அசோகமித்திரன் சிறுகதைகள் – 5

அசோகமித்திரன் சிறுகதைகள் – 5
This entry is part 9 of 12 in the series 27 ஜூலை 2025

பி.கே. சிவகுமார்

அந்தக் காலத்தில் மின்னணு புகைப்படக் கருவி (டிஜிடல் காமிரா) இல்லை. நான் அமெரிக்கா வந்து சில ஆண்டுகள் ஆகியிருக்கும். மகனுக்கு மூன்றரை வயதிலிருந்து நான்கு வயது வரை இருக்கும். கேமிரா பிலிம் ரோலை இங்கே இருக்கிற மாலில் (பெரிய கடை) கொடுத்தால் அதில் இருந்து புகைப்படங்களை எடுத்து அச்சிட்டுத் தருவார்கள். அப்படிக் கொடுத்த பிலிம் ரோலின் புகைப்படங்களை வாங்க மகனுடன் அந்தப் பெரிய கடைக்கு (கே-மார்ட்) சென்றிருந்தேன்.

புகைப்படங்கள் கையில் வந்ததும் பக்கத்தில் நின்ற மகனிடம் இங்கேயே இரு, அப்பா ஒரு நிமிடம் புகைப்படங்கள் எப்படி வந்துள்ளன எனப் பார்க்கிறேன். எனக்குச் சொல்லாமல் எங்கும் நகரக் கூடாது எனச் சொல்லிவிட்டுப் புகைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். குழந்தைகள் பெரியவர்கள் ஆகும்வரை இப்படி அவர்களிடம் ஒவ்வொருமுறையும் – “எனக்குச் சொல்லாமல் எங்கும் போகாதே” என – வெளியே கூட்டிச் செல்லும்போது சொல்வது வழக்கமே. அவர்களும் சரி என்று சொல்லி அதன்படி நடப்பவர்களே.

புகைப்படங்களை அந்தக் கடையின் கவுண்ட்டர் மேசையின் மீது வைத்துப் பார்த்து முடிக்கச் சில நிமிடங்கள் ஆகியிருக்கும். புகைப்படங்களில் ஆழ்ந்து விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். திரும்பிப் பார்த்தால் அருகில் மகன் இல்லை. பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பார்த்தால் பதில் இல்லை. கடையில் கவுண்ட்டரில் இருந்த ஊழியரிடம் இங்கே என் பக்கத்தில் நின்றிருந்த என் மகனைப் பார்த்தீர்களா என்றால் இல்லையென்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்.

என் வயிற்றில் இனம் புரியாத பயமும் திகிலும் கவ்விக் கொண்டன. அந்தப் பெரிய கடையின் பொருட்கள் அடுக்கப்பட்ட ஒவ்வொரு வரிசையிலும் பையன் பெயரைச் சொல்லி அழைத்தபடி ஓடுகிறேன். எதிர்ப்பட்டவர்களிடம் ஓடியபடியே பையன் வயது, சட்டை அடையாளம் சொல்லி விசாரிக்கிறேன். கடையில் அப்படி நீண்ட வரிசைகள் பத்துக்கு மேல் இருக்கும்.

சில வருடங்களுக்கு முன் அந்தக் கடை இருக்கிற மாலின் கார் நிறுத்துமிடத்தில் ஒரு பெண் குழந்தைகளுடன் கடத்தப்பட்டு அது செய்தியானது நினைவில் எழும்பி பயம் கூடிக் கொள்கிறது. அந்தக் கடை எங்கள் நகருக்கு அருகில் உள்ள பக்கத்து ஊரில் உள்ளது. அந்த ஊரில் குற்றவிகிதம் சற்று அதிகம்தான். ஆனால் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த மால் இதுதான். பகல் நேரங்களிலும் மாலையிலும் இதுவரை பிரச்னைகள் இன்றியே சென்று வந்திருக்கிறேன்.

எங்கே போனான், சொல்லாமல் போயிருக்க மாட்டானே, இவ்வளவு நேரத்தில் கடையை விட்டும் போயிருக்க முடியாதே எனக் கடையைச் சல்லடை போட்டுத் தேடிவிட்டேன். பின்னர் எதற்கும் யாருடனாவது வெளியே போய்விட்டானா எனப் பார்ப்போம் என ஓடினேன். கடைக்கு வெளியே போக இரண்டு கதவுகள். முதல் கதவைத் திறந்தால் சிறு இடம். அங்கே கடையின் விற்பனைத் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் ஒட்டப்பட்டு இருக்கும். வாடிக்கையாளர் உபயோகிக்கிற கூடைகள், சில நேரம் தள்ளு வண்டிகள் நிற்கும். அந்த இடத்தில் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த விற்பனைத் தள்ளுபடி அறிவிப்புகளின் படங்களைப் பார்த்தவாறு மகன் நின்றிருந்ததைப் பார்த்ததும்தான் போன உயிர் எனக்குத் திரும்ப வந்தது.

எப்படி அங்கே வந்தாய், யாருடன் வந்தாய், என்னுடந்தானே நிற்கச் சொன்னேன், ஏன் சொல்லாமல் வந்தாய் என்ற கேள்விகளுக்கு மகனிடம் தெளிவான பதில் இல்லை. இனிமேல் இப்படிச் செய்யக் கூடாது எனச் சொல்லி கைப்பிடித்து அழைத்து வந்தேன். தெய்வத்துக்கும் முன்னோருக்கும் நன்றி சொல்லிக் கொண்டேன்.

வீட்டுக்கு வந்து சொன்னதும், ஐயோ எங்கயோ எதையோ பார்த்துட்டு என் பையனைத் தொலைச்சிட்டீங்களா என நன்றாகத் திட்டு விழுந்தது.

அதற்கப்புறமும் மகள் பிறந்த பிறகும் குழந்தைகளுடன் வெளியே கடைக்குச் சென்று, பொருட்களைப் பார்ப்பது அல்லது வாங்குவது என்றால், ஒரு கையில் குழந்தையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையைப் பயன்படுத்துவது. 

இப்போதும் இதை நினைத்தாலும் ஐயோ என எனக்குள் பயம் உண்டாகி, மனதைப் புரட்டும். இந்தப் பதிவே சில நாட்கள் முன் எழுதியிருக்க வேண்டியது. எழுதுவதன் மூலம் அந்த அனுபவத்தை மறுபடியும் கடக்க வேண்டுமே என்று தள்ளிப் போட்டு இப்போது எழுதுகிறேன்.

இதேபோல் என் சிறுவயதில் ஒருமுறை பெற்றோருடன் திருப்பதி செல்லும்போது அங்கே அறிமுகமான தம்பதியர் பின்னால் பெற்றோர் என நினைத்து நான் போய்விட, பின்னர் அவர்கள் என் கைபிடித்து அழைத்து வந்து என்னைத் தேடிக் கொண்டிருந்த என் பெற்றோரிடம் ஒப்படைத்த காட்சி இன்னும் மங்கலான கனவுபோல என்னிடம் உண்டு.

இப்படிக் குழந்தைகள் தொலைந்து போய் தெய்வாதீனமாய்த் திரும்ப கிடைத்த அனுபவம் பலருக்கும் இருக்கலாம். அப்படிக் கிடைக்காமல் போன குழந்தைகளின் குடும்பத்தின் வாழ்நாள் வலியை என்னால் இன்னும் உணர முடிகிறது.

கதை என்று வரும்போது, குழந்தைகள் தொலைந்துபோய் திரும்பக் கிடைப்பது என்பது புதிய கரு அல்ல. பழக்கமான கருவே. பலரும் கதையாய் எழுத முயன்று பார்த்திருக்கக் கூடிய கருதான். ஆனாலும் பழகிப் போன கருவையும் பார்க்கிற கோணத்திலோ கதை சொல்கிற விதத்திலோ புதியதாகக் காட்ட முடியும்.

ஜெயகாந்தனின் 60 ஆம் ஆண்டு மணிவிழா மலரில் தமிழ்ப் புத்தகாலயத்தைச் சேர்ந்த கண. முத்தையா சொல்லியிருப்பார்: விதவை மறுமணம் என்கிற கரு பலரும் அடித்துத் துவைத்த கரு. அதை வைத்துப் புதியதாக எழுத ஒன்றுமில்லை என புதுமைப்பித்தன் ஒருமுறை சொன்னதாக. பின்னர் ஜெயகாந்தனின் யுகசந்தி சிறுகதையை முத்தையா படித்தபோது புதுமைப்பித்தன் சொன்னது தவறு என்று உணர்ந்தாராம்.

அசோகமித்தரனின் வாழ்விலே ஒருமுறை கதை அப்படித்தான். குழந்தை காணாமல் போவதையும் தேடுகிற தவிப்பையும் வழக்கமான பெற்றோரின் பார்வையில் சொல்லாமல், குழந்தையின் அண்ணனான மூத்த சிறுவனின் பார்வையில் சொல்கிறது. அதனாலேயே குறிப்பிடத்தகுந்ததாய் ஆகிறது. 

கதையின் முதல் இரண்டு பத்திகளிலேயே அண்ணன் சிறுவன் ராமமூர்த்தி மழலை பேசும் தன் தம்பி சுந்துவைக் கூட வரவேண்டாம் எனச் சொல்லிவிட்டுத் தன் நண்பர்களுடன் விளையாடப் போகிறான். ஆனாலும் சுந்து வீட்டு வாசலில் வந்து அவர்கள் போவதைப் பார்க்கிறான் என்னும்போதே இவனும் பின்னால் போய்விடக் கூடும் என வாசகருக்குத் தெரிந்து விடுகிறது.

அதனால் வாசகருக்கு விளையாட்டு காட்ட கதை பெரிய சிறுவர்கள் ஒன்றாகப் போவதையும் விளையாட்டுத்தனமாக அவர்கள் செய்கிற காரியங்களையும் விவரிக்கிறது. சுந்துவைச் சுத்தமாய் மறந்துவிட்டு விளையாட்டாய் ஊர் சுற்றிவிட்டு, பின் நண்பன் வீட்டில் அவன் அம்மாவின் அன்பான உபசரிப்பில் சாப்பிட்டுவிட்டு நண்பனின் வீட்டில் கொஞ்சம் விளையாடிவிட்டு வீடு திரும்புகிற ராமமூர்த்திக்குச் சுந்து காணாமல் போயிருக்கிற செய்தி கிடைக்கிறது. ராமமூர்த்தியுடன் சுந்து வரவில்லையா என வீட்டில் கேட்கிறார்கள். 

குற்றவுணர்வுடனும் தவிப்புடனும் பாசத்துடனும் தம்பியைத் தேடி ஊரெல்லாம் ராமமூர்த்தி தேடுவதும், தெரிந்தவரைக் கேட்பதும் கடவுளை வேண்டுவதும் எனக் கடைசி மூணேகால் பக்கங்கள் வேகமாக ஓடுகின்றன. அசோகமித்திரனால் அவருடைய மெதுவான கதை சொல்லும்போக்கைக் கதையின் போக்குக்கேற்ப மாற்றிக் கொண்டு வாசகரைப் பரபரப்புடன் படிக்க வைக்கமுடியும் எனத் தெரிந்து கொள்கிறோம்

கடைசியில் அவன் வீடு திரும்பும்போது மழலையில் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிருந்தேன் எனச் சொல்கிற சுந்துவைப் பார்க்கிறான். அவனுக்கு அழுகையும் கேவலும் வெடித்துக் கிளம்பி வெகுநேரம் நிற்கவில்லை என்பதோடு கதை முடிகிறது.

1957-ல் அசோகமித்திரன் எழுதிய 5ஆவது சிறுகதை இது. பதினொன்றேகால் பக்கங்கள். இரண்டாம் பத்திக்குப் பிறகு கடைசி மூன்றேகால் பக்கத்தில் தான் கருவுக்குத் திரும்பினாலும் அசோகமித்திரனின் நல்ல சிறுகதைகளில் ஒன்று. 

இதில் இன்னொன்றும் கவனிக்க இருக்கிறது. அசோகமித்திரன் இதுவரை எழுதிய 5 கதைகளில் இரண்டு வளரும் குழந்தைகளைப் பற்றியது. அசோகமித்திரனின் உருவத்தையோ பேச்சையோ எழுத்தையோ பார்க்கும்போது குழந்தைகளுடன் உணர்வுபூர்வமாக ஒன்றிப் போகிறவர் எனத் தோன்றாது. ஆனால் முதல் ஐந்தில் இரண்டு கதைகள் குழந்தைகள் குறித்தவை. இன்னும் எத்தனை அப்படி எழுதியிருக்கிறார் என போகப்போக பார்க்கலாம்.

யோசிக்கும்போது, நானும் குழந்தைகளுடன் உணர்வுபூர்வமாக ஒன்றுகிறவனோ அதைச் செயல்களில் காட்டுகிறவனோ இல்லை. நானும் நிறைய கவிதைகள் குழந்தைகள் குறித்தே எழுதியிருக்கிறேன்.

– பி.கே. சிவகுமார்

ஜூலை 10, 2025

– அசோகமித்திரன் சிறுகதைகள் – தொகுப்பு 1 – கவிதா பப்ளிகேஷன்

#அசோகமித்திரன்

Series Navigationகல்விதை அசோகமித்திரன் சிறுகதைகள் – 6

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *