முத்தமிழ்ப்பித்தன்
காலை ஏழு மணியை தாண்டிய சில நிமிடங்கள். தஞ்சையின் புறநகர் பகுதியைச் சேர்ந்த அந்த பனி படர்ந்த தெருவில், மைசூர் மாமா, நண்பர் நல்லேந்திரன் வீட்டு முன்பாக நின்றபடி அசைவற்ற நிலையில், வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் கண் சிமிட்டாமல் நோக்கிக் கொண்டிருந்தார்.
நான் எதிரே உள்ள தோட்டத்தில் வாழை மரங்களுக்கு இடையே ஒரு சாண் உயரம் வரை வளர்ந்துள்ள செடி கொடிகளை மண்வெட்டி கொண்டு கொத்தியபடி களை எடுத்து கொண்டிருந்தேன். அடர்ந்த செடி கொடிகளின் ஊடாக மண்வெட்டி கொண்டு குனிந்தபடி களைகளை கொத்திக் கொண்டிருந்ததனால், அவரால் என்னை காண முடியவில்லை. ஆனால் என்னால் அவரின் முகத்தைப் பார்க்கவும் படிக்கவும் முடிந்தது—அதில் ஒரு கவலை, ஒரு வருத்தம், ஒரு நீண்ட நிசப்தம் அனைத்தும் நிறைந்திருந்தது.
நான் தோட்டத்தில் அவருக்கு சற்று தொலைவில் இருந்தபடியே சத்தமில்லாமல் அவரிடம் சொன்னேன்:
“மாமா… என்ன ரொம்ப நேரமா வீட்ட கண்கொட்டாம பாத்துக்கிட்டே இருக்கீங்க? ”
தோட்டத்திலிருந்து எதிர்பாராத விதமாக எனது குரலை கேட்டவுடன் மாமா சற்றே திடுக்கிட்டார்.
“அட மாப்பிள்ளையா? காலையிலேயே களவெட்ற வேலையா? நான் நீங்க இன்னும் தூங்கிட்டு இருக்கீங்கன்னு நெனச்சேன்” என்று ஆர்வத்துடன் கேட்டார்.
“மாமா நான் எப்போதுமே அஞ்சு மணிக்குள்ள எழுந்திடுவேன். இந்தக் களை எல்லாம் இப்படியே விட்டுட்டா அதெல்லாம் புதர் மாதிரி புசுபுசுன்னு வளர்ந்துரும் மாமா. அதனால ஆரம்பத்திலேயே கொஞ்சம் கொஞ்சமா அப்படியே களைய எடுத்துடுறது நல்லது தானே. இப்ப அடிக்கிற வெயில பார்த்தா பயமா இருக்கு மாமா. பத்துமணிக்கு மேல வெளில தல காட்டவே முடியல. அதனால தான் ஏழு மணிக்கு வேலைய ஆரம்பிச்சிட்டேன்.“ என்று நான் சொல்ல மாமா சந்தோஷப்பட்டார்.
மாமா இப்போது நின்று கொண்டிருக்கும் அதே இடத்தில் தான் 10 நாட்களுக்கு முன்பு அந்த நான்கு பேரும் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது மாலை ஐந்தரை மணி இருக்கும். இன்னும் அரை மணி நேரத்தில் பொழுது சாய்ந்து விடும் எங்கும் இருள் கவிழ்ந்து விடும் என்ற நிலையில் தான் அந்த நால்வரும் ஒருவருக்கொருவர் சண்டையிட ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் அமைதியாக பேசிக் கொண்டிருந்தவர்கள் நேரம் செல்லச் செல்ல அவர்களின் வார்த்தைகளில் கோபம் கொப்பளித்தபடி இருந்தது. திடீரென்று அவர்களில் ஒருவன் “நீதாண்டா எல்லாத்துக்கும் காரணம். உன்னால் தான் நான் கெட்டேன்” என்று சொல்லியபடி எதிரே இருந்தவரை ஓங்கி அவனது கன்னத்தில் அறைந்தான். அடுத்தடுத்து எல்லோருமே எதிரே இருந்தவர்களை அடிக்க, அங்கே ஒரு அருமையான கைகலப்பு தீவிர சண்டையாக மாறியது. நான் அப்போது தோட்டத்தில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே கோபமாக பேசிக்கொண்டும், ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டும், சண்டை இட்டுக் கொண்டும் இருந்த நடுத்தர வயதை சேர்ந்த அந்த நான்கு பேர் யார் என்ற விவரம் எனக்கு தெரியவில்லை. பொதுவாக இந்த பகுதியானது ஆட்கள் நடமாட்டம் இல்லாத அமைதியான புறநகர் பகுதி. மக்கள் நெருக்கம் உள்ள தெருக்களை தாண்டி தனியாக இருக்கும் ஒரு வீடு. இங்கே அடிக்கடி மது பிரியர்களின் நடமாட்டம் தான் அதிகமாக இருக்கும். அதனால் இவர்களும் அத்தகைய மது பிரியர்கள் தான் என்று நான் சாதாரணமாக நினைத்து விட்டேன். அவர்கள் எல்லோரும் குடி போதையில் இருந்ததனால் அவர்களிடம் அருகில் சென்று விசாரிப்பதும் அவ்வளவு நன்றாக இருக்காது என்றும் எனக்கு தோன்றியது. நான் சற்று நேரம் தோட்டத்தில் நின்றவாறு அடுத்து என்ன நடக்கிறது என்பதை கண்காணித்தபடி இருந்தேன்.
மைசூர் மாமாவின் வீடும் நண்பர் நல்லேந்திரன் வீடும் அடுத்தடுத்து இருக்கின்றது. மாமாவின் வீடு இன்னும் முழுமை பெறவில்லை. எல்லா வேலைகளும் முடிந்து விட்டன. ஆனால் தரைத்தளம் மட்டும் இன்னும் பாக்கி இருக்கின்றது. அதேபோல் சுற்றிலும் மதில் சுவர்களுக்கு மேற்பூச்சு பூசப்படாமல் இருக்கின்றது. மற்றபடி வீட்டு வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டது.
இப்போது எனது பார்வை அந்த நால்வரின் பக்கம் திரும்பியது. அப்போது அங்கே இருந்த ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வர அவன் அதை எடுத்து பேசினான். அப்போது எல்லோரும் அமைதியானார்கள். அவர்களில் ஒருவன் சொன்னான். “டேய் ஆளு வந்துட்டு இருக்கு. நீங்க எல்லாரும் தயாராக இருங்கள்” என்று சொல்லிவிட்டு கிழக்கு பக்கமாக நடந்தார்கள். சிறிது தூரம் நடந்த பிறகு தெருவில் இரு பக்கமும் வளர்ந்திருந்த வேல மரத்தின் நிழலில் ஒதுங்கினர். சிலர் அருகில் இருந்த ஆவாரம் செடிகளுக்கு இடையே பதுங்கிக் கொண்டனர். நான் தோட்டத்தில் இருந்தவரே அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கடந்தது. அப்போது யாரோ ஒருவர் புல்லட் வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அந்த நபர் நிச்சயமாக நண்பர் நல்லேந்திரனாக இருக்க வாய்ப்பில்லை. காரணம் நல்லேந்திரன் எப்போதும் மாருதி டிசையர் வாகனத்தில் தான் வருவார். அவரிடம் யமஹா ஃபேசினோ வண்டி மட்டுமே உள்ளது. அதையும் அவர் பெரும்பாலும் எடுப்பதில்லை. அவரது மனைவி மட்டுமே அதனை ஓட்டி செல்வார். அந்த நபர் அந்த வேல மரப்பகுதியை கடந்த போது செடி கொடிகளில் பதுங்கி இருந்த நால்வரும் வேகவேகமாக ஓடி வந்து புல்லட்டில் வந்த நபரை படார் படார் என்று தங்கள் வைத்திருந்த கம்புகளினாளும் தடித்த குச்சிகளினாலும் தாக்கினர். அடுத்த சில நிமிடங்களில் அந்த நால்வரும் அந்த புல்லட் நபரை தூக்கிக் கொண்டு அருகிலே உள்ள புதர் செடிகள் நிறைந்த காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்றனர். அதன் பிறகு ஐயோ அம்மா என்ற அலறல் சத்தம் சுமார் பத்து நிமிடங்களுக்கு மேலாக கேட்டுக் கொண்டிருந்தது.
பொதுவாக குடிகாரர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நான் தலையிடுவதே இல்லை. ஆனாலும் மனதில் ஒரு படபடப்பு இருந்து கொண்டே இருந்தது. இரவு 7 மணி அளவில் நான் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்த்தேன். அங்கே அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்த தடயமும் இல்லாமல் எப்போதும் போல் இருந்தது நான் திரும்பி வந்து விட்டேன் அன்று இரவு எனக்கு தூக்கம் அவ்வளவு எளிதில் வரவில்லை. அந்த நபர் யாராக இருக்கும்? அந்த நால்வரும் ஏன் அவரை அடித்தார்கள்? என்ற குழப்பம் இரவு முழுவதும் நீடித்தபடியே இருந்தது.
000
இப்போது எனது பார்வை மைசூர் மாமாவின் பக்கம் திரும்பியது.
மாமாவின் பார்வை மீண்டும் நண்பரின் வீட்டை நோக்கி திரும்பியது.
“இந்த வீட்டுல வெளியில சொல்ல முடியாத சில சங்கடங்கள இருக்கு மாப்ள ” என்று மாமா மெல்ல என்னிடம் சொன்னார்.
நேற்று மாலையே அவர் இந்த வீட்டை பார்த்து முடித்து, முகம் வெளுத்து போய் என்னிடம் பகிர்ந்து கொண்ட சில விஷயங்களை நான் மெல்ல நினைவுகூர்ந்தேன்.
—
மாமா வீட்டுக்குள் நுழைந்தபோது ஒவ்வொரு அறையையும் ரசவாதியை போல் ஆராய்ந்தார்.
மாமா முதலில் கீழ் வீட்டில் உள்ள வாகன நிறுத்துமிடம், திண்ணைப் பகுதி, நடுக்கூடம், சமையலறை, சாப்பிடும் அறை, படுக்கையறை அதை ஒட்டி உள்ள குளியலறை மற்றும் ஓய்வரை, அவற்றில் பொருத்தப்பட்ட பல வகையான குழாய்களின் தன்மை வசதி போன்றவற்றை மாமா நன்கு ஆராய்ந்து பார்த்தார்.
மாமா ஒவ்வொரு அறைக்கும் செல்லும்போது நான்கு சுவர்களையும் கைகளால் தடவி பார்த்து சுவரில் உள்ள மேடு பள்ளங்கள், வழவழப்பு, சிமிட்டியின் தரம், பூச்சு த்தன்மை, வண்ண பூச்சின் நேர்த்தி இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்தபடி இருந்தார்.
மாமாவின் நுணுக்கமான நடவடிக்கைகளை பார்க்கின்ற பொழுது, இந்த வீட்டை அவர் அவசியம் வாங்கியே தீர்வது என்ற ஒரு தீர்க்கமான முடிவோடு இருப்பது போல் எனக்குத் தோன்றியது .
மின்விசிறிகளின் தேவை எல்லா அறைகளுக்கும் அவசிய தேவையாக இருக்கும் பட்சத்தில் சில அறைகளிலும் சில இடங்களிலும் மின்விசிறியை கூரைப் பகுதியில் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பதை அறிந்து அவர் பதட்டம் அடைந்தார்.
கீழ் வீட்டில் தரைத்தளத்தில் உள்ள ஏழு அறைகளையும் முதல் மாடியில் உள்ள மூன்று அறைகளையும் அவர் நன்கு பார்த்தார். மொத்தம் உள்ள பத்து அறைகளில் ஒரு அறையில் கூட அலமாரி என்ற ஒரு அமைப்பை பார்க்கவே முடியவில்லை.
மாமா ஒவ்வொரு அறையாக பார்வையிட்டுக் கொண்டு வந்த பொழுது ஆங்காங்கே இருந்த ஜன்னல் கதவுகள் பட்டார் பட்டார் என்று வேகமாக மோதிக்கொண்டன. அப்போது ஒரு சில இடங்களில் இரும்பு சட்டத்திற்கும் கண்ணாடிக்கும் இடைப்பட்ட இடத்தில் பூசப்பட்டிருந்த பசை காய்ந்துதளர்ந்து உதிர்ந்து மெல்ல கீழே தரையில் சிதறி விழுந்தபடி இருந்தன.
மாமாவின் முகம் காற்றை , தவறிவிட்ட ஒரு பலூனை போல சுருங்கிப் போனது.
பத்து அறைகளையும் பார்த்தபடியே மாமா என்னிடம் திரும்பி வீட்டைப் பற்றிய தகவல்களை கேட்டார். நானும் எனக்குத் தெரிந்தவற்றை அவரிடம் சொன்னேன்.
“மாமா, நண்பர் நல்லேந்திரன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டை அன்புடன் கட்டினார்.
ஆனால் இரண்டு ஆண்டுகள் தண்ணீர் வசதி இல்லாததனால் வீடு காலியாகவே இருந்தது.
ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டபின் நான் மூன்று ஆண்டுகள் கீழ்தளத்திலும், பின்னர் கடந்த ஆறு மாதமாக மாடியில் உள்ள மூன்று சதுரம் அளவுள்ள குடிலிலும் குடியிருந்தேன். .
இந்த மூன்று ஆண்டுகளில் 11 பேர் வந்து வீட்டைப் பார்த்து விட்டுசென்றனர்.
ஆனால் வீட்டை வாங்க யாரும் முன் வரவில்லை. வாங்கும் எண்ணம் அவர்களில் ஒருவருக்கும் ஒரு போதும் வந்ததே இல்லை. “
இதற்கு என்ன காரணம் என்பதற்கான பதில் மாமாவிடம் ஏராளமாய் இருந்தன.
மாமா சொன்னார்:
“ மாப்ள இந்த வீட்டைப் பொறுத்தவரை எனக்கு பிடிச்சது ரெண்டே ரெண்டு விஷயம் தான்.
ஒன்று—200 அடி ஆழத்தில் கிடைக்கும் அற்புதமான தண்ணீர்.
இரண்டு—வெளிப்புற தோற்றம் மொத்தமும் பார்க்க பார்க்க பரவசமாக இருக்கு .”
பின்னர் அவர் சற்று குரலை தாழ்த்தினார்.
“ஆனா குறைகள்… பத்துக்கு மேல பதுங்கி கிட்டு இருக்கு.”
நான் மாமாவின் அருகில் சென்று அவரின் வார்த்தைகளைக் கேட்க மிகுந்த ஆவலோடு இருந்தேன். .
“சொல்லுங்க மாமா. நான் கேட்டுக்கறேன்.”
“முதல்ல… இந்த தரைதளம் தெரு மட்டத்துக்கு கீழே இருக்கு. மழை வந்தா வீட்டுக்குள்ள தண்ணீர் வந்து நம்மள பாடா படுத்தும்.
“ஓ அது உண்மைதான்… பலமுறை நீர் வீட்டுக்குள்ள வந்து வீட்ல தண்ணி பலமுறை தேங்கி நின்னுகிட்டு இருந்துச்ச.”
“ மாப்ள: கூரை உயரம் சரியில்லை. ஆறரை அடி உயர கூரையில எப்படி வாழ முடியும்?”
“நானே இரண்டு முறை தலையில இடி வாங்கி இருக்கேன் மாமா.”
“மாப்ள, வீட்ல உள்ள எல்லா ஜன்னல் கதவுகளிலும் இரும்பு மட்டுமே பயன்படுத்தி இருக்காங்க. தலைவாசல் கதவ தவிர வேற எங்கேயும் மரத்தை பயன்படுத்தவே இல்ல. மரமே இல்லை. குளிர் காலத்துல வீடு ரொம்ப குளிரும். அதேபோல கோடையில ரொம்ப சூடா இருக்கும். அனல் நம்மள ரொம்ப தாக்கும். ஜன்னல் கதவுகளை திறந்து மூடறது எப்போதும் கொஞ்சம் சிரமமாகவே இருக்கும்.”
“ மாப்ள நீங்க இந்த வீட்ல இருக்கும்போது உங்களுக்கு கண்ண கட்டி விட்ட மாதிரியும் இருக்கும். கோடையில கண் கட்டி வந்த மாதிரியும் இருக்கும். என்ன நான் சொல்றது?”
“இந்த வீடு இருக்கிற அமைப்புல ஒரே ஒரு குடும்பம் தான் குடியிருக்க முடியும். மாடியில் இருக்கக்கூடிய சின்ன வீட்ல ஒருத்தர் இல்லன்னா ரெண்டு பேரு இருக்கலாம். அதுல இருந்து பெருசா ஒன்னும் வாடகை வரதுக்கு வாய்ப்பே இல்லை.
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் இந்த வீட்டுல மேல ஒரு மாடி அல்லது ரெண்டு மாடி கட்டணும்னு நினைச்சா அது கண்டிப்பா முடியாது. வீட்ட சுத்தமா இடிச்சிட்டு கட்டினால் தான் அது முடியும். அப்படி இடிச்சிட்டு கட்றதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய தொகைக்கு வீட்டை வாங்கணும் அப்படின்னு தான் எல்லாரும் நினைப்பாங்க.”
“இப்ப இந்த வீட்ட 65 லட்சம் சொல்றாருன்னா அதுல பாதி அளவுக்கு கூட வீட்டுக்கு மதிப்பு கிடையாது”
“அப்புறமா ஒரு முக்கியமான விஷயம். வீடுன்னு இருந்தா அதுல கொஞ்சம் இடத்திலியாவது தோட்டம் னு ஒன்னு இருக்கணும். தோட்டம் இல்லைன்னா வாழ்க்கையில் நமக்கு எந்தவித நாட்டமும் இருக்காது அப்படின்னு கிராமத்துல சொல்லுவாங்க. அது மொத்தமும் மெத்த சரியான வார்த்தை. இந்த வீட்ல வீட்டுக்கு முன்புறத்திலும் சரி பின்புறத்திலும் சரி தோட்டத்துக்கு வாய்ப்பே இல்லாம இருக்கு.”
நான் இந்த வீட்டிற்கு குடிவந்த கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைய பேர்_ஏற்கனவே இவர் கட்டிக் கொடுத்த வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் முறையீடுகளை முறையிடுவதற்காக நண்பரை பார்க்க வேண்டி பலமுறை இந்த வீட்டிற்கு அவர்கள் படையெடுத்து வந்த வண்ணம் இருந்தார்கள்.
இதற்குக் காரணம் நிச்சயமாக நண்பர் அல்ல. உண்மையில் அவர் நல்ல திறமைசாலி தான். அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. ஆனால் அவர் நம்பி கட்டிடப் பணியை ஒப்படைத்து விட்டு சென்ற ஒரு கட்டிட கூட்டணி தான் இவரை கவிழ்த்துவிட்டு இவரது தொழிலுக்கு களங்கம் கற்பிக்கும் வேளையில் ரகசியமாய் ஈடுபட்டிருந்தது.
இவை எல்லாவற்றிற்கும் முழு முதல் காரணம் பொறாமை தான். பள்ளிக்கூடத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கும் இவர் நோகாமல் நுங்காமல் ஒரு வீட்டைக் கட்டிய பிறகு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை லாபம் பார்க்கின்றார். ஆனால் கஷ்டப்பட்டு வேலை பார்க்கும் நமக்கு மிகவும் குறைவாகவே வருமானம் கிடைக்கிறது என்ற எண்ணமும் அவர்களின் செயல்களில் கீழ்மை தன்மைக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
நண்பர் காலையில் கட்டிட பணியாளர் அனைவரையும் கூட்டி வைத்து சில விஷயங்களை தெளிவாகச் சொல்லி விட்டு செல்வார். குறிப்பாக மணலையும் சிமிட்டியையும் சில இடங்களில் மூன்றுக்கு ஒன்று என்ற விதச்சாரத்திலும் சில இடங்களில் ஐந்துக்கு ஒன்று என்ற விருதாச்சாரத்திலும் சில இடங்களில் ஏழுக்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்திலும் கலந்து பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல் தான் அது. ஆனால் இந்த கட்டிட பணி குழுவானது ஒட்டுமொத்தமாக எல்லா வேலைகளுக்கும் ஒரே மாதிரியான விகிதாச்சாரத்தில் கலவையை உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் மூலம் மிச்சம் பிடிக்க பட்ட சிமிட்டி மூட்டைகள் மூலம் கொஞ்சம் உபரி வருமானமும் பார்த்தனர். இதன் காரணமாகத்தான் நண்பருக்கு பல வகையில் கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து முறையீடுகள் வந்த வண்ணம் இருந்தன.
மாமாவும் நானும் வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு வீட்டில் நடுக்கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நண்பர் நல்லேந்திரனின் மனைவி புஷ்பராணி அலைபேசியில் என்னை அழைத்து பேசினார். “அண்ணே உங்க நண்பர பத்து நாளைக்கு முன்னாடி நாலு பேரு செமையா அடிச்சு போட்டுட்டாங்க. அவர் இன்னமும் ஆஸ்பத்திரியில தான் இருக்காரு. முன்னைக்கு இப்ப பரவாயில்ல. ஆனாலும் இன்னும் சரியாகல. முதுகுல நல்லா அடிபட்டு இருக்கு. ஒரு கால் வீக்கமா இருக்கு. இப்ப நாங்க மைதிலி ஆஸ்பத்திரியில தான் இருக்கிறோம். நீங்க இப்ப வர வேண்டாம். இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வந்து பாருங்க அண்ணே” என்று சொல்ல நான் திகைத்துப் போனேன்.
“என்னம்மா ஆச்சு எனக்கு ஒன்னும் புரியல!”
“அண்ணே இவரு கடைசியில கட்டுன நாலு வீடும் பிரச்சனை மேல பிரச்சனையா இருந்திருக்கு. ஒருத்தர் வீட்டு சுற்றுச்சுவர் அப்படியே சாய்ந்து விழுந்துருச்சா. இன்னொருத்தர் வீட்டு கூடத்துல இருந்து சிமெண்ட் பூச்சி ராத்திரியில எல்லாரும் தூங்கிட்டு இருக்கிறப்ப பொத்து பொத்துன்னு விழுந்து இருக்கு. இன்னொருத்தர் வீட்ல சமையல் கட்டு பக்கத்துல கட்டப்பட்ட குளியலறை அப்படியே தனித்துண்டா பைசா நகரத்துக்கு கோபுரம் மாதிரி சாய்ந்து கொண்டு இருக்காம் . இன்னொருத்தர் வீட்டுல மழை காலத்துல மேலே இருந்து தண்ணி சொட்டு சொட்டா அதிகமா வழிஞ்சுகிட்டே இருக்குதா. இது பத்தி பல தடவை அவங்க நாலு பேரும் இவர் கிட்ட சொல்லி இருக்காங்க. இவர் தான் அதை சரி பண்ணி தரேன்னு தான் சொல்லி இருக்காரு ஆனா சொன்ன நாளிலிருந்து இவருக்கு பள்ளிக்கூடத்துல சரியான வேலை. இவருக்கு நேரம் கிடைக்கல. அவங்களுக்கு பொறுமையாய் பொறுமையா இல்ல. அவங்க உடனே இப்படி பண்ணிட்டாங்க”
“சரி மா இது சம்பந்தமா ஏதாவது புகார் கொடுக்க வேண்டியது தானே?”
“என்ன அண்ணே புகார் கொடுத்து என்ன ஆகப்போகுது. இவர நாலு பேரு அடிச்சு போட்டது ஊர் உலகத்துக்கே தெரிஞ்சு போயி இன்னும் கேவலமா போயிடும். மேலும் இவர் செஞ்சதும் தப்பு தானே? இவர் மேலேயும் தப்பு இருக்கத்தானே செய்யுது.”
“நான் உங்க வீட்டுக்காரர் கிட்ட பல தடவை சொன்னே ம்மா. எதுக்கு இந்த தேவையில்லாத வேலையில் ஈடுபட்டுகிட்டு இருக்கீங்க. உங்களுக்கு கெட்ட பேரு வந்தது தான் மிச்சம். உங்க நிம்மதியும் போச்சு. இப்படி நான் பல தடவை சொன்னே ம்மா ஆனால் அவரு கேட்கவே இல்லை.”
“நானும் பல தடவை சொல்லி இருக்கேன் அண்ணே. அவர் எங்க நம்ம பேச்சு கேக்குறாரு. இப்ப பட்டு அனுபவிக்கிறார் “
“சரிமா. இனிமேலாவது இந்த வேலையை விட்டுட்டு ஒழுங்கா வாத்தியார் வேலையை மட்டும் பார்க்க சொல்லுங்க.”
“ ஆறு மாசத்துக்கு முன்னாடி இவரு கட்டிக் கொடுத்த வீட்டுக்காரருக்கும் இவருக்கும் வாய் சண்டை வம்பு வழக்குன்னு ஆகிப் போய் அதுக்கப்புறம் இந்த வேலையை அவரு அப்பவே விட்டுட்டாரு, அண்ணே.”
“சரி மா நான் இன்னும் ரெண்டு மூணு நாள் கழிச்சு வந்து பார்க்கிறேம்மா.”
நான் புஷ்ப ராணியிடம் பேசிக் கொண்டிருந்ததை மைசூர் மாமா நன்கு கவனித்தபடி இருந்தார். அவர் உண்மையை புரிந்து கொண்டார். அவர் எதுவும் சொல்லவில்லை.
பத்துக்கும் மேற்பட்ட பழுதுகளுக்குள் அழகாக பதுங்கியபடி நிற்கும் நண்பரின் பதினோராவது வீடு —
யாருக்கோ ஒரு கனவாகவும்,
பல பேர்களுக்கு ஒரு சுமையாகவும் நீடித்தபடி நின்று கொண்டிருந்தது.
நிறைவு