பஞ்சதந்திரம் தொடர் 13 சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்

This entry is part 43 of 44 in the series 16 அக்டோபர் 2011

சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்

 

ரு அரசனின் அரண்மனையில் தனக்கு நிகரில்லை என்னும்படி மிக அழகான பஞ்சணை ஒன்று இருந்தது. அதன் மேல்விரிப்பு மடிப்பின் ஒரு ஓரத்தில் மந்த விசர்ப்பிணி என்னும் ஒரு சீலைப்பேன் இருந்துவந்தது. அரசன் தூங்கும்போது அவனுடைய ரத்தத்தைக் குடித்து அது வளர்ந்தது. பிள்ளையும் பேரனுமாகப் பெற்றெடுத்துப் பெரிய குடும்பமாக வாழ்ந்தது. அரசனின் ரத்தம் குடித்துக் குடித்து அதன் உடம்பு அழகாகவும் புஷ்டியாகவும் காணப்பட்டது. இப்படி இருக்கும்போது ஒரு நாள் காற்றில் அடித்துக்கொண்டு வந்த ஒரு தெள்ளுப்பூச்சி அந்தப் பஞ்சணையின்மேல் விழுந்தது. டுண்டுகம் என்பது அதன் பெயர். வழவழப்பான மேல்விரிப்பு, தலையணைகள், கங்கை நதியின் மணற்பரப்பைப்போல் பரந்துகிடக்கும் மென்மையான வாசனை மிகுந்த படுக்கை, எல்லாவற்றையும் கண்டவுடனே தெள்ளுப்பூச்சிக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டுவிட்டது. அதை ஸ்பர்சிப்பதில் நிறைய சுகம் இருக்கக்கண்டு இங்கும் அங்கும் திரிந்துகொண்டே வந்தபோது, விதி வசத்தால் மந்தவிசர்ப்பிணியைச் சந்தித்தது.  அதைப் பார்த்துவிட்ட சீலைப்பேன், ”நீ எங்கிருந்து வந்தாய்? இது ராஜாக்களுக்குரிய படுக்கையாயிற்றே! இதை விட்டுப் போய்விடு, சீக்கிரம்!” என்றது.

 

அதற்கு டுண்டுகம் நயந்த குரலில், ”அப்படிச் சொல்லாதீர்கள் அம்மா! ஏன் என்று கேளுங்கள்!

 

பிராமணன் அக்னிக்கு மரியாதை செய்கிறான்; பிராமணனை மற்ற ஜாதியினர் மரியாதை செய்கிறார்கள்; கணவனை மனைவி மரியாதை செய்கிறாள்; விருந்தாளியை எல்லோரும் மரியாதை செய்கிறார்கள்.

 

நான் உங்களுடைய விருந்தாளி. பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்று பலவிதமான மனிதர்களின் ரத்தத்தை நான் குடித்து ருசி பார்த்திருக்கிறேன். அது காரமாகவும், பசபசப்பாயும், சத்தில்லாமலும் இருக்கும். ஆனால் இதில் படுக்கிற அரசனின் ரத்தமோ மனோரம்மியமாய் அமிருதம்போல் கட்டாயம் இருக்கும். அடிக்கடி வைத்தியர்கள் தந்த மருந்து முதலான வைத்தியங்களால் இந்த ரத்தம் வாதம், பித்தம், கபம் மூன்றும் இல்லாமல் இருக்கும். நிலம், நீர், ஆகாயம் முதலியவற்றில் உள்ள உன்னதமான ஜந்துக்களின் மாமிசத்திலிருந்து தயாரித்த எண்ணெய், தைலம், இளந்தளிர்கள், சர்க்கரை, மாதுளை, சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி முதலியவற்றின் சத்தேறிய உணவுகளைச் சாப்பிட்டு விருத்தியடைந்திருக்கும் இந்த ரத்தம் எனக்கு ஜீவாம்ருதமாக இருக்கும். எனக்கு வளமும், மணமும், ருசியும், மகிழ்ச்சியும், தரும். அதை ருசி பார்க்க விரும்புகிறேன். கொஞ்சம் தயவு செய்யுங்கள்” என்றது.

”நீ கடித்தால் நெருப்பைப்போல் சுடுகிறது; உன் வாய் அப்படி” என்று சீலைப்பேன் சுட்டிக்காட்டி, ”உன்னைப் போன்றவர்களுக்கு இது லாயக்கான ஜாகை இல்லை. நீ போய்விடு!

 

இடம், நேரம், முறை, எதையும் அறியாமல் – எதிரியின் பலத்தையும் தனது திறனையும் உணராமல் – யோசனையின்றி நடந்துகொள்கிற மூடன் எந்தப் பலனும் பெறுவதில்லை.

 

என்கிற பழமொழியை நீ கேட்டதில்லையா? என்று பதிலளித்தது சீலைப்பேன்.

 

தெள்ளுப்பூச்சி விடவில்லை அதன் கால்களில் விழுந்து மீண்டும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. கடைசியில் சீலைப்பேனுக்குத் தாட்சண்யம்  பிறந்தது. ‘சரி, போ’ என்று சொல்லிற்று. இப்படிச் சீலைப்பேன் ஒப்புக் கொண்டதற்கு ஒரு காரணமும் இருந்தது. ஒருநாள் மூலதேவன் என்கிற திருடனின் மகனைப் பற்றி யாரோ ஒருவன் அரசனுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தான். விரிப்பின் ஒரு மூலையிலிருந்துகொண்டு சீலைப்பேன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தது. அப்போது யாரோ பெண்மணி கேட்ட கேள்விக்கு அந்த மூலதேவன்,

 

”காலில் விழுந்து கெஞ்சுகிறவனைக் கோபித்து மதிக்காமல் இருக்கிறவன் மும்மூர்த்திகளையும் அவமானப் படுத்துகிறான்”

 

என்று பதில் சொன்னானாம். அந்த வார்த்தை இப்போது ஞாபகத்துக்கு வந்ததினால் தான் சீலைப்பேன் ஒப்புக்கொண்டது. அதே பொழுதில், ”கண்ட நேரத்தில் கண்ட இடத்தில் எல்லாம் ரத்தம் குடிக்கப்போய் விடாதே” என்றும் சொல்லி வைத்தது.

 

”நான் புதிதாக வந்தவன். சரியான இடம், சரியா வேளை, எது என்பதொன்றும் எனக்குத் தெரியாதே!” என்றது தெள்ளுப்பூச்சி.

 

”அரசன் குடிபோதையிலிருக்கிற நேரம், அல்லது நல்ல அசதியிலே கிடக்கிற நேரம், அல்லது நித்திரை வசமாகியிருக்கும் நேரம் பார்த்துப் போ! சத்தம் போடாமல் போய்க் காலைக் கடி! சரியான வேளையும் இடமும் அதுதான்” என்றது சீலைப்பேன்.

 

”அப்படியே செய்கிறேன்” என்று தெள்ளுப்பூச்சி ஒப்புக் கொண்டது. ஆனால், சும்மா ஒப்புக்கொண்டால் மட்டும் போதுமா? அந்த முட்டாள் தெள்ளுப் பூச்சி ரத்தங்குடிக்கத் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தது. அந்தி வேளையில் அரசன் சற்றுக் கண்ணயர்ந்தவுடனே அதுபோய் அரசன் முதுகில் கடித்தது. அதன் கடி தீ சுடுகிற மாதிரி, தேள் கொட்டிய மாதிரி, கொள்ளி செருகிய மாதிரி, அரசனுக்கு இருந்தது. துடிதுடித்துத் துள்ளியெழுந்து விட்டான். பலமாகச் சொறிந்துகொண்டான். வேலைக்காரனை வரவழைத்து, ”அடே, ஏதோ பூச்சி ஒன்று என்னைக் கடித்துவிட்டது. படுக்கையில் தேடிப் பார்!” என்று கத்தினான்.

 

அரசன் கட்டளையைக் கேட்டுப் தெள்ளுப்பூச்சி பயந்து நடுங்கியது. ஓடிச் சென்று கட்டிலின் ஒரு இடுக்கிலே புகுந்து கொண்டது. அரசன் கட்டளைப்படி வேலைக்காரர்கள் விளக்கை எடுத்து வந்து சர்வ ஜாக்கிரதையாகத் தேடினார்கள். சீலைப் பேனுக்கு வந்த கெட்டகாலம் அது விரிப்பின் இழைகளினூடே ஒளிந்து கொண்டிருந்ததைச் சேவகர்கள் கண்டு விட்டார்கள். அதைக் குடும்பசகிதமாகப் பிடித்து நசுக்கிக் கொன்றனர்.

 

ஆகையால்தான், ‘முன்பின் தெரியாதவனுக்கு ஜாகை தராதே…’ என்றெல்லாம் சொல்கிறேன். மேலும், இன்னொரு விஷயத்தையும் கேளுங்கள். பரம்பரையாக வேலை பார்க்கும் ஆட்களை நீங்கள் புறக்கணித்தது பிசகு. எவ்விதம் என்றால், ஆப்த நண்பர்களை விட்டுவிட்டு கண்டவர்களோடு எல்லாம் சிநேகம் கொள்கிறவன், சண்டரவன் என்கிற மூடநரி போல், மரணமடைகிறான் என்றது தமனகன்.

 

”அது எப்படி?” என்று பிங்களகன் கேட்கவே, தமனகன் சொல்லத் தொடங்கியது:

Series Navigationசலனக் குறிப்புகள்முன்னணியின் பின்னணிகள் – 9 சாமர்செட் மாம்
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *