அசோகமித்திரன் சிறுகதைகள் – 16

This entry is part 4 of 6 in the series 24 ஆகஸ்ட் 2025

பி.கே. சிவகுமார்

இரு நண்பர்கள் கதையில் சைக்கிள் வருகிறது. அசோகமித்திரனின் கதைகளில் அடிக்கடி வருகிற பாத்திரம் சைக்கிள். அவர் வாழ்க்கையிலும் செகந்திராபாத் காலத்தில் இருந்து சைக்கிள் அங்கம் வகித்து வந்திருக்கிறது. செகந்திராபாத்தில் கல்லூரிக்குச் சைக்கிளில் சென்றதை விவரித்து அவர் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். அதேபோல் மோட்டார் சைக்கிள்கள் ஆண்மையின் அடையாளமாக இருந்து பின்னர் மிகவும் சிறிய உருவில் வர ஆரம்பித்துவிட்டப் போக்கை அடையாளம் கொண்டும் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். ஆனால் சைக்கிள் அளவுக்கு மோட்டார் சைக்கிள் அவருக்குப் பிடித்தமான ஊர்தி இல்லை. அசோகமித்திரன் என்றாலே மவுண்ட் ரோடு விகடன் அலுவலகத்துக்கோ வேறு வேலைக்கோ சைக்கிளை உருட்டியவாறு வந்த அசோகமித்திரன் என யாரோ சொல்லி என் மனதில் ஒரு சித்திரம் பதிந்திருக்கிறது.  

அசோகமித்திரன் கதைகளில் சைக்கிளைப் போல வருகிற – சைக்கிள் அளவுக்கு அதிகம் வராவிட்டாலும் வருகிற – இன்னொரு விஷயம் ஜாதகம். ஜாதகத்தை அப்பா மகளை பிரதியெடுக்கச் சொல்கிற, அப்பாவே பிரதியெடுக்கிற கதைகள் உண்டு. ஜெராக்ஸ் போன்ற வசதிகள் இல்லாத காலத்தில் கையாலே எழுதியே நகலெடுக்கிறார்கள்.

நண்பர்களுக்கிடையேயான பேச்சு நட்சத்திரங்களைப் பார்ப்பதுண்டா என்ற கேள்வியில் கவிதை மாதிரியும் கற்பனாவாதம் மாதிரியும் தொடங்கினாலும் அதை வைத்து உடனேயே ஜாதகத்துக்குத் திரும்பி விடுகிறது. 

ஆனாலும் நட்சத்திரங்களுக்குப் பெயர் தெரியாமல் இருப்பது நல்லதுதான் என்றும் பேசிக்கொள்கிறார்கள். பெயர் தெரிந்தால் பெயர்களை வைத்துக் கொண்டு அவை தெரிகிறதா எனத் தேடுவதிலேயே நேரம் போய்விடும் எனவும் காரணம் சொல்லப்படுகிறது. 

படிக்கிற நமக்கு இது கதைக்குள் ஏதோ குறியீடோ எனத் தோன்றுகிறது. இது நடப்பதற்கு முன் இரு கட்டிடங்களைப் பார்க்கிறார்கள், ஒரு ஹோட்டலில் காபி சாப்பிடுகிறார்கள். ஒரு புத்தகம் குறிப்பிடப்படுகிறது.

ஒரு சிறுகதையில் துப்பாக்கி வந்தால் கதை முடிவதற்குள் அது வெடிக்க வேண்டும் என செகாவ் சொன்னதாகக் கூற்று உண்டு. அசோகமித்திரன் கதையில் வெடிக்காத இத்தகைய துப்பாக்கிகள் நிறைய வரும். விவரங்கள் நீளும். அப்புறம் கதை திடீரென முடிந்துவிடும். நடேச முதலியார் பூங்காவில் அ.மி. அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தபோது, மழை வந்ததால் அவரின் மணல் குறுநாவலை மழையால் விரைவாக முடித்திருக்கிறார்.  அதைக் குறித்துக் கேட்டதற்கு அப்படி விரைவாக முடித்தாலும் பொருத்தமான முடிவாக இருந்தது எனப் பதில் சொல்லியுள்ளார்.

ஆக இப்படிக் கதையில் உபகதைகள் சொல்கிற விஷயத்தையும் அசோகமித்திரன் செய்கிறார். அந்த உபகதை ஒரு கட்டிடத்தைக் குறித்த கதையாகவோ, ஹோட்டலைக் குறித்த கதையாகவோ, இன்னொரு பாத்திரத்தைக் குறித்த கதையாகவோ இருக்கும். கதைக்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். 

அசோகமித்திரனுக்கு ஆரம்பத்திலேயே சிறுகதைகள் குறித்த வடிவபோதம் பிடிபடவில்லை. எழுதி எழுதி, வெட்டித் திருத்திதான் அதை அடைந்தார். அதனால் அவர் கதைகள் பலவும் அவற்றின் ஆரம்ப, மூல வடிவம் அல்ல.

அசோகமித்திரனே சொல்வதுபோல – “ஒரு சிறுகதைப் போட்டி அறிவிப்பைப் பார்த்தேன். முப்பது பக்கங்களில் ஒரு சிறு கதையை (!) எழுதி முடித்து அனுப்பினேன். அது ஓராண்டு காலம் கழித்துத் திரும்பியது. கதையின் நீளத்தைச் சற்று குறைத்து இன்னொரு பத்திரிகைக்கு அனுப்பினேன். சில மாதங்களில் அங்கிருந்தும் திரும்பி வந்துவிட்டது. இன்னொரு முறை படித்து விட்டு, இன்னும் சில பகுதிகளைச் சுருக்கி விட்டு இன்னொரு பத்திரிகைக்கு அனுப்பினேன். அங்கிருந்தும் சில நாள்களில் திரும்பி வந்துவிட்டது. மீண்டும் படித்து, இதென்ன இவ்வளவு வளவளாவென்று இருக்கிறதே என்று மீண்டும் சுருக்கி இன்னொரு பத்திரிகைக்கு அனுப்பினேன். (எனக்கு  வெகு சமீப காலம் வரை ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு வகைக் கதையைத்தான் பிரசுரிக்கும் என்ற ஞானம் தெளிவடையவில்லை. கதை நன்றாயிருந்தால் கட்டாயம் போடுவார்கள் என்று எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்பிய வண்ணம் இருப்பேன்).  இப்படியாக டஜன் பத்திரிகைகளிலிருந்தும் திரும்பி வந்து, கதையும் பத்து பக்கங்களில் அடங்கி விட்டது. இப்போது முன்னொரு முறை அனுப்பி வைத்த பத்திரிகைகளுக்கே மீண்டும் அனுப்ப ஆரம்பித்தேன். அப்படித்தான் முன்பு நிராகரித்த பத்திரிகையே, 1957 ஆம் ஆண்டில் அக்கதையைப் பிரசுரித்தது.”

இப்படி அவர் திரும்பத் திரும்ப எடிட் செய்து கதையின் வடிவத்தை அடைந்திருக்கிறார். பிரசுரத்துக்கு விரைவில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் நீக்காத பகுதிகள் இருக்கும். அவர் கதைகள் பலமுறை அவரே சொன்னதுபோல் பிரசுரமாகாமல் திரும்பி வந்ததுண்டு. ஒவ்வொருமுறையும் கையால் திருத்தி எழுதுகிற “physical labour” (அசோகமித்திரன் வார்த்தைகள் இவை) காரணத்தால் அவர் திருத்தி எழுதியதையும் நேரத்துக்கும் சுலபத்துக்கும் ஏற்பவே செய்தார் எனவும் எடுத்துக் கொள்ளலாம். 

அ.மி. கதையில் தேவையா எனத் தோன்றுகிற உபகதைகளும், வெடிக்காத துப்பாக்கிகளும், சில நேரங்களில் இருக்கட்டுமே என வருகிற புற உலகின் சித்தரிப்புகளும், ஆஹா சட்டென தாண்டிச் சொல்லாமல் சொல்லிவிட்டாரே என நம்மை ஆச்சரியப்படுத்தும் சுருக்கமான தெளிவும்கூட அசோகமித்திரனின் தேவைக்கேற்ப பிரசுரத்துக்காகத் திருத்தி எழுதியவையால் வந்தவை எனவும் கொள்ளமுடியும்.

பல வருடங்கள் எடுக்கப்பட்ட அவ்வையார் திரைப்படத்தை, அதன் அயிரக்கணக்கான அடிகள் கொண்ட பிலிம்சுருளை, பார்த்துப் பார்த்துத் தோன்றிய இடத்தில் வெட்டி, அவ்வையார் என்கிற வெற்றிப்படத்தை அவர் பாஸ் வாசன் ஜெமினி ஸ்டுடியோவில் உருவாக்கியதை அ.மி. வியப்புடன் பார்த்திருக்கிறார். கிராப்ட் ஆர்ட் ஆன விந்தை என அதை விவரிக்கிறார். ஆனால் – ஜெமினி ஸ்டுடியோவில் அவர் கழித்த 14 ஆண்டுகள் அவர் எழுத்தாளராக இந்த மாதிரி உதவின என எதையும் அ.மி. நேரடியாகச் சொல்லவில்லை. அந்த அனுபவத்தை வைத்துக் கதைகள் எழுதியிருக்கிறார் என்பது வேறு விஷயம். அவர் எழுத்துக்கு அந்த அனுபவம் உதவியதாகச் சொல்லவில்லை.  

அதனால் சினிமாவில் இருந்து அ.மி. எழுத்துக்கு எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. அசோகமித்திரனுக்கு இயல்பாகவே நாடகத்தின் மீது ஆர்வம் இருந்திருக்கிறது. அவர் 1951-ல் ரேடியோவுக்காக எழுதிப் பரிசு வாங்கியதே – அன்பின் பரிசு – என்கிற நாடகம்தான். ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றியபோது இந்தியா வந்த வெளிநாட்டு நாடக நடிகர்களின் நாடகத்தைப் பார்த்துப் பாராட்டியிருக்கிறார். தமிழில் நாடகங்கள் பார்த்திருக்கிறார். ஆனால் தமிழில் நவீன அல்லது இலக்கியவகை நாடகமோ அல்லது சூழலோ இல்லை என அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால் அவர் கதைகள் எழுதத் தொடங்கினார். அவரின் கதைகள் பலவும் காட்சிகளின் தொகுப்பு என்றேன், சினிமாவாக எடுக்கக் கூடியவை என்றேன் – ஏனெனில் அவர் நாடகங்களைக் கதைகளாக எழுதினார்  எனவும் சொல்லலாம்.  2000-ல் ஜெயகாந்தன் அமெரிக்கா வந்திருந்தபோது, ஜெயகாந்தனுடன் வந்திருந்த அவர் துணைவியார் அசோகமித்திரனுடன் இணைந்து அவர் செய்த நாடக முயற்சிகளைக் குறித்துச் சொன்னார். ஆக நாடகங்கள் மேல் அ.மி.க்க்கு இருந்த ஆர்வமும் அவர் சிறுகதைகளின் சித்தரிப்பில் பெரிதும் உதவின. 

அ.மி., சார்லஸ் டிக்கன்சனும் கல்கியுமே தன்னை எழுதத் தூண்டியவர்கள் என்கிறார். இருவருமே எளிமையாக எழுதியவர்கள். ஆனால் மினிமலிஸ்ட்கள் அல்லர். அசோகமித்திரனும் அவர்களைப் போலவே தொடங்கி, பிரசுரமாக வேண்டும் என எடிட்டிங்கில் இறங்கி, பின் அதன் நெளிவு சுளிவுகள் தெரிந்து வளர்ந்து இருக்கிறார். பின்னர் மினிமலிஸ்டாகவும் தேர்ந்தார்.

இங்கும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். முதலில் அ.மி. சார்லஸ் டிக்கன்ஸைத்தான் சொன்னார். அப்புறம் சில வருடங்கள் குறித்து அதில் கல்கியைச் சேர்த்தார். பின்னான வருடங்களில் கல்லூரி நாட்களிலேயே தான் டால்ஸ்டாயைப் படித்ததாகச் சொல்கிறார். அதற்கப்புறம் டால்ஸ்டாயோடு தனக்கு டாஸ்டவோவ்ஸ்கியும் பிடிக்கும் என்கிறார். இன்னோர் இடத்தில் தாமஸ் ஹார்டி, டி எச் லாரன்ஸ் பாதிப்பும் உண்டு என்கிறார். 

இதையெல்லாம் பார்க்கும்போது அசோகமித்திரன் அவரைக் குறித்துச் சொல்லிக் கொண்ட பின்வரும் வாசகங்கள் உண்மைதான் – “அபிப்பிராயங்கள் என்பவையைச் சொல்லப்படும் அந்த நிமிடத்துக்கு மட்டுமே உண்மை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். நான் சொன்னதைவிடச் சொல்லப்படாததும் நிறைய இருக்க முடியும். பிற்பாடு யோசித்துப் பார்க்கும் போது எனக்கு இன்னும் சொல்லியிருக்கலாம் என்றும் தோன்றும். அதனால் இங்கு சொல்பவைகளை முடிந்த முழு உண்மைகள் என்று கொள்ள வேண்டியதில்லை.”

அசோகமித்திரன் அவர் எழுத்துகள் குறித்துப் பேசியிருக்கும் இன்னும் சிலவற்றைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். இப்போது இரு நண்பர்கள் கதைக்குத் திரும்புவோம். 

இந்த இரு நண்பர்கள் கதையில் – நட்சத்திரத்தைப் பார்ப்பதுபோல் – ஆகாயத்தைப் பார்ப்பது குறித்தும் பேசிக் கொள்கிறார்கள். 

திருமணம் செய்து கொண்டால் வரப்போகிறவள் சீக்கிரம் இறந்துவிடுவாள் என ஜாதகம் சொன்னதால் திருமணம் செய்துகொள்ளவில்லை என நண்பன் சொல்கிறான். பின்னர் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்பதுபோல் பெண்களைக் குறித்து, உலகைக் குறித்துக் கருத்துகள் உதிர்க்கிறான். 

கதைசொல்லிக்கு நண்பனைக் குறித்துக் கவலையாக இருக்கிறது. ஆறுதலாகக் கொஞ்சம் சொல்கிறான்.

பின்னர் குடும்பம், குழந்தை, சகோதரிகள் எனச் சரியாக வருமானம் இல்லாத கதைசொல்லிக்கு நண்பன் 200 ரூபாய் கொடுக்கிறான். உன்னை எப்படி பார்த்துக் கொள்கிறாய் என அக்கறையாகக் கேட்டு. கதை சொல்லியின் பிரச்னைகள் சீக்கிரம் சரியாகிவிடும் என்கிறான்.

பின்னர் கதைசொல்லி அதிர்ஷ்டக்கார எண் என நகைச்சுவையாய்ச் சொல்கிற 13 ஆம் எண் பேருந்தில் நண்பன் ஏறிச் செல்கிறான். பஸ்ஸின் புகையை நண்பன் அதுவரை சொன்ன கருத்துகளுக்குக் குறியீடாகச் சொல்லி, பஸ்ஸை கதைசொல்லியைச் சுமக்கிற வாகனமாக்கிக் கதையை முடிக்கிறார்.

தனக்குத் திருமணம் ஆகாவிட்டாலும், பெண்கள்-வாழ்க்கை குறித்து எதிர்மறை கருத்து இருந்தாலும், குடும்ப வாழ்க்கையில் உழல்கிற கதைசொல்லி மீது பரிவு காட்டி உதவுகிற நண்பனின் செய்கையே இந்தக் கதையில் வெளிச்சம்.

அசோகமித்திரன் ஒருமுறை எழுதினார் – “மனித மனநிலை ஓயாமல் ஊசலாடிக்கொண்டிருப்பது என்பது என் அனுபவம். அதனால் இரு அடுத்தடுத்து வரும் வாக்கியங்கள் கூட அந்த ஊசலாட்டத்தைப் பிரதிபலித்தால்தான் எழுத்து உண்மையானது என்று நினைப்பேன்.”  இப்படி அசோகமித்திரனின் எத்தனை வாக்கியங்கள் அமைந்துள்ளன எனத் தெரியாது. ஆனால் பாத்திரங்கள் அத்தகைய ஊசலாட்டம் உள்ளவர்களாக அ.மி. கதைகளில் அமைவதுண்டு. இந்தக் கதையில் நண்பன் பாத்திரம் அப்படித்தான். திருமண உறவு குறித்து அவனுக்கு ஊசலாட்டம் இருக்கிறது. ஜாதகத்தால் அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை. பெண்களை, அந்த வாழ்க்கையைக் குறித்து எதிர்மறையாகப் பேசுகிறான். ஆனால் திருமணம் செய்து கொண்ட நண்பனுக்குப் பணம் கொடுக்கிறான். 

இந்த எட்டேகால் பக்கக் கதை 1960-ல் பிரசுரமாகியுள்ளது. 

இத்தோடு 14 கதைகள் பார்த்திருக்கிறோம். கூட இந்த அவதானிப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அசோகமித்திரன் கதைகளில் பீடிகைகள் நிறைய இல்லை. நேரடியாகக் காட்சிக்கோ பாத்திரங்களுக்கோ சில வாக்கியங்களில் வருகிறார்.

இந்த 14 கதைகளில் நினைவில் நிற்கிற மாதிரி எந்த உவமையையும் அசோகமித்திரன் சொல்லவில்லை. உவமைகள் எதையும் படித்தேனா என்றே நினைவில்லை. சில வந்திருக்கலாம். ஆனால் அ.மி.க்கு அத்தகைய ரொமாண்டிசைசேனனில் பெரிய ஆர்வம் இல்லை. 

இதுவரையான கதைகளில் அசோகமித்திரன் அதிகம் கொண்டாடப்படக் காரணமாகச் சொல்லப்படும் மெல்லிய நகைச்சுவையோ கிண்டலோ அங்கதமோ பெரிதாகத் தென்படவில்லை. அவர் எழுத்தில் இவை பின்னரே வந்திருக்கக் கூடும். எப்போது வந்ததென இக்கதைகளைத் தொடர்ந்து வாசிக்கும்போது பிடிக்க முடிகிறதா எனப் பார்ப்போம்.

– பி.கே. சிவகுமார்

– அசோகமித்திரன் சிறுகதைகள் – தொகுப்பு 1 – கவிதா பப்ளிகேஷன்

#அசோகமித்திரன்

Series Navigationயுக அதிசயம் நீஅசோகமித்திரன் சிறுகதைகள் – 17

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *