ஆர் சீனிவாசன்
‘நடப்பிலிருக்கும் அதி நவீன கட்டிட நுட்பம் இதுதான்’ என்றார் அந்த நபர். அவருக்கும் சக்திவடிவேலிற்கும் இடையே இருந்த மேஜையின் மேல் ஹாலோகிராம் கருவி ஒன்று மூன்று பரிணாமத்தில் ஒரு கட்டிடத்தின் உருவத்தை வெறும் காற்றில் சுழற்றிக்கொண்டிருந்தது. மேஜையின் இன்னொருபுறம், ஒளி புகும் வெளிப்புறத்துடன், இதுவரை சக்தி பார்த்திராத மர்ம கருவி ஒன்று இருந்தது. கன சதுர வடிவின் நடுவில் கருமையான திரவியம் போன்ற பொருள் நிரப்பப்பட்டிருந்தது. கண்ணாடியினுள் உற்றுப் பார்த்தல், நுணுக்கமான இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருப்பது தெரிந்தது. ஆறு சதுர பக்கங்களிலும் வட்ட துவாரங்கள் வெட்டப்பட்டிருப்பது போலத் தோன்றியது. மேற்புறத்தில் மூன்று இன்ச் குழாய் பொருத்துவதற்குத் தேவையான மூடியும் பக்கவாட்டில் சுழலும் விளக்குகளும் இருந்தன. அந்த வினோத கருவியைக் காட்டி,
‘இந்த எந்திரம் அடிப்படையில ஒரு விதை. உங்களுக்கு ‘விதை’ என்ற வார்த்தைக்குப் பொருள் தெரியும்னு நினைக்கிறேன்.’ என்றார்.
‘கேள்விப்பட்டிருக்கேன்’ என்றான் சக்தி.
‘விளக்கமா சொல்லணும்னா, ஒரு முழு மரத்தோட மரபணுவை ஒரு விதை உள்ளடக்கும். அதுமட்டுமின்றி செடி வளர தேவையான பதார்த்தங்கள், சத்து எல்லாமே விதை ஓட்டிற்குள்ள அடர்த்தியா பொருந்தியிருக்கும். விதையை மண்ணுல புதைத்துச் சரியா நீர்ப் பாசனம் செஞ்சா அது மரமா முளைக்கும்’ என்றார் விளக்கமாக.
‘ஆமாம் அப்படிதான் படிச்சிருக்கேன்’ என்றான் சக்திவடிவேல்.
‘இந்த கருவியும் அதே மாதிரிதான். இதைத் தகுந்த ஆழத்துல குழி தோண்டி புதைச்சு, இந்த மேல்புறத்துல பொருத்தியிருக்கிற குழாய் மூலமா தொடர்ந்து நீர்ப் பாசனம் செஞ்சா, இந்த கருவி கட்டிடமா உருவெடுக்கும்.” என்றார் அவர்.
‘ஓ அப்படியா?’ வியந்தான் சக்தி
‘ ஒரு மாடியைக் கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துல செஞ்சு முடிச்சிடலாம். இதுக்குள்ள மிகத் துல்லியமான கணினி இருக்கு. கார்பன் இழைகள் கேள்விப்பட்டிருக்கீங்களா? இதுக்குள்ள கார்பன் இழைகள் உலர்ந்த பதார்த்தமாய் அழுத்தத்துல அடக்கி வெச்சிருக்கு. நீர் பட்டவுடனேயே கணினி சரியான அளவுல நீரையும் கார்பன் பதார்த்ததையும் வேறு சில ரகசிய பொருட்களையும் கலக்க ஆரம்பிக்கும். இந்த துவாரங்கள் தெரியுதா? இந்த துவாரங்கள் மூலமா கார்பன் இழைகளைத் தேவையான அளவு நீருடன் சேர்த்து, அழுத்தத்துல வெளியில தள்ளும். அப்படி வெளியில வர்ற இழைகள் உறைஞ்சு இறுகிக் கட்டிடத்தோட தூண்களா மாறும். கார்பன் இழை எடையில் குறைந்தாலும் மிகச் சக்தி வாய்ந்தது. சுமார் பத்து டன் பளுவை ஒரு சென்டிமீட்டர் பரப்பு தாங்கிடும். ‘
‘இந்த துவாரங்கள் உங்க வீட்டு வடிவமைப்பின் அடிப்படையில் பொருத்தித் தருவோம். செங்குத்து, கிடை தூண்கள் இந்த கார்பன் இழைகளால் அமைக்கப்பட்டதும் அடுத்த வேலையா சுவர்களைக் கட்ட ஆரம்பிக்கும். சுவர்கள் மற்றும் தூண்களோட அடர்த்தி, நீளம், வெளித்தோற்றம் எல்லாமே முன்கூட்டியே ப்ரோக்ராம் செய்து கணினில இறக்குமதி பண்ணிட்டா அதுக்கப்புறம் வேற எதுவும் செய்ய வேண்டியதில்லை.’
‘இந்த கல்விதையை நாங்கதான் இயக்கனம்னுகூட தேவையில்லை. எங்க மென்பொருள் மூலமா உங்க வீட்டை வடிவமைச்சு, வடிவமைப்பு வரைபடத்தை நீங்களேகூட இதுக்குள்ள இறக்குமதி செய்யலாம். சரியான ஆழத்துல புதைச்சு, நீர் வசதி கொடுக்கப்பட்டதும் இந்த தொலையியக்கி கருவியில் இருக்கிற பச்சை விளக்கு எரியத்தொடங்கும். அதுக்கப்புறம் பாதுகாப்பான தூரத்திலிருந்து இந்த கருவியை இயக்கினா இது தானே வீட்டை கட்டுறதை நீங்க உட்கார்ந்து பார்க்கலாம். அடித்தளத்திற்கு ஒரு விதை அதன்பின் வர்ற ஒவ்வொரு மாடிக்கு ஒரு விதை தேவைப்படும். முழு வீட்டை ஒரு நாளுக்குள்ள முடித்திடலாம்’ என்றார் முகத்தில் முறுவலுடன். அந்த கருவியை மீண்டும் காட்டி,
‘இது ஒரு விளம்பர உதாரணம். உங்க வடிவமைப்பைப் பொறுத்து நாங்க கல்விதையை தயார் செய்து கொடுப்போம். நூற்றுக்கு இருநூறு அடி பரப்பு வீடுன்னா இந்த கருவி தோராயமா பத்துக்கு இருபது அடி அளவு இருக்கலாம். கட்டிடம் முடிந்த பின் இத்தோட ஒரு அணுகூட மிஞ்சியிருக்காது, முழுக்கவும் உபயோகிக்கப்படும். தொலையியக்கி ஒண்ணுதான் மிஞ்சும், அதை நீங்க எங்களுக்குத் திரும்ப கொடுக்கும்போது பாதுகாப்பு ரொக்கமா கட்டின தொகையைத் திரும்ப கொடுத்துடுவோம்.இப்போதைக்கு மூன்று மாடிக் கட்டிடம்வரை இந்த நுட்பத்தின் மூலம் கட்டலாம். கூடிய விரைவுல பல அடுக்கு கட்டிடங்களும் கட்ட முடியும்.’ என்றார். அந்த கருவியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் சக்தி.
‘ஒரு விஷயம் உங்க கிட்ட கேட்கலாமா?’ என்றார்.
‘ஓ கேளுங்களேன்’ என்றான் சக்தி.
‘ஏன் நீங்க தரையில வீடு கட்டணும்னு நினைக்கறீங்க?. உங்களுக்கே தெரியும் விண்வெளியில் மிதக்கிற தளங்கள் நிறைய இருக்கு. தரையில வீடு கட்டுறது கொஞ்சம் பின்தங்கிய எண்ணம். ஒரே சூழலைத்தான் எப்பவுமே பார்க்கமுடியும். வெய்யில் காலங்கள்ல குளிர் பகுதிகளுக்கு வீட்டை நகர்த்த முடியாது. ‘ என்றார் அவர்.
***
சக்திவடிவேலுக்கு புதிய வீடு தேவைப்பட்டது. இப்போது இருக்கும் வீடு, அதாவது மேகங்களில் மிதக்கும் விண்கல குடியிருப்பு அலர் மேல் மங்கைக்கு (சுருக்கமாக அலர்) பிடிக்கவில்லை. ஏன் என்ற கேள்விக்குச் சரியாகப் பதிலளிக்கவில்லை. சேர்ந்து வாழத் தீர்மானித்தபோது இத்தகைய இடைஞ்சல் வருமென எதிர்பார்க்கவில்லை சக்தி. தொடுவானத்தில் மிதக்கும் தற்போதைய வீட்டில் வசதிகளுக்குக் குறைவில்லை. மழைக் காலங்களில் மேகங்கள் வீட்டினுள் ஜன்னல் வழியாக அழையா விருந்தாளியாகத் தானே வரும், கோடையிலும் குளிர்ந்திருக்கும். வருடத்திற்கு ஒரு முறை மாபெரும் தாய் விண்வெளி கோபுரத்துடன் இணையும்போது, மிதக்கத் தேவையான எரிபொருள் நிரப்பிக்கொண்டு மீண்டும் மிதக்கத் தொடங்கும். வருடந்தோறும் சுகமான சீதோஷண மண்டலங்களில் சஞ்சாரம் செய்யலாம். துல்லியமான பயண கட்டவனைக்கேற்ப புவி முழுவதும் சுற்றிவரும். அதைப்போன்ற பல்லாயிரக்கணக்கான விண்கல குடியிருப்புகள் புவிக்கு மேல் வெவ்வேறு உயரத்தில் மிதந்து கொண்டிருந்தன. சக்தி இப்போது குடியிருக்கும் விண்வெளி காலணியில் முப்பத்து ஐந்து குடியிருப்புகள் இருந்தன.
அலருக்கு ஏனோ இவையெல்லாம் பிடிக்கவில்லை. ”மண்’ னிலிருந்துதான் ‘மனை’ வந்தது சக்தி’ என்றாள். அதற்கு மேல் விளக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. எண்ணங்களின் சில்களை சுமந்து செல்லும் வாகனம் வார்த்தைகள். சொற்றொடர்கள் ஒரு அளவிற்குத்தான் சரியான அர்த்தத்தைச் சுமந்து செல்லும். எண்ணங்களே சரியாக விளங்காதபோது வார்த்தைகள் உதவாது. சுபாவத்தில் அலர் சக்திக்கு நேர் மாறானவள். அதிநவீனத்தில் திளைப்பவன் சக்தி, இயற்கையில் துயில்பவள் அலர். இவர்களுக்குள் எப்படி உடன் போனது என்பது அவர்களுக்கே புரியவில்லை. சில காலம் சக்தியுடன் இருந்த பின், ‘தரையில் வீடு வேணும்’ என்றாள். சக்திக்குப் புரியவில்லை.
‘ஹே! என்ன சொல்லற?, அதெல்லாம் ரொம்ப பழைய வழக்கம்’ என்றான். அவள் பதில் சொல்லவில்லை. எதையோ வெறித்துப் பார்த்தாள். காலங்கள் சென்றாலும் பெண் பேச்சிற்கு அடிபணிதல் மாறவில்லை. வேறு வழியின்றி வீடு கட்டும் முயற்சியில் இறங்கினான் சக்தி, பல வருடங்கள் கழித்து நிஜமாகப் பூமிக்கு இறங்கினான்.
***
முன்னே உட்கார்ந்திருந்தவர் சக்தியின் பதிலுக்கு சில மணித்துளிகள் காத்திருந்துவிட்டு,
‘ஒரு வேளை உங்களுக்கு தரையில இருக்கிறது பிடிக்காம போய் மீண்டும்..’ எனப் பேசத் தொடங்கும்போது சக்தி,
‘கிணறு வெட்டணுமா?’ என்றான் திடீரென்று. அவன் கேள்வி எதிரே உட்கார்ந்திருப்பவரைத் திடுக்கிடச் செய்தது.
‘கிணறா?. இல்லை சக்தி. எதுக்கு? ‘ என்றார் சிறு புன்னகையுடன்.
‘தண்ணி வேணும்னு சொன்னீங்களே அதுக்குதான்’ என்றான் சக்தி
‘கிணறு! அருமையான வார்த்தை. கேட்டே ரொம்ப நாள் ஆச்சு. அதெல்லாம்கூட உங்களுக்கு ஞாபகம் இருக்கா? ரொம்ப விசித்திரமான வேண்டுகோள். இப்ப யாரும் கிணறு வேட்றதில்லை. ஒருவேளை அது சட்ட விரோதமாகவும் இருக்கலாம். நீங்க ஒரு முறை மாநகராட்சி கிட்ட கேக்கறது நல்லது. எந்திரத்திற்குத் தேவையான தண்ணீரை ஒரு வாகனத்துல நாங்களே அனுப்புவோம்.’ என்றார் சிறு புன்னகையுடன்.
‘சரி. சீக்கரத்துல நான் உங்களை மீண்டும் வந்து பார்க்கிறேன்.’ என்றான் சக்தி.
அன்று மாலை, கல்விதையை பற்றி அலரிடம் சொன்னான்.
‘அற்புதமான நுட்பம் இல்ல அலர்? அந்த எந்திரத்தை மண்ணுல புதைச்சு ஒரு பட்டன் அழுத்தினா போதும், அதுவே தானா கட்டிடும். ஒரு தளத்திற்கு ஒரு மணிநேரம்தான். உட்கார்ந்து அந்த வேடிக்கைய பார்க்கலாம். முடிஞ்சவுடனே குடிபோயிடலாம். நுட்பம் எப்படி வளந்திருச்சு பாரு’ என்றான் சக்தி வியப்புடன். அலர் எதுவும் பேசாமல் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள். அதை உணர்ந்த சக்தி,
‘என்ன யோசிக்கிற. எப்ப ஆரம்பிக்கலாம், சொல்லு. வீடு எப்படி இருக்கணும்னு நீயே வடிவமைச்சு கொடு. நம சேர்ந்து கட்டலாம்’ என்றான் பெருமிதத்துடன். ஆனால் அலர் எதுவும் பேசாமல் அவன் தோளின்மேல் மெதுவாகச் சாய்ந்தாள்.
‘உனக்கு ‘விதை’ன்னா என்னன்னு தெரியுமா சக்தி?’ முணுமுணுத்தாள்.
‘தெரியும். அதிலிருந்துதானே செடி முளைக்குது’ என்றான்
”விதை’ எப்படி உருவாகும் தெரியுமா சக்தி?’ என்றாள் அலர். அவள் பேச்சில் ஒரு ஏக்கம் இருந்தது.
ஒரு கணம் இருவரும் எதுவும் பேசாமல் தனிமையின் கணங்களில் ஆழ்ந்தனர். இருவரும் நிசப்த கணங்களில் தங்கள் சுவாசத்தை உணர்ந்தனர். சக்திக்கு அலரின் விருப்பத்தின் நிஜ வண்ணம் புரியத்தொடங்கியது. அலருக்கு வீடு தேவையில்லை, அவளுக்கு வேர் தேவைப்பட்டது. இருவரும் வேரூன்ற வேண்டும் எண்ணம். மேகங்களில் மிதப்பது நிலையற்ற வாழ்க்கை. குடும்பம் அமைத்திட நிரந்தர குடில் தேவை. இன்னொன்றும் தேவை. அத்தருணத்தில் அலரின் நிஜ ஏக்கம் சக்திக்குப் புலப்பட்டது.
அலருக்கும் நிலையற்ற வாழ்க்கையின் மேல் ஏற்பட்ட இனமறியா வெறுப்பின் மூலம் புரியத்தொடங்கியது. வெறுமை, அர்த்தமின்மை அதைவிட மேலாகப் பயம். ஒருவேளை சக்தியும் மேகங்களைப்போல மிதந்து சென்றுவிடுவானோ என்ற பயம். அத்துடன் தன்னுள்ளும் வெறுமையை உணர்ந்தாள். தன் ஆடவனின் நிழல் மட்டும் அந்த வெறுமை நிரப்பாது. அகண்ட இருளை போக்க அக்கினிக்குஞ்சு ஒன்று போதும். மெல்லிதாக உள்ளுணர்வில் விடையின் இழை தெரிய,
‘இந்த கருவி நிஜ ‘விதை’ இல்ல சக்தி’ என கிசுகிசுத்தாள்.
- இலக்கியப்பூக்கள் 344
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 4
- நிறமாறும் அலைகள்
- …………….. எப்படி ?
- *BYRON பாணி மகிழ்ச்சியின்மை- [BERTRAND RUSSEL’S THE CONQUEST OF HAPPINESS – அத்தியாயம் – 2]
- வண்ண நிலவன்- வீடு
- தவம்
- கல்விதை
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 5
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 6
- நிரந்தரப் பருகலின் சுய நீச்சல்
- தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை