Posted in

பச்சா பாசி – அத்தியாயம் ஒன்று

This entry is part 1 of 5 in the series 23 நவம்பர் 2025

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்

( ஆசிரியர் குறிப்பு : மூன்றாம் பாலினம் மற்றும் மாற்றுப் பாலின மக்களுக்காக, இது வரை ஆறு தமிழ்ப் புததகங்கள் எழுதி இருக்கிறேன். அதில் சில புத்தகங்கள், சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் இருக்கின்றன. சில புத்தகங்கள், சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  இருக்கின்றன  . சில புததகங்கள், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இருக்கின்றன. 

எனது அனைத்துப் புத்தகங்களிலும், உங்களுக்கு – –  நான் என் முகவுரையில், நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

இப்போது, பச்சாபாசி எனும் ஒரு குறுநாவல் எழுதி உங்கள் பார்வைக்கு வைத்து இருக்கிறேன். ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட, ஒரு குறுநாவல் இது.

ஆப்கானிஸ்தானில், இன்றளவும், பச்சாபாசி என்ற சிறுவர் விபச்சாரம் நடக்கிறது. அது குறித்த ஒரு நாவல்தான் இது. அதற்கான பல ஆதாரங்கள், இணையத்தில் இருக்கிறது. ஒரு ஆதாரத்தை, இங்கே இணைத்து இருக்கிறேன்.

https://www.bbc.com/news/world-asia-53396586

எனது குறுநாவலை, இத்துடன் இணைத்துள்ளேன். எனது புகைப்படம் இத்துடன் இணைத்துள்ளேன். பச்சாபாசி படம் ஒன்றும் இத்துடன் இணைத்துள்ளேன். )

க்யா ஜனோ தும் காதுரு ஹமாரி மெஹ்ரோவஃபா கி லட்கே ஹோ

எனது காதலின் மதிப்பு என்னவென்று தெரியுமா பையனே

உனது வியர்வையின் ஒரு துளி இந்த நிலத்தில் விழுந்தால்

அதற்கு இணையான என் ரத்தத்தை நான் சிந்துவேன்

– கஜல் கவிஞன் மிர் தாகி மிர்

குமாரி குல்பாரி, தக்கார் மாகாணம், ஆப்கானிஸ்தான்

அந்தப் பெரிய வீட்டின் நடுவே இருந்த அந்த நீண்ட பொதுவறையில், அவன் ரூபாப் இசைத்துக் கொண்டு இருந்தான். வீட்டை நிறைத்த அந்த இசையில், வீட்டின் அந்த மூலையில் இருந்த அந்த சமையலறையில், மண்டு கொழுக்கட்டை சமைத்துக் கொண்டு இருந்த நானும் அதிகமாக மயங்கிப் போனேன். 

மண்டு கொழுக்கட்டை செய்வது ஒன்றும் சாதாரணமான காரியம் அல்ல. எங்கள் ஆப்கானிஸ்தான் ஏழை கிராம வீடுகளில், எப்போதாவதுதான், அதுவும் ஏதாவது விழாக்கள் அல்லது வீட்டில் விசேசம் என்றால் மட்டுமே, மண்டு கொழுக்கட்டை செய்து சாப்பிட்டு மகிழ்வார்கள். மற்ற நேரங்களில் எல்லாம் வெறும் ரொட்டியும், கஞ்சியும்தான்.

மண்டு கொழுக்கட்டையை, ஒருவராய்ச் செய்ய, நிறையப் பொறுமை வேண்டும். முதலில் ஆட்டுக்கறியை எலும்புகள் இல்லாமல் அறுத்து வைத்து, வெள்ளைப் பூண்டு, மற்றும் வெங்காயம் கலந்து, கைமா போல கொத்தி, அவித்து வைத்துக் கொள்ள வேண்டும். சட்டியில் கைமா கறி வேகும் போதே, ஏற்கனவே இடித்து வைத்த அரிசி மாவில், வெந்நீர் ஊற்றி, உருண்டை பிடிக்கும் பதத்திற்கு, பெரிய மாவு உருண்டையாக பிணைந்து பிணைந்து உருவாக்க வேண்டும். 

பின்னர், அந்த பெரிய மாவு உருண்டையை, சிறிய சிறிய உருண்டைகளாக பிய்த்து வைத்து, மரப்பலகையில் வைத்து தேய்த்து, வட்ட வடிவில் சப்பாத்திகள் போல செய்ய வேண்டும். 

அப்புறம் அந்த அரிசிச் சப்பாத்திக்குள் அவித்த ஆட்டுக்கறி கைமாவை, கொஞ்சம் வைத்து சதுர வடிவ சோமாஸ் பிடிக்க வேண்டும். அப்புறம் அதை அவிக்க வேண்டும். அப்புறம், அவித்த சோமாஸ்களை, ஏற்கனவே செய்து வைத்த, தக்காளி குருமாவுக்குள் போட்டு… 

இருங்கள்.. இருங்கள்… எனக்கு இந்தச் சமையல் குறிப்பைச் சொல்லும் போதே மூச்சு வாங்குகிறது… சமையல் குறிப்பே பாதிதான் உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். இந்த லட்சணத்தில், உண்மையான மண்டு கொழுக்கட்டை சமையலை,  நான் எப்போது முடிக்கப் போகிறேனோ? நினைக்கையில், எனக்கே சிரிப்பாய் வருகிறது.

அப்புறம் ஏன் இதை, இவன் ஒருவனுக்காகச் செய்துகொண்டு இருக்கிறேன்? முன்பின் தெரியாத இவனுக்காக, நான் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறேன்? எனக்குள் புரிந்தும் புரியாத ஒரு நிலை. 

அவன் இன்னும் ரூபாப் இசைத்துக்கொண்டுதான் இருந்தான். அவனது அந்த இன்னிசையோடு, எனது சமையலும் சேர்ந்து கொள்ள, இவை இரண்டின் கூடவே, எனது சிந்தனையும் கலந்தது.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இந்த வீட்டில், நான் ஒரு வேலைக்காரிதான், காலையில் இந்த வீட்டிற்குள் வருகிறேன்.. மாலையில் போகிறேன். 

ஆனாலும் கூட, இந்த ஆள் அரவம் குறைந்த, இந்த வீட்டிற்குள் நான் நுழையும் போதெல்லாம், வேலைக்காரியான நான்தான் முதலாளியம்மா… என் இஷ்டத்துக்கு எனது சமையல்தான்.. என் இஷ்டத்துக்கு தாம் தூம்தான்… இப்படி நினைக்கும்போதே எனக்கு சிரிப்பு வருகிறது. 

எனது பெயர் குல்பாரி. நான் முழுக்க முழுக்க ஒரு இஸ்லாமியப் பெண். இஸ்லாமிய மார்க்கம், எனது ரத்தத்தில் ஊறிய ஒன்று. எவ்வளவு வேலை இருந்தாலும், தொழுகையை நான் நிப்பாட்டியது இல்லை. எப்போதும் நான் முக்காடு போட்டே இருப்பேன். 

ஆனால், இந்த வீட்டுக்குள் நுழைந்தால் மட்டும், எனது முக்காடு, எனது  மேலே இருக்காது. அள்ளி முடிந்து இருந்த, எனது நீண்ட கூந்தலை அவிழ்த்து விட்டு, அதைத் தடவி, தடவி, “எனக்குத்தான் எவ்வளவு பெரிய கூந்தல்” என்று மண்டை கர்வம் கொள்வது எனது பொழுதுபோக்கு.

எனக்கு அப்பாவும் உண்டு, அம்மாவும் உண்டு. ஆனால், ஏழ்மையில் தவழும் ஒரு குடும்பம், எங்கள் குடும்பம். அதனால்தான், நான், முதலாளியம்மாவின் வீட்டோடு தங்கி, வீட்டுவேலை செய்கிறேன்.

முதலாளியம்மாவும் சரி… ஐயாவும் சரி.. மிகவும் நல்லவர்கள். அதனால், எனக்கும் நிம்மதி. என் பெற்றோர்களுக்கும் ஒரு நிம்மதி.

எங்கள் கிராமத்தின், நட்ட நடுவில், எனது முதலாளியம்மா வீடு இருந்தது. இந்த வீடுதான், அந்த கிராமத்திலேயே மிகப் பெரிய வீடு. அம்மாம் பெரிய வீட்டுக்குள், நான் வேலைக்காரியாக வேலை பார்ப்பதே, எங்கள் குடும்பத்துக்கு ஒரு பெருமைதான்.

பின் ஏன், ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கும், முதலாளியம்மாவின் இந்த வீட்டிற்கு வருகிறேன்? காரணம் இருக்கிறது.

எனது முதலாளி, இந்த வீட்டில்தான், தனக்கு வைப்பாட்டியாக, ஒரு பையனை வைத்து இருக்கிறார். இந்த ரகசியமான விசயம், எனக்கும், எனது முதலாளியம்மாவுக்கும் மட்டுமே தெரியும். 

இன்னும் ஒரு முக்கியமான விஷயம், எனது முதலாளியம்மாவின் சம்மதத்துடன்தான், எனது முதலாளி, இந்தப் பையனை வைப்பாட்டியாக வைத்து இருக்கிறார். பாவம், முதலாளியம்மாவை எவ்வளவெல்லாம் கொடுமை செய்து, முதலாளி, இந்த ஆண்-ஆண் உறவுக்கு, சம்மதம் வாங்கினாரோ… அது எனக்குத் தெரியாது.

ஆனால், வீட்டில் முதலாளி பழகும் விதத்தைப் பார்க்கும்போது, முதலாளியும் தங்கமானவராகவே எனக்குத் தெரிகிறார். இந்த வீட்டிலும் சரி… அந்த வீட்டிலும் சரி, அவர் அமைதியாகவே பேசுவார். ஒரு பெரிய சத்தம் இருக்காது. 

முதலாளியம்மாவும் தங்கமானவள்தான். கல்லூரிக்கே போகாத போதும், அவளுக்கு ஒரு தேர்ந்த ஆசிரியை போல, பிரமாதமாகப் படிக்கத் தெரியும், எழுதத் தெரியும், பேசத் தெரியும். ஏன் என்றால், அவள் தந்தை ஒரு பள்ளிக்கூடம் வைத்து நடத்தும் தலைமை ஆசிரியர். அவரும் முதலாளி போலவே பணக்காரர்தான்.

சமூகத்தின் நிர்பந்தத்தாலும், ஆப்கானிஸ்தான் பெண்கள் மீது நடக்கும் வன்முறையை, அதிகம் அறிந்தவர் என்பதாலும், வீட்டுக்குள்ளேயே வைத்து, தனது பெண்ணுக்கு, அவர் எல்லா கல்லூரிப் பாடங்களையும், சொல்லித்தந்து இருக்கவேண்டும். 

கடந்த நான்கு வருடங்களாக, நான் இங்கே வேலை செய்கிறேன். நானும் கூட, எங்கள் ஆப்கானிஸ்தானின், ஆரம்பப் பள்ளிக்கூடத்தில், கொஞ்ச நாள் படித்தவள்தான். என் பெற்றோர் வீட்டில், நாங்கள் தரி மொழியில் பேசுவதுதான் வழக்கம். 

ஆனால், ஒரு வேலைக்காரியான, எனக்கும் கூட எங்கள் தேசிய மொழியில் ஒன்றான தரி மொழியோடு, உருது மொழியிலும், பாரசீக மொழியிலும், எனக்கு எழுதவும் படிக்கவும் சொல்லிக் கொடுத்து இருக்கிறாள் முதலாளியம்மா,  

அவ்வளவு தங்கமானவள் எனது முதலாளியம்மா. ஒரு தேர்ந்த அறிவிஜீவி. எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பாள். அந்த கிராமத்தில், பலரையும் தெரிந்து வைத்துக் கொண்டு, அவர்தம் வீட்டுப் பெண்களுக்கு, தேவையான, நிறைய உதவிகள் செய்யும் ஒரு சமூக சேவகி. 

ஆனால் முதலாளியம்மா அவ்வளவு செய்தும் என்ன பயன்? உண்மையில், அவள் சம்மதத்துடன்தான், இந்த வீட்டிற்கு, இந்தப் பையன், ஆண்-ஆண் வைப்பாட்டியாக வந்து இருக்கிறான். 

முதலாளியம்மாதான், இவனுக்கு சோறு சமைத்துப்போட,  என்னை, தினமும் வீட்டில் இருந்து அனுப்பி விடுகிறாள். நானும், இங்கே வந்து எனக்குத் தெரிந்த சமையல் அதம் பண்ணுகிறேன்.

சோறு சமைத்துப் போடுவது மட்டுமல்ல. இம்மாம் பெரிய வீட்டை சுத்தம் செய்வதும் நான்தான். அதுவும், இந்த வீடு நிறைய இருக்கும் அந்த விலை உயர்ந்த  அந்த கலைப்பொருட்களை எல்லாம், துடைத்து முடிப்பதற்குள், எனக்கு கால் வலியே வந்துவிடும்.

எல்லாமே, காதல் காமக் களியாட்ட கலைப் பொருட்கள்தான். சில அரைகுறை ஆடையுடன்… சில அதுவும் இல்லாமல்.  

அழகழகான ஒயின் போத்தல்கள். பெயர் தெரியாத மது வகைகள். வீடு நிறைய நிறைந்து இருக்கும். எல்லாமே, முதலாளியும், இந்த வைப்பாட்டி பையனும் குடிக்கத்தான். 

இந்த வைப்பாட்டிப் பையன் குடிக்கிறானோ இல்லையோ, முதலாளியின் உற்சாகம் கூடினால், இவனும் அவரோடு சேர்ந்து குடித்தே ஆகவேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனக்கு சரியாகத் தெரியாத ஒரு விஷயம் இது.

முதலாளியம்மாவின் வீடு இப்படி இல்லை. நேர் எதிர் ஆக இருக்கும். வீட்டின் எங்கு திரும்பினும், ஒரு தெய்வீக மணம் கமழும். இறைவன் குறித்த நல்ல நல்ல வாசகங்கள் பொதிந்த சுவர் ஓவியங்கள், நம் கண்ணைக் குளிர்ச்சி ஆக்குவதோடு, நம் மனதையும் குளிர்ச்சி ஆக்கும். 

ஆனால், இந்த வீட்டிலோ வைப்பாட்டிக்கு ஏற்ற பல காமச் சிற்பங்கள். அழகு சாதனப் பொருட்கள். இத்யாதி.. இத்யாதி.

‘ஒரு ஆணுக்கு வைப்பாட்டி ஆகும் அளவுக்கு இவன் என்ன பெண் அழகனா? இவனுக்கு என்னைப் போல் பெரிய கூந்தல் இருக்கிறதா? என்னைப் போல் பெரிய மார்பகங்கள்?’ எனக்கு குபீர் என்று சிரிப்பு வந்தது. 

எனது பெருஞ்சிரிப்பு அவனுக்குக் கேட்டு இருக்கவேண்டும். இருப்பினும், அவன், விடாது தனது ரூபாப் இசையை, இசைத்துக்கொண்டே இருந்தான்.

‘இவ்வளவு அழகான இசையை அந்த ரூபாப் வாத்தியத்தில், அவன் எப்படித்தான் எழுப்புகிறான்?’. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கூடவே, அதைப் பார்க்கும் ஆவலும் எனக்குக் கூடியது, 

அடுப்பில் வைத்து இருந்த ஆட்டுக்கறி, ஜோராய் வெந்து விட்டது. இனி, அடுத்து, ஏற்கனவே உருட்டி வைத்த மாவில், வட்ட வட்ட அரிசி சப்பாத்திகள் செய்ய வேண்டும். அந்தச் சப்பாத்திகளுக்குள், ஆட்டுக்கறி கைமாவை சேர்த்து, சதுர சோமாஸ் செய்ய வேண்டும்.

அவன் இசையை, நேரில் கேட்கும் ஆர்வத்தில், நான், மண்டுக்குத் தேவையான அரிசி மாவு உருண்டைகளையும், மரப்பலகையையும், உருட்டுக் கட்டையையும் எடுத்துக் கொண்டு, அவன் ரூபாப் வாசித்துக்கொண்டு இருந்த அந்த நீண்ட பொதுவறைக்கு வந்தேன். 

அவன் வாசிக்கும் இடத்திற்கு மிக அருகில் போய், மண்டு சோமாஸ் பிடிக்க, வட்ட வட்ட மாவுச் சப்பாத்திகள் தேய்க்க ஆரம்பித்தேன். கூடவே, அவன் வாசிக்கும் அந்த அழகையும் ரசிக்க ஆரம்பித்தேன்.

நான் வந்ததை அவன் கவனிக்காததால், அவன் ரூபாப் வாசிப்பதிலேயே, கண்ணும் கருத்துமாக இருந்தான். நான் அவனை கவனித்தேன். என்ன ஒரு ஆண் அழகு? முதலாளி உயரம் இல்லாவிட்டாலும், இவனும் நல்ல உயரம்தான். முகத்தை சிரைத்து வழுவழு என்று அவன் இருந்தாலும், முகத்தில் இருந்த அந்தக் கருகரு முடி, கொஞ்சம் கண்ணுக்குத் தெரியாமல் இல்லை. பளபள என்று அப்படி ஒரு வெள்ளை நிறம். 

அவன் வயது, நிச்சயம் இருபதைக் தாண்டி இருக்கும். என்னை விட இரண்டு வயது பெரியவன் ஆக நிச்சயம் இருப்பான். 

கட்டிய மனைவியை அணைப்பது போல, ரூபாபை அவன் அணைத்துப் பிடித்து இருந்த விதம், இசைப்பதற்கேற்ப, தொடைகளை அவன் மடக்கி உட்கார்ந்து இருந்த விதம், இப்போது எனக்கு, அவன், ஒரு வானுலக தேவன் போலத் தோன்றினான்.

எப்படி இவன் பச்சா பாசி ஆனான்? நல்ல அழகான மனைவிதான் முதலாளியம்மா. அப்படியிருந்தும், இந்த ஆணின் மீது ஏன் முதலாளிக்கு ஆசை? எனக்கு ஆச்சரியம் ஆக இருந்தது.

கிராமத்து பெண்கள் அத்தனை பேருக்கும் பச்சா பாசி என்றால் என்னவென்று தெரியும். போன மாதம் கூட, முதலாளியம்மாவின் வீட்டில் இருந்து பத்து வீடு தள்ளி வசிக்கும், நூருன்னிசா மாமி, முதலாளியம்மா வீட்டிற்குள் வந்து, பச்சா பாசி பற்றி, கதை கதையாகப் பேசிக்கொண்டு இருந்தாள். எனக்கும் அவள் பேசுவது காதில் கேட்டது.

அவள் பிறந்த கிராமத்தில் இருந்த, ஒன்பது வயது ஏழைச் சிறுவர்கள் மூவரை, பணக்காரர் ஒருவர், விலை கொடுத்து வாங்கி, வலுக்கட்டாயமாகக் கூட்டிக்கொண்டு போனாராம்.. நூறு கிலோமீட்டர் தள்ளி இருந்த, பச்சா பாசி விடுதியில், அந்த மூன்று சிறுவர்களும், பச்சா பாசி ஆக்கப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்களாம். 

மூவரில் ஒரு சிறுவனின் தந்தை மட்டும், மனம் கேட்காது, பணக்காரர் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்து, தனது பையனை மீட்டு வந்தாராம். அந்தப் பையனும், அவன் அப்பாவும், அந்த சிறுவர் விபச்சார விடுதியில் நடக்கும் கொடுமைகளை, இவளிடம் சொன்னார்களாம். அதைத்தான் நூருன்னிசா மாமி, முதலாளியம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள். அதைக் கேட்ட நான், மிகவும் அதிர்ந்து போனேன்.

ஆனால், அன்று முதலாளியம்மா பதிலுக்கு ஒன்றுமே பேசவில்லை. அது ஏன் என்று அன்று எனக்கு விளங்கவில்லை. ஆனால், இன்று, இந்த பச்சா பாசிப் பையனைப் பார்த்ததும், அவள் மவுனம், எனக்கு விளங்கிப்போனது. 

“இன்று அவனிடம் எல்லா உண்மைகளையும், எப்படியும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்…” 

நான் அவனைப் பார்த்துக் கொண்டே, ஒவ்வொரு அரிசி உருண்டையாக, கட்டையில் தேய்க்க ஆரம்பித்தேன். அவனோ, என் பக்கமே பாராமல், கண்ணை மூடிக்கொண்டு, வாசித்துக்கொண்டு இருந்தான். எனக்குக் கொஞ்சம் எரிச்சல் வந்தது.

நபீல், தக்கார் மாகாணம், ஆப்கானிஸ்தான் 

இன்று ஏனோ தெரியவில்லை. எனது ரூபாப் இசைக்கருவியில், கஜல் இசை, அருவி போல கொட்டிக்கொண்டு இருந்தது. கஜல் கவிஞர், மிர் சாஹிப்பின் இந்த கஜல் பாடலுக்கு ஏற்ப, வந்து விழும் அந்த அற்புத கஜல் இசைக்குக் காரணம், ரூபாபின் கம்பிகளைத் தீண்டும் எனது விரல்களா அல்லது, ஜன்னலில் இருந்து வரும் தென்றல் காற்றின் சத்தம், ரூபாபின் இசையோடு கலப்பதாலா என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால், என்றும் இல்லாத ஒரு அற்புத இசையை இசைப்பதில், அதிகம் லயித்துப்போய், நான் ரூபாப் மீட்டிக்கொண்டு இருந்தேன். 

நேரம் போனதே தெரியவில்லை.கஜல் பாடலின் உச்சத்தை, ரூபாபில் மீட்டியபோது, என்னையும் அறியாமல், என் கண்களில், நீர் வந்தது. உணர்ச்சிவசப்பட்டவாறே பாடலையும் முடித்து விட்டேன். இனி, அடுத்த பாடல் பயிற்சி செய்யவேண்டும். 

ஆனால், நான் அதற்குள், கண்களை மூடிக்கொண்டு, தியான நிலைக்குச் சென்றேன். எனது நினைவலைகள் எங்கெங்கோ சென்றது.

இந்த வீட்டிற்கு, முதலாளி என்னைப் பார்க்க வந்து, இன்றோடு பத்து நாள் ஆகிறது. முதலாளி இந்த வீட்டில் இருந்தால், இரவென்றும் பகலென்றும் பாராமல், எனது உடல் அவருடைய ஆண்மைக்கு விருந்தாகிக் கொண்டே இருக்கும். 

அவர் சுவைத்த எனது மார்புக் காம்புகள், லேசான விண் விண் என்ற வலியைக் கொடுக்கும். எனது ஆசன வாயிலும், லேசான வலி இருக்கும். அந்த வலிகளை மறந்து, நான் முதலாளி முன்னால், ரூபாப் வாசிப்பேன்.

நான் அவர்முன் வாசிக்கும் போதெல்லாம், ‘ஆகா… ஓகோ’ என்று என்னைப் புகழ்வார். அவர் ஒரு சிறந்த பாடகர் என்பதால், நான் இசைத்த கஜல் இசையை, அப்படியே, கஜல் பாடலாக, மனமுருகப் பாடுவார். அவர் அந்தப் பாடலை பாடி முடித்த பின், அந்த கஜல் பாடலை எழுதிய கவிஞரை, மனமாரப் பாராட்டுவார். 

காதல் ரசம் சொட்டும், இந்தப் பாடல்களை எழுதிய கவிஞர், சில நேரங்களில், மிர் சாஹிப் மிர் ஆக இருக்கும். சில நேரங்களில், வாலி டக்கானி ஆக இருக்கும். சில நேரங்களில் அமீர் குஸ்ரு ஆக இருக்கும். 

யாராக இருந்தாலும், அந்தக் கஜல் காதல் கவிதைகளில் சொட்டும் காதல் ரசங்களை, என்னிடம் விளக்கமாகப் பேசி மகிழ்வதில், முதலாளிக்கு எப்போதும் பெருவிருப்பம் இருக்கும்.

அந்த மாதிரி நேரங்களில், நான் முதலாளி பேசுவதையே, ஆர்வமாக கவனிப்பேன். அவரது அன்பில், நேற்று அவரது திடகாத்திரமான உடம்பால், எனது உடம்பை இறுகக் கட்டிப்பிடித்து, என் மேல் ஏறி, எனக்குக் கொடுத்த, உடம்பு வலி, எனக்கு மறந்து போகும். நான், உற்சாகமாக இன்னும் பல கஜல் பாடல்கள் இசைப்பேன். சில நேரம் நான் பாடுவேன்.

ஆனால், என்னைவிட முதலாளி, மிகவும் நன்கு பாடுவார். அப்படி அவர் உணர்ச்சி வசப்பட்டு பாடும்போது, “முதலாளி இவ்வளவு பணக்காரர் ஆக இல்லாவிட்டால், இந்நேரம் உலகம் பாராட்டும் கஜல் பாடகர் ஆகி இருப்பார்’ என்று எனக்குத் தோன்றும்.

அப்படி ஒரு சுருதி சுத்தம். அப்படி ஒரு ஆலாபனை. அப்படி ஒரு கமகம். அவர் பாடும் போக்கை, நினைக்கையிலேயே எனக்கு மயிர்க் கூச்செறியும்.

பெரும்பாலும் நான் இசைக்கும் அல்லது பாடும் கஜல் பாடல்கள், ஆண்-ஆண் உறவு குறித்த காதல் பாடல்கள் ஆகவே இருக்கும். அப்படிப்பட்ட கஜல் பாடல்கள்தான் முதலாளிக்கும் நிறையப் பிடிக்கும். 

முதலாளி என்னை தனி வீட்டில் வைக்கும் முன்னர்,  பச்சா பாசி என்ற அந்த சிறுவர் விபச்சார விடுதியில்தான் நான் இருந்தேன். அங்கே வசிக்கும், எல்லா சிறுவர்களுக்கும், இந்தக் கஜல் இசை கற்றுத் தரப்பட மாட்டாது. 

மாறாக, அரங்கில், வந்திருக்கும், மற்ற ஆண் வாடிக்கையாளர்களை கவனிக்கும் அளவுக்கு, சில ஆடல் அசைவுகளும், சில பாடல்களும் மட்டுமே சொல்லிக் கொடுக்கப்படும். ஆனால், எனக்கு மட்டுமே, கஜல் இசை கற்றுக் கொடுக்க, முதலாளி ஏற்பாடு செய்து இருந்தார்.

பெரும்பாலும் சிறுவர்களுக்கு, இரவில், உடலுறவு தேடி வரும் வாடிக்கையாளர்களை, எப்படியெல்லாம் அவர் மனம் கோணாமல் கவனிக்க வேண்டும் என்று மட்டுமே அதிகம் சொல்லிக் கொடுக்கப்படும். 

சிறுவர் விபச்சாரமே, பச்சா பாசியின் அடிப்படை நோக்கம் என்பதால், அதை ஆளுமை செய்ய, அங்கே நிறைய முரடர்கள் இருந்தார்கள். ஆனாலும் கூட. எனது முதலாளிக்கு, அந்த பச்சா பாசி விடுதியில், எப்போதும் ஒரு தனி மரியாதை இருந்தது. 

நிறையப் படித்தவர், பணக்காரர் என்பதோடும் கூட, எனது முதலாளி கருணையானவர். எனவே, பச்சா பாசிக்கு வரும், ஆண் வாடிக்கையாளர்களும் சரி, பச்சா பாசியை நடத்தும் அந்த முரடர்கள் ஆக இருந்தாலும் சரி. எல்லோருமே முதலாளியின் வார்த்தைக்கு கட்டுப்படுவார்கள்.

ஆரம்பத்தில் மட்டுமே, நான் பச்சா பாசி விடுதியில் தங்கி இருந்தேன். அப்புறம் என்னையும் என் புத்திசாலித்தனத்தையும் பார்த்த முதலாளி, என்னை பச்சா பாசியில் இருந்து விடுவித்து, பக்கத்திலேயே இன்னொரு வீடு எடுத்து, என்னை அவரது ஆசை நாயகன் ஆக்கிக் கொண்டார். நான் ரூபாப் படிக்கவும், கஜல் இசை படிக்கவும், ஏற்பாடுகள் செய்தார். ஆறு ஆண்டுகள் கழிந்தபின்தான், முதலாளி, அவரது சொந்த ஊருக்கே, என்னைக் கூட்டி வந்து இருக்கிறார்.

நான், இன்னும் என் கண்களை மூடி, ரூபாப் இசைத்துக்கொண்டுதான் இருந்தேன். கூடவே, எனது முதலாளியின் நினைவலைகள் வேறு. வெளியே, தென்றல் காற்று, இப்போது பலமாக வீசத்தொடங்கியது. 

கூடவே… அட.. அது என்ன ‘தடக் தடக்’ என்று ஒரு சத்தம்? நான், என் கண்களைத் திறந்து பார்த்தேன். எதிரில். குல்பாரி கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு, ஏதோ சப்பாத்திகள் தேய்த்துக்கொண்டு இருந்தாள்.

நான் அவளை நேரில் பார்த்ததும், அவசரம் அவசரமாகத் தலை குனிந்து கொண்டாள். ஆனால், அவள், பலகையில், சப்பாத்தி தேய்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை. நான், அவளை உற்றுக் கவனித்தேன். 

நன்கு சப்பாத்தி தேய்ப்பதற்கு ஏதுவாக, அவள் தனது மார்பகங்களை மறைத்து இருந்த, மாராக்குத் துணியை, கழுத்தில் சுற்றி இருந்தாள். எனவே, அவளது, புடைத்த இரு மார்பகங்களும், எனது கண்களுக்கு நேராகத் தெரிந்தது.

எவ்வளவு அழகான, அளவான, எடுப்பான மார்பகங்கள். அவளது கழுத்துக்குக் கீழ் இருந்த வெண்மை நிறத்தை வைத்தே, அவளது மார்பகங்களின் வெண்மை அழகை என்னால் உணர முடிந்தது.

அவள், சப்பாத்தியை, குனிந்து தேய்க்க தேய்க்க, அவள் இரு மார்பகங்களும் நடனமாடியது.

காலையில் இருந்தே, இந்த வீட்டைக் கூட்டிப் பெருக்கி நிறைய வேலைகள் செய்து இருப்பாள் போலும். இப்போது சமையல் வேலைகள் வேறு. எனவே, அவளது அக்குளில், அவள் மேல் சட்டையையும் மீறிக் கசிந்த வியர்வை நீர்… எனது மூக்கைத் துளைக்கும் அவளது அந்த வியர்வை வாசம்.

காலை நீட்டி உட்கார்ந்த, அவளது தொடையழகு. குனிந்து குனிந்து நிமிரும் போது, உடையை மீறித் தெரியும் அவளது இடையழகு. 

முதன் முதலில், இவ்வளவு நேரில், நான் ஒரு பெண்ணைப் பார்ப்பது இதுவே முதல் தடவை. 

எனது ஆண்மை, இப்போது விழித்துக்கொண்டது. 

தொடரும்

Series Navigationநண்பரின் பதினோராவது வீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *