவாக.
சங்கரனுக்கு ஏன் வந்தோம் என்றாகிவிட்டது. ”புதிய செய்தி ஒன்றும் கிடைக்கவில்லை. பத்திரிகைக்கு என்னவென்று எழுதுவது? ஆசிரியர் வேறு நச்சரித்து விடுவார்”
இரு சக்கர வாகனத்தை மெதுவாகச் செலுத்திக்கொண்டு ஒரு வழியாய்ப் பல்வகையான சிந்தனைகளுடன் போய்ச் சேர்ந்தான்.
மறுநாள் காலையில் சாரங்கன் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒரு பெண்மணி, ‘தங்கம், ஒன்னை உட்டுட்டு சாரங்கன் போயிட்டானாடி?” என்று கத்திக் கொண்டே வீட்டினுள் நுழைந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த தங்கம், “ஐயே அத்த, என்ன உட்டுட்டுப் பூட்டாருங்க; நானு என்ன செய்வேன்” என்று சொல்லிக் கொண்டே வந்து அத்தையைக் கட்டிக்கொண்டார். இருவரும் கீழேயே உட்கார்ந்து ஒருவரை ஒருவர் ஒருவர் கட்டிக்கொண்டு அழுது தீர்த்தனர்.
“எனக்கு மனசே ஆறலடி. நான் காசிக்குப் போயிட்டேன். காசியிலே இருக்கச்சதான் சேதியைச் சொன்னாரு மூத்தாரு. அப்படியே சாரங்கனுக்கும் ஒரு முழுக்கு போட்டுட்டு ஓடி வந்துட்டேன். நெனச்சு நெனச்சுப் பாத்தா இவனுக்குத் தானா இப்படி வரணும்னு தோணுதடி; ஒரு தப்புதண்டாவுக்குப் போகாதவன்; எல்லாருக்கும் நல்லதே செஞ்சவன். இப்பதான் ஒனக்குக் கல்யாணம் முடிச்ச மாதிரி என் கண்ணுலயே நிக்குதடி; சொத்தைப் பாகம் பிரிக்கச்சே கூட அண்ணன் எதை எடுத்துக்கட்டுமோ எடுத்துக்கட்டும்னு விட்டுக் கொடுத்தவன்டி, திம்மாத்துண்டு வயலையும் ஏழெட்டு மாடு கன்னையும் வச்சிக்கிட்டு முன்னுக்கு வந்தவன்டி; என்னாடி சொல்றது” என்று புலம்பிக் கொண்டே இருந்தார் அத்தை.
அதற்கும் அடுத்த நாள் அதே வீட்டு வாசல்; மாலை ஆறு மணி இருக்கும்; ஆறு பேர் மிதிவண்டியில் வந்திறங்கினார்கள். இரண்டு பேர் வேட்டியும் மீதி பேன்ட்டிலும் இருந்தனர். வந்தவர்கள் வாசலில் இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்தனர்.
சத்தம் கேட்டு வெளியே வந்த அதே பெரியவர் அவர்களைப் பார்த்தார். அவரைக் கண்ட அனைவரும் எழுந்தனர். ”வணக்கங்க” என்றனர். அவரும் பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு “ஒக்காருங்க; நீங்க யாருன்னு…..” என்று இழுத்தார்.
வந்தவர்களில் வேட்டி கட்டியிருந்த சற்று வயதான தோற்றத்துடன் இருந்தவர் சொன்னார்.
“ஐயா, என் பேரு ஆறுமுகம். நாங்கள்ளாம் பக்கத்து கிராமங்க. அங்க வாத்தியாரா இருக்கோம். கேள்விப்பட்ட ஒடனேயே வந்து பாத்துட்டோம்; இப்ப சாவகாசமா அம்மாவைப் பாக்க வந்தோம். எங்கள அவங்களுக்குத் தெரியும்”
இதைக் கேட்ட பெரியவர் உள்ளே சென்றார். சற்று நேரத்தில் வெளியே வந்து “ஒங்கள எல்லாரையும் உள்ளார வரச் சொல்லுது; வாங்க” என்றார். அனைவரும் உள்ளே போய் உட்கார்ந்தனர். ஒரு பையன் பெரிய பித்தளைச் சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து வைத்தான்.
“இவன்தான் பெரியவனா? என்று கேட்டார் ஆறுமுகம்.
அதைக் கேட்ட பெரியவரும், ”ஆமாங்க பக்கத்துல பத்தாவது படிக்கறான். ஆஸ்டல்ல இருக்கான்” என்றார்.
பையன் கொடுத்த தண்ணீரை வாங்கிக் கொண்டு, “தம்பி! நல்லாப் படிக்கணும்” என்றார். அனைவரும் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போதே உள்ளே இருந்து தங்கம் வந்தார். கையில் கொண்டுவந்த ஒரு பையை ஸ்டூலின் மீது வைத்தார்.
அதைப் பார்த்தவுடன் ஆறுமுகம் எழுந்து விட்டார். “அம்மா, நாங்க இதுக்காக வரல; அன்னிக்கு வந்ததுதான; அதுக்கப்பறம் வரவே முடியல, அப்பறம் இவங்க ரெண்டு பேருக்கும் அன்னிக்கும் வர முடியல; அதான் எல்லாரும் பாத்துட்டுப் போலாம்னு வந்தோம்” என்றார்.
“இருக்கட்டுங்க; அவரு நீங்க வந்து கேட்டுட்டுப் போன போதே எடுத்து வச்சிட்டாரு. என்னிக்கிருந்தாலும் தரணும்ல” என்றார் தங்கம். பார்த்துக் கொண்டிருந்த பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் தங்கத்தைப் பார்த்தார்.
”ஊட்டுகாரரு பக்கத்துக் கிராமத்துப் பள்ளிக்கூடத்து விழாவுக்கு வருஷா வருஷம் பத்தாயிரம் குடுப்பாரு. சாவறதுக்கு அஞ்சு நாளு முன்னாடிதான் இவங்க வந்து கேட்டுட்டுப் போனாங்க; ஒடனேயே எடுத்து வச்ச பணம் இது.” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே தங்கத்துக்கு அழுகை வரத் தொடங்கியது. அடக்கிக் கொண்டார்.
“ஆமாங்கய்யா; அந்த நல்லவருக்கு இம்மாதிரி நடந்திருக்கக் கூடாது. அவரு தர்ற பணத்துலதான் எல்லாப் புள்ளங்களுக்கும் பரிசெல்லாம் வாங்கிக் குடுக்கறோம்” என்றார் பேண்ட் போட்டிருந்த ஒருவர்.
“நீங்கப் பேசிக்கிட்டிருங்க; நான் போயிக் காப்பி போட்டு எடுத்தாரேன்” எனக் கூறித் தங்கம் உள்ளே சென்றார்.
அதற்குள் ஆறுமுகம், “எப்படீங்க இது நடந்திருக்கும்? ஏதாவது புலன் தெரிஞ்சிச்சா?” என்றார்.
”“ம்…ஒண்ணும் தெரியலங்க; போலீஸெல்லாம் ரெண்டு நளைக்கு ஒரு தடவை வந்து விசாரிச்சிக்கிட்டுத்தான் இருக்காங்க; யாரு மேல சந்தேகம்னு கேக்கறாங்க?” என்றார் பெரியவர்.
”நமக்குத் தெரிஞ்சு அவருக்கு விரோதியெல்லாம் யாரும் கெடையாதுங்க; அவரு எல்லாருக்கும் நல்லவருதான். ஒதவின்னா அவரு மாதிரி யாரும் செய்யமுடியாதுங்க” என்றார் ஆறுமுகம்.
“ஆமா, ஒங்கள மாதிரி சாரங்கன் கிட்டப் பழகினவங்களுக்குத்தான் அவனப் பத்தி நல்லாத் தெரியும்”
”அதாங்க சொல்றேன்; ஒரு ஈ எறும்புக்கும் கெடுதலே நெனைக்காதவ மனுசங்க அவரு”
அதற்குள் காப்பி வந்தது. “என்னா செய்யறது எல்லாம் என் தலைவிதி; இப்பவே பாதி ஊட்டு வெவகாரம் நான்தான் பாக்கறேன். இனிமே எல்லாம் என் தலையிலதான். இந்தப் புள்ளங்கத் தலை கெளம்பறவரைக்கும் கொஞ்சம் கஷ்டம்தான்” என்று சொன்னார் தங்கம். அதற்குள் அவருக்குக் குரல் கம்ம ஆரம்பித்தது. சேலையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
அனைவரும் காப்பி குடித்து முடித்தனர். பணப்பையை ஆறுமுகம் கையிலெடுத்துக் கொண்டார். ”அப்ப நாங்க கெளம்பறோம். என்னா வேணும்னாலும் சொல்லி அனுப்புங்கம்மா; எங்களால முடிஞ்சத ஒடனெ செய்யறோம்” என்றார் ஆறுமுகம்.
தங்கமோ பெரியவரோ பதிலேதும் சொல்லவில்லை. அவர்களை வழியனுப்பப் பெரியவர் வெளியே சென்றார். மிதிவண்டிகள் கிளம்பியபின் அவரும் வெளியே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். இருட்டத் தொடங்கியது.
தங்கம் விளக்கேற்றுவதற்காகச் சாரங்கன் படம் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றார். புதிதாக வண்ணச் சட்டம் போடப்பட்ட படம் அது. இரண்டுக்கு இரண்டு என்னும் அளவில் இருந்தது. சாரங்கன் படத்தில் நன்கு சிரித்துக் கொண்டிருந்தார். படம் இருந்த மேசையின் ஓரத்தில் அகல்விளக்கை ஏற்றி வைத்தார் தங்கம். படத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். இத்தனை நாள்கள் பேசாத பேச்சு வந்தது.
“நல்லா சிரிச்சுக்கிட்டு இருக்க; என்னாலதான் தாங்க முடியல; எம்மாடி எல்லாரும் வந்து ஒன்னை இந்திரனே சந்திரனேன்னு பேசிட்டுப் போறாங்க; எனக்கோ அழுகையும் சிரிப்பும் சேந்துதான் வருது; வெளியில சிரிக்கவும் முடியல; அழவும் முடியல; சாவறதுக்கு ரெண்டு நாளு முன்னாடிதான் போயி ஒரு கட்டப்பஞ்சாயத்தை முடிச்ச: அதுல வந்த ஒரு லட்சத்திலேந்துதான் பள்ளிக்கூடத்துக்குப் பத்தாயிரம் எடுத்து வச்ச; அதுக்கு முன்னாடி வாரத்துலதான் ரெண்டு கட்டு நோட்டு எடுத்துக் குடுத்து உள்ளாரக் கொண்டு போயி வைக்கச்சொன்ன; ஏதுன்னு கேட்டேன் வட்டிப்பணம்னு சொன்ன; இவ்ளோ வட்டியான்னு கேட்டேன்; கந்து வட்டினா தெரியுமா ஒனக்குன்னு கேட்டே; மறுநாளுதான் அந்த வட்டிக் குடுத்த பூவாத்தா தோட்டத்துப் பக்கமா ரகசியமா வந்து கொடம் கொடமா கண்ணீரு விட்டு அழுதா: இதெல்லாம் உட்டுடுய்யான்னு கல்லாணம் ஆனதிலேந்து நானும் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிட்டேன். வட்டி வெவகாரத்தைப் போலிஸுக்குச் சொல்லிடுவேன்னு சொன்ன பரந்தாமனை ஆளு வச்சு வெட்டிக் கொன்ன: எங்கிட்ட அதையும் சொல்லிப் பெருமை பீத்திக்கின; ஒன் உசிரு வெட்டின ஒடனே போயிடுச்சாம: ஏன் தெரியுமாய்யா? பொம்பள விசியத்துல யோக்கியமா இருந்தில்ல; அதாலதான். இப்ப கூட நானு வெளியாளுங்க வரும்போது அழத்தான வேண்டியிருக்கு”
தங்கம் சாரங்கன் படத்திலிருந்த பூ விழுந்ததைப் பார்த்தாள். வீசின காற்றில் அவள் ஏற்றிய தீபமும் அணைந்தது.
====================================================================================