கனடாவில் பெண்களுக்கான வதனம் இதழ் வெளியீடு

கனடாவில் பெண்களுக்கான வதனம் இதழ் வெளியீடு
This entry is part 1 of 2 in the series 6 ஜூலை 2025

சுலோச்சனா அருண்

சென்ற சனிக்கிழமை 28-6-2025 ரொறன்ரோ அல்பியன் வீதியில் உள்ள திஸ்டில் நகர சமூக மையத்தின் பார்வையாளர் மண்டபத்தில் கனடாவில் இருந்து வெளிவரும் பெண்களுக்கும் இளையோருக்குமான வதனம் இதழ் – 6 வெளியிட்டு வைக்கப் பெற்றது. அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து பெரியோர்களால் மங்கள விளக்கேற்றி வைக்கப்பெற்றது. சிறுமிகளான பைரவி அருள்மாறன், லதிசா தயாளன் ஆகியோர் கனடிய தேசியகீதம், தமிழ்தாய்பண் பாடினார்கள். வரவேற்புரையை திருமதி கலைமகள் புஸ்பநாதன் நிகழ்த்தினார்.

தொடர்ந்து வதனம் இதழ் – 6 வெளியிட்டுவைக்கப் பெற்றது. அறிமுக உரையை வதனம் இதழின் இளைய தலைமுறை இணை ஆசிரியர் அபிராம் பிரதீபன் நிகழ்த்தினார். வெளியீட்டு உரையை முதன்மை ஆசிரியர் குரு அரவிந்தன் நிகழ்த்தினார். அடுத்து இதழ் ஆய்வுரையை ஆசிரியர் சண்முகநாதன் ஐயம்பிள்ளை அவர்கள் நிகழ்த்தினார்கள். வதனம் இதழ் சார்பாக நிர்வாக ஆசிரியர் கமலவதனா சுந்தா அவர்கள் நன்றி உரை ஆற்றினார்.

கனடாவில் எதிர்கால தமிழ் ஊடகத்துறையின் தேவைகருதி வதனம் ஆசிரியரால் பயிற்றப்பட்ட இளைய தலைமுறையைச் சேர்ந்த இணையாசிரியர்களான கவிநயா விஜயதர்சன், அர்ச்சயா வீரபத்திரஐயர், தருண் செல்வம், ஆகாஸ் ஞானவேலு, நஸ்வியா சற்குணராஜா, அபிராம் பிரதீபன் ஆகியோர் இந்த நிகழ்வின் போது நிர்வாகக் குழுவினரால் கௌரவிக்கப்பட்டனர். மிக ஆர்வத்தோடு செயலாற்றும் அவர்களது பங்களிப்பைக் குறிப்பிட்டு ‘கனடாவில் உள்ள தமிழ் இளையதலைமுறையினருக்கு இவர்கள் நல்ல முன்னுதாரணமாக இருக்கிறார்கள்’ என்று இதழின் முதன்மை ஆசிரியர் குரு அரவிந்தன் இந்த இளைய தலைமுறையினரான இணை ஆசிரியர்களைப் பாராட்டி உரையாற்றினார்.

இவர்களைவிட ஒவ்வொரு இதழுக்கும் சிறப்பாக அட்டைப்படம் வரைந்து கொடுக்கும் நவீனி இராசையா, மற்றும் தொழில்நுட்ப உதவி புரியும் பிரவீனி இராசையா உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றும் விமலாதேவி புசுப்பநாதன், கௌசல்யா பார்த்தீபன், குலமணி பிரான்சிஸ், நகேஸ்வரி ஸ்ரீகுமரகுரு ஆகியோரும் அவர்களது சிறப்பான பணிக்காகப் பாராட்டப் பெற்றார்கள்.

வதனம் இதழ் முதற்பிரதியைத் திரு. சண்முகநாதன் ஐயம்பிள்ளை பெற்றுக் கொண்டார். சிறப்புப் பிரதிகளை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் திரு. ரவீந்திரநாதன் கனகசபை அவர்களும் முன்னாள் தலைவர் திரு. அகணி சுரேஸ் அவர்களும், மற்றும் வருகை தந்தோரும் பெற்றுக் கொண்டனர்.

ஆடிப்பிறப்பை நினைவுகூரும் முகமாக நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ‘ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை, ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே’ என்ற பாடல் இளைய தலைமுறையினரால் பாடப்பெற்றபின், சிறுமி மதுரா சியாமளன் அவர்களின் ‘ஆடிப்பிறப்பு’ பற்றிய உரை நிகழ்ந்தது. அதன்பின் வருகை தந்த அனைவருக்கும் இனிப்பான ஆடிக்கூழ் மற்றும் கொழுக்கட்டை போன்ற சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டன.

இந்த நிகழ்வின்போது, குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினர் நடத்திய உலகளாவிய சிறுகதைத் திறனாய்வுப் போட்டி – 3 இல் கனடாவில் இருந்து பரிசு பெற்ற கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த திருமதி விமலாதேவி புசுப்பநாதன் நிர்வாகக் குழுவின் சார்பாக செயலாளர் யோகநாயகி நித்தியானந்தமூர்த்தி, தலைவர்  சன்ரா பாலேஸ்வரன் ஆகியோரால் பாரட்டிக் கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து இந்த வருடம் பல்கலைக் கழகத்திற்குத் தேர்வாகிப் பல்கலைக்கழகம் செல்லும் வதனம் இணை ஆசிரியர்களான செல்வி கவிநயா விஜயதர்சன், செல்வி நஸ்வியா சற்குணராஜா ஆகியோரும் நிர்வாகக் குழுவின் சார்பாகப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

இளைய தலைமுறையினர் தாங்களே நிகழ்ச்சிகளைப் பொறுப்பேற்று விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டு நடத்தியது பாராட்டப்பட வேண்டியது. கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் சார்பாக உபசெயலாளர் விமலாதேவி புசுப்பநாதன் நன்றியுரை வழங்கினார்.

Series Navigationதவம்  ( இலக்கிய கட்டுரை)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *