_ லதா ராமகிருஷ்ணன்
ஒரு கலையை அறிந்தவருக்கு அப்படி அறிந்திருத்தலே ஆனந்தமளிப்பதா? அல்லது, அவரது கலைத்திறனின் மூலம் அவருக்கு உரிய பெயரும் புகழும் கிடைப்பதுதான் ஆனந்தமளிப்பதா? அதுவும், ஒருவரது கலைத்திறன் அவரது வாழ்வாதார வழியாகவும் ஆகிவிட்டால், பின் அவரது கலைத்திறனின் மூலம் அவருக்குக் கிடைக்கும் வருமானம் தான் அவரது கலைத்திறனின் மூலம் அவருக்குக் கிடைக்கும் ஆனந்தத்தை நிர்ணயிப்பதாகிறதா?
பல வருடங்களுக்கு முன்பு படித்த கதை நினைவுக்கு வருகிறது. ஆங்கிலத்திலா, தமிழிலா – சட்டென்று ஞாபகப்படுத்திக்கொள்ள இயலவில்லை. ஆனந்தமாக படுவேக மாக ஓடித்திரியும் பையனை ஓட்டப்பந்தய வீரனாக்கவேண்டும் என்று பிறர் முயற்சியெடுத்து அதில் வெற்றியும் பெறுவார்கள். அந்தச் சிறுவன் பந்தயத்தில் வெற்றி பெறுவான். ஆனால் ஓடுவதில் அவன் அடையும் ஆனந்தத்தைப் பறிகொடுத்துவிடுவான்.
சென்ற வருடம் இதே மாத இறுதியில் மும்பை சென்றிருந்தபோது ரஞ்ஜனா ரமேஷ் என்ற முன் அறிமுகமில்லாத உறவினரின் ஓவியங்களைப் பார்த்த சமயம் மேற்கண்ட கேள்விகளெல்லாம் தவிர்க்கமுடியாமல் மனதில் எழுந்தன. ஆனால் ரஞ்ஜனா வெகு இயல்பாக, மிக எளிமையாக “எனக்குப் பிடிச்சிருக்கு – வரையறேன். எனக்குப் பிடிச்ச நட்பினருக்கு, உறவினர்களுக்கு என் ஓவியங்களைப் பரிசளிக் கிறேன். நான் வரைந்ததில் / வரைவதில் எனக்குப் பிடித்த ஓவியங்கள் சிலவற்றை வீட்டில் ஃப்ரேம் போட்டு மாட்டிவைக்கிறேன். அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. வேறென்ன வேண்டும் எனக்கு?” என்று கூறினார்.
தத்துவப் பாடத்தில் பட்டதாரி. திருமணத்திற்கு முன் சில வருடங்கள் வேலைக்குச் சென்றவர். திருமணத்திற்குப் பின் ‘ஹோம் மேக்கர்’. இன்று பெரியவர்களாகிவிட்ட இரண்டு பிள்ளைகளுக்குத் (ஒரு மகன், ஒரு மகள்) தாய். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வரைகிறார். DRAWING, PAINTING, FREEHAND DRAWING, CARTOONS, SCENERY, ABSTRACT, CANVAS PAINTING என்று பலவிதமான ஓவியங்களை வரைவதில் ஈடுபாடும் திறமையும் கொண்டவராகத் திகழ்கிறார் ரஞ்ஜனா.
ரஞ்ஜனா ரமேஷ் வரைந்த ஓவியங்கள் சில
ரஞ்ஜனாவுடன் ஒரு சிறிய நேர்காணல்:
“ஓவியப்பள்ளி எதிலாவது சேர்ந்து கற்றுக்கொண்டீர்களா?”
இல்லை. சுயமாகத்தான் கற்றுக்கொண்டேன். சிறுமியாக இருந்தபோதே ஓவியம் வரைவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், சரியான வழிகாட்டல் கிடைக்கவில்லை. ஓர் ஓவியப்பள்ளியை அணுகியபோது பத்தாவது வகுப்புக்குப் பிறகு வரச்சொன்னார்கள். பின், பன்னிரெண்டாவது வகுப்புக்குப் பிறகு வரச்சொன்னார்கள். மீண்டும் போனபோது 12வது வகுப்பில் கணிதத்தைப் பாடமாக எடுக்காததால் என்னை சேர்த்துக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
ஆனாலும், நானே ஓவியங்களைப் பார்த்து வரைந்து பழகிக்கொண்டேன். கற்பனை யாகவும் வரையக் கற்றுக்கொண்டேன். பள்ளியில் அறிவியல் பாட வரை படங்கள் தீட்ட என்னுடைய நட்பினரெல்லாம் அவர்களுடைய நோட்டுப்புத்தகங்களை என்னிடம் தந்துவிடுவார்கள்!
என்னவிதமான ஓவியங்களை வரைவீர்கள்?”
என் மனநிலைக்கேற்ப என்னவிதமான ஓவியத்தை வரையவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வேன். எனக்கு மிகவும் பிடித்தவை ஃப்ரீஹாண்ட், கார்ட்டூன், அப்ஸ்ட்ராக்ட் பெயிண்டிங்”
தொழில்முறை ஓவியராக அல்லது ஃப்ரீலான்ஸ் ஓவியராக செயல்பட்டிருக் கிறீர்களா?
வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு, உகந்த மனநிலை வாய்த்தபோது வரைந்துகொண்டிருந்ததால் அப்படி முழுநேர அல்லது பகுதிநேர தொழில்முறை ஓவியராகச் செயல்பட்டதில்லை. ஆனால், இன்று குழந்தைகள் வளர்ந்த மனிதர்களாகிவிட்ட நிலையில் ஃப்ரீலான்ஸ் ஓவியராகச் செயல்பட வாய்ப்பு கிடைத்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியும். அப்படியில்லையென்றாலும் நான் ஓவியம் வரைவது தொடர்ந்துகொண்டிருக்கும்!
ஓவியந்தீட்டும் ஆர்வத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் தொடரவும் என்ன தேவை?
ஓவியந்தீட்டலை, அதற்கான ஆர்வத்தைத் தொடரவும் தக்கவைத்துக்கொள்ளவும் ஆதரவும் ஊக்கமளிப்பும் தேவையாக இருக்கிறது. அதைவிட முக்கியம் ஓவியந்தீட்டுபவரிடம் அதற்கான தணியாக தாகம் இருக்க வேண்டும். பொறுமையும் இன்றியமையாதது
ரஞ்ஜனாவின் கைவண்ணத்தில் பிள்ளையார்!
ஓவியம் வரைவதில் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?
மனநிறைவு. அதைவிட வேறென்ன வேண்டும்? கடையில் விற்கும் பரிசுப்பொருட் களை வாங்கி நட்பினருக்கும் உறவினர்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுப்பதை விட நானே வரைந்த ஓவியங்களை அழகாக ஃப்ரேம் போட்டுத் தருவது அவர்களுக்குத் தனி முக்கியத்துவது அளிப்பதாக அமைகிறது. அவர்கள் என் ஓவிய ஆர்வத்திற்கு எப்போதுமே ஊக்கமளித்திருக்கிறார்கள். ஓவியம் தீட்டுவது என்னுடைய மன நிலையை மாற்றுகிறது; மேம்படுத்துகிறது. ஓவியந் தீட்டல் என்னுடைய நினைவாற்றலை மேம்படுத்துகிறது. தன்னம்பிக்கையை வளர்க்கிறது. என்னை சுதந்திரமானவளாக உணரவைக்கிறது. உலகை மாறுபட்டதொரு கண்ணாடியினூடாய் காணச்செய்கிறது. என்னுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் காட்சிரூபமாய் என்னால் வெளிப்படுத்த முடிகிறது. ஓவியந்தீட்டல் என் வாழ்வில் POSITIVITYஐ அதிகரிக்கச் செய்கிறது.. என்னுடைய ஓவியங்களை பொக்கிஷமாகக் பாவிக்கிறேன். அவை விலைமதிப்பற்றவை!
***
- வகைதொகை
- ”ஓவியந்தீட்டும் அனுபவம் விலைமதிப்பற்றது!” – ஓவியர் ரஞ்ஜனா ரமேஷுடன் ஒரு நேர்காணல்
- யுக அதிசயம் நீ
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 16
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 17
- மடிப்புகளில் விரவும் திட்டுக்கள்