ரவி அல்லது
ஆச்சரியமாகத்தான் இருந்தது
அவர்களின் பேச்சுகளில்
பகட்டுகளைத்தவிர
வேறெதையும் காணமுடியாமல் இருந்தது.
ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அவர்கள் சலிப்பற்று
தேர்ந்த பயிற்சி எடுத்தவர்களாக பேசிக் கொண்டே இருந்தது.
ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அவர்கள் தன்னை அறிவாளியாக
காட்டிக் கொண்டது.
ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அவர்கள்
பரிவாளர்களாக
தன்னைக் காட்ட முயன்றது.
ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அவர்கள் கூடும்பொழுதெல்லாம்
புறம் பேசுவதில்
திளைத்து இருந்தது.
ஆச்சரியமாகத்தான் இருந்தது
அவர்கள்
கூடுமிடத்திலெல்லாம்
இவனொரு
மௌன மடையனென
பேசிக்கொண்டது.
ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அன்றொரு நாள்
அவர்களின்
இரைச்சல்களுக்கு
இடையில்
எறும்பொன்று
என் மீது ஏறியது.
ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அன்று
நானும் இவர்களின்
அரட்டைகளுக்குள் இறங்கிவிடலாமாவென
நினைக்கும்போது
எறும்பு
என் மீதிருந்து
இறங்கிப் போனது.
ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அந்த எறும்பு
அவர்களொருவரின்
கால் செருப்பிற்கு கீழே சென்றபோது
என் கைவிரல்கள் சொருகி
காத்தபோது
மிதிபட்ட
விரலைப் பார்த்து
அவர்கள்
எனக்குச் சிரிப்பை மட்டும் தந்தது.
ஆச்சரியமாகத்தான் இருந்தது.
பக்கத்து இருக்கையில்
வலிகள்
பொறுத்து.
வருகிறவர்களிடமெல்லாம்
நான்
சிரித்துக்கொண்டே இருந்தது.
***
-ரவி அல்லது.
***