முனைவர் மு.பழனியப்பன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை
சைவ உலகின் முதன்மையர் காரைக்காலம்மையார். தமிழ்ச் சைவ நெறிக்கும், தமிழிசைக்கும், பதிக வடிவிற்கும், நடராச காட்சிக்கும், இறைவனைத் தரிசித்த பெண்மைக்கும் அம்மையாரே முதலானவர். முதன்மையானவர் ஆவார். அவரின் பாடல்களில் சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கருத்துகளும் அமைந்திருப்பதால் அவரே சைவ சித்தாந்தத்தின் முன்னோடியாகவும் விளங்குகிறார். அவர் இயற்றிய மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகியவற்றில் செழுமை மிகுந்த சைவ சிந்தாத்தக் கருத்துகள் நிறைந்து நிற்கின்றன. அம்மையாரின் பாடல்களைச் சைவ சித்தாந்த நோக்கில் ஆராய்கையில் பல சைவ சிந்தாந்த கருத்துகள் அவர் காலத்திலேயே கருக்காண்டு இருந்ததை உணரமுடிகின்றது.
முதலும் முடிவும்
சைவ சிந்தாத்தின் முதன்மை நூலான சிவஞான போதத்தின் முதல் நூற்பா
அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர் (சிவஞான போதம் 1)
என்பதாகும். சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்று ஐயமறக் கூறுகின்றது. அழிக்கும் சங்கரனே தோற்றுவிப்பவனாகவும் இருக்கிறான் என்பதே இதன் மையப் பொருள். இந்நூற்பா என்மனார் புலவர் என்று தொல்காப்பிய நெறியைக் கையாள்கிறது. மெய்கண்டார் பல புலவர்கள் சொன்ன செய்திகளை முன்வைத்து இக்கருத்திற்கு வருகிறார். என்மனார் புலவர் என்ற புலவர் வரிசையில் பல புலவர்கள் இருக்கிறார்கள். காரைக்கால் அம்மையாரும் இருக்கிறார்.
இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் – இறைவனே
எந்தாய் எனஇரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அது மாற்றுவான். (அற்புதத் திருவந்தாதி -1)
என்பது காரைக்காலம்மையாரின் பாடல். இறைவனே உயிர்களைத் தோற்றுவிக்கிறான். இறைவனே உயிர்களை இறக்கம் செய்கின்றவனும் ஆகின்றான். அவனே வெந்துயரம் வந்தால் காப்பவனும் அருள்பவனும் அவனே ஆகான். வெந்துயரம் வரச் செய்பவனும் இறைவனே ஆவான். இறைவனின் ஐந்தொழில் அருமையையும் காரைக்கால் அம்மையார் சுட்டி அவனே அழித்துத் தோற்றி மறைத்து அருள் செய்துக் காப்பவனும் ஆகின்றான்.
இவ்வாறு சைவ சித்தாந்த தத்துவத்தின் தோற்றுநராகவும் காரைக்கால் அம்மையார் விளங்குகிறார். பற்பல சைவ சிந்தாந்த செய்திகள் அவரின் பாடல்களில் ஆங்காங்கே விரவிக்கிடக்கின்றன.
நடன நாயகன்
காரைக்காலம்மையாரே நடன நாயகனாக சிவபெருமானை முதன் முதலாக நடராச உருவத்தில் கண்டு மகிழ்கிறார். பாடி மகிழ்கிறார். ஆண்டவன் ஆடல் வல்லானாய் ஆடி மகிழ்கிறார். சிவபெருமானின் ஞான நடனம், ஊன நடனம், ஆனந்த நடனம் அனைத்தைமுய் கண்ட முன்னவர் காரைக்காலம்மையார்.
முந்தி அமரர் முழவின் ஓசை முறைமை வழுவாமே
அந்தி நிருத்தம் அனல் கை ஏந்தி அழகன் ஆடுமே
(திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு, பாடல் 7)
என்று இறைவனின் நடனத்தைக் கண்டவர் காரைக்காலம்மையார்.
தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில்
சாற்றிடும் அங்கியிலே சங்காரம்-ஊற்றமாய்
ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு
(உண்மை விளக்கம் பாடல் எண். 35)
என்ற உண்மை விளக்கப் பாடலில் அங்கியிலே சங்காரம் என்று அனல் கை ஏந்தி ஆடும் அழகனின் ஆடல் குறிக்கப்பெற்றுள்ளது. ஆடல்வல்லானின் வலப்புற மேற்கரத்தில் உடுக்கை படைப்புத் தொழிலின் அடையாளமாக விளங்குகின்றது. கீழ்ப்புறத்தில் உள்ள அபயக் கரம் காத்தல் தொழிலைச் செய்கிறது. இடது புறத்தில் உள்ள மேல் உள்ள கரம் தீயினைத் தாங்கி அழித்தல் தொழிலைச் செய்கின்றது. இடது புறத்தில் உள்ள மற்றொரு கரம் தூக்கிய திருவடியைக் காட்டி அருளல் தொழிலைச் செய்கின்றது. காரைக்காலம்மையார் கண்ட நடனம் இந்த நடனமே ஆகும்.
ஐந்தெழுத்து மந்திரம்
காரைக்காலம்மையார் ஐந்தெழுத்து மந்திரத்தை வெளிப்பட உரைக்காமல் பூடகமாக தன் இரட்டை மணிமாலைப் பாடலில் உரைக்கின்றார். வெளிப்பட மந்திரத்தைச் சொல்வது இயல்பல்ல.
தலையாய ஐந்தினையும் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினஉணர்ந்தோர் காண்பர் – தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற்கழல்
(திருவிரட்டை மணிமாலை பாடல்எண் 10)
என்ற இந்தப் பாடலில் காரைக்காலம்மையார் குறிப்பாக மந்திரச் சொல்லை உணர்த்துவதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். தலையாய ஐந்து என்பது ஐந்தெழுத்தினைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். தலையாய ஐந்து என்பது எந்த மந்திரத்தைக் குறிக்கும் என்பது அறியப்பட வேண்டிய செய்தியாகும். நமசிவாய என்பதையா, அல்லது சிவாயநம என்பதையா என்பதில் தெளிவு காண வேண்டியுள்ளது.
தலையாய, தலையாயின, தலையாய என்ற சொற்களைச் சற்றுக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்தச் சொற்களில் உள்ள குறிப்பு மேற்சொன்ன வினாவிற்கு விடையளிக்கும்.
ஐந்தெழுத்து மந்திரங்கள் இரண்டும் நடராச உருவத்தில் பொருந்தும் தன்மையன.
ஆடும் படிகேள்நல் அம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியிலே நகரம் – கூடும்
மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
பகருமுகம் வாமுடியப் பார். ( உண்மை விளக்கம் பாடல்- 33)
என்பது நமசிவாய மந்திரம் நடராச உருவத்தில் பொருந்துவதாகும். திருவடியில் ‘ந’, திருவுந்தியில் ‘ம ’, வளர் தோளில் ‘சி’ , முகத்தில் ‘வ’ , திருமுடியில் ‘ய’ என்பதாக நமசிவாய ஐந்தெழுத்து நடராச உருவத்தில் பொருந்துகின்றது.
சேர்க்கும் துடிசிகரம்; சிக்கனவா வீசுகரம்;
ஆர்க்கும் யகரம் அபயகரம் – பார்க்கில் இறைக்கு
அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கும்மகரம்அதுதான். ( உண்மை விளக்கம் பாடல் – 34.)
என்ற பாடலில் நடராச உருவத்தில் சிவாயநம பொருந்தும் பாங்கினை அறியமுடிகின்றது. இறைவனின் துடி ஏந்திய கரத்தில் ‘சி’ வீசிய திருக்கரத்தில் ‘வ’, அபயகரத்தில் ‘ய’, தீ ஏந்திய கரத்தில் ‘ந’, திருவடியில் ‘ம’ என்பதாக சிவாயநம என்ற ஐந்தெழுத்தும் நடராச வடிவத்தில் பொருந்துகிறது.
இந்நிலையில் தலையாய ஐந்து என்று காரைக்காலம்மையார் சொல்வது நமசிவாய என்பதையா? சிவாயநம என்பதையா? என்ற வினா வினாவாகவே நிற்கிறது. இதற்குப் பதில் காண
‘‘எட்டு மிரண்டு முருவான லிங்கத்தே ”
என்ற உண்மை விளக்கத் தொடர் உதவுகின்றது. எட்டும் இரண்டும் என்பது ஒரு குறிச்சொல்லாகப் பயன்படுத்தப்பெற்றுள்ளது. எட்டு அதனோடு இரண்டைச் சேர்க்க பத்து என்ற கூட்டுத் தொகை கிடைக்கும். அத்தொகைக்கான தமிழ் எழுத்து ௰ என்பதாகும். இது ஏறக்குறைய ‘ ய’ என்ற உயிர்மெய் எழுத்தின் வடிவத்தை ஒத்துள்ளது.
நமசிவாய என்ற மந்திரத்தில் உள்ள ‘ ய’ என்பதனை எட்டும் இரண்டும் சேர்ந்ததால் கிடைத்த பத்து என்ற எண்ணிக்கையின் குறியீட்டுடன் ஒப்புமைப் படுத்தினால் தெளிவு பிறக்கிறது.
தலையாய ஐந்து, தலையாயின உணர்ந்தோர், தலையாய அண்டத்தான் என்பதில் உள்ள ‘ய’ என்ற எழுத்து தலை என்பதோடு இணைத்துச் சொல்லப்பெற்றுள்ளது. இதனை முன்வைத்து தலையில் ‘ய’ என்ற எழுத்து அமைந்த நடராச நிலையில் பொருந்துவது நமசிவாய என்ற மந்திரத்தால் மட்டுமே.
எனவே காரைக்கால் அம்மையார் சுட்டும் தலையாய ஐந்து என்ற குறிப்பில் உள்ள மந்திரம் நமசிவாய என்பதே ஆகும் என உறுதியாகக் கூறமுடிகின்றது. காலில் ந தொடங்கி வளர்ந்து, தலையில் ய என்பதாக முடிகின்றது.
காரைக்காலம்மயார் பாடல்களில் சைவ சித்தாந்த அடிக்கருத்துகள் பல புதைந்துள்ளன. சாத்திரக் கருத்துகளுக்கு மூலம் திருமுறைகளே என்பதை உணர காரைக்கால் அம்மையாரின் பாடல்களின் கருத்துகளும் துணை நிற்கின்றன. சைவ வாழ்வு வாழ திருமுறைகளையும் ஓதுவோம். சாத்திர நூல்களையும் தெளிவோம்.
துணைநூற்பட்டியல்
நடராசன்.பி.ர. புலவர், (உ.ஆ) பதினோராம் திருமுறை, உமா பதிப்பகம், சென்னை 2005
மனவாசகம் கடந்தார் திருவதிகை, உண்மை விளக்கம், தருமபுர ஆதீனம், 1946
மெய்கண்ட தேவ நாயனார், சிவஞான போதம், திருவாவடுதுறை ஆதீனம், 1949
வெள்ளைவாரணனார்.க. (உ. ஆ) திருவருட்பயன், சைவ சித்தாந்த சமாஜம், சென்னை, 1965
- கொஞ்ச நேர வாஸ்தவங்கள்
- மறுக்க முடியாத உண்மை! முதுமை…
- கவியோகி சுத்தானந்த பாரதியார் காட்டும் தமிழ் உணர்ச்சியும், தமிழ் வளர்ச்சியும்
- காரைக்காலம்மையார் துதித்த தலையாய ஐந்தெழுத்து
- கூடுவதன் கற்பிதங்கள்
- காசியில் குமரகுருபரர்