அசோகமித்திரன் சிறுகதைகள் – 18

This entry is part 9 of 11 in the series 31 ஆகஸ்ட் 2025

  • பி.கே. சிவகுமார்

அசோகமித்திரனின் 16வது கதையான விமோசனம் – அதுவரை பிரசுரமான அவர் கதைகளில் அளவில் பெரியது. 17 பக்கங்கள். பிரசுரமான ஆண்டு 1961.

இந்தக் கதையில் முக்கியமானவர்கள் – சரஸ்வதியும் அவள் கணவனும் அவர்களுடைய கைக்குழந்தையும்தான். கடைசியில் கணவனிடமிருந்து விமோசனம் மனைவிக்கா, மனைவியிடம் இருந்து கணவனுக்கா என்ற கேள்வி நமக்கு எழுகிறது. பாத்திர வார்ப்புகளைப் படித்த நாம், மனைவிக்கு அதனால் கஷ்டம் என்றாலும் விமோசனம் சரஸ்வதிக்குத்தான் என நினைத்துக் கொள்கிறோம்.

ஆனால் இந்தக் கதையில் பிறரும் வருகிறார்கள். அவர்களில் எத்தனை பேர் கதைக்குத் தேவை, அவர்களால் கதையில் என்ன முக்கிய திருப்பம் நிகழ்கிறது என்றெல்லாம் கேட்டுக் கொண்டால் பெரிதாக ஒன்றுமில்லை. உதாரணமாக, இந்தக் கதையில் வருகிற மகான் எதற்கு வருகிறார் என்றே தெரியவில்லை.

ஒரு சிறுகதையைப் படிக்கிறபோது அதில் கதை நிகழ்கிற தருணங்களையும் கதையின் திருப்பம் அல்லது முடிச்சு அவிழும் கணங்களையும் ஒரு தேர்ந்த வாசகர் கண்டு கொள்வார். கதைக்குள் இருந்து கதையை வெளியேற்றுவதுதான் முதல் வேலை என்று சொன்ன சா.கந்தசாமி வகைக் கதைகளுக்கு இது பொருந்தாதே என்ற கேள்வி எழலாம். அவற்றிலும் கதையின் முக்கியமான பகுதிகளை, விவரிப்புகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும். படிமமும் குறியீடுகளும் வருகிற கதையில் அவற்றை வாசிப்பின் பழக்கத்தால் கண்டுபிடித்துவிட முடியலாம். இப்படி ஒரு சிறுகதை நமக்குள் சில highlights ஐப் படித்து முடித்த உடனே கொடுக்கும்.

இந்தக் கதையை அதன்படி பார்க்கும்போது நிறைய வெடிக்காத துப்பாக்கிகள் இக்கதையில் உள்ளன. கதைக்குள் கதை வைத்திருக்கிறார் அ.மி. என்று சந்தேகத்தின் பலனை அவருக்குக் கொடுக்க வேண்டுமெனில் அத்தகைய உள்கதைகள் கதையை நகர்த்த, கதையில் உதவ, வேண்டும். அப்படியும் இதில் இல்லை.

இதை வைத்துப் பார்க்கும்போது – இந்தப் பதினேழு பக்கக் கதையை எட்டிலிருந்து ஒன்பது பக்கக் கதையாக ஆக்கியிருந்தால் இன்னும் crisp ஆக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது.

மனைவியின் மீது எரிந்து விழும் மனைவியைப் பிடிக்காத கணவன். குழந்தை அழுதாலும் அவளை அடிக்கிற கணவன். வீட்டு வேலைகளில் உதவாத கணவன். அவன் வாங்குகிற சம்பளம் குடும்பம் நடத்தவே போதுமானதாக இல்லை. ஓரிரவு அவன் அவளை அடிக்கும்போது, உம் என்று எதிர்த்து நின்று ஜாக்கிரதை என்கிறாள். வெலவெலத்துப் போன கணவன் பின்வாங்கி விடுகிறான். இது கதையின் முக்கிய தருணம். அதற்கப்புறம் அவன் அவள் மன்னிப்புக் கேட்டாலும் சரியாகப் பேசுவதில்லை. வீட்டுச் செலவுக்குப் பணம் தருவதில்லை. குழந்தையைப் பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு சரஸ்வதிதான் கிளம்பிப் போய்விடுகிறாளோ என் நினைக்கிறோம். இப்படி எதிர்பார்ப்பு கிளப்புகிற இடம் கதையின் இன்னொரு தருணம். சிலநாட்களில் அவன் வீட்டுக்கு அதற்கப்புறம் வரவில்லை எனக் கதை முடிகிறது. திகைக்க வைக்கிற முடிவுதான். எதிர்த்து நின்ற மனைவியைத் தண்டிக்க கணவன் எடுத்த முடிவா?

இதில் ஓடிவந்து பஸ் ஏறமுடியாமல் சரஸ்வதி காலில் அடிபடுவது, கணவனின் நடத்தை, மகானைப் பார்க்க அவளை அவன் கூட்டிப் போனது, ஏன் கூட்டிப் போனான் என்று புரியவில்லை, குழந்தையின் பால்புட்டியை போன இடத்தில் மறந்து வைத்தது, இரவில் குழந்தை அழுதபோது தூக்கம் கெட்ட கணவன் அவளைத் தலைமுடியைப் பிடித்து அடித்தது, அவள் எதிர்த்து நின்றது, அதன் பின் அவன் நடத்தையில் மாற்றம், வாடகை வீட்டில் வாழ்கையில் பணப்பற்றாக்குறை, வீட்டு முதலாளி கெடுபிடி, அக்கம்பக்கம் பொருள் கடன் வாங்கிச் சமையல், பால்புட்டியை வாங்கும் சாக்கில் அவள் மகானை மீண்டும் பார்க்கப் போவது, மகானிடம் கேள்வி கேட்க ஆசைப்பட்டுக் கேட்கமுடியாமல் திரும்புவது என இந்தக் கதை பல பக்கமும் அலைகிறது.

சரஸ்வதி சக குடித்தனக்காரர்கள் வேடிக்கை பார்க்க அவன் கால்களைப் பிடித்துக் கதறி அழுது – அவன் அடித்தபோது எதிர்த்து நின்றதற்கு மன்னிப்புக் கேட்கிறாள். அவன் பிரமித்தாலும் கண்டும் காணாதவன் போல் இருக்கிறான். இது கதையின் இன்னொரு தருணம்.

அபலைகளின், ஏழைகளின் கவலைகளை அறிந்து கேட்காமலே வழி சொல்கிற மகான்கள் இல்லை என்கிறாரா அசோகமித்திரன். இப்படியெல்லாம் இட்டுக்கட்டி முட்டுக் கொடுத்துதான் நாம் திருப்திபட்டுக் கொள்ள வேண்டும்.
இதேபோல் கதையில் பாம்பை நினைத்துச் சரஸ்வதி பயந்து மனதுக்குள் மந்திரம் சொல்லிக் கொள்கிறாள். ஆனால் பாம்பு வருவதற்குள் அசோகமித்திரன் கதையை முடித்துவிட்டார்.
கதவைத் திறக்க சாவி வைத்த இடம் தெரியாமல் சரஸ்வதி தேடுவதே ஒரு பக்கம் வருகிறது.

கதை நிகழும் தருணங்களை விடக் கதைக்குத் தேவையில்லாத அல்லது சுருக்கமாகச் சொல்லியிருக்க வேண்டியவை நிறைய இருக்கிறதோ என எண்ண வைக்கும் கதை.

தூங்கும்போது மல்லாந்து படுத்தோ குப்புறப்படுத்தோ கைகால்களை விரித்தபடி தூங்குகிற பாத்திரங்களை அசோகமித்திரன் கதையில் பார்க்கலாம். மணல் குறுநாவலில் மல்லாந்து படுத்தபடி கைகால்களை விரித்தபடி தூங்குகிற வனஜா. இந்தச் சிறுகதையில் குப்புறப்படுத்தபடி கைகால்களை விரித்தபடி – பறந்துபோவதுபோல் தூங்குகிற கணவன்.

அசோகமித்திரனின் மிகச் சாதாரணமான கதை இது. பிரசுரிக்க மறுத்து இன்னும் இரு பத்திரிகைகள் திருப்பி அனுப்பி இருந்தால் அசோகமித்திரன் இக்கதையை வெட்டித் திருத்தி இன்னும் நல்ல வடிவத்துக்குக் கொண்டு வந்திருப்பார் எனத் தோன்றுகிறது.

  • பி.கே. சிவகுமார்
  • அசோகமித்திரன் சிறுகதைகள் – முதல் தொகுப்பு – கவிதா பப்ளிகேஷன்
Series Navigationபிரதாப சந்திர விலாசம் நூல் குறித்த திண்ணை இதழில் வெளியான கட்டுரையை மையமிட்ட சில கருத்துகளுக்காகஎங்கிருக்கிறேன்?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *