This entry is part 8 of 8 in the series 19 ஏப்ரல் 2026

  • ‘வார்த்தை’ பி.கே. சிவகுமார்

2026க்கான எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருதை, எழுத்தாளர் க. மோகனரங்கன் பெறுகிற மகிழ்ச்சியான தருணத்தையொட்டி, “சொல்ல வந்ததற்கும் சொல்லில் வந்ததற்கும் நடுவே” (க. மோகனரங்கன் எழுத்துலகு) என்கிற  நூல் வெளியாகிறது. 20க்கும் மேற்பட்ட வண்ணப் புகைப்படங்களுடன் நூலின் மொத்த பக்கங்கள் 345+. 

நூலின் தொகுப்பாசிரியர்கள் எம். கோபாலகிருஷ்ணன், ‘வார்த்தை’ பி.கே. சிவகுமார். தேநீர் பதிப்பகம், ஜோலார்பேட்டை இந்நூலைப் பெருமையுடன் வெளியிடுகிறது.

க. மோகனரங்கன் படைப்புகளைக் குறித்து, கலாப்ரியா, ராஜ சுந்தரராஜன், பாவண்ணன், பெருமாள் முருகன், கோபால் ராஜாராம்,  அ. ராமசாமி, எம். கோபாலகிருஷ்ணன், சு. வேணுகோபால், முனவர் கான், கண்டராதித்தன், கே.என். செந்தில், லாவண்யா சுந்தரராஜன், றாம் சந்தோஷ், கவியரசு, ‘வார்த்தை’ பி.கே. சிவகுமார் ஆகியோர் எழுதிய 15 கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. நேர நெருக்கடியால் இந்நூலில் எழுத இயலாத சில எழுத்தாளர்களும் இந்த முயற்சிக்கு ஊக்கமளித்து ஆதரித்ததையும் இங்கே நினைவு கூர்கிறோம்.

இந்நூலைத் திட்டமிட்டபோது 8ல் இருந்து 10 விமர்சனக் கட்டுரைகள் இந்தக் குறுகிய காலத்தில் கிடைத்தால் பெரிய விஷயம் என நினைத்தோம். 15 விதவிதமான பார்வைகள் க. மோகனரங்கனின் எழுத்துகளை அலசி ஆய்ந்திருப்பது வாசகருக்கு நிச்சயம் விருந்தாக அமையும்.

இக்கட்டுரைகளோடு க. மோகனரங்கனின் நேர்காணல்கள் மூன்று, அவரின் நூலைக் குறித்துத் தமிழின் கவிஞர்கள் பங்கேற்ற இலக்கிய உரையாடல் ஒன்று, க. மோகனரங்கனின் தேர்ந்தெடுத்த கவிதைகள், சிறுகதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், மொழிபெயர்ப்புக் கதை, அவர் இலக்கிய வாழ்வின் புகைப்படங்கள், பிரத்யேகமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனச் சேர்ந்து, இந்நூல் ஓர் எழுத்தாளரை அறிந்து கொள்ள உதவும் ரீடருக்கு (களஞ்சியத்துக்கு) ஒரு சிறந்த உதாரணம்.

மிகக் குறுகிய காலத்தில் – 10 நாட்களுக்குள் கட்டுரைகள் தந்து ஒத்துழைத்த எழுத்தாளர்கள் முதல், நான்கு வாரங்களுக்குள் ஒரு தரமான நூலை வெளிக்கொண்டுவர உதவிய அனைவருக்கும் நன்றி!

இந்தப் புத்தகம் வந்தபின், விருது பெற்றவருக்குப் பரிசுத் தொகை கூட,  இந்த மாதிரி ஒரு புத்தகம் கொண்டு வருவதுதான் முக்கியமானது எனப் பேசப்படும்.  காலத்தால் நிற்கிற, முன்மாதிரியாக இருக்கப் போகிற ஆவணமாகவும் இந்நூல் திகழும்.

ஏப்ரல் 26, 2026 ஞாயிறன்று க. மோகனரங்கன் எழுத்தாளர் பி.ச. குப்புசாமி விருது பெறும் விழாவில் இந்நூல் விமரிசையாக வெளியாகும். 

இந்தப் புத்தகம் எப்போதும் இலக்கிய ஆர்வலர்களிடம் இருக்க வேண்டிய புத்தகம். வீட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு நூலகத்திலும் இருக்க வேண்டிய தொகுப்பு. மாணவர்க்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் பரிசாகக் கொடுக்கப் பொருத்தமான புத்தகம். கவிதையிலும் விமர்சனத்திலும் மொழிபெயர்ப்பிலும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு உதவுகிற நூல். 

இந்த  நூல் குறித்த ஆர்வம் கிளர்த்தும் அறிமுகத்தையும், அழகான அட்டையையும் பகிர்வதில் மகிழ்கிறோம்.

இந்த நூலின் பின்வரும் பின்னட்டைக் குறிப்பு நூலை இவ்விதம் அறிமுகம் செய்கிறது:

“க. மோகனரங்கன், 1980களுக்குப் பின் எழுத வந்த எழுத்தாளர்களில் வசீகரமான கவிதை மொழியும், நுட்பமான விமர்சனப் பார்வையும் கொண்டவர்.  தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்க் கவிதைகளின் எந்தத் தொகுப்பும் இவர் கவிதைகள் இல்லாமல் முழுமை பெறாது. சங்கக் கவிதைகளின் அகப்பாடல்களின் படிமத்தையும் ஆழத்தையும் நன்றாகப் புரிந்து கொண்ட நவீனத் தொடர்ச்சி என்கிற பாராட்டு இவரின் பல கவிதைகளுக்குப் பொருந்தும். பிற எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து இவர் எழுதியவை, அந்த எழுத்தாளரையும் படைப்பையும் எவரும் அறிந்து கொள்ள உதவும் சிறந்த திறவுகோல்கள். அத்தகைய விமர்சனங்கள் நுண்ணுணர்வு கொண்ட ரசனையின் அடிப்படையிலானவை மட்டுமல்ல, தமிழ் இலக்கியத்தின் பல்வேறு போக்குகளை உள்வாங்கியும் எழுதப்பட்டவை. மோகனரங்கன் தேர்ந்தெடுத்துச் செய்யும் மொழிபெயர்ப்புகளில் மூல ஆசிரியரின் எழுத்தின் கலாசாரத்தையும் நுட்பத்தையும் கலைத்திறனையும் கெடுக்காமல் தமிழில் கொடுப்பதில் முனைப்புக் காட்டுகிறார். தமிழில் எழுதவரும் எவரும் எழுத்தில் மட்டுமில்லாமல் தனிமனித ஆளுமையிலும் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கவர் க. மோகனரங்கன். 

கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாசிரியர், சிறுகதையாசிரியர் எனப் பல பரிமாணங்களில் இயங்குகிற க. மோகனரங்கன், 2026‍ல் எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருதைப் பெறுகிறார். இத்தருணத்தையொட்டி, அவர் ஆக்கங்களைக் குறித்த முக்கியமான தமிழ் எழுத்தாளர்களின் பார்வைகள், மோகனரங்கனின் தேர்ந்தெடுத்த படைப்புகள், புகைப்படங்கள், வாழ்க்கைத் தருணங்கள் உள்ளடக்கிய ஓர் அறிமுகத்தையும் ஆவணத்தையும் தமிழ் வாசகப் பரப்புக்கு ஒரே இடத்தில் கொடுக்கும் விதமாக‌ வந்துள்ள இந்த நூல் உள்ளடக்கத்தில் ஆழமும் தனித்துவமும் கொண்டது. ஓர் எழுத்தாளரைக் கௌரவிப்பதில் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கது. தமிழ் இலக்கியத்துக்கு க. மோகனரங்கனின் பங்களிப்பை மதிப்பிடவும், புரிந்து கொள்ளவும் உதவும் ஒரு சிறந்த கையேடு.”

Series Navigationவார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் சிறுகதைக் கலந்துரையாடலில், அடுத்து ஜெயந்தன் எழுதிய “மனச்சாய்வு”