Posted in

மௌனியும் நானும்

This entry is part 6 of 11 in the series 31 ஆகஸ்ட் 2025

  • பி.கே. சிவகுமார்

(ஆகஸ்ட் 20, 2025 புதன் அன்று கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்திய மௌனியின் மாறுதல் சிறுகதை குறித்த கலந்துரையாடலுக்கு முன் எழுதியது.)

மௌனி என்கிற பெயர் என் பள்ளிக் காலத்திலேயே எனக்கு அறிமுகமாகி இருந்த போதிலும், மௌனியை நான் படிக்க முயன்றபோது, அவருள் நுழைய முடியாமல் திரும்பி விட்டேன். அப்போதெல்லாம் – புதுமைப்பித்தன் மௌனியைச் சிறுகதையின் திருமூலர் என்று சொன்னது மௌனி மீது பலருக்கும் கவர்ச்சியை உண்டாக்கி இருந்தது.

1986-ல் ஜிப்மர் நுழைவுத் தேர்வு எழுத அப்பாவும், அப்பாவின் 9ம் வகுப்பிலிருந்து நெருங்கிய நண்பரும், ஜேகே சபை நண்பரும், அப்பாவுக்கு அந்தக் காலத்தில் கேட்டபோது பலநேரங்களில் கடன் கொடுத்து உதவியவரும், அப்பா திருப்பித் தரும்வரை கேட்காமல் இருந்தவருமான தண்டபாணி மாமாவும், அவரின் என் வயதொத்த மகளும் பாண்டிச்சேரி சென்றோம். அங்கிருந்து எனத்தான் நினைக்கிறேன். அப்படியே அப்பாவின் மீது எப்போதும் அன்பைப் பொழிந்த எழுத்தாளர் வே. சபாநாயகம் மாமா அவர்கள் விருத்தாசலம் புற நகர்ப் பகுதியில் கட்டியிருந்த (பெரியார் நகர்?) புதிய வீட்டுக்குச் சென்று சிலநாட்கள் அவர் குடும்பத்தின் உபசரிப்பில் தங்கியிருந்தோம். மாமா, மாமி, அவர்கள் மகன் அகிலநாயகம் அண்ணன் ஆகியோர் சிறப்பாக உபசரித்தார்கள். அவர்கள் மகள் மங்களநாயகி அக்கா அப்போது சென்னையில் படித்துக் கொண்டிருந்தார்கள். அந்த முறை சபாநாயகம் மாமா அவர்கள், எங்களை நெய்வேலி, சிதம்பரம் உள்ளிட்ட அருகில் இருந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினார். சிதம்பரம் கோவிலைப் பார்த்தபின் மௌனியின் வீட்டை அழைத்துச் சென்று காட்டினார். அப்போது மௌனி இறந்து விட்டிருந்தார். அந்த வீட்டில் மௌனியைத் தான் சந்தித்து இருப்பதாகச் சபாநாயகம் மாமா சொன்னார். சுவர்கள் இடுப்பளவு வரை நின்று மீதியில் கிரில் கம்பிகள் போட்டிருந்த பெரிய சன்னல் வெளியில் இரு திண்ணைகள் தெரிந்தன. அப்போது மௌனி இறந்து விட்டு இருந்ததால் வீட்டுக் கதவும் சாத்தப்பட்டு இருந்ததால், வெளியே கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு வந்துவிட்டோம். அப்போது சபாநாயகம் மாமா, இந்த வீட்டில் இருந்தபடிதான் மௌனி தெருவையும், எதிர்வீடுகளையும் பார்த்தபடி எழுதியிருக்கக் கூடும் என்றார்.

ஒருமுறை தான் எழுதுவதற்கு முன் மௌனியின் மாறுதல் என்கிற கதையைப் படிப்பதாக ஜெயகாந்தன் சொன்னார் என்பது பிரசுரமாகி, ஜெயகாந்தனுக்குப் படைப்பூக்கம் அளிப்பவர் மௌனி என்கிற விதமாகக் கூட மௌனி கட்டமைக்கப்பட்டார்.

2000ல் ஜெயகாந்தன் அமெரிக்கா வந்தபோது, கோபால் ராஜாராம் திண்ணை இணைய இதழுக்காக அவரை ஓர் அருமையான நேர்காணல் செய்தார். அதில் ராஜாராமோடு அவர் இளைய சகோதரர் துகாராமும் நானும் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டோம். ஆனால் ஆர்வமிகுதியில் நாங்களும் சில கேள்விகள் கேட்டோம். அந்த நேர்காணல் இன்னமும் திண்ணை.காம் இணைய இதழில் உள்ளது. நான் கேட்ட கேள்வியைக் கீழே கொடுத்திருக்கிறேன்:

திண்ணை (சிவக்குமார்): மெளனியின் “மாறுதல்” மிகப் பிடித்த கதை என்று ஒரு முறை நீங்கள் சொன்னீர்கள்.

ஜெயகாந்தன் : அப்போதிருந்த மன நிலையைச் சொன்னேன். கொட்டாவி விடும்போது என்னைப் படம் எடுத்து விட்டு எப்போதும் கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பேன் என்று நினைத்தால் தவறு.மெளனியின் தமிழ் நடை பலருக்கு ஆயாசம் தரும் அதனாலேயே அது எனக்குப் பிடிக்கும். அது ஆங்கில பாதிப்புக்கு ஆட்பட்ட ஒரு புதிய உரை நடை. அதை இன்னும் மேற்கொண்டு வளர்க்கலாம்.

ஆனாலும் இதற்கப்புறமும் கூட மௌனியை முனைப்பெடுத்துப் படிக்கும் ஆர்வமும், மௌனியின் இலக்கிய இடம் குறித்த திட்டவட்டமான கருத்துகளோ என்னிடம் உருவாகவில்லை.

2000களின் தொடக்கத்தில் ஜெயமோகன் தமிழில் முக்கியமான எழுத்தாளர்களைத் தொகுத்து எழுதிய விமர்சனங்கள் வந்தன. அவற்றில் பலவற்றை அவர் திண்ணை.காம் இணைய இதழில் எழுதினார். அவை பின்னர் பல நூல்களாகத் தமிழினி பதிப்பகம் மூலம் வெளிவந்தன. அந்நூல்களை ஜெயமோகனின் சிறந்த படைப்புகளில் வைக்கலாம். அவ்வரிசையில் நான் ஜெயமோகனின் மௌனி குறித்த கட்டுரையைப் படித்தேன். அக்கட்டுரை இப்போது ஜெயமோகனின் தளத்திலும் இருக்கிறது.

ஜெயகாந்தனின் திண்ணை.காம் பேட்டி, ஜெயமோகனின் மௌனி குறித்த கட்டுரை ஆகியவற்றுக்கான சுட்டியை நான் இங்கே தரவில்லை. கூகுளில் தேடத் தெரிந்தவர்கள் சுலபமாக அவற்றைக் கண்டடையலாம். இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் இத்தகைய சிறு முயற்சிகளாவது மேற்கொள்ள வேண்டும்.

ஜெயமோகனின் அந்தக் கட்டுரை எனக்கு மௌனியைக் குறித்த ஒரு பார்வையை வழங்கியது. அக்கட்டுரையின் ஆரம்பத்தில் மௌனியைக் குறித்து அதுவரை யாரெல்லாம் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் என ஜெயமோகன் தொகுத்தும் சொல்லியிருப்பார். அதுவும் முக்கியமானது. அப்படி ஜெயமோகன் சொல்லியதில் இருந்து, எழுத்தாளர் திலீப்குமார் எழுதிய மௌனியுடன் கொஞ்ச தூரம் புத்தகமும் அறிமுகமானது.

அப்போதெல்லாம் இந்தியாவில் இருந்து நான் உட்படப் பலருக்கும் இலக்கிய புத்தகங்களை அவர் வைத்திருந்த புத்தகக் கடை மூலம் கப்பலில் அனுப்பி உதவுவார் எழுத்தாளர் திலீப்குமார். கூடவே என்னென்ன நல்ல புத்தகங்கள் வாங்கலாம் என்கிற பட்டியலையும் வருடாவருடம் அனுப்பி வைப்பார். அவர் அப்போது அமெரிக்கக் காங்கிரசின் நூலகத்துக்குக் கூட இப்படிப் புத்தகங்களை அனுப்புகிறவராக இருந்தார். நண்பர்கள் வழி இதுகுறித்து 2003ல் அறிந்து பின்னர் நாங்கள் எனி இந்தியன் இணைய புத்தகக் கடை ஆரம்பிக்கும்வரை அவரிடம் பலமுறை புத்தகங்கள் வாங்கியுள்ளேன். பின்னர் 2006/2007 போது, என் பணம் அவரிடம் ஏறக்குறைய பத்தாயிரம் ரூபாய் நான் புத்தகம் வாங்காமல் இருப்பதாகச் சொல்லி, அந்தப் பணத்தைக் குறித்து நான் மறந்தே விட்டிருந்தேன், எனக்குத் திருப்பித் தந்தார் திலீப்குமார். அது அவரின் தொழில்நேர்மைக்கு ஒரு சான்று.

ஜனவரி 2004-ல் திலீப்குமார் அப்படி அனுப்பிவைத்த அவரின் புத்தகம், ஜெயமோகனின் மௌனி குறித்த புத்தகம் ஆகியவற்றின் அட்டையையே இங்கே பார்க்கிறீர்கள்.

திலீப்குமார், ஜெயமோகன் இருவரின் மௌனி குறித்த பார்வைகளிலும் நான் உடன்படாத இடங்கள் உண்டு. ஆனால் இரண்டுமே எனக்கு மௌனி எழுத்தைப் புரிந்து கொள்ள உதவின. ஜெயமோகன் கட்டுரை வழியாகவே நான் திலீப்குமாரின் கட்டுரையைக் கண்டடைந்தேன்.

ஏற்கனவே இறந்துபோனவர்கள், ஜெயமோகனுடன் அதிகம் பழகாதவர்கள், ஜெயமோகனின் சமகாலம் அல்லாதவர்கள் ஆகியோர் குறித்து ஜெயமோகன் எழுதுவது அவர் இலக்கிய வாசிப்பை ஒட்டி, அவர் நம்பிக்கைகளை ஒட்டி நேர்மையாக எழுதப்பட்டதாகவே இருக்கும். அவற்றில் ஜெயமோகன் எந்த அரசியலும் பொதுவாகச் செய்வதில்லை. மௌனி குறித்த ஜெயமோகனின் கட்டுரை அப்படி எழுதப்பட்ட நல்ல கட்டுரை என்பதே என் அபிப்ராயம்.

ஜெயமோகனை நான் இன்றளவும் என் ஆசிரியர்களில் ஒருவராகச் சொல்வதற்கு அவர் எழுதிய இத்தகைய பல கட்டுரைகள் காரணம். அவரின் புனைவைவிட அவரின் அபுனைவுகள் எனக்குக் கொடுத்த புரிதல்கள் பல.
திலீப் குமாரின் கட்டுரையின் சிலபகுதிகளும் இணையத்தில் இருக்கின்றன. இது மௌனிக்கு ஒரு நல்ல அறிமுகம் தரும் புத்தகம். எனக்குப் பிடித்ததும்.

பின்னாட்களில் காலச்சுவடு வெளியிட்ட மௌனியின் மொத்தத் தொகுப்பையும் கிண்டில் மின்னூலாக வாங்கி மௌனியின் பலகதைகளை வாசித்ததுண்டு. இப்போது அவர் கதைகள் எத்தகையவை, என்ன சொல்கின்றன எனப் புரிந்தாலும் அன்றைக்குப் போலவே, இன்றைக்கும் மௌனி is not my cup pf tea. இது மௌனியின் குறை அல்ல. என் ரசனை வேறுவகையானது. அவ்வளவுதான்.

வரும் வாரத்தில் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் மௌனியின் மாறுதல் கதை குறித்த உரையாடலில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் மட்டுமல்ல எல்லாருமே நான் மேற்சொன்ன திலீப்குமார், ஜெயமோகனின் மௌனி குறித்த பார்வைகளை வாசிப்பது (ஏற்கனவே வாசிக்காமல் இருந்தால்) நல்லதோர் அனுபவத்தைக் கொடுக்கும்.

Series Navigationதகவல்: காற்றுவெளிஇதழின் சிறப்பிதழ்யோகி (கவிதை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *