– ச. வேணுகோபன்

மனிதர்களுடைய உலகத்துக்குச் சரிநிகராகப் பல்லி, பாம்பு, நத்தை, மான், புலி, முயல், அணில், ஆடு, நாய், மாடு, மரங்கள், செடி கொடிகள், காடு, கடல், வானம், காற்று, காய், கனி, பூக்கள், தேனி, தும்பி, ஆறு, குளம், இரவு, பகல், இருள், ஒளி, மலம், தேன், கடவுள், சாத்தான், பிசாசு, இருள், ஒளி என அனைத்தையும் கவிதையில் வைத்துக் கொள்ளும் பண்பை கருணாகரனுடைய கவிதைகளில் காணலாம். இது ஒரு சிறப்புப் பண்பாகும். தமிழ் நவீன கவிதை சாராம்சப்படுத்தி வந்த தன்னிலை சார்ந்த தனி மனித இருப்பை அல்லது சமூக இருப்பை முதன்மைப்படுத்தும் போக்கை விட்டுவிலகி, அனைத்துக்கும் இடத்தை அளித்தல், அனைத்தையும் சமனிலையிற் கொள்ளுதல், இயற்கையின் விதியை தன்னுள் ஏற்று இயங்குதல் என்பதாக விரிகிறது. இங்கே கடவுளும் நாயும் புல்லும் மலமும் தேனும் மனிதரும் சமனிலையில் நோக்கப்படுகிறது. உயர் திணை, அஃறிணை என்ற பேதப்படுத்தல்கள் கடக்கப்படுகின்றன. அவ்வாறே சடப்பொருள், உயிர்ப்பொருள் என்ற வேறுபடுத்தல்களும் இல்லை. உறைப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு எல்லாமே சுவையின் வடிவங்கள். துக்கம், மகிழ்ச்சி, கோபம் எல்லாம் உணர்ச்சியின் நிறங்கள். அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான். இவற்றில் சமனிலையைக் காணமுடியாமல், ஒவ்வொன்றையும் வேறுபடுத்தி, உயர்வு தாழ்வாகப் பார்க்கும்போதுதான் மனித மனமும் வாழ்க்கையும் அல்லற்பட வேண்டியேற்படுகிறது.
கருணாகரனுடைய கவிதைகளில் ஒவ்வொன்றின் இயங்கு நிலைக்கு ஏற்ப அந்தந்தத் தருணங்களில் குணாம்ச மாற்றங்களும் அதன் சாரமாகப் பெறுமானங்களும் ஏற்படுகிறதேயொழிய, அவற்றின் சமனிலை (அவற்றுக்கு வழங்கப்படும் சமத்தன்மை) மாறவில்லை. இந்தப் பெருநோக்குக் கவிதையில் உள்ளமைந்திருப்பது அதனை மேலுயர்த்துகிறது. இலக்கியத்தின் குணமே இத்தன்மையினால் சிறந்தமைவது. இலக்கியத்திலும் கலையிலும்தான் இந்தத் தன்மையைக் காணலாம்.
இயற்கையைச் சிறப்பாக விவரிப்பதும் காட்சிப்படுத்துவதும் கலைகளின் இயல்பு. கலைஞர்களும் இலக்கியவாதிகளும் இதைத் திறம்படச் செய்வதை ஒரு எழுதாத விதியாக, பாரம்பரியமாகக் கொண்டுள்ளனர். ஒரு சினிமாச் சட்டகத்தில் காண்பிக்கப்படும் மலையோ, ஆறோ, அருவியோ, வெளியோ கடற்கரையோ, வானமோ, மரம், செடி, பறவை, புல் பூச்சி எதுவோ என்றாலும் அந்த இயற்கைக்காட்சி வினோதமாக, வியப்பூட்டும் அழகாக நம்முடைய மனதில் எழுச்சி பெறுகிறது. அப்படித்தான் ஒரு புகைப்படத்தில் நிலைபெற்ற காட்சியும். இந்தக் காட்சிகளை நாம் பார்த்து எளிதிற் கடந்து விடுகிறோம். கலைக்கண்னானது அதை உள்வாங்கி வெளிப்படுத்தும் முறையினால் அதற்கு மேலதிக பெறுமானங்களை அளிக்கின்றது. இப்படித்தான் கதை, கவிதை போன்ற இலக்கிய வடிவங்களிலும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் காட்சிப்படுத்தும் அல்லது காட்சியை உணர்த்தும் சிறப்பினால் (அதை முறைமை என்றே சொல்ல வேண்டும்) அவற்றுக்கு மேலதிக பெறுமதிகளை அளிக்கின்றனர்.
நிலமும் (திணையும்) பருவமும் (காலமும்) இணையும்போது அதில் உள்ள அனைத்தும் படைப்பில் அமைகிறது. இந்தப் பண்பைத் தமிழ்க் கவிதை மரபில் சங்க காலத்திலிருந்து இன்றுவரையிற் காணலாம். ஆயினும் தேவதேவன் போன்ற சிலரைத் தவிர ஏனையோரின் (தமிழக) கவிதைகளையும் விட நவீன ஈழத்துக் கவிதைகளில் இதைச் சிறப்பாகக் காண முடிகிறது. காலம், இடம், சூழல் ஆகிய மூன்றையும் இணைத்துப் பார்க்கும் தன்மை இது எனலாம். காலமும் இடமும் அவை இரண்டும் கலந்து அமைகின்ற சூழலும் கவிதையில் இயக்கமடைவது கண்ணுக்குத் தெரியாமலே வளருகின்ற செடியைப் போன்றது. நிலம், வெளி, ஒளி என மூன்றையும் தன்னுள் கொண்டு கணந்தோறும் செடி வளர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் அது ஒவ்வொரு நொடியும் எப்படி வளருகிறது என்று நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதனுடைய வளர்ச்சியை நாம் சில நாட்களின்போதுதான் தெரிந்து கொள்கிறோம். அதைப்போன்ற நிலையிலேயே இங்கே காலத்தையும் இடத்தையும் எடுத்துக் கொள்கின்ற சூழல், தன்னுடைய விளைவுகளை தோன்றாமற் தோன்றுவதாகக் காட்டுகிறது.
ஈழத்தில் கருணாகரனைப்போல இந்தத் தன்மையில் எழுதுகின்ற பிற கவிஞர்களாக வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன், சோலைக்கிளி ஆகியோர் இருக்கின்றனர். நிலத்தைக் கவிதையில் இருத்த வேண்டும் என்று கருதியவர் ஜெயபாலன். ஜெயபாலனுடைய கவிதைகளில் நிலக் காட்சி அழகாகப் புலப்படுத்தப்படும். சேரன் நிலத்தை (திணையை) கடலோடும் நிலத்தோடும் பருவத்தோடும் இணைத்துப் பார்க்கிறார். சேரனுடைய கவிதைகளில் அதிகமாகக் கடலும் காலமும் இணைந்து இருப்பதைக் காணலாம். மனிதர்களோடு அஃறிணைகளையும் தன்னுடைய கவிதைகளில் வைத்துக் கொள்கிறார் சோலைக்கிளி. ஆனால், கருணாகரனுக்கும் சோலைக்கிளிக்கும் இடையில் உள்ள பெரிய வேறுபாடு என்னவென்றால், மனிதர்களல்லாதவற்றை அஃறிணைகள் அல்லது மற்றவை என்ற வகையில் வைத்துக் கொள்கிறார் சோலைக்கிளி. கருணாகரன் இதிலிருந்து மாறுபட்டு, மனிதர்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கைக்கும் நிகராக ஏனைய அனைத்துக்கும் அனைத்தின் இயக்கத்திற்கும் சமனிலை அளிக்கிறார். அவற்றின் இயக்கத்தை அவற்றின் வாழ்வு என்று இங்கே வாசிக்க வேண்டும். கீழே சுட்டப்படும் கவிதை இதைத் தெளிவாக்குகிறது.
நத்தை போய்ச் சேருவதற்கும்
ஓரிடமுண்டு
அதற்குமோர் பயணமும்
பயண வழியுமிருக்கிறது.
பதற்றமேயில்லாத அதனுடைய பயணத்தில்
விரிந்து கொண்டேயிருக்கின்றன திசைகள்.
வானமும் பூமியும்
அது செல்வதைப் பொறுமையாகப்
பார்த்துக் கொண்டிருக்கின்றன.
வானமும் பூமியுமே
தன்னுடைய எல்லைகள் என்று
எந்த அவசரமுமில்லாமல்
பயணித்துக் கொண்டேயிருக்கிறாள்
அன்புத்தோழி.
(பக்: 10)
நத்தையைச் சக தோழியாக உணர்ந்து கொண்டதனால்தான் இவ்வாறு இந்தக் கவிதை வெளிப்பட்டிருக்கிறது. நத்தையினுடைய பயணம், அதற்கு இருக்கும் கனவு, அதனுடைய வாழ்வு எல்லாம் மனிதர்களுடைய பயணத்துக்கும் கனவுக்கும் வாழ்வுக்கும் நிகரானவை என்ற நிலையில் கவனித்துச் சொல்லப்படுகிறது. இங்கே சிறப்பாக நம்முடைய கவனத்துக்கு வந்து சேருவது, எந்தச் சூழலிலும் நத்தை பதற்றமடைவதில்லை. அதனுடைய திசைகள் விரிந்து கொண்டேயிருக்கின்றன என்ற மாபெரும் உண்மையாகும். அது குதிரையின் வலுவையும் விட வேகத்தோடும் வலுவோடும் தன் பயணத்தை நிதானமாகத் தொடருகிறது.
கவிதை தொடுகின்ற உச்ச நிலை இது. மனிதர்கள் கொள்ளுகின்ற பதற்றத்தைக் கவிதை கேலி செய்கிறது. ஆனால் அது நத்தையாக இல்லாமல், நத்தை எனும் தோழியாக இருப்பதால் இந்தக் கேலியும் அது உணர்த்தும் உண்மையும் அழுத்தமடைகிறது.
இதைப்போன்று மேலும் பல கவிதைகளில் அனைத்து உயிரிகளையும் உயிரற்றவற்றையும் ஒன்றாக நோக்கப்படும் பண்பாக்கம் நிகழ்வதாக உள்ளது. இத்தகைய நோக்கை நாம் ‘தெய்வ நோக்கு’ எனலாம். தெய்வ நோக்கில் அனைத்தும் ஒன்றே. அனைத்தும் சமமே. மனித நோக்குநிலையில் வேறுபாடுகளும் சமனின்மைகளுமே உண்டு. ஆனால், இலக்கியத்திலும் கலையிலும் நாம் இதுவரையும் கண்டறிந்த குரல் என்பது, சாதி, மத, பிரதேச, மொழி, நிற, வர்க்க, பால் வேறுபாடற்ற சமனிலைக்கானதே. இங்கே கருணாகரன் இந்த மரபான எல்லைகளைக் கடந்து, மனிதர்களுக்கு அப்பாலானவற்றுக்கும் சமநிலைத் தன்மையை – நிகர்நிலையை அளிக்கிறார். ஆகவேதான் இதைத் ‘தெய்வ நிலை’ என விழிக்க வேண்டும் என்கிறேன்.
இப்படியாக தெய்வ நிலையைக் கொண்டவையாக ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ என்ற இந்த நூலில் பல கவிதைகள் உள்ளன. அதற்காக இவை மதம் சார்ந்தவை அல்லது மதப் பின்னணியைக் கொண்டவை என்று அவசரப்பட்டுக் குறுகலாக அர்த்தப்படுத்தக் கூடாது. எந்தக் கவிதையிலும் மத நிலைப்பட்ட அடையாளம் இல்லை. எனவே இங்கே அமைந்துள்ள ‘தெய்வ நிலை’ என்பதையிட்டுப் பதற்றமடையாமல், மத அடையாளத்துடன் சேர்த்துப் பார்க்காமல், அது ஓர் உயர்ந்த நிலை என்று கொள்ள வேண்டும். அந்த உயர்ந்த நிலையையே எப்போதும் இலக்கியப் படைப்பாளிகளும் கலைஞர்களும் அறிஞர்களும் தொடமுனைகிறார்கள். அந்த உயர்ந்த நிலையைத் தொடும்பொழுது அந்தப் படைப்பு மகத்தான படைப்பாகவும் அந்தப் படைப்பைத் தந்தவர் மாபெரும் படைப்பாளியாகவும் ஆகி விடுகிறார். சிட்டுக் குருவியை விடுதலைக்கான பண்ணொன்றில் உயர்நிலையில் வைத்துப் பாரதி பாடியதை இங்கே நினைவிற் கொள்ளலாம்.
முன் சொன்னது நத்தைக் கவிதை என்றால், இது பாம்புக் கவிதை –
தனக்கொரு அறை வேண்டுமென்று
பதிவு செய்தது பாம்பொன்று.
எதேச்சையாக நுழைந்தால்
அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டில்
யாரும் தன்னை விரட்டக் கூடும் என்ற முன்னனுபவத்தில்
இந்த முன்னேற்பாடு.
பதிவு செய்தலில் கிடைக்கின்ற
பாதுகாப்புரிமையை அது
தன் புத்திக் கூர்மையால் புரிந்து கொண்டதுடன்
பாம்பு, பரிணாமத்தில் ஒரு படி ஏறி நின்றது
ஆம் நிமிர்ந்து, செங்குத்தாகவே நின்றது.
நிமிர்ந்து நிற்கும் பாம்பில்
வளைவுகளையும் நெளிவுகளையும்
தேடிக் கொண்டிருக்கின்றது அரசு.
அரசுக்கு இதுவொரு புதுப்பிரச்சினை.
நிமிர்ந்து நிற்கும் பாம்பை
எந்த எப்படிக் கையாள்வது
எந்தப் பிரிவில் சேர்த்துக் கொள்வதென்று
அதிகாரிகள் குழம்பி விட்டனர்.
வளைவும் நெளிவுகளுமின்றி
நிமிர்ந்து நிற்கும் பாம்புகள் பயங்கரமானவை
என்று ஊடக அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன
நிமிர்ந்து நிற்கும் பாம்புகளை
பாம்புகளாக அடையாளம் காண்பது கடினம்
என்று சனங்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.
இதெல்லாம் பரிணாம விதிக்கு எதிரானது
என்ற பாம்பின் கூற்றை
ஏற்றுக் கொள்வதற்கு யாரும் தயாரில்லை.
இது தனக்கிழைக்கப்படும் அநீதியாகும்
என்று பாம்பு சொல்லிக் கொண்டேயிருக்கிறது.
பாம்புப் பிரச்சினை
பெரிய பிரச்சினை என்று
பாம்பின் நிமிர்வைக் கட்டுப்படுத்துவதற்கென்றொரு
படைப்பிரிவையும்
சட்ட ஏற்பாட்டையும் அவசரமாக உருவாக்குகிறது
அரசாங்கம்.
பரிணாம விதிக்கெதிரான எதையும்
ஏற்றுக்கொள்ளவே முடியாது என்கிறார்கள் ஜனநாயகவாதிகள்
மனித உரிமைகளுக்கு அப்பால்
இதை எப்படிப் பேசமுடியும் என
மனித உரிமையாளர்களுக்கு
இதுவொரு சிக்கலாகி விட்டது.
எனவே
பாம்பு உரிமையாளர்கள் அமைப்பொன்று உருவாகிறது
பாம்பு உரிமை என்பது
பாம்புகளின் உரிமையா
பாம்புகளை உரிமை செய்வோரின் உரிமையா
என்ற குழப்பத்திலாழ்த்தியுள்ளது மொழியியலாளர்களை.
நிமிர்ந்த பாம்பு
வாலில் நிற்கிறதா
காலில் நிற்கிறதா
என்ற பட்டிமன்ற விவாதங்களை
தொலைக்காட்சிகள் அமர்க்களமாக நடத்திக் கொண்டிருக்கின்றன.
முடிவேயில்லாமல் வளர்ந்து செல்லும் விவகாரத்துக்காக
சிறப்பு அமர்வுக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பாடாகியுள்ளது.
இப்பொழுது ஆடும் நடராஜனின் கழுத்தில்
சுருண்டிருந்த பாம்பும் எழுந்து நிற்கத் தொடங்குகிறது.
(பக்: 18, 19, 20)
இப்படி ஆமைக்கவிதை, முயல் கவிதை, கடல் கவிதை, மலைக் கவிதை எனப் பலதும் இந்த நூலில் உள்ளன. இரு வசதிக்காகவே இப்படிச் சொல்கிறேனே தவிர, இவை அப்படிப் பாம்புக் கவிதை, மலைக்கவிதை, இரவுக் கவிதை, மலர்க்கவிதை என இல்லை. மாறாக ஒவ்வொன்றுக்குள்ளும் உணர்த்தப்படும் பொருண்மை பலவாக உள்ளன. வெளித்தோற்றம் மட்டுமே ஆமைக்கவிதை, முயல் கவிதை, கடல் கவிதை, மலைக் கவிதை என்பதாக உள்ளது. இந்தக் கவிதை நூலின் சிறப்பே இதுதான். உலகு தழுவிய அனைத்தையும் தன்னுள் சமமாக ஏற்றுக் கொண்ட கவிதைப்புலனால் உருவாகியது. அந்த வகையில் இந்தக் கவிதை பாம்பைக் குறித்து எழுதப்பட்டாலும் பாம்பைப்பற்றியது மட்டுமல்ல. இதையொரு அரசியற் கவிதையாகவும் கொள்ள முடியும். அதற்கான சாத்தியங்கள் தெளிவாக உள்ளன. தான் பேச விளைகின்ற அரசியலைக் கேலிப்படுத்தும் கவிதை. கவிதையின் உருவமும் உள்ளடக்கத் தொனியும் கேலியில்தான் மையம் கொண்டுள்ளது.
நிமிர்ந்து நிற்கும் பாம்பில்
வளைவுகளையும் நெளிவுகளையும்
தேடிக் கொண்டிருக்கின்றது அரசு
எனச் சொல்வதன் மூலம் மாற்று நிகழ்வொன்று அரசியலில் இடையீடு செய்கிறது என்பதைக் குறியீட்டினால் உணர்த்துகிறது. ஆனால், அது உச்சக்கேலியாக அமைந்துள்ளது.
அரசியல் என்பதற்கு, விடுதலைக்கான அரசியல், ஒடுக்குமுறைக்கான அரசியல், கறுப்பு அரசியல், சிவப்பு அரசியல் எனப் பலவிதமான வியாக்கியானங்களைக் கூறலாம். ஆனால் எப்பொழுதும் அரசியல் என்பது அதிகாரத்தின் தெளிவான முகமே. விடுதலை அரசியலிலும் அதிகாரத்துக்கான வேட்கையே உள்ளோடியிருக்கிறது. ஆகவேதான் படைப்பாக்கத்தில் அரசியல் (அதிகாரம்) கேலி, கேலி செய்தல், கேலிப்படுத்தல் என்ற சிறப்பு அம்சத்தைத் தன்னுள் எடுத்துக் கொள்கிறது. ஓவியர்கள் அரசியலைப் பேசும்போது முதலில் சென்றடைவது காட்டூன் என்ற Caricature வெளிப்பாட்டு முறைக்கே. அவர்களுக்கு அதுவொரு வலிய கருவி – ஆயுதம் ஆகும். அதையொத்த தன்மையை அல்லது உத்தியை கவிதை அங்கதமாக, கேலியாக எடுத்தாள்கிறது. அது
புயலைப்போலச் சீற்றமாக ஆக்ரோஷம் கொண்டு படிப்போருக்குள் இறங்கித் தொழிற்படுகிறது. படிக்கும்போது நமக்குள் தகிக்கும் அனலும் கொழுந்து விட்டெரியும் தீயும் பரிமாறப்படுகிறது. இதொரு ரசவாதம்தான்.
அரசியற் கவிதைகளில் கேலிப்படுத்தல் என்பதை ஒரு பொதுப்பண்பாக உலக அளவில் பார்க்கலாம். கேலிப்படுத்தல் என்பது சுவையை அளிப்பது மட்டுமல்ல, அது கவிதையின் நோக்கில் பொதுசன உளவியலின் வெளிப்பாட்டு உணர்வாகவும் தொழிற்படுகிறது. மக்கள் எப்பொழுதும் அரசியல் அதிகாரத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள், வரையறுக்கப்படுகிறார்கள். அதை எதிர்கொள்வதற்கு அவர்களுக்கு எப்பொழுதும் பொருத்தமான கருவியாக இருப்பது கேலிப்படுத்தலாகும். அத்தோடு அந்தக் கேலியானது வெறுமனே சிரித்துக் கடந்து செல்வதாக இல்லாமல், அது அதிகாரத்துக்கு எதிரான செயற்பாட்டுக்குரிய தூண்டு விசையை உருவாக்கும் ஒருவகையான ஆயுதமாகக் கொள்வதுமாகும். அதனால் கவிதையில் அமைந்திருக்கும் அல்லது அமைக்கப்படும் கேலியானது, ஒரு வலிய கூராயுதமாகும். இதனால்தான் உலகளவில் எல்லாப் போராட்டக்களங்களிலும் முதலில் ஒலிப்பது கவிதையாக உள்ளது. கவிதையில் அமையும் ஒவ்வொரு சொல்லும் எழுச்சியின் கூர் வடிவம், எதிர்ப்பின் புயல்முகம் என அமைந்து இந்த வகையிற் தொழிற்படுகிறது. கவிதைகளில் வெளிப்படும் எதிர்ப்புணர்வும் அந்த எதிர்ப்புணர்வின் வெளிப்பாடாக அமையும் கேலியும் ஒரு படையின் வலிமைக்குச் சமன். படையின் வலிமை என்பது களத்தில் மட்டுமேதான். அதனுடைய கால எல்லையும் அந்தக் களத்தோடு மட்டுப்படுத்தப்பட்டது. கவிதையில் அமையும் வலிமை காலத்தையும் களத்தையும் கடந்து விசாலித்திருப்பதாகும்.
இந்தப் பாம்புக் கவிதையிலிருந்து அரசியலை வெளியே எடுத்து விட்டாலும் வரலாற்றிலும் மதத்திலும் நம்முடைய உள்ளத்திலும் இருக்கின்ற பாம்புக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடங்களைக் குறித்துக் கவிதை உரைக்கிறது. கவிதை தன்னை உரைக்குமா அல்லது தன்னைப் பிறரிடம் பகிர்ந்து உணர்த்துமா என்று கவிதையைக் குறித்து விவாதிப்போர் இங்கே கேட்கக் கூடும். நல்ல கவிதை எந்த நிலையையும் எடுத்துக் கொள்ளும். நல்ல கவிதையின் பண்பு அதுவாகும். ‘நல்லதோர் வீணை செய்து – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி – எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ – இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!…‘ என்ற பாரதியின் பாடல் தன்னை உரைக்கிறதா? பகிர்கிறதா? இரண்டும் இங்கே நிகழ்வதாகவே சொல்வேன். இரண்டு தன்மைகளும் இதில் உண்டு. ஒன்றில் ஒன்று பின்னியதாக. நல்ல கவிதையின் குணம் இதுதான். இதனால்தான் நல்ல கவிதை தன்னை எளிமையாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்திக் கொள்ளும். அதனுடைய அழகே அதுதான். அதனுடைய சிறப்பும் அதுவேயாகும் என்று சொல்லி இதை முடித்துக் கொண்டு, இந்த நூலின் ஏனைய கவிதைகளைப் பற்றி மேலே பேசலாம்.
நீருக்கடியில் ஆழ்ந்துறங்கியவன்
தேநீரைப் பருகவென
எழுந்து வந்தான்.
நீர்ப்பாம்பொன்றும்
தவளைகளிரண்டும்
ஆமையொன்றும்
கூடவே வந்தன.
தேநீரில் கமழும் மல்லி + தேயிலை + எலுமிச்சை மணத்தை
அவனோடிணைந்து ருசித்தன
தவளைகளிரண்டும் ஆமையும்.
நீர்ப்பாம்புக்கு
Coffee வேண்டுமாக இருந்தது.
பேசிச் சிரித்தபடி
தேநீரைப் பருகிய பின்
ஒரு சிறிய காலை நடையில்
ஐவரும் சென்றனர்.
செல்லும் வழியில்
‘அவரவர் ருசியில் ஆழ்ந்து கலப்பது
தெய்வப் பேறு‘ என்றது நீர்ப்பாம்பு.
Coffee யின் தித்திப்பில்
நெகிழ்ந்ததா நெளிந்ததா
என்று புரியாத மின்னல் வெட்டியது.
‘அவரவர் ருசியில் ஆழ்ந்து கலப்பது
கடவுளின் கிருபை‘ என்றானவன்.
‘ஐயோ ஐயோ,
அவரவர் ருசியில் ஆழ்ந்து கலப்பது பேரின்பவூற்று
அதுவொரு ஜனநாயகப் பேறு
யாருக்கு எதுவோ
அவரவர்க்கு அது
அதுவே தித்திக்கும் ருசி‘ என்றது ஆமை.
ஆமை அருளிய சொல்லில் கிளைத்த செடிகள்
விதவிதமாகப் பூத்தன
ஆயிரம் வண்ண மலர்களின் நடுவே
ஐவரும் சென்றனர்.
நீரின் மேற்பரப்பில் ஒரு குட்டித் தூக்கம் போட்டானவன்
அலைகளில் நீந்திக் களித்தன
ஆமையும் பாம்பும்.
தவளைகளிரண்டும்
நீருக்கடியில் தங்கள் வீட்டைத் தேடிச் சென்றன.
‘அவரவர் உலகில் ஆழ்ந்து கலப்பது
யாம் பெற்ற இன்பமன்றோ‘ என்று
ஆரத் தழுவியது பாம்பை ஆமை.
(பக்: 132, 133)
ஏதொன்றையும் நீங்கள் எப்படி உணர்ந்து கொள்கிறீர்களோ, அதன்படியே அதனுடைய வெளிப்பாடும் இருக்கும். கல்லைக் கல்லாகவும் பார்க்கலாம், கடவுளாகவும் பார்க்கலாம். ‘மரத்தை மறைத்தது மாமத யானை. மரத்தில் மறைந்தது மாமத யானை‘ என்று திருமூலர் ‘திருமந்திர‘த்தில் சொல்வது வேறில்லை. இதுவேதான்.
ஆனால், எல்லாக் கவிதைகளையும் இதே தன்மையோடு கருணாகரன் எழுதவில்லை. சில கவிதைகள் வெளிப்படையாகவே அரசியலைப் பேசுவதாகவும் ஒற்றைத் தன்மையைக் கொண்டவையாகவும் உள்ளன. அது கவிதையைக் கீழிறக்கி விடுகிறது. அவ்வாறானபோது வாசிப்பில் சுவாரசியம் குன்றும் நிலை ஏற்படுகிறது. கவிதையின் மதிப்பும் குன்றி விடுகிறது. ஆனால், அடுத்த கவிதை ஒன்று சட்டென உயரத்துக்குக் கொண்டு போய்விடும் நிலையும் இந்தத் தொகுதியில் உண்டு. இத்தகைய தன்மையை அல்லது நிலையை அநேகமான கவிஞர்களிலும் எழுத்தாளர்களிலும் காண்கிறோம். இந்தப் பலவீனத்தை அல்லது குறைபாட்டை கொஞ்சம் கவனித்தால் அவர்களால் கண்டிப்பாகத் திருத்திக் கொள்ள முடியும். சுந்தர ராமசாமி (பசுவய்யா) போன்ற மிகச் சிலர்தான் தங்களுடைய எந்த எழுத்தையும் மிகச் சீரான முறையில் முன்வைக்கும் கவனத்தைக் கொண்டவர்கள். செம்மையாக்கத்தில் கவனம் செலுத்துவதென்பது, மொழி, படைப்பாக்கம், வாசகர் போன்றவற்றின் மீதான அக்கறையே ஆகும். இங்கே அக்கறை என்பதை பொறுப்புணர்வு எனப் பொருள் கொள்ள வேண்டும். ஆகவே பொறுப்புணர்வு என்பது படைப்பாளருடைய கடப்பாடாகும். கருணாகரனுடைய பலவீனமாக இருப்பது, அவர் கவிதைகளைச் செம்மையாக்கம் செய்வதில் அக்கறைக் குறைவாக இருக்கிறார் எனத் தோன்றுகிறது. அதனால், நல்ல கவிதைகளாக மாறயிருக்க வேண்டிய உணர்வுகளும் அறிதல்களும் அவர் காணும் பொருண்மையும் வெளிறிப்போய் விடுகின்றன.
கருணாகரனுடைய கவிதைகளில் உள்ள இன்னொரு கூறு அல்லது அம்சமாக இருப்பது, அதிகாரத்தைக் குறித்த விமர்சனமும் மறுத்துரைப்புகளாகும். இதனை இந்த நூலின் பதிப்பாளரான தில்லை தன்னுடைய பதிப்பாளர் உரையில் கூறுகிறார்: ‘தான் வாழும் காலத்தைச் சூழ்ந்திருக்கின்ற அச்சத்தையும் நெருக்கடியையும் தாண்டி கவிஞர் கருணாகரனின் கவிதைகள், அதிகாரங்களைத் தொடர்ச்சியாக எதிர்த்தே வருகின்றன. அடக்குமுறைக்குள்ளாக்கப்படும் சமூகங்களின் குரல்கள் அவரது கவிதைகளில் தீவிரமாக ஒலிக்கின்றன. அச் சமூகங்களின் சிதிலங்களைக் கருணாகரன் தன் இரத்தத்தின் ஊடுபாய்வாக நகர்த்திக் கொண்டேயிருக்கிறார்‘ என.
இதை நிரூபிக்கின்றன இந்த நூலில் உள்ள சில கவிதைகள். சில சந்தர்ப்பங்களில் சிலவற்றை நேரிடையாகச் சொல்ல வேண்டும் என்ற உணர்வு படைப்பாளருக்கு ஏற்பட்டு விடுவது இயல்பு. அதைச் சிலர் தமது படைப்பாளுமையினால் கடந்து சென்று, கலைப்பெறுமானமாக்குவர். சிலரோ அதைத் தவற விடுகின்றனர். அப்படித் தவற விடும்போது கவிதை சுருங்கிக் கீழிறங்கிக் கொள்கிறது. இந்தத் தொகுதியில் அப்படியாக கீழிறங்கிய சில கவிதைகள் சில உண்டு.
“அதெப்படி வரலாறு நெடுகவும்
முட்டாள்கள் இருந்து கொண்டேயிருக்கிறார்கள் அப்பா?”
என்ற கவிதை இதற்கொரு உதாரணம். ஒரு நல்ல கவிதையைப்போன்ற தோற்ற மயக்கத்தைத் தந்தாலும் இந்தக் கவிதையில் வியப்பேதும் இல்லை. வரலாற்றைப் பற்றி மகளுக்கு நம்பிக்கையீனமாகவும் துயரத்தோடும் கேலியாக எடுத்துரைப்பது மட்டுமே கவிதையைத் தாங்குகிறது. மற்றும்படி அதில் இணைந்துள்ள சொற்களால் கவிதை செழுமைப்படவில்லை.
திடீரென ஒருநாள்
எல்லாப் பாதைகளும் காலடியில் முடிந்தன
எதைத் தொடரவும்
எதை விட்டுச் செல்லவும்
ஒரு சுவடும்
முன்னுமில்லைப் பின்னுமில்லை
வெளியில்
உருகும் வெண்திரையாகி
காற்றில் மிளர்ந்து கரைந்தான்
கரைந்த பின் எதுதான் மிஞ்சும்?
(பக்கம்:100
இதுவும் அப்படியான ஒரு கவிதை. எத்தகைய ஆழமான உணர்ச்சிகளையும் வியப்பையும் ஏற்படுத்தாமல் தட்டையாக உள்ளது. நீண்டகாலமாக கவிதையில் இயங்கி வருகின்ற ஒரு ஆளுமைக்கு இவ்வாறான கவிதைகள் சறுக்கலாகவே அமையும்.
இலங்கையில் நீண்டகாலமாக நடந்த உள்நாட்டுப்போர் உண்டாக்கிய பாதிப்புகளும் அழிவுகளும் மிக அதிகமாகும். அது மனிதர்களுக்கு மட்டும் பாதிப்புகளை உண்டாக்கவில்லை. சூழலுக்கும் பெரும்பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இதைக் கவிதைக்குள் ஒரு கவியானவர் எப்படி உள்ளெடுத்துக் கொள்கிறார், எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார் என்பதற்கு கீழுள்ள கவிதையைப் பார்க்கலாம்.
எந்த நிறங்களால்
அழிந்த ஊரைத் தீட்டுவது?
ஏதொன்றும்
அதன் உயிரையும் சாயலையும் தரவில்லை
அதன் ஆன்மாவில்
ஒரு வண்ணமும் சுடரவேயில்லை.
கரம்பை மலர்களில்
எந்த நிறமும் பொருந்தாமல் மறுதலிக்கிறது.
குளங்களில் நீரின்றிப் போனதையும் விட
பெரிய துயரம்
எந்த வர்ணமும் நீரைப் பிரதிபலிக்கவில்லை என்பது.
…………………………….
……………………………
காடுகளும்
காடுகளில் புதையுண்ட
ஒற்றையடிப் பாதையும்
ஒற்றையடிப் பாதையில்
திறந்த காடுகளும்
பொருந்தா நிறங்களில் தவிக்கின்றன.
…………………………..
…………………………..
இடிந்தழிந்த கோயிலில்
சிதைந்த நிறங்களைக் கூட்டியள்ளி
இதயத்தில் நிரப்புகிறேன்.
குயிலின் கூவலில்
ஒரு நிறத்தைச் சேர்க்கலாமென்றால்
தூரிகை நழுவி
பழைய பதுங்கு குழியில் வீழ்கிறது.
அங்கே
போரின் புழுக்கள் நெளிகின்றன.
(பக்: 67, 68)
இது தான் வாழும் சூழலின் (ஊர்களின்) அழிவும் சிதைவும் என்றால், இதற்கு வெளியே நேரடியாக மனிதர்களைப் போர் தாக்கியதை, அதன் அக – புறப் பாதிப்பையும் தாக்கங்களையும் அப்படியே கவிதையாக்கியுள்ளார் இன்னொரு கவிதையில் –
முருங்கைப் பூக்கள் உதிர்ந்து காற்றில் பறக்கும்
இந்தக் கோடை காலக் காலையில்
முடிக்காத கவிதையைக் கிழித்தெறிகிறேன்
எதற்காகக் கவிதை?
யாருக்காகப் பாடல்?
எதற்குத் தோத்திரமும் பிரார்த்தனையும்?
உயிரில் மூண்டெரிகிற அக்கவிதையில்
காணாமலாக்கப்பட்ட மகள்
என்னை அமைதிப்படுத்த
விம்மலை அடக்கிக் கொண்டு சிரிக்கிறாள்.
அதை மீறித் துயரத்தின் நிழல்
நெடுமரங்களாக அசைந்தாடுகிறது எங்கும்.
அவளுக்கென ஆக்கப்பட்ட சோறு
இதோ உலர்ந்த பருக்கைகளாகி
முற்றமெங்கும் சிதறுகிறது
அப்படியே அது உலகம் முழுவதும் பரவுகிறது
“சோற்றுப் பருக்கைகளால்
உலகம் முழுவதையும் மூடிச் செல்கிறாய்“ என்று
ஏதொவொரு சட்டத்தினால் கைது செய்யப்படலாம் நான்.
தேடிக் கண்டடைய முடியாத மகளின் பசிக்கு
வேறெப்படி நான்
இந்தச் சோற்றை ஊட்ட முடியும்?
முற்றத்தில்
அதைக் கொத்திச் செல்லும்
காக்கை, குருவிகளிடம் கேட்கிறேன்
“காக்கை, குருவியெல்லாம் எங்கள் ஜாதி… ”என்றும்மைப்
பாடித் திரிந்த இனிய தோழியல்லவோ அவள்!
அவளிடம்
இந்தச் சோற்றுப் பருக்கைகளைச் சேர்த்து விடுங்கள்
அல்லது
அவளின் நிமித்தமான
பிதுர்க்கடனாக இதை ஏற்றுக் கொள்க” என்று.
இதோ அவள் முற்றத்தில் நட்ட மாமரம் பழுத்துச் சொரிகிறது
அந்தப் பழங்களின் வாசனை
அவளைத் தேடியலைகிறது.
தாங்க முடியாத அவளின் நினைவுகளோடு
அந்தப் பழங்களை
மரத்தின் அடியில் புதைக்கிறேன்.
இதயத்திலிருந்து பீறிட்டெழும் துயரத்தைப்போல
பழங்களின் வாசனை கிளர்ந்து கிளர்ந்து மேலெழுகிறது
அதுதான் உன்னுடைய வாசனை மகளே
அதை எங்கே நான் புதைப்பேன்?
அந்த வாசனை
பழங்களைப் போல இனிப்பதேயில்லை.
“அம்மா” என்றொரு சொல்
அல்லது
“நான் இங்கிருக்கிறேன்” என்றொரு வார்த்தை
சொல்!
நீண்டெரியும் எனதிந்தத் தூக்கமற்ற நாட்களும்
பசியும் தாகமும்
அலைவும் முடிவுற்று விடுமப்போது.
ஏனிந்தக் கனத்த மௌனம்
ஏளனமா? புறக்கணிப்பா? இயலாமையா?
இந்தக் காலம் உனக்காகவும் இல்லை
எனக்காகவும் இல்லாமலாயிற்றுக் கண்ணே!
அது நம்மை விட்டுச் சென்று விட்டதடி
நம்மைக் கொல்லாமற் கொன்று விட்டதடி…
(பக்: 117, 118)
போரின்போதோ போர்க்காலத்தில் ஏதோ ஒரு சூழலிலோ காணாமல் ஆக்கப்பட்ட தன்னுடைய மகளைப் பற்றிய தாயின் துயரச் சூடு இந்தக் கவிதையில் ஆற முடியாமல் தகித்துக் கொண்டிருக்கிறது. இது அந்த அன்னையின் ஆறாத மனச் சூடு மட்டுமல்ல, வாசிக்கின்ற நம்முடைய இதயத்தின் சூடாகவும் ஆகிவிடுகிறது.
இந்தக் கவிதையைப் படிக்கும்போது இந்த அன்னையின் நிலையும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையும் மட்டுமல்ல, அதை அதிகாரம் செய்யும் தரப்புகளையும் அவற்றின் அதிகாரத்தையும் அந்த அதிகாரம் பலியெடுக்கும் மனிதர்களையும் அதை முறியடிக்க முடியாமல் துயரை மட்டுமே வெளிப்படுத்தும் மாந்தரையும் பார்க்கிறோம். அந்த மாந்தர் கூட்டத்தில் நாமும் உள்ளோம் என்று உணரும்போது சத்தியமாக வெட்கமாகவே உள்ளது. இத்தகைய கவிதைகள் தம்மைப் படித்துக் கடந்து செல்ல விடாமல், நம்மைச் சிந்திக்கவும் செயலாற்றவும் தூண்டுவன என எண்ணுகிறேன். குறைந்த பட்சமாக, துயரேந்தி நிற்கின்ற இந்த அன்னையரோடு நாம் நிற்க வேண்டும் என்ற உணர்வுத் தூண்டலை அளிக்கிறது அல்லவா!
இவ்வாறு அமையும்போது கவிதையின் பண்பும் (தன்மையும்) வலுவும் (The nature, character and strength of poetry) வேறாகி விடுகிறது. நம் காலத்தில் பாரதியின் பல கவிதைகளுக்குள்ள சிறப்பு இது.
போர் உண்டாக்கிய கவிதை இது என்று மேற்படி கவிதையைக் கூறலாம். இதைப்போல இந்த நூலில் வேறு சில கவிதைகளும் உண்டு. அவை போரிலே தங்களுடைய உறுப்புகளை இழந்தவர்களைப் பற்றியவையாக உள்ளன. ஒற்றைக் காலோடு, ஒற்றைக் கையோடு வாழ வேண்டிய நிர்ப்பந்த நிலையைச் சொல்லும்போது போரின் தீய முகமும் அதனுடைய குரூரமான அகமும் நமக்குப் புலப்படுகிறது. நாம் தினமும் கண்டும் கண்டு விலகியும் செல்கின்ற பலரைத் திரும்பிக் கவனிக்க வைக்கும்படியாக இந்தக் கவிதைகள் –
இல்லாமலாகிய ஒற்றைக் கையினை
வாசனை மீந்த சோப்பினால்
கழுவியபின் முகர்ந்து பார்த்தாள்.
கொஞ்ச நேரம் அதை
முன்னும் பின்னுமாக வீசியபோது
காற்று அந்தக் கையில் பிடிகொடுக்காமல்
சுழித்தோடியது.
குனிந்து நிலத்தைத் தொட்டாள்
நிலமோ விலகி விலகி
தொடுதொலைவுக்கப்பால் சென்று
வித்தை காட்டியது.
வெளியே வந்து
மரக்கிளையில் கனியொன்றைப் பறிக்க
எம்பிக் குதித்தாள்
கிளையோ காற்றில் சிறகடித்துப் பறந்தது.
கண்ணாமூச்சியாட்டத்தில் களைத்துப் போனவள்
இல்லாமலாகிய கையை
அலங்கரிக்க நினைத்தாள்.
நிறங்களைத் தீட்டி
விதவிதமாக அலங்கரித்த பின்
ஆபரணங்களாகப் பூக்களைச் சூடினாள்.
பிறகு
அதற்கொரு முத்தமிட்டாள்.
அலங்கரிக்கப்பட்ட கை
ஒரு புராதனப் பொருளைப் போலத் தோன்றவும்
கண்களில் ஒற்றிக் கொண்ட பின்
ரகசியமாக அதைப் பத்திரப்படுத்திக் கொண்டாள்.
(பக்: 136)
ஒற்றைக் காலுடன்தான்
கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தினமும்
மலங்கழிக்கிறான்
வேலைக்குப் போய் வருகிறான்
புணர்கிறான்
பிள்ளையை மடியில் வைத்துக் கொஞ்சுகிறான்
வயதாகித் தளர்ந்த தாயைக் குளிப்பாட்டுகிறான்
செல்லமாக விளைந்திருக்கும்
நாய்க்குட்டியுடன் விளையாடுகிறான்
இந்த உலகத்தின் ருசி
கெட்டுப் போய் விடக் கூடாதென்று
இரண்டு ஆடுகளை வளர்க்கிறான்.
பூங்கன்றுகளுக்குத் தண்ணீர் விடுகிறான்
தன்னுடைய கனவுகளில் பாதியான
தோட்டத்தைச் செழிப்பாக வைத்திருக்கிறான்
உங்களுக்குத் தினமும் பால் கொண்டு வருகிறான்
விரைந்து செல்லும் வாகனங்களுக்கிடையில்
தடுமாறியபடி வீதியைக் கடக்கிறான்.
இல்லாமலேயாகி விட்ட ஒற்றைக் காலைத்தான்
அவன் பொன்னாகவும் மண்ணாகவும் ஆக்கி
வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
ஒற்றைக் காலுடன்தான்
தன்னுடைய இளமையிலிருந்து
முதுமைக்குப் பயணித்திருக்கிறான்
உங்களின் முன்னே.
அவனுடைய ஒற்றைக் கால்
இல்லாமலாகி
கால் நூற்றாண்டாகி விட்டதென்பதை
என்றேனும் நீங்கள் நினைத்ததுண்டா?
(பக்: 140, 141)
இதைப் படிக்கும்போது நமக்கே ஒரு காலோ கையோ இல்லாமல் போனதைப்போல, காலோ கையோ இல்லாமல் வாழ்வதைப்போல ஓர் உணர்வு ஏற்படுகிறது. நெஞ்சம் பதறுகிறது. அவர்களுடைய இல்லாத காலில் அல்லது கையில் தொட்டு நெஞ்சார்ந்த வணக்கத்தைச் சொல்ல வேண்டும் போலுள்ளது.
கவிதை என்பது நமக்குள் எப்போதும் வாசல்களைத் திறப்பதாக இருக்க வேண்டும். நம்மை ஒரு நொடியேனும் கவனத்தை ஊட்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்க வேண்டும். நம்மைக் கேள்வி கேட்க வேண்டும். அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நாம் திணறும்போதுதான் நம்முடைய கனத்த திரைகள் அகன்று, அகவிழிகள் திறக்கின்றன. நம்முடைய அகவிழி என்று இங்கே நான் கூறுவது, தனி ஒருவரின் அகத்தை மட்டுமல்ல. அதற்கும் அப்பால் சமூகத்தின் அகத்தை என்ற அர்த்தத்தில் ஆகும். அவ்வாறான கவிதைகளுக்கே நீடித்த ஆயுளும் சிறப்பும் உண்டு.
மௌனத்தின் மீது நடந்து செல்கிறது பூனை
எதிரே ஒரு சிறிய அணில்
இரண்டுக்குமிடையில்
ஒரு கணம்
மிகப் பிரமாண்டமாகத் திரள்கிறது
பேரமைதி
(பக்: 90)
இங்கே பூனைக்கும் அணிலுக்குமிடையில் திரளும் பேரமைதி, புயலுக்கு முந்திய அமைதியாகும். அதற்குள் பெரும் பதற்றம் நிறைந்திருக்கிறது. அடுத்த கணம், அடுத்த நொடி என்ன ஆகும் என்று பூனைக்கும் தெரியாது. அணிலுக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. ஏன் இந்த இயற்கை உட்பட எதற்கும் தெரியாது. அணில் கொல்லப்படலாம். தப்பியும் செல்லலாம். பூனை வெற்றியைப் பெறலாம். தோல்வியும் அடையலாம். அடுத்த நொடிதான் அந்த உண்மையை, அந்தப் புதிரை, அந்த வியப்பைத் தனக்குள் கொண்டுள்ளது. ஆகவே அந்தக் கணம்தான் இங்கே வலிமையோடுள்ளது.
தன்னைப் பேரியற்கையோடு இணைத்துள்ள கருணாகரன் என்ற கவிஞரை இந்தக் கவிதைகளில் பார்க்கிறோம். தான் மட்டும் இயற்கையோடு இணைந்து கொள்ளாமல் எம்மையும் இணைக்கிறார். இந்த உலகில் உள்ள அனைத்தோடும் எம்மையும் சமனிலை கொள்ள வைக்கிறார். அந்தச் சமனிலையான தன்மையே வாழ்க்கையின் அழகாகும். இந்தப் பூமியின் சிறப்பாகும் என்று உணர்த்தி, மனிதருக்குள்ள ஆறாம் அறிவு என்பது, ஏனைய அனைத்தையும் சமனிலையாக உணர்வதற்கும் அங்கீகரிப்பதற்குமானது என்று வலியுறுத்தி விடுகிறார்.
‘பேரியற்கையோடு இணைந்திருக்கிறேன், பேரியற்கையின் அம்சமாக இருக்கிறேன், பேரியற்கையின் ஒரு அங்கமாகவும் துகளாகவும் உள்ளேன்’ என்ற பிரக்ஞை (உள்ளுணர்வு) அமையப்பெற்றவரின் இதயம் தெய்வத்துக்கு நிகர். அந்த உள்ளத்தின் வாக்கு, தேவ வாக்காகும் என்பேன்.
மௌனத்தின் மீது வேறொருவன்
தாயதி வெளியீடு
விலை: இந்தியா 150/- இலங்கை 450/-
00
- இலக்கியப்பூக்கள் 344
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 4
- நிறமாறும் அலைகள்
- …………….. எப்படி ?
- *BYRON பாணி மகிழ்ச்சியின்மை- [BERTRAND RUSSEL’S THE CONQUEST OF HAPPINESS – அத்தியாயம் – 2]
- வண்ண நிலவன்- வீடு
- தவம்
- கல்விதை
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 5
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 6
- நிரந்தரப் பருகலின் சுய நீச்சல்
- தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை