இன்குலாப் என்றொரு இதிகாசம்

author
0 minutes, 13 seconds Read
This entry is part 7 of 7 in the series 27 ஏப்ரல் 2025

-ரவி அல்லது .

          இயற்கையின் மீதான தன் ஆதுரங்களை அதன் அழகியலில் கவிதைகள் வடித்த வண்ணம் பெரும் முயற்சிகள் இங்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. உணர்வுத் தெளிவில் உந்தும் கவிதைகள் வந்த படியே உள்ளது. இது ஒருபுறம் இருக்க. ஒரு கவிஞனின் கவிதைகள் அவன் கடந்து வந்த காலத்தின் பாடுகளை அதன் கூறுகளை பேசிக்கொண்டு இருக்கிறதென்றால் அந்தக் கவிஞன் இச்சமூகத்தின் பால் கொண்ட வாஞ்சையின் வெளிப்பாடு எத்தகையது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் கவிதைகளை எழுதுவதில் உள்ள அனுகூலங்களைக் கடந்து அன்றாட சிக்கல்கள் சொல்லில் அடங்காதவை. இதற்கு கவிஞருடன் பயணிக்கும் குடும்பத்தார்கள் புறந்தள்ள முடியாத அவல சாட்சியாவார்கள்.

இவைகள் யாவையும் கடந்து அக்கவிஞன் சமூகம் குறித்து சிந்திக்கிராறென்றால் அவனுக்குள் கனலும் நெருப்பு கந்தகக் கவிதைகளாக கொப்பளிப்பதில் வியப்பொன்றுமில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் அவர் கவிதைகள் பாடமாக வைக்கப்பட்டதும், எடுக்கப்பட்டதும் அவரின் கவிதைகளின் வீரியதற்கான சான்று.

அந்த வகையில் தமிழ் சூழல் பெற்ற அற்புதமான கவிஞர் இன்குலாப். அவரின் முழுக்கவிதைகள் திரட்டான ‘ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்.’ இன்றைய தலைமுறை வாசிக்க வேண்டிய கவிதைகள் தொகுப்பு.

இத்தொகுப்பின் முதல் கவிதையே அவர் யாரென்பதையும் எது குறித்து அவரின் அக்கரைத்தனம் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்திவிடுகிறார்.

*புதிதாக எதையும் எழுதவில்லை.*

புதிதாக எதையும் நான் எழுதி வரவில்லை,

என்றுதான் புதிதாக எழுதி முடித்தேன்.

எழுதியதெல்லாம்

மொழி பெயர்ப்பு தான்.

இளைஞர்களின் விழிகளில்

எரியும் சுடர்களையும்

போராடுவோரின்

நெற்றிச் சுழிப்புகளையும்

இதுவரை

கவிதையென்று

மொழி பெயர்த்திருக்கிறேன்

நியாயச் சூட்டால்

சிவந்த கண்கள் 

உரிமை கேட்டுத்

துடிக்கும் உதடுகள் 

கொடுமைகளுக்கு எதிராக 

உயரும் கைகள்-

எனது பேனாவை

இயக்கும் சக்திகள்.

இந்தக் கவிதையில் தான் யார் என்பதையும் தன்னால் இங்கு என்ன செய்ய முடியும் என்பதை தெளிவுபடுத்திவிடுகிறார். அடுத்து வரும் ‘அறைகூவல்’ கவிதையில் ‘உங்கள்- இதயத்துடிப்புகள் இந்தக் கண்ணாடியில் இன்று முகம் பார்த்துக்கொள்ளலாம். நீங்கள்- கற்றுத்தந்ததை நான்  கவிதையாக்கியுள்ளேன்.’ என்று இந்த சமூகம்தான் தன்னை இக்கவிதைக்குள் வெடித்து வீறு கொண்டு எழு வைக்கிறது என்பதை சொல்லிவிடுகிறார்.

இன்குலாப்பின் கவிதைகளில் உலக அரசியல், உள்ளூர் அரசியல்,பக்கத்து மாநில அரசியல் பார தூரமாகிப்போன ஈழ அரசியல் என எதையும் அவர் விட்டு வைக்கவில்லை.

பிரமீடுகளை பேசித்தீர்த்த கையோடு போர்ப்பந்தருக்குள் புகுந்தும் வருகிறது அவரது பேனா.

சீனாவின் தியான்மென் சதுக்க மாணவர்கள் மீதான துப்பாக்கி சூடு இன்றைய இளைஞர்களுக்கு எத்தனை பேர்களுக்கு தெரியும் என்பது எனக்குத் தெரியாது.’மறதியில் உலரும் உலகக் கனவுகளை ஈரப்படுத்த இப்போது கண்ணீர்’ என படிக்கும்போதே சட்டையைக் கிழித்து பீரங்கியின் முன் நின்ற அந்த இளைஞனின் புகைப்படம் கண் முன் வந்து போகிறது.

இயல்பாக எல்லாக் கவிதைகளையும் நாவல் போல படித்துச் செல்ல முடியாதபடி நிறுத்தி வைத்து பல இடங்களில் வார்த்தைகள் வதைத்துவிடுகிறது.

 ஆதிக்க சக்திகள் பாசிச கொடுமைகளை நிகழ்த்தும்பொழுது வர்க்க முரணை எதிர்த்து கிளர்ச்சிக்குள் ஆட்படுவது இயற்கையானது தான். சமூகப் பிரக்ஞையுள்ள கவிஞனைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.’நீங்கள் என்னைக் கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள்.’ என்று சிம்சன் போராட்டக்கலவரத்தை அவரின் நையாண்டியுடன் பேனாவின் முனையால் கீறிவிட்டும் செல்கிறார். நமக்குள் இரத்தம் சொட்டினால் நாமும் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளலாம்.

வளர்ந்து விட்டதாக சொல்லித் திரியும்  இன்றைய நாளில் தான் ஆணவக் கொலைகள் கணக்கிலடங்காத படி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.பள்ளிகளுக்குள் சாதிய பாகுபாடு டிஜிடலில் ஸ்டேட்டசாக ஜொலிக்கிறது.

நசுக்கப்பட்ட காலத்தில் துயரங்களில் வேதனை மோசமானது. அவரின் ‘நெருப்புக் கோலம்’கவிதையில் இப்படியாக வருகிறது.

தாயின் கர்ப்பத்தில் 

நாங்கள் சனித்தபோதோ

நீங்கள் பின்னிய

சாதிக்கயிறு

ஒரு

தொப்பூழ்க் கொடிக்கும் முந்தி

எங்கள் 

கழுத்தைச் சுற்றியது.

இன்று நாகரீகமாக வியாபித்துக்கிடக்கும் சாதியத்தை எப்படி வேரறுப்பது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகள் சாதிகளின் பெயர்களில் கொண்டாடப்படுவது அவர்களின் தியாகத்தின் மேன்மைக்கு ஆகச்சிறந்த அவமானத்தின் உச்சம்.

குடி நீர்த் தொட்டியில் மலம் கலந்தது போல அரியலூருக்கு அருகே குளப்பாடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வீட்டுக் குழந்தைகள் கிணற்றில் குளிக்க வந்தபோது மின்சாரம் பாய்ச்சி கொள்ளப்பட்டது குறித்து  மனுசங்கடா கவிதை பேசுகிறது.’அந்த பம்ப் செட்டை ரிப்பேர் செய்து விட்டார்களாம்.’

அப்பன் தோண்டுன கெணறு

அரசு மரத்துக்குப் பக்கத்திலே.

மாமன் தோண்டுன கெணறு

வளந்த தென்னைக்கு பக்கத்திலே.

தளும்புது தளும்புது தண்ணீரு.

தப்படிப்போம் வாடா பன்னீரு.

ஒடுக்கிப்பிழைத்த மனித இயந்திரம் அப்படியே மாறாமல் இருப்பதை ஒக்கிடப் போவது யார் என்பதுதான் இன்றுவரை தெரியவில்லை. அண்ணல் அம்பேத்காரும் அதன் பிறகு ஆயிரமாயிரம் தலைவர்கள் வந்தாலும் சாதியை நவீன வடிவமெடுக்க வைத்துவிடும் பாசிச கூட்டத்தை விரட்டுவது முடியாமல் இப்பொழுதும்  மூச்சுத் திணறுகிறது சமூகம்.

மும்மொழிக்கொள்கையில் முட்டி மோதிக்கொண்டு நிற்கும் இவ்வேளையில் நாகப்பட்டினம் திருமருகல் இளைஞர் ஒரு கவிதை அனுப்பி அதற்கு விமர்சனம் இன்குலாப் அவர்களிடம் கேட்டு இருக்கிறார். தன் சுயசிந்தகளுடைய ஒருவன் எங்கிருந்தாலும் பாராட்டப்பட வேண்டியவன் என்பதை கருத்தில் கொண்டு நீண்ட கவிதையொன்றை அதற்கு பதிலாக்கி இருக்கிறார். அது இன்றைக்கும் பொருந்துவது கவிஞன் காலம் கடந்தவன் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம். இளைஞனின் கவிதை,

மண்வெட்டி பிடிக்கும் 

திராணியைக் கூட

மனப் பாடக் கரையான்

தின்றுவிட்டது.

வாழ்க்கைக்கும் 

வகுப்பறைக்கும் இடையே

தொங்கும்  திரையைத்

துணிக்க வேண்டும்.

பாடமுறை

பழைய பிணங்களை

தோண்டி எடுத்து 

விசிறிக் கொண்டிருக்கிறது.

கவ்வாலிப் பாடகர், மாவோ, மார்க்ஸ்,குட்டி மணி,அண்ணல் அம்பேத்கர் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாபர் மசூதி பற்றிய கவிதைகளென காலப் பெட்டகத்தை நம் முன் காட்சிப்படுத்திக்கொண்டே செல்லும்போதே திண்ணியம் வழக்கில் தீர்ப்பு சொல்லிய நீதிபதியை ‘ஐயா நீதிமானே’,என்று அவர் கருப்பு அங்கியையும்  உலுக்கிவிடுகிறார்.

நாம் கவிதைகளை கடந்து செல்லும் போதே ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா.’, போன்ற பாடல்கள் நம் நரம்புகளை முறுக்கேற்றிவிடுகிறது.

ஈழத்திற்கான கவிதைகள் எத்தனையோ எழுதி இருந்தாலும் ‘முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’ எழுதும்போது கவிஞர் கலங்கிக் தான் போயிருப்பார்.

அரசியல்,சமூக கவிதைகளுக்கு இடையில் பொதுத் தளக்கவிதைகளும் இருக்கத்தான் செய்கிறது.அதற்குள்ளும் சமூக அக்கரை தெரிவது அந்தக்கவிஞன் யாவும் சமூக விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டதை காட்டுகிறது.

அந்த வகையில் 

எத்தனை வரைந்த போதும்

எப்பொழுதும் 

எனது

வண்ணக் கலவையில்

ஒரு துளி 

அமிலம்.

பொறுமையும் மௌனமும்

அடைகாக்கும் சூடு

உணர்த்தும்

உனக்கு 

ஒரு சிறகின் தீவிரிப்பு.

இந்த கவிதைத் தொகுப்பின் இணைப்பில் உள்ள பனிக்குடம் இதழுக்கு அளித்த செவ்வி என்று இன்குலாப் அவர்களின் ‘அழகியலுக்கான கோரிக்கையே.ஒரு போராட்டம்’ என்ற கட்டுரை, எழுதுகிறவர்களும் வாசிக்கின்றவர்களும் அவசியம் படிக்க வேண்டியது. அவரைப் பற்றி அறிந்து கொள்ளவும் மேலும் கவிஞனுக்கான பொறுப்புணர்வையும் அவர் அழகாக சொல்லி இருக்கிறார்.அதைப் படிக்கும் போது இன்குலாப் அறக்கட்டளையினரிடம் அனுமதி பெற்று அதையே தனிக் கட்டுரையாக்கும் ஆசைகள் மேலெழுந்த வண்ணம் உள்ளது.

கடந்து போன வருடமொன்றில் என் அலமாரிக்குள் வந்து தங்கிவிட்ட இந்தப் புத்தகத்தை மீள் வாசிப்பு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கால இயந்திரத்தில் பயணித்த அனுபவத்தை இத்தொகுப்பு நமக்கு கொடுத்தாலும் தொக்கி நிற்கும் அவலங்களை காலம்தான் சீர் செய்ய வேண்டும் என்ற பேரவா இயலாமையில் பொங்குகிறது என்பதென்னவோ உண்மைதான். இந்த கட்டுரையை தோழர் இன்குலாப் அவர்களின் ஒரு கவிதையைக் கொண்டே முடிக்கலாமென நினைக்கிறேன்.

மதங்கடந்த சொல்

அந்த பரவசத்தில் 

எல்லா முகத்திலும்

முத்தமிட்டது.

என் முகநூல் வரிகளை 

என் தோழர்கள்

ஒரு புன்முறுவலோடு கடந்து செல்லலாம்.

நேயர்கள் ஒரு கவிதை எழுதச் சொல்லலாம்.

விமர்சகர்கள் ஊடுருவிப் பார்க்கலாம்.

காதலி நட்பை மீண்டும் உறுதி செய்யத் தயங்கலாம்.

அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கைப் பற்றி யோசிக்கலாம்.

கடவுள் 

கடைசியாக முறையிட வந்துவிட்டானா என்று சந்தேகம் கொள்ளலாம்.

***

-ரவி அல்லது.

ravialladhu@gmail.com

(‘ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்’ இன்குலாப் அறக்கட்டளை சார்பாக அன்னம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அன்னம் 1,நிர்மலா நகர், தஞ்சாவூர் -613007. தொடர்பு: 9443159371)

 ***

Series Navigation நனைந்திடாத அன்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *