அசோகமித்திரன் சிறுகதைகள் – 4

அசோகமித்திரன் சிறுகதைகள் – 4
This entry is part 2 of 12 in the series 27 ஜூலை 2025

பி.கே. சிவகுமார்

1957-ல் அசோகமித்திரன் எழுதிய நான்கு பக்கச் சிறுகதை – டயரி. இந்தத் தொகுப்பில் நான்காவது கதை.

கதைசொல்லியின் எண்ணங்களாக நனவோடை உத்தியில் (stream of consciousness) அமைந்த கதை இது.

கூட்டமும் நெரிசலும் மிகுந்த இரவு நேரப் பேருந்தைச் சொல்லி – அதில் போகிறவர்கள் யாராக இருக்கும் என்கிற அனுமானத்தில் கதையின் முதல் பக்கம் போய்விடுகிறது. எப்படி டீ குடித்த பின் சிகரெட் பிடிக்க வேண்டும் எனத் தோன்றுமோ என்கிற உவமையைக் கண்டக்டர் பஸ் கிளம்பியதும் எல்லாரையும் முன்னுக்குப் போங்கள் என்று கத்துவதற்குப் பொருத்தமாக அசோகமித்திரன் பயன்படுத்தியிருப்பது கவனம் ஈர்க்கிறது.

அந்தப் பேருந்தில் ஒரு மனிதன் கையில் ஒரு டயரியுடன் நின்றவாறு பயணிக்கிறான். அவன் யாராக இருக்கும், அந்த டயரியில் என்ன எழுதப்பட்டிருக்கலாம் எனக் கதைசொல்லி யோசிப்பதைச் சொல்வதில் மீதி மூன்று பக்கங்கள் போகின்றன. கடைசியில் பேருந்தில் இருந்து இறங்கி நடக்கிற அவன் முகத்தில் சோகச்சாயை இருந்ததாகக் கதை முடிகிறது.

கதைசொல்லிதானே, கதாசிரியர் அல்லவே, அதனால் சாதி மதம் குறித்துக் கதைசொல்லி நினைப்பதாகப் பின்வரும் சிந்தனைகள் இடம்பெறுகின்றன. 

“ஆதலால் அந்தப் பெண் நல்லவளாக, சாதுவாக, விவரம் அறிந்தவளாக, அவன் மதம், அவன் ஜாதியாகவும் இருக்கக் கூடும். அப்படி இருந்தால்தான் தேவலை. ஜாதியே வேண்டியதில்லைதான். இருக்கிறதுக்கு என்ன செய்வது? ஒவ்வொரு ஜாதியும் அது அதற்கான இலகுவில் மாற்ற முடியாத வாழ்க்கை முறைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் அல்லது வேறு யாருக்கும் ஏதோ மாதிரி இருந்து விடுவதைச் சமாளிக்க முடியும். ஒரு நாள், இரண்டு நாட்கள், ஒரு மாதம் கூட. ஆனால் வாழ்நாள் முழுவதும்? அது எல்லாருடைய சுகதுக்கங்களைப் பாதிக்குமாறுதான் முடியும். பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் லேசில் போவதில்லை – அவை போவதென்பது உண்டா? அவனுக்குச் சங்கடம், அவளுக்குச் சங்கடம், அவன் அம்மாவுக்குச் சங்கடம், எல்லாருக்கும் சங்கடம். அவன் தேர்வு யாருக்கும் சங்கடம் ஏற்படுத்தாததாகத்தான் இருக்கும்…”

கதைசொல்லியின் நனவோடை – அசோகமித்திரனுக்கு முன் எழுதவந்த புதுமைப்பித்தன் கதைகள் சிலவற்றின் திறப்பையோ, 1900களில் எழுதிய பாரதியின் புதிய கருத்துகளையோ பேசவில்லை. 1957-ல் ஒரே மதம், ஒரே ஜாதிக்குள் திருமணம் செய்து கொள்வதுதான் சௌகரியம் என்று பேசுகிறது.

இந்தக் கருத்தை அசோகமித்திரனின் கருத்தாக ஏற்றிச் சொல்வது சரியில்லைதான். ஆனால், தனிப்பட்ட முறையில் பேசும்போதும் நேர்காணல்களிலும் அசோகமித்திரன் கைகொள்கிற எல்லா நிலைகளையும் அதன்போக்கில் புரிந்து கொள்கிற தன்மை இதில் இருக்கிறது. இதை வைத்து அசோகமித்திரனை சாதி, மத ஆதரவாளர் என்பது எனக்கு உடன்பாடில்லாத நீட்டிப்பே (not required stretch).

அசோகமித்திரன் பல கதைகளைப் பொருளாதாரத் தேவைகளுக்காக எழுதியுள்ளார். அத்தகைய தேவை ஒன்றுக்காக இந்தச் சாதாரண கதையை எழுதியிருக்கலாம்.

அல்லது – அசோகமித்திரன் ஆங்கிலத்தில் தொடர்ந்து படித்தவர். ஆங்கிலத்திலும் எழுதியவர். அப்படி ஆங்கிலத்தில் படித்த போக்குகளைத் தமிழில் எழுத முயன்றவர். அப்படி நனவோடை உத்தியைப் பரீட்சித்துப் பார்க்க இந்தக் கதையை எழுதியிருக்கலாம். அவருடைய முதல்கதையான – நாடகத்தின் முடிவு – கதையே ஒரு பிறமொழி எழுத்தாளரிடம் இருந்து பெற்ற உத்வேகம் என்பார்கள். 

கமல்ஹாசன் பிறமொழிப் படங்களில் இருந்து உத்வேகம் பெற்றுப் படம் எடுத்தால் காபி அடித்ததாகப் புகார்கள் வருகின்றன. அவரே தான் உத்வேகம் பெற்று எடுத்ததாகச் சொன்னாலும். அவர் திரைப்படம் மூலம் பணமும் புகழும் பெறுகிறார் என்ற எரிச்சலும் இதன் பின்னிருக்கக் கூடும்.

அசோகமித்திரன் இப்படி உத்வேகம் பெற்றாலும் கடைசிவரை சாதாரணப் பொருளாதார நிலையில் இருந்தவர். புகழிலும் அவரை அதிகம் புகழ்கிற சிலரும், அவர் எழுத்து சாதாரணம் என்கிற சிலரும் சரிபாதியாக இருந்தனர். வெங்கட் சாமிநாதன் போன்ற விமர்சகர்கள் அசோகமித்திரன் எழுத்தின் மீது பெரிய அபிப்பிராயம் கொள்ளவில்லை.  அசோகமித்திரன் பிறமொழிகளில் இருந்து பெற்ற உத்வெகத்துக்காகப் பழிக்கப்படவில்லை என்பது ஆறுதல் தருகிற விஷயமே.

மேலும் அசோகமித்திரன் காலத்தில் எத்தனைபேர் பிறமொழிகளில் இருந்ததைத் தேடிப்படித்து அது தமிழில் வந்தால் தமிழிலும் படித்து அடையாளம் காண்பவர்களாக இருந்தார்கள்.

கமல்ஹாசனின் நோக்கமும் அசோகமித்திரனின் நோக்கமும் காப்பியடிப்பது அல்ல. நல்ல போக்குகளைத் தமிழில் கொணர்வதே. அசோகமித்திரனுக்கு அதனால் பழியும் கிடைக்கவில்லை, புகழும் பெரிதாகக் கிடைக்கவில்லை. கமல்ஹாசனுக்கு இரண்டும் கணிசமாகக் கிடைத்தன. இதில் யார் அதிர்ஷ்டசாலி எனக் கேட்டால், கமல்ஹாசன் படைப்புகளைத் தாண்டி அசோகமித்திரன் படைப்புகள் நிற்கும் என்பதால் அசோகமித்திரனே – கமலைப் போல அவரும் பொருளாதாரத்துக்காகச் சாதாரண படைப்புகளும் கலந்து தந்திருந்தாலும் – அதிர்ஷ்டசாலி. 

– அசோகமித்திரன் சிறுகதைகள் – தொகுப்பு 1 – கவிதா பப்ளிகேஷன்

– பி.கே. சிவகுமார்

– ஜூலை 7, 2025

#அசோகமித்திரன்

Series Navigationஇலக்கியப்பூக்கள் 344நிறமாறும் அலைகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *