-ரவி அல்லது.
கோடைக்காலங்களில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது குளித்துவிடுவேன். அதற்குமேல் குளிப்பது என் வேலைகளையும் மனோநிலையையும் பொருத்தது.
“தலையில தேய்ச்சி எவ்வளவு நேரம் வச்சிருப்பீங்க. சீக்கிரம் குளிங்க நான் குளிக்கனும்.” என்றார்கள் வழக்கம்போல மனைவி.
பெண்கள் தலையில் முடிகள் கொட்டுவதற்கு நரைக்காமல் இருப்பதற்கென்று ஏதாவது இலைகளை அரைத்து தலையில் தடவுவார்கள். சின்ன வயதிலிருந்தே அக்காமார்கள் ஆறு பேருக்கு ஒரு தம்பி என்பதால் அவைகள் எனக்கு இலவச இணைப்பாக கிடைக்கும். அப்போது அவைகளை நான் விரும்பாவிட்டாலும் கையில் மருதாணி இடுவார்கள். தலையில் ஏதேதோ பச்சை இலைகளை சேர்த்து (அதில் பூலாம் இலையும் செம்பருத்தியும் தான் நினைவில் இருக்கிறது) தலையில் தேய்த்து அவர்களே குளிப்பாட்டி விடுவார்கள். ஒரு வேளை அந்தப்பழக்கமோ என்னவோ மனைவி எதை அரைத்தாலும் எனக்கு கொஞ்சம் தேய்த்துவிடு என்பேன்.
அவர்களுக்கு தேய்த்துவிடுவதில் எந்தப்பிரட்சினையும் இல்லை. அப்போது நான் கைபேசியில் ஏதாவது படித்துக்கொண்டு அல்லது ஏதாவது எழுதிக்கொண்டு இருப்பதால் அவர்களுக்கு வரும் பாருங்கள் கோவம்.
ஓ…மை காட்…
இதற்கு மேல் உட்கார்ந்திருக்க முடியாதென குளியலறைக்கு சென்றுவிட்டேன். சுத்தமாக இருப்பதில் அக்கரை கொண்டவர் மனைவி என்பதால் குளியலறையும் மணமாக இருந்தது.
“ஹீட்டர் போட்டுத்தானே இருக்கு.”
“அது போட்டு ஒரு மணி நேரமாச்சு.சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க.ஒரு டம்ளர் சுடுதண்ணியில கலந்து குளிக்கிறதுக்கு. இவரு படுத்துற பாடு இருக்கே.”
இவர்கள் எல்லோரும் சொரக்குன்னு சூட்டோடு காபி குடிக்கிறவர்கள். கொதிக்க கொதிக்க தண்ணியில் குளிக்கிறவர்கள். எனக்கு எப்பொழுது இதமான சூடு போதும் குடிப்பதாக இருந்தாலும் சரி குளிப்பதாக இருந்தாலும் சரி.
இரண்டு குழாயைத் திறந்து தகுந்த மாதிரி நீரை கலந்து கொண்டு இருக்கும்போது அய்யாவின் நினைவு வந்தது.
அம்மா தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கும்போது சுடுதண்ணியை சூடாக ஊற்றும்போது அய்யா கத்துவார். அம்மா இதுக்கு பச்சைத் தண்ணியிலையே குளிக்கலாமே என்று திட்டுவார். சில வருடங்கள் அம்மா சட்டியைத்தூக்கி வீசுவார்கள் இல்லை அய்யா சட்டியைத் தூக்கி வீசுவார்கள். ஒவ்வொரு வருடமும் இதுவே மாறாத சண்டையாகத்தான் இருக்கும்.ஒரு வேளை இது அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
அம்மா நன்றாக அவர்களின் வேலைகளை அவர்களே செய்து கொள்ளும் வரை தீபாவளிக்கு அவரைத் தேடி கிராமத்துக்கு சென்றுவிடுவேன். அய்யாவையும் என்னையும் எண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பார். அய்யா இறந்த பிறகு என்னை அவர் நலமுடன் இருக்கும்வரை குளிக்க வைத்தார்.இதற்காகவே நான் எங்கு இருந்தாலும் சிரமப்பட்டாவது ஊருக்கு சென்றுவிடுவேன்.
மகன் கல்லூரிக்கு போகும்வரை அவனையும் என் மனைவி தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்தார்கள். அந்த புகைப்படங்கள் பழைய நோக்கியா பட்டன் போனில் இருக்கிறது. அதை தேடி எடுத்து அதிலுள்ள மெமரி கார்டில் உள்ள புகைப்படங்களை எடுக்க முடியுமா என்று கடையில் கேட்க வேண்டும்.
தலையில் தண்ணியை ஒரு கப் ஊற்றியதும் குளியலறை தரையில் பச்சையாக தண்ணீர் ஓடியது. அப்போது தான் கவனித்தேன். வெஸ்டர்ன் டாய்லெட்க்கு கீழே ஏழு எட்டு கருப்பு எறும்புகள் தண்ணீரில் நனைந்து அதன் மேல் ஏறிக்கொண்டு இருந்தது.ஒரு எறும்பு இறந்த நிலையில் தண்ணீர் வெளியாகும் பகுதி ஓரமாக தண்ணீரோடு இழுத்து செல்லும் நிலையில் இருந்தது. நான் அதனை விரலால் நகர்த்தினேன். அது பட்டென்று என் கையில் ஏறிவிட்டது. அது எனக்குள் ஒரு சிலிர்பைக் கொடுத்தது.
அப்படியே அதை டாய்லெட் கழுவும் பிரஷ் தண்ணீர் வரும் பைப்பில் சொருகி இருந்ததில் எறும்பை இடது கையால் நகர்த்தி விட்டேன். அது அந்த பிரஷ்ஷின் மேல் வரிசையில் உள்ள நரம்பின் மேல் உட்கார்ந்து இருந்தது. நான் கவனிக்காமல் இருந்திருந்தால் தண்ணீரோடு தண்ணீராக மடிந்து போயிருக்கும்.
நான் சுற்றி எங்கும் பார்த்துவிட்டு குளிக்க ஆரம்பித்தேன்.
எறும்புகள் வீட்டிற்குள் வந்தால் ஏதாவது இராசி பலன் இருக்குமா என்று செந்தில் நாதனிடம் கேட்டால் சொல்வான்.அவன் சிங்கப்பூர் சென்ற பிறகு போன் செய்தாலும் எடுக்கமாட்டான். குளித்துவிட்டு கூகுளில் தேடிப் பார்க்கவேண்டும். எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் மனைவியிடம் கலாட்டா செய்ய பயன்படும்.அதனால் அதனை அறியும் ஆவல் மேலிட்டது.
குளித்து முடித்து தரையில் படிந்திருந்த அரைத்த பச்சிலை தூளை கழுவிவிட்டு எறும்பைப் பார்த்தேன். அதைக் காணவில்லை. பிரஷை எடுத்து பக்கத்தில் பார்த்தேன். அதைக் காணவில்லை. வேறு எங்கையாவது போயிருக்கும் என்று நினைத்து விட்டு டாய்லெட்டின் பிளஷை திறந்து அதையும் சுத்தம் செய்தேன்.
கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு இங்கு பலபேருக்கு தெரியவில்லை என்று நான் பலரிடம் சொல்லிக்கொண்டு இருப்பேன். ஒரு முறை இதே கருத்தை பிக்பாசில் நடிகை நமீதாவும் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
எந்த வகை டாய்லெட்டாக இருந்தாலும் முதலில் ஒரு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் இங்கு பலருக்கு இல்லை.டாய்லெட்டில் பின்புறம் தள்ளி உட்காராமல் கொஞ்சம் மத்திமமாக உட்கார்ந்தால் பின்புறம் கழிவு ஒட்டாமல் இருக்கும் .ஒட்டி இருக்கும் கழிவை சிலமுறை எவ்வளவு முயன்றும் கழுவவும் முடியாது.பக்கத்தில் இருக்கும் பிரஷ்ஷை எடுத்து கழுவிவிடும் அளவிற்கு இங்கு மன நிலை எவருக்கும் மாறவில்லை. பொது கழிப்பறைகளை மக்கள் அதனை எப்படி பயன்படுத்தவேண்டுமென்ற அடிப்படை அறிவே இல்லாமல் தான் இன்றுவரைப் பயன்படுத்துகிறார்கள்.
மலம் தண்ணீரில் மிதந்தால் நம் வயிறு சரியில்லை அதாவது நாம் எடுத்த உணவு நமக்கு உகந்ததல்ல. அதுவே மலம் நீருக்குள் மூழ்கி இருந்தால் வயிறு நன்றாக உள்ளது. நாம் எடுத்த உணவு நமக்கு உகந்தது என்று எங்கோ படித்த குறிப்பு நினைவுக்கு வந்தது.
குளியலறையை விட்டு வெளியே வந்து தலையை சீவியதும் கைபேசியை எடுத்து எறும்புகள் பற்றி தேட ஆரம்பித்தேன்.
கருப்பு எறும்புகளை பிள்ளையார் எறும்பு என்று போட்டு இருந்தார்கள்.கருப்பு எறும்புகள் வந்தால் நல்ல சகுனம் என்றும் சிவப்பு எறும்பு வந்தால் அபச குணமாம். கருப்பு எறும்பு தெற்கிலிருந்து வந்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்குமாம்.வடக்கிலிருந்து வந்தால் அது மகிழ்ச்சியைக் கொடுக்குமாம். கிழக்கிலிருந்து வந்தால் கெட்ட செய்தி வருமாம். மேற்கிலிருந்து வந்தால் பயணம் ஏற்படும் என்று எழுதி இருந்தார்கள். இதை வைத்தே எல்லோரும் கதை கதையாக சொல்லி இருந்தார்கள். குளியலறையில் வந்தால் என்ன பலன் என்று எவரும் சொல்லவில்லை.
சராசரி எறும்பின் எடை நான்கு மில்லி கிராம். அதன் எடையைவிட ஐம்பது மடங்கு எடையை கூடுதலாக தூக்குமாம். மனிதன் தனது எடையை விட ஒன்றரை மடங்கு அதிகமாகத்தான் தூக்கக்கூடியவனாம். எறும்புகள் பலன் பார்க்காமல் அறிவியல் உண்மைகளை தேடி இருக்கலாமோ என்று தோன்றியது. காரணம் குளியலறையில் இருந்த மனைவி துண்டு எடுத்து வரச்சொல்லிக் கூப்பிட்டார்கள்.
அவர்கள் வெளியே வந்ததும் நான் அந்த எறும்பைப் பார்க்கும் ஆவலில் உள்ளே சென்றேன் . அதிகம் சூடான தண்ணீரில் குளித்ததால் உள்ளே அனலாக இருந்தது. வெஸ்டர்ன் டாய்லெட்க்கு கீழே ஏற்கனவே காணாமல் போன எறும்புகள் இறந்து ஒதுங்கி இருந்தது என்னை என்னமோ செய்தது. உடனே நான் எடுத்துவிட்ட எறும்பைப் பார்த்தேன். அது பழையபடி மேலே உட்கார்ந்து இருந்தது.
பிரஷ் கட்டையை கையில் எடுத்து ஒரு கப் தண்ணீரை எடுத்து தரையைக் கழுவி அவைகளை வெளியேற்றினேன்.சிறுவயதில் கிளி,நாய்க்குட்டி,நாவலந்தாங்குருவி புதைந்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. கண்ணீர் வந்துவிடுமோ என்று கவலையாகவும் இருந்தது.கையிலெடுத்த கட்டையை வெளியே கொண்டு வந்தேன். மனைவி பக்கத்து ரூமில் பிரார்த்தனையில் இருந்தார்கள். எப்பொழுது குளித்தாலும் பிரார்த்திப்பது அவருடைய வழக்கம். அது எனக்கு வசதியாக அமைந்தது.
கீழே சென்று செம்பருத்தி செடியில் அதனை விட்டுவிடலாமென செடியின் கிளையில் வைத்தேன். அது ஏறாமல் அப்படியே இருந்தது. ஏற்கெனவே ஒரே கிளையில் சிவப்பு மற்றும் மஞ்சளில் பூத்திருந்த செம்பருத்தி பூக்கள் வாடி கீழே விழுந்து கிடந்தது. அடியில் மொட்டாக இருந்த ஆரஞ்சு பூ மலர்ந்திருந்தது. மெதுவாக எறும்பு இலையில் ஏறியதும் எனக்கு நிம்மதியாக இருந்தது.
கைபேசி மேலே ஒலித்துக்கொண்டு இருந்ததால் எறும்பை நின்று கவனிக்க முடியாமல் போனது. கைபேசியில்‘அலுவலகத்திற்கு வரச்சொல்லி ரிசப்ஷனிஸ்ட் கீர்த்தனா என்னைப் பார்க்க செந்தில் நாதன் என்பவர் வந்திருப்பதாக’ சொன்னார்கள். இவன் எப்போ சிங்கப்பூரிலிருந்து வந்தான். மகளுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்குமோ.
பிரஷ் கட்டையை வைத்து விட்டு ஆடைகளை உடுத்திக் கொண்டு அலுவலகம் கிளம்பினேன்.
“டீ…சாப்பிட்டு போங்க.”
“செந்தில் வந்திருக்கானாம். அவன் டீ சாப்பிடனும்ப்பான்.அவன் கூட வெளியே சாப்பிட்டுக்கிறேன்.”
கீழே நான் படியில் இறங்கியபோது தான் கவனித்தேன். அந்த எறும்பு மெதுவாக கைப்பிடியில் நின்று நின்று ஏறிக்கொண்டு இருந்தது. அது இதுபோல் சென்றதும் அது தண்ணீரில் நனைந்ததால் அதன் மினு மினுப்பு மாறி இருந்ததும் அது நான் விட்டு வந்த எறும்பு தான் என்பதை உறுதிகள் செய்ய முடிந்தது.
அது அதன் இருப்பிடம் செல்கிறதா இல்லை அதன் சகாக்களை தேடிச் செல்கிறதா என்று அறிய ஆசையாக இருந்தது. அதன் வழியில் குறிக்கிடுவதற்கு நான் யார் என்ற சிந்தனை வர நான் என் வழியில் பயணித்தேன். அது மேலே ஏறிக்கொண்டு இருந்தது.
அதன் வாழ்க்கை தொடருமா போகும் வழியிலையே நசுக்கப்பட்டு நாசமாக்கப்படுமா என்று என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக எனக்குத் தெரியாது ஆனால் அது வாழவேண்டும் என்று நான் மிகுந்த ஆசைகள் கொண்டேன்.
***
-ரவி அல்லது.
***