– பி.கே. சிவகுமார்
தமிழ் இலக்கியத்துக்கு ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்த எந்த எழுத்தாளரையும் – அவர் புனைவுகளை மட்டும் வைத்து – சாதி, மத ஆதரவாளர் என்கிற சட்டகத்துள் அடைப்பது எனக்கு உடன்பாடில்லை.
2003லிருந்து 2006 வரையான காலகட்டம். எழுத்தாளர் இரா.முருகன் தொடங்கி நடத்திய இராயர் காப்பி கிளப் யாஹூ இலக்கியக் குழு நாட்கள். ஊருக்கு வெளியே சேரி இருந்தது என்கிற வரியை எழுதினார் என மௌனியைப் பலரும் சாத்திக் கொண்டிருந்தார்கள். அதில் அப்போது முற்போக்காளர்களாக இருந்து, இப்போது மென் அல்லது வன்சங்கியாக ஆகிப்போன பிராமண எழுத்தாளர்களும் பதிப்பாளரும் உண்டு. இரா. முருகன் இன்றும் மனதளவில் இடதுசாரி என்றாலும் விவாதங்களின் போது மென்மையாகக் கருத்துச் சொல்பவர். அவரும் கூட இவ்விஷயத்தில் மௌனியைக் கண்டித்து எழுதினார்.
நான் அப்போது மௌனியின் மாறுதல் கதை உட்பட (நன்றி: ஜெயகாந்தன் அக்கதை குறித்துக் குறிப்பிட்டதால்) சில கதைகளைப் படித்திருந்தேன். மௌனி எழுத்து என் தேநீர்க் கோப்பை அல்ல – அப்போதும் இப்போதும். இப்போது முழுதாய் அவர் தொகுப்பு என்னிடம் கிண்டிலில் உண்டு.
ஆனால் நான் அந்த விவாதத்தில் – மௌனி எழுதிய, வாழ்ந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லை, நம் நவீன காலத்தில் offensive ஆக மாறிவிட்டது என்பதால் அது மௌனிக்கு முன்னரே தெரிந்திருக்க வேண்டும் என நினைக்கக் கூடாது என்ற பொருளில் பதில் எழுதினேன். சேரி என்ற வார்த்தையை எடுத்துவிட்டு வேறு வார்த்தையைப் போட்டாலும் பட்டியலின குடியிருப்புகள் அப்போது ஊருக்கு வெளியே இருந்தன என்கிற சாதிய பாகுபாட்டைத்தானே அந்த வரி பதிவு செய்திருக்கிறது என்றும் சொன்ன நினைவு.
அதனால் மௌனியில் இருந்து அசோகமித்திரன் வரை இதுதான் இன்றளவும் என் நிலைப்பாடு. நம் குறுகிய நோக்கங்களை வைத்தோ நம் கொள்கைகளை வைத்தோ படைப்புகளைக் குறித்துத் தீர்ப்பு எழுதுவதைவிட – எழுத்தாளர் தனக்குத் தெரிந்த வாழ்க்கையை – அது அவர் சார்ந்த பிராமணச் சமூக வாழ்க்கையே ஆனாலும் – உண்மையாக அணுகியிருக்கிறாரா எனப் பார்ப்பதே முக்கியம்.
அசோகமித்திரனின் பல கதைகள் பிராமண வாழ்க்கையை, அதன் மனிதர்களைச் சொல்பவை என்ற குற்றச்சாட்டு உண்டு. அது எனக்கு நெருடலாக இல்லை. அந்த வாழ்க்கயை, மனிதர்களை அவர் எவ்வளவு உண்மையாக எழுதியிருக்கிறார் என்றே நான் பார்க்கிறேன், பார்ப்பேன்.
– அசோகமித்திரனின் அடுத்த கதைக்குள் போவதற்கு முன் இதைச் சொல்லத் தோன்றியது
– பி.கே.சிவகுமார்
ஜூலை 13, 2025
#அசோகமித்திரன்
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 7
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 8
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 9
- நாக சதுர்த்தி
- வா!
- ஓர் இரவு
- பார்வைப் பந்தம்
- காதல் கடிதம்