பா.சத்தியமோகன்
எத்தனை சிறிய மெலிய இறகுகள்
எத்தனை மகா ஆவல் உனது
எத்தனை வனத்தின் புதர்களில்
அலைகிறாய் நுழைந்து நுழைந்து
எத்தனை எத்தனை வகையான முட்கள் வகை
குத்தப்பட்டு குத்தப்பட்டு
அல்லது
ஒதுங்கி ஒதுங்கிப் பறந்தே அறிந்திருக்கக் கூடும் நீ!
முட்கள் கீறினாலும் வலித்தாலும்
ஒரே ஒரு தரமேனும்
காற்றிடம் கூட புகார் செய்வதில்லை நீ
யுகம் முழுதும் பறக்கும் சக்தி கொண்டாய்
வாழி வாழி வாழி
பசி நோக்கவில்லை
கண் துஞ்சவில்லை
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளவில்லை
செவ்வி அருமையும் பாரவில்லை
அவமதிப்பும் கொள்ளவில்லை
கருமமே கண் ஆன –
உன் தேடலும் மகிழ்வும்
எந்த இலையிலும் உரசாமல்
எந்த முள்ளிலும் கிழியாமல்
அழகழகாய் பூப்பூவாய்
தேன் மகிழ்ச்சி தேடிப் பறந்தவாறே இருக்கிறாய்
வாழ்க நீ பூச்சியிலே பட்டாம்!
***