- சோம. அழகு
ஒருவன் பரோட்டா வாங்கச் சென்றிருக்கிறான். பரோட்டா பொட்டலத்தின் வெளியில் சுற்றப்பட்டிருந்த துண்டுத் தாளில், குறுக்கும் மறுக்குமாகச் சென்ற நூற்கோடுகளின் அடியில், “பரோட்டா சாப்பிட்ட பிளஸ்-1 மாணவி சாவு” என்ற செய்தி அம்மாணவியின் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டிருந்திருக்கிறது. அதைப் புகைப்படம் எடுத்து அதில் ‘உனக்கு பரோட்டா கட்டி குடுக்க வேற பேப்பரே கிடைக்கலியா? ஏன்டா இப்பிடி அநியாயம் பண்றீங்க?’ என நகைச்சுவையாக தட்டச்சு செய்து மீம் ஒன்றை வலைதளத்தில் உலவ விட்டான். யாரும் பார்த்தவுடன் சிரித்துவிட்டுச் சாதாரணமாகக் கடந்துவிடுகிற விஷயம்தான்.
எனக்கு மட்டும் ஏனோ யாரென்றே தெரியாத அம்மாணவியின் பெற்றோர் முகமற்றவர்களாக என் மனதினுள் வந்து அமர்ந்தனர். ஒரு அற்ப விஷயத்திற்காகப் பிள்ளையைப் பறி கொடுத்த அவர்கள் எதேச்சையாக இதைப் பார்க்க நேர்ந்தால் மீண்டும் துணுக்குற மாட்டார்களா? ஏற்கெனவே அவ்வுணவை மகளுக்கு வாங்கித் தந்த அத்தருணத்திற்குப் பல முறை சென்று தங்களைத் தாங்களே கடிந்து கொண்டிருப்பவர்களுக்கு இது இன்னும் வலியைத் தராதா? அந்த மீம் தயார் செய்தவன் ஏதோ விளையாட்டாகத்தான் செய்திருக்கக் கூடும். நிச்சயம் இவ்வளவெல்லாம் யோசித்திருக்க மாட்டன்தான்.
ஒருவேளை நான்தான் இதை அளவிற்கு மீறிய நுண்ணுணர்வோடு அணுகுகிறேனா? ஒரு சிறு தடுமாற்றமோ கலக்கமோ என்னில் உருவாவதற்கு அம்மாணவி எனக்குத் தெரிந்தவளாகிப் போகும் வரை காத்திருக்க வேண்டுமா? அதுவரை கெக்கலித்துக் கொள்ளலாமா? ‘இப்படியெல்லாம் பார்த்தால் எந்த நகைச்சுவையையும் ரசிக்க முடியாது’ என்பது இதற்குப் பொருந்துமா என்றும் தெரியவில்லை.
சமீபமாக நகைச்சுவை என்று வகைப்படுத்தப்படும் சிலவற்றைக் காண்கையில் எவ்வாறு எதிர்வினை ஆற்றுவது என்று ஒரு கணம் திகைப்பு ஏற்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானியான Oppenheimer தலைமையில் ஒரு குழு அணுகுண்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஜூலை 16, 1945 அன்று நியூ மெக்ஸிகோவில் முதல் அணுவெடிப்புப் பரிசோதனையில் வெற்றியடைகிறார்கள்(!). இதுதான் அவ்விஞ்ஞானியின் பெயர் கொண்ட திரைப்படத்தின் கதை. ஆகஸ்ட் 6-9, 1945ல் ஹிரோஷிமா நாகசாகி பேரழிவுகளுக்கு வித்திட்டதில் முக்கியப் பங்காற்றியது அச்சோதனையே!
இத்திரைப்படம் வெளிவந்த அதே நாளில் Barbie என்ற திரைப்படமும் வெளிவர, இணைய உலகம் இரண்டு படங்களையும் ஒருங்கிணைத்து மீம் உருவாக்கத்தில் ஈடுபட்டது. அதில் ஒன்று – Barbie கதாபாத்திரங்கள் சிரித்தவாறே நிற்க, பின்புலத்தில் (கொடுந்துயரமாகிப் போன ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு தாக்குதல்களைக் குறிக்கும்) காளானாக மூண்டு நிற்கும் புகை மண்டலத்துடன் கூடிய ஒரு சித்திரம். இன்னொன்று, Oppenheimer தோளில் Barbie சிரித்தவாறே அமர்ந்திருக்க, பிண்ணனியில் அணுகுண்டு வெடித்துச் சிதறியதில் தீ அம்புகளாகிப் பறக்குமாறு வடிவமைக்கப்பட்டு Barbenheimer என்று பெயரிடப்பட்ட ஒரு சித்திரம். Barbie திரைப்படம் ஜப்பானில் வெளியாகவிருந்த தேதி ஆகஸ்ட் 11, 2023 என்பதால் அந்தச் சித்திரத்தை வடிவமைத்தவரின் அப்பதிவுக்குக் கீழ் Barbie Movieன் அலுவலகக் கணக்கிலிருந்து “It’s going to be a summer to remember” என X தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அவ்வளவு பெரிய கோரத் தாக்குதல் நிகழ்ந்த அதே ஆகஸ்ட் மாதம் குறித்து அத்தாக்குதலை நிகழ்த்திய அமெரிக்காவிடமிருந்தே வெளிப்பட்ட இவ்வகையான கேலிக்கூத்துகள் நிச்சயம் ஜப்பானியர்களுக்கு ரசிக்கும்படியாக இருந்திருக்கவில்லை. காளான் குடையென விரிந்த கரும்படலம், எத்தனை காலமானாலும் இழந்த லட்சக்கணக்கான உயிர்களையும் வலியையும் நினைவுபடுத்தும் ஒன்று. அதை ஏதோ வெற்றிக் களிப்பாக, அறிவியல் சாதனையாக, அதிகாரத்தின் உறைவிடமாகப் பாவிக்கும் அமெரிக்கர்களின் இச்செயலை வறட்டுத்தனமாகக் காண்பதாக DePaul University, Chicagoவில் பணிபுரியும் பேராசியர் Miyamoto Yuki கூறியிருந்தார். ஜப்பானியர்களிடம் பரவலாகக் காணப்பட்ட எதிர்ப்பால் Barbie திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான Warner Bros திரைப்பட வெளியீட்டு தேதியையொட்டி மன்னிப்பு கேட்டது. Oppenheimer திரைப்படத்தையோ ஜப்பானில் எட்டு மாதங்கள் கழித்துதான் திரையிட்டார்கள்.
அணுவெடிப்பு அவலத்தை நகைச்சுவையாகக் கையாள்வதே தவறு. இதில் உவமையாகவெல்லாம் பயன்படுத்தும் கொடுமையை எங்கு போய்ச் சொல்ல? சமீபத்தில் அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த Tim Walberg “காஸாவை ஹிரோஷிமா நாகசாகியைப் போல் கையாளுங்கள்” என இஸ்ரேலுக்கு அறிவுரை வழங்கியது சர்ச்சைக்கு உள்ளாக உடனே, “பிரச்சனையைச் சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வரவும் இனி எஞ்சியிருக்கும் அப்பாவிகளின் உயிரைக் காப்பாற்றவும்தான் அப்படிச் சொன்னேன்” என்று அயோக்கியத்தனமாகச் சப்பைக் கட்டு கட்டினார்.
*******************
சில சமயங்களில் இக்கட்டான சூழல்களினின்று மீளவோ அல்லது சமாளிக்கும் வழிமுறையாகவோ(coping mechanism) அவல நகைச்சுவை (dark humour), நையாண்டி என நகைச்சுவை வெவ்வேறு வகைகளில் வெளிப்படுவதுண்டு. உதாரணமாக ஒரு நெருக்கடியான அரசியல் சூழலில் எதேச்சதிகாரத்தைத் தூக்கிப் பிடிக்கும் தலைவர்களை நகைச்சுவையாகச் சாடுவது என்பது சர்வாதிகாரத்தின் மூடத்தனங்களைச் சுட்டிக் காட்டி இடித்துரைக்கவும் மக்களுக்கு அதை நினைவூட்டிக் கொண்டே இருக்கவும் உதவும் ஒரு நல்ல பாணி. ஆனால் நிதர்சனம் வேறு மாதிரியாக இருக்கிறது.
“கோமியத்தில் பல மருத்துவப் பண்புகள் இருக்கின்றன. காய்ச்சலைக் குணப்படுத்தும்; பாக்டீரியாக்களைப் பதம் பார்க்கும்; வைரஸை விரட்டியடிக்கும்…” என்று விளையாட்டல்லாத தொனியில் அடுக்கிக் கொண்டே சென்ற கோமியக்கோடிகள், வம்படியாக வந்து அதற்குக் காவடி எடுத்துக் கம்பு சுற்றி முட்டு கொடுத்த திருவாளர் பெருமக்கள் ஆகியோரைப் பார்த்துச் சினம் கொள்ளாமல் சிரித்துக் கடந்து செல்வதும்; இம்முட்டாள்தனங்களையும் இக்கருத்துகளை உதிர்க்கும் அறிவுஜீவிகளையும் பகடி செய்யும் குணால் காம்ரா போன்ற முதுகெலும்பு படைத்த மேடைச் சிரிப்புரையாளர்களைக்(standup comedians) கண்டு பொங்கி எழுந்து சிறையில் தள்ளுவதும்…. அடடே!!!
எதைக் கூறினாலும் ‘புண்படுகிறது’ என்று கிளம்பி வரத் தயாராகக் காத்திருக்கும் கூட்டம் ஒருபுறம்; எல்லாவற்றையும் எள்ளி நகையாடும் கூட்டம் இன்னொரு புறம். இவர்களுக்கு மத்தியில் நகைச்சுவைக்கான எல்லைக் கோடுகளை வரையறுப்பது சற்று கடினம்தான். வேண்டுமானால் இப்படிக் கொள்ளலாம். ஒரு நகைச்சுவையினால் யார் புண்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து அது ஏற்றுக் கொள்ளத்தக்கதா இல்லையா என முடிவு செய்யலாம். இங்கு மீண்டும் ஒரு குழப்பம். எது சரி? யார் புண்பட்டால் பரவாயில்லை? என் ‘சரி’ இன்னொருவருக்குத் தவறாக இருக்கும். ஆகையால்… மனிதத்தின் பக்கம் இருக்கும் பொதுவான ‘சரி’ என்றொன்று உண்டு. அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுதல் நலம்.
என்னதான் நகைச்சுவையை நெறிப்படுத்த முயன்றாலும் அந்தந்த இடத்தையும் உட்பொருளையும் கொண்டே அது ஒரு நல்ல நகைச்சுவையாக அமையும். இல்லையெனில் மிகப் பரிதாபமாக ரணத்தை மட்டும் வெளிப்படுத்தி முகம் சுழிக்க வைக்கும். நகைச்சுவையும் துன்பியலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற Jack Deeன் வார்த்தைகள் தெரியாமல் இல்லை. இரண்டையும் துல்லியமாகப் பிரித்தறிதல் எளிதானதும் அல்ல.
இக்குழப்பம் நகைச்சுவைக்கு மட்டுமல்ல; எந்த ஒரு உணர்ச்சி வெளிப்பாட்டிலும் உண்டு. ‘மிகைப்படுத்துதல்’ நகைச்சுவையில் எடுபடுவது போலவே இன்னும் சில உணர்வுகளின் ஆழத்தை உணர்த்தவும் உதவும். ஆனால் மிகைப்படுத்துதலைச் சரியாகக் கையாளாவிட்டால் எடுத்துக்கொண்ட பொருளின் சாரம் தொலைந்து நீர்த்தும் நமநமத்தும் போய்விடும்.
Ghibli கலை வடிவத்தைச் செயற்கை நுண்ணறிவின் கையில் தராதீர்கள் எனக் கிட்டத்தட்ட கெஞ்சிக் கேட்டுக் கொண்ட அக்கலையின் தந்தை Hayao Miyazakiன் வலியைக் குறிப்பிட்டு X தளத்தில் இவ்வாறாகப் பதிவிட்டிருந்தார் ஒருவர் – “கலைத்திருட்டு என்பது மிகவும் கொடூரமான வன்புணர்வு”. இவ்வார்த்தையை உவமை என்னும் பெயரில் இவ்வளவு இலகுவாகப் பயன்படுத்துதல் வன்புணர்வுக்கு உள்ளானவர்களின் உணர்வுகளைச் சிறுமைப்படுத்துவதோ சாதாரணப்படுத்துவதோ ஆகாதா?
**********************
இவ்வளவு எண்ணவோட்டங்களுக்கும் முத்தாய்ப்பாக நினைவிற்கு வந்தது ஒரு நிகழ்வு. சரியான இடத்தில் சரியான பொருளில் சரியான விஷயத்தை ஒருவர் வெளிப்படுத்தும் போது அவரை அந்நியப்படுத்தும் வகையில் சுற்றியிருக்கும் சராசரி மனிதர்களிடமிருந்து கிட்டும் மட்டமான எதிர்வினைக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்பதற்கான ஆகப் பெரும் சான்று.
நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவ மாணவியரின் பெற்றோருடன் ஆளுநர் நடத்திய கலந்துரையாடலில் ஒரு தந்தை, “கடந்த சில வருடங்களாக நீட் தேர்வினால் எங்கள் பிள்ளைகளுக்கு மருத்துவப் படிப்பில் சேர மிகவும் கடினமாக இருக்கிறது. எப்போது நீட் விலக்கு மசோதாவில் கையொப்பமிடுவீர்கள்?” என்று மரியாதையாகவும் கண்ணியமாகவும் ஆளுநரிடம் கேட்டார். “Never! Ever ! Never ever will I sign it. I will be the last person to give clearance” என்று காவிக்கே உரிய ஆணவம் பதிலாக வந்தது. உடனே அக்கூட்டத்தினர் ஏதோ அறிவுப்பூர்வமான பதிலைக் கேட்டுவிட்டதைப் போல் கைகளைத் தட்டினர். மனம் தளராமல் அந்த தந்தையும் விடாப்பிடியாக, “எங்களது உயர்ந்த மருத்துவத் தரம் குறித்து நீங்களே சிலாகித்திருந்தீர்கள். இத்தனை வருடங்கள் நீட் இல்லாமல்தான் எங்கள் மாநிலம் மருத்துவத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ளது. இவ்வளவு வளர்ச்சியும் நீட் இன்றிதான் நிகழ்ந்தது” எனத் தொடர்ந்து பல சரியான வாதங்களை முன் வைத்தார். “அதெல்லாம் எதிர்காலத்திற்குப் போதாது. Sit down” என்று அருவருக்கத்தக்க தொனியில் அடக்க முயன்றார் ஆளுநர். மீண்டும் கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது. அத்தந்தை மீண்டும் பேச முனைய ஒருங்கிணைப்பாளர்கள் அவரிடம் வந்து மைக்கை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு அக்காணொளி முடிந்தது.
அக்கூட்டத்தில் பிடரிக்குக் கீழ் தண்டுவடம் தென்பட்ட ஒரே நபரான அத்தந்தையைச் சகப் பெற்றோர்கள் அனைவரும் அதிகாரத் திமிரிடம் கைவிட்டது கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. தன் குழந்தைக்கு இடம் கிடைத்துவிட்ட போதும் அதே வசதியும் வாய்ப்பும் மறுக்கப்படும் இன்ன பிற குழந்தைகளுக்காக கேள்வி எழுப்பிய அம்மனிதரின் பொதுநலத்தை மௌனம் காத்தாவது ஆமோதித்திருக்கலாம். அறத்தின் பக்கம் ஆவேசமாக இல்லாவிடினும் அமைதியாகவேனும் நிற்க வேண்டிய அடிப்படை இங்கிதம் கூடவா தொலைந்துவிட்டது?
அவ்வளவிற்கா சமூகப் பிரக்ஞையற்றவர்களாக சூடு சுரணையற்றவர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம்? சிந்திக்க வேண்டிய இடத்தில் சிரித்து வைப்பது; சிரிக்க வேண்டிய இடத்தில் கோபப்படுவது; கோபத்துடன் அறச்சீற்றம் கொள்ள வேண்டிய இடத்தில் முதுகு வளைந்து மண்டியிடுவது; அனுதாபம் கொள்ள வேண்டிய இடத்தில் ஆதாயம் தேடுவது; உணர்வுப்பூர்வமான விஷயங்களை cringe என்று நெளிவது; நிஜமான cringeகளை ரசித்து ரசித்து உருகுவது; தகுதியில்லாதவர்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவது; கொண்டாட வேண்டியவர்களை நகைப்புக்குரியவர்களாக பாவிப்பது….. பெருன்பான்மை வெகுசனம் ஏன் இப்படிக் குழம்பிக் கிடக்கிறது?
எச்சூழலிலும் எவ்வுணர்வையும் சூடிக் கொள்ளலாம் என்று விநோதமான வெளிப்பாடுகளைக் கொண்ட இச்சமூகத்தின் இயங்கு முறை கொஞ்சம் அச்சமூட்டுவதாகவே இருக்கிறது.
- சோம. அழகு