_ லதா ராமகிருஷ்ணன்
பெண் குழந்தைகள் தங்களை ’ இரண்டாந்தரப் பிரஜை கள்’ என்று பாவித்துக்கொள்ளாமல் தன்மானத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர இந்த சமூகம் அனுமதிக்கவேண்டும்.

ஒருபுறம் பெண்ணைப் பண்டமாக வினியோகித்துக் கொண்டே மறுபுறம் பெண்ணுரிமைக்காகப் பேசும் ( அவள் உடல் பண்டமாக காட்சிப்படுத்தப்படுவதைக் கூட உணராதபடிக்கு அதையும் அவளுடைய உரிமை, விடுதலை என்பதாய் மூளைச்சலவை செய்வதையே தங்கள் முழுமூச்சான ‘சமூக சேவையாக’ச் செய்துவரும் ஊடகங்கள் தங்கள் இரட்டைவேடத்தைப் பற்றி இன்றேனும் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பெண்ணியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் பிரபலங்கள் சிலர் செய்துகொள்ளும் அதீத ஒப்பனைகளைப் பார்க்கும்போது ஏன் இப்படி சொல்லொன்றும் செயலொன்றுமாக இருக்கிறார்கள் என்று வேதனை யாயிருக்கிறது. எரிச்சலாயிருக்கிறது.
அரசியல்வாதிகள், நடிகர்கள் போன்ற பிரபலங்கள், பிரமுகர்கள் பொதுவெளிகளில், மேடைகளில் சிறுமிகளை, மாணவிகளைத் தொட்டுத் தழுவி உச்சிமோந்து பாசத்தை வெளிப்படுத்துவதையெல்லாம் தவிர்ப்பது நல்லது. இன்று பெண்குழந்தைகள், சிறுமிகள், மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், அத்துமீறல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் பிரமுகர்கள் இதுபோல் உண்மையான பாசத்தோடு நடந்துகொண்டாலும் உண்மையான பாசம் இப்படித்தான் வெளிப்படும் என்று நம்பி பெண் குழந்தைகள் கயவர் களிடம் ஏமாற வாய்ப்பிருக்கிறது.
(பிரமுகர்கள் ஆண் குழந்தைகளை இப்படி ஆரத்தழுவி உச்சிமோந்து அன்பை வெளிப்படுத்துவது அரிதாகவே நிகழ்கிறது என்ற எண்ணமும் தவிர்க்கமுடியாமல் எழுகிறது)
18 வயது வரை ஒருவர் சட்டத்தின் முன் குழந்தையே. எனவே 18 வயதுக்குட்பட்ட ஒரு பெண் விரும்பி ஒரு இளைஞனை மணம் புரிந்துகொண்டாலும், இடலுறவு கொண்டாலும் ‘பெண் கடத்தலுக்காக அந்த இளைஞன் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப் படுவான். அதேபோல், 18 வயதுக்கு முன் ஒரு பெண் ணுக்கு திருமணம் செய்வதும் சட்டப்படி குற்றம். இத்தகைய சட்டங்களெல்லாம் வளரிளம்பருவத்தின ருக்குத் தெரிந்திருக்கவேண்டியது அவசியம். அதற்கு ஆவன செய்யவேண்டும். அடிப்படைச் சட்டங்கள் குறித்த அறிவு மாணாக்கர்களுக்கு மட்டுமல்லாமல் பொது மக்களுக்கும் கிடைக்க சிறு சிறு நூல்கள் பிரசுரிக்கப் படலாம். ஊடகங்களில் சில மணித்துளிகள் இதற்காக ஒதுக்கலாம்.
மனமிருந்தால் இந்த நோக்கில் நிறைய செய்யலாம்.
கவிதையில் பறவை
(* கவிஞர் பிரம்மராஜனின் வலைப்பூவில் படித்த பிரெஞ்சு கவிஞர் ழாக் ப்ரீவெரின் கவிதை வாசித்த அனுபவப் பகிர்வு)
…………………………………………………………………………………


உலக இலக்கியம் குறித்த ஆழமான வாசிப்புள்ளவர்கள் யார், வெறுமே NAME DROPPING செய்பவர்கள் யார் என்று எளிதாகவே இனங்கண்டுவிட முடியும்.
அயல்மண்ணைச் சேர்ந்த படைப்புகளே தரமானவை என்று சொல்வதும் தவறு. அதேயளவு தவறு, அயல் மண்ணைச் சேர்ந்த படைப்புகள் ஒன்றுமேயில்லை என்று சொல்லுவதும்.
தனது கவிதைகளாலும் மொழிபெயர்ப்புகளாலும் தமிழ் இலக்கியவுலகில் தனக்கொரு தனியிடத்தைப் பெற்றிருக்கும் கவிஞர் பிரம்மராஜனின் வலைப்பூவில் சமீபத்தில் அவரது மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கும் பிரெஞ்சுக்கவிஞர் JACQUEZ PREVERTஇன் கவிதை களில் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.
கவிதைகளில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள படிமங்களைக் கொண்டு அதுவரை அரிதாகவே சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தைச் சொல்லும் கவிதை என்னைப் பொறுத்தவரை தனிச்சிறப்பானது. அவ்வாறு கவிதைகளில் அதிகமாக இடம்பெறும் பறவையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இக்கவிதை இதுவரை கவிதைவெளியில் அரிதாகவே காணக்கிடைத்திருக்கும் காட்சியைக் கட்டமைத்து அதனூடாக மனித சுதந்திரம், மற்றவர் முன் மண்டியிடாத, தலைவணங்காத ஆளுமை என பல விஷயங்களைக் குறிப்புணர்த்துவதாக படுகிறது.
கவிஞர் பிரம்மராஜனால் மொழிபெயர்க்கப்பட்டு அவருடைய வலைப்பூவில் (brammarajan.wordpress.com) ழாக் ப்ரீவெரின் ஏழெட்டு கவிதைகளில் நான் குறிப்பிடும் அந்தக் கவிதை கீழே தரப்பட்டுள்ளது:
…………………………………………………………………………………………………………………
ஓய்வு நேரம்
……………………………………………………………
ழாக் ப்ரெவெர்
(தமிழில்: பிரம்மராஜன்)
நான் எனது தொப்பியை பறவைக் கூண்டில் வைத்துவிட்டு
என் தலை மீது பறவையுடன் வெளியே சென்றேன்
எனவே
ஒருவர் இனி மேல் வணக்கம் சொல்ல வேண்டியதில்லை?
கேட்டார் தலைமை அதிகாரி
இல்லை
இனி மேல் ஒருவர் வணக்கம் சொல்வதில்லை
என பதில் அளித்தது பறவை
ஆ, நல்லது
என்னை மன்னிக்க வேண்டும்
நான் எண்ணினேன் ஒருவர் வணக்கம் சொல்ல வேண்டும் என
என்றார் தலைமை அதிகாரி
நீங்கள் முழுமையாக மன்னிக்கப்படுகிறீர்கள் எல்லோரும் தவறுகள் செய்கின்றனர்
என்றது பறவை.
எது நல்ல கவிதை?
ஒற்றை பாணியையே நல்ல கவிதை என்று நிறுவுவது சரியல்ல.
வாசகரின் எதிர்பார்ப்புகள், அனுபவங்கள், மனத்தடைகள் என பல பரிமாணங்களை உள்ளடக்கியதாகவே இருக்கும் இந்தக் கேள்விக்கான பதில் அல்லது பதில்கள் என்று தோன்றுகிறது.
சில வரிகளில் வாழ்வின் பிரம்மாண்டத்தை, அவிழ்க்கவியலா மர்மத்தைக் கவித்துவம் குறையாமல் (கவித்துவம் என்பதும் relative term தான்) குறிப்புணர்த்தும் கவிதைகளே எனக்கு நல்ல கவிதை வாசித்த நிறைவமைதியைத் தருகின்றன.
கவிஞர் வைதீஸ்வரனின் கவிதை இதோ. கவிஞர் காலமற்றவர் என்பதற்கு சாட்சியமாகும் கவிதை இது!


உள்ளே ஒரு ஓசை
வைதீஸ்வரன்
வயது ஒரு உயிர்மானி
காலத்துக்குள் நம்மை
எறும்புகளாக்கி மெல்ல நகர்த்தி
வளர்ப்பதும் வதைப்பதுமாக
திக்குத் தெரியாத சம்பவக் காட்டுக்குள்
இழுத்துச் செல்லுகிறது
வருஷங்களை வாழ்வாகச் சித்தரிக்கிறது
வெவ்வேறு பிம்பங்களை
எழுப்பி அழித்து ‘நான்’ என்று
நம்பவைத்து நடுவாழ்க்கை
பள்ளத்தாக்குகளில் விழுத்துகிறது.
மேலும் எழுந்து வந்து நமக்குள்
தன்னேய்ப்பை உணர்ந்து தடுமாறும் சமயம்
கைத்தடியைக் கொடுத்து கரையேற்றி விடுகிறது
நகரமுடியாமல் விதி முடிந்த வீதியில் நின்று
திரும்பிப் பார்க்கும் போது
வயது இருந்ததாகத் தெரியாமல்
சுவடற்ற கனவாய் தொலைந்து விடுகிறது.
சிரிப்பதற்கு எனக்கு வாயில்லை.
**
ZOHO வின் தயாரிப்பான ‘அரட்டை’ செயலியைப் பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் அவரவர் விருப் பம். யாருடைய கட்டாயமும் கிடையாது.

ஆனால், சில PSEUDO PROGRESSIVES, SHALLOW அறிவுசாலி கள் அதன் நிறுவனர் திரு.ஸ்ரீதர் வேம்புவின் சாதனைகளை ஓரந்தள்ளி அவரை ‘சங்கி’ என்று அடைமொழியிட்டு எள்ளிநகையாடுவதைப்பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது.
இப்படியெல்லாம் பழிப்பதன் மூலம், மதிப்பழிப்பதன் மூலம் இவர்கள் திரு.ஸ்ரீதர் வேம்புவை விடத் தங்களை மேலானவர்களாகக் காட்டிக்கொள்ள முயல்வதில் உள்ள அபத்தம் இவர்க ளுக்குப் புரியும் என்று நம்பவியலாது.
திரு.ஸ்ரீதர் வேம்பு இதுவரை செய்துள்ள, இப்போது செய்துகொண்டிருக்கும் மக்கள் நலப் பணிகளெல்லாம் இத்தகையோருக்கு ஒரு பொருட்டேயில்லை.
இந்தியத் தயாரிப்பான இந்த செயலி யைக் கிண்டலடித் தால் தான் இவர்க ளெல்லாம் அறிவுசாலிகளாகப் பார்க்கப்படுவார்கள் என்று என்ன வொரு நம்பிக்கை!
சின்னச்சின்ன நாடுகளின் தேசபக்தியை, தற்சார்புத் தன்மையை பற்றிப் புகழ்வார்கள். ஆனால் தமது நாடான, மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தற்சார்பு முனைப்புகளை மட்டந்தட்டி மகிழ்வார்கள்.
ஆனால், அரட்டை செயலியைப் பதிவிறக்கம் செய்து பார்த்தால் இங்கே கிண்டல் செய்கிறவர்களெல்லாம் அங்கே ஏற்கனவே உறுப்பினர்களாகியிருப்பார்கள்!
படைப்பாளியின் தற்காலமும் பிற்காலமும்
படைப்பாளி தன் குடும்பத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் மனித குலத்திற்குச் சொந்தமானவர். வாழுங் காலத்தே அவர் உரிய அளவாக அறியப்படா திருக்கலாம். அவருடைய படைப்புகள் வருவாய் ஈட்டித்தராம லிருந்திருக்கலாம். பல படைப்பாளி களின் எழுத்துகளை அவர்களுடைய குடும்பத்தார் படிப்பதோ பொருட்படுத்துவதோ கிடையாது. பிழைக்கத் தெரியாத வர்கள் என்றோ, உதவாக்கரைகள் என்றோ தான் தரமான படைப்பாளிகளாக இருந்தாலும் தங்கள் படைப்புகளின் மூலம் பொருள் ஈட்டவியலாதவர்களைப் பலரும் நினைக்கிறார்கள். பிரதானமாக, குடும்பத்தார்.
பொருள் பிரதான வாழ்க்கையிதில் பணத்தைத் தாண்டிய, அதற்கும் மேலான ஆனந்தத்தை ஒரு நல்ல கவிதை கொடுக்கும் என்றால் நாடக பாணியில் உளறுவதாக நம்மைப் பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரிப்பவர்களும், ‘நட்டு கழண்ட கேஸ்’ என்று முத்திரை குத்துபவர்களுமே அதிகம்.
பல நேரங்களில் உறவுகள் புறக்கணித்த நிலையில் படைப்பாளிகளை அவர்கள் மேல் அன்பும் அவர்கள் எழுத்தில் மரியாதையும் வைத்திருக்கும் சக எழுத்தாளர் களும், நட்பினரும் பதிப்பகத்தாரும் வாசகர்களுமே புரந்து காத்து அவர்கள் தொடர்ந்து எழுத ஊக்கமும் உதவியும் அளிக்கிறார்கள்.
ஆனால், மாதா மாதம் லட்ச ரூபாய் சம்பாதித்தும் அதில் ஆயிரம் ரூபாய் கூட படைப்பாளிக்கு அனுப்பிவைக்க மனமில்லாத அவரது சட்டப்படியான குடும்பத்தார், வாரிசுகள், உறவுகள் படைப்பாளி இறந்துவிட்டால் உடனே அவருடைய படைப்புகளுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர். அதுவரை படைப்பாளியைப் புரந்துகாத்தவர்கள் அந்நியமாக்கப்படுகிறார்கள்; புறந்தள்ளப் படுகிறார்கள்.
பல நேரங்களில் படைப்பாளி இறந்த பின் அவருடைய படைப்புகளிலிருந்து கிடைக்கக்கூடிய பணமொன்றே குறியாக, வாழும் நாளில் அவரை அவமரியாதை செய்த பதிப்பகத்திடமே அவருடைய படைப்புகளைக் கொடுத்து வெளியிடச் செய்வதும் நடக்கிறது. இது சம்பந்தப்பட்ட படைப்பாளியை அவமரியாதை செய்வது.
இந்த அவலநிலையிலிருந்து தானும் விடுபட்டு வாழும் நாளில் தன்னைக் காத்தவர்களையும் விடுவிக்க படைப்பாளிகள் வாழுங்காலத்திலேயே தங்கள் படைப்புகள் குறித்த உயிலை எழுதிவைத்துவிட வேண்டும்.
ஒரு படைப்பாளியின் எழுத்து அவர் சுயமாய் சம்பாதித்த சொத்து. அதை அவர் மதிக்கும், அவரை மதிக்கும், புரந்துகாக்கும் யாருக்கும் தர அவருக்கு உரிமையுண்டு
இலக்கியவுலகில் இப்படியும் சிலர்………
இலக்கியவுலகம் என்பது படைப்பாளிகள் – கவிஞர்கள், சிறுகதையாசிரியர்கள், புதின எழுத்தாளர்கள் – மொழி பெயர்ப்பாளர்கள், திறனாய்வாளர்கள், முக்கியமாக வாசகர்கள் என பல பிரிவினர் இடம்பெறுவது.
அவர்களுக்கிடையே வாதப்பிரதிவாதங்கள் இருக்கலாம். ஆனால், அது கொச்சையாக, தனிமனிதத் தாக்குதலாகப் போய்விடுமானால் யார் வேண்டுமானாலும் வந்து இலக்கியவுலகம் சார்ந்தவர்களை எள்ளிநகையாடுவதன் மூலமும், அவர்களுக்கு அறிவுரை தருவதன் மூலமும் தங்களை பீடத்தில் ஏற்றிக்கொண்டுவிட இடம்கிடைத்து விடும்.
சமீபத்தில் அப்படி, படைப்புரீதியாகவோ, மொழிபெயர்ப்பு ரீதியா கவோ எந்த வகையிலும் பங்களித்திராத பெண்மணி யொருவர் எத்தனையோ புத்தகங்கள், மொழிபெயர்ப்பு கள், திறனாய்வு கள் எழுதியிருப்பவர்களை ’அதுங்க’ என்றும் ’எல்லாம் ஒரே தரம்’ என்றும் எழுதியிருந்ததைப் படிக்க நேர்ந்தது.
எளிய உண்மை
சிலர் ஏன் எல்லா விஷயங்களைப் பற்றியும் கருத்து சொல்லியே தீரவேண்டுமென்று தவியாய்த் தவிக்கிறார்கள்? புரியவேயில்லை. அந்தப் பரிதவிப்பில் அபத்தமாக ஏதாவது கருத்துரைத்து ‘காலரை’ தூக்கிவிட்டுக்கொள்வதைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது; வருத்தமாக இருக்கிறது; எரிச்சலாக இருக்கிறது.
தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முனைப்புக்குத் தேவையான ‘OPENMINDEDNESS;ம் இவர்களிடம் இருப்பதில்லை. ‘இந்த விஷயம் எனக்கும் ஏற்கெனவே தெரியும்’ என்ற ‘தலைசிலுப்பலே’ முதலும் முடிவுமான இலக்காய்.
எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வழியேயில்லை. அதைப்போலவே, எல்லோருக்கும் எல்லாமும் பிடித்திருக்கவும் வழியேயில்லை.
தெரிந்ததை, பிடித்தததைப் பற்றிப் பேசுவோம்; கருத்துரைப்போம். தெரியாததைப் பற்றி தெரிந்துகொள்ள முயற்சிப்போம்.

புரிந்துகொள்ளல் என்பதற்கும் ஜம்பமாக, எனில், உள்ளீடற்ற கருத்துரைத்தலுக்கும் பூமிக்கும் ஆகாயத்திற்குமான இடைவெளி.
ஊழலின் குரூர முகங்களில் ஒன்று கலப்படம்/

ஊழலை விட மத அடிப்படைவாதமே ஆபத்தானது என்று சில அறிவுசாலிகள் அடிக்கடி கூறுவதுண்டு. இது என்ன தேவையற்ற ஒப்பீடு என்று தோன்றும். ஊழல் என்பதை அத்தனை இயல்பாக ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோமா?
அதிகம் பேசப்படவேண்டிய எனில் பேசப்படாத சமீபத்திய செய்தி இது:
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் உயிரிழந்த சோகம்!
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 5 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
மத்திய பிரதேசத்தில், கலப்படமான ‘கோல்ட்ரிஃப்’ (Coldrif) என்ற இருமல் மருந்தை உட்கொண்டதால் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஐந்து குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இந்த சம்பவம் அக்டோபர் 8, 2025 அன்று சிந்த்வாராவில் வெளிச்சத்திற்கு வந்தது.
காய்ச்சல் மற்றும் சளி பாதிப்புக்குள்ளான குழந்தைகள், ‘கோல்ட்ரிஃப்’ என்ற இருமல் மருந்தை உட்கொண்டனர். அதன் பிறகு, அவர்களுக்கு வாந்தி மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டது. செப்டம்பர் 2, 2025 அன்று முதல் உயிரிழப்பு பதிவானது. இந்த மருந்தை தயாரித்தது தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தை சேர்ந்த ‘ஸ்ரேசன் பார்மசூட்டிகல்ஸ்’ (Sresan Pharmaceuticals) நிறுவனம் ஆகும். அக்டோபர் மாத தொடக்கத்தில், தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சோதனையில், இந்த இருமல் மருந்தில் 45%க்கும் அதிகமாக ‘டையெத்திலீன் கிளைக்கால்’ (diethylene glycol) என்ற ஆபத்தான ரசாயனம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இந்த ரசாயனம் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால், இரு மாநிலங்களும் இந்த மருந்தை விற்பனை செய்ய தடை விதித்தன.
மத்திய பிரதேச துணை முதலமைச்சர் ராஜேந்திர சுக்லா, செவ்வாய்க்கிழமை அன்று, இதுவரை 20 குழந்தைகள் இந்த கலப்பட இருமல் மருந்தை குடித்து உயிரிழந்ததாக தெரிவித்தார். மேலும், ஐந்து குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். உயிரிழந்த 20 குழந்தைகளில், 17 குழந்தைகள் சிந்த்வாரா மாவட்டத்தையும், இரண்டு குழந்தைகள் பெதுல் மாவட்டத்தையும், ஒருவர் பாண்டுர்னா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். நாக்பூரில் உள்ள மருத்துவமனைகளை பார்வையிட்ட பிறகு பேசிய துணை முதலமைச்சர், “சில குழந்தைகள் குணமடைந்துள்ளனர். ஆனால், திங்கட்கிழமை இரவு ஒரு குழந்தையும், செவ்வாய்க்கிழமை இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர். இதற்கு முன்பு 17 குழந்தைகள் இறந்திருந்தனர்” என்று தெரிவித்தார். நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டு குழந்தைகளும், எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளும், ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு குழந்தையும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் சிகிச்சை செலவை மாநில அரசு ஏற்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், நாக்பூரில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் அனைத்து மருத்துவ செலவுகளையும் மாநில அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், நாக்பூரில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு உதவ சிந்த்வாரா மாவட்ட ஆட்சியர் மூன்று குழுக்களை அமைத்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
***