இரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்

This entry is part 32 of 44 in the series 30 அக்டோபர் 2011

என்னை என்றும் ஆச்சர்யப்படவைப்பது மொழிபெயர்ப்பு நூல்கள். நாம் ஒன்றை எழுதி விடலாம்., கொஞ்சம் வாசிப்பு மற்றும் அனுபவ சேகரிப்பு போதும். ஆனால் மொழிபெயர்ப்பில் அந்த மொழி சிதைவுறாமல்., சொல்லவந்த கருத்துக்கள் பிழைபடாமல் சொல்வது கடினம். ஒரு மொழிபெயர்ப்பாளன் வாசகர்க்கும், அந்த நூலை எழுதிய எழுத்தாளனுக்கும் உண்மையாய் இருக்க வேண்டும். தன் கருத்து. ஒர் சார்பு நிலை எந்த இடத்திலும் வெளிப்பட்டுவிடாமல் காக்க வேண்டும். ஒரு சிருஷ்டிகர்த்தாவை விட கடினமான பணி அதைப் போன்ற குறைவில்லாத உயிர் சிற்பம் செய்வதே. அசலின் எல்லா குணங்களும் நகலிடமும் இருக்கவேண்டும்., எந்தச் செதுக்கலும் இல்லாமல். இதை சிறப்புறச் செய்திருப்பதால் இந்த நூல் பலவருடம் கழித்தும் என் கவனத்தை மிக ஈர்த்தது. இதன் ஆசிரியர் கே.என். மகாலிங்கம். இதற்கு அ. முத்துலிங்கம் கொடுத்துள்ள முன்னுரை ரத்னஹாரத்தில் நடுவில் பதித்த வைரம் போன்றது.
.
பொதுவாக பல நாடுகளைச் சேர்ந்த சிறுகதைகளை மொழிபெயர்க்கும்போது பரந்துபட்ட அனுபவங்களோடு அந்தந்த நாட்டின் வாழ்வுமுறைகள், சீதோஷ்ணம், அரசியல், வரலாறு, இலக்கியம், இலக்கிய ஆசிரியர்கள் எல்லாருமே கொஞ்சமாவது பரிச்சயமாய் இருந்தால்தான் சிறப்பாக புரிந்துணர்வோடு சரியாக மொழிபெயர்க்க முடியும். இதில் 200 கதைகள் படித்து அதில் 17 கதைகளை மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர் கே. என் மகாலிங்கம். ஒவ்வொரு மொழிபெயர்ப்பு எழுத்தாளர்களும் எனக்கு பாரதியை நினைவூட்டுகிறார்கள். சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்திங்கு சேர்ப்பீர் என்பதைப் போல நம் மொழி மட்டுமே அறிந்த நன்கு வாசிக்கும் ஆசையுள்ள ஒவ்வொரு வாசகனையும் இம்மாதிரி நூல்கள் சென்றடைகின்றன. கலாசாரங்களையும் நாடுகளையும் மக்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.

சிறுவயதில் என் அம்மா புத்தகத் திருவிழாக்களில் வாங்கிக் கொடுத்த மீகயில் கோர்பசேவ் சிறுகதைகள், ரஷ்யச் சிறுகதைகள், அப்படியே மனதில் பதிந்து போயிருக்கின்றன. இம்மாதிரி புத்தகங்களையும் தமிழ் வாசகர் வட்டம் படித்து தங்கள் மொழியை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஈழத்தமிழ் அவ்வளவு இனிமையாக இருக்கிறது. கொஞ்சம் வார்த்தைகள் , ஊர் பெயர்கள் படிக்க சிறிது சிரமப்பட்டாலும் படிக்கப்படிக்கச் சரளமாகி ஒன்றிவிடுகிறோம். அந்தந்த இடங்களுக்கே நம்மை அழைத்துச் செல்லும் இந்தக் கதைகள் சிறுகதைவடிவங்கள், எழுத்துக்கள் அறுகிவரும் இந்நாளில் அனைவருமே படிக்க வேண்டியவை.

ரஷ்ய நாவலாசிரியர் பியோதர் தஸ்தாவ்யெஸ்கியின் கள்வன் எமிலியன் என்ற நேர்மையான கள்வன் பற்றியது. குடிக்க சில திருட்டு வேளைகளில் வீட்டிலேயே ஈடுபடும் குடிகாரர்களின் செயலை ஒத்திருந்தது அஸ்ராஃபி இவானிச்சின் களிசானை எடுத்திருந்த எமிலியனின் மன்னிப்பு வாக்குமூலம். தஸ்தாவ்யெஸ்கி எப்போதும் எளிய ஏழை மக்களின் கஷ்டங்களை, அவர்கள் வாழ்வியல் துயரங்களை, குற்றங்களை, திருந்துதல்களை அப்படி அப்படியே படைத்திருக்கிறார். மனதை நெகிழ வைத்த கதை.

ரஷிய நாடகாசிரியர் அண்டன் செக்காவின் ஒரு கலைப் படைப்பு – அன்பளிப்பின் கதை, நமக்கு வரும் பரிசுப் பொருட்களை எல்லாம் நாம் அடுத்தவர்க்கு எப்படி பார்சல் செய்கிறோம் என்பதை நகைச்சுவையாக விவரித்தது.

ஐரிஷ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்சின் எவ்லின், தந்தைக்காகவும் குடும்பத்துக்காகவும் தன் எதிர்கால வாழ்க்கையை தியாகம் செய்யும் பெண்களை ஒத்திருந்தாள். சுயநலமற்று இருப்பது என்பதன் பிம்பம் போல., தன் எதிர்காலத்தை அவள் தெரிந்தே இழப்பதும் தன் காதலனைப் பிரியும் போது கூட காதலின் அடையாளத்தையோ, பிரிவின் அடையாளத்தையோ காட்டாமல் இருப்பதும் வருத்தம் வர வைத்த முடிவு.

கனடாவின் ஃபேர்லி மோவாட்டின் உறைபனியில் நடப்பவன் உணவுக்காக பனிப்பிரதேசங்களில் வாழ்பவர்களின் கஷ்டத்தை உணர்த்தியது. ஜீவிதம் எவ்வளவு கடினமானது என்பது புரிந்தது. அதில் கொஞ்சம் மாவையும் மானிறைச்சியையும் வைத்துக் கொண்டு அவர்கள் அன்றாடம்காய்ச்சிகளாக வாழ்வது கொடுமை. உறைபனியில் நடப்பவர்கள் வாழ்பவர்களுக்கான உணவு மானாக மாறுவது கற்பனையா உண்மையா என பதட்டப்படவைத்தது., பசியின் கொடுமை.

போலந்தின் ஐசக் பாஷவிஸ் சிங்கரின் அமெரிக்காவிலிருந்த மகன் சிறுகதை மிக அருமை. பேளாவும் பேளாச்சியும் என் மனதைக் கவர்ந்தவர்கள். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என வாழ்பவர்கள். மகன் அனுப்பிய பணம் முழுவதும் பெட்டியிலேயே வைத்துவிட்டு தன் உழைப்பாலே வாழ்ந்துவரும் அவர்களின் எளிமை யதார்த்தம் ரொம்பப் பிடித்தது., இப்படித்தான் வயதானபின் நாமும் வாழவேண்டும் என்ற தூண்டுதலோடு.

அர்ஜெண்டினாவின் லூயிசா வலென்சுவலாவின் இரவில் நான் உன் குதிரை .. இந்தக் கதை ஆவிகள் குதிரை மீது சவாரி செய்வதை விளக்குவது போல இருந்தாலும் அவள் மனம் கவர்ந்தவனோடு அவள் மனதில் தினமும் அழியாத உறவு கொள்கிறாள். அதை அவனின் வருகை என நினைத்து போலீசார் வருவதும் பின் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதும் சிறப்பாக வடிக்கப்பட்டிருந்தது.

நைஜீரியாவின் சினுவா ஆச்செபியின் பலி முட்டை மந்திரித்த எலுமிச்சை பற்றிய பயத்துக்கு ஒப்பானது. தொற்றுநோயினால் பீடிக்கப்படும் ஒரு நகரத்தையும் அதில் தன் பிரியத்துக்குரியவர்கள் சிக்கிக் கொள்வதுமான ஒரு சித்திரம் வரையப்பட்டது.

பிரிட்டிஷ் நாவலாசிரியையான வர்ஜீனியா வுல்ஃபின் லப்பினும் லப்பினோவும் மிகப் பிடித்த கதை. திருமணமாகும் போது ஆண் தன் மனைவியின் சின்னச் சின்ன ஆசைகளுக்கும் எண்ணங்களுக்கும் மதி்ப்புக் கொடுப்பது போல பின்னர் கொடுப்பதில்லை. ஒரு கட்டத்தில் அந்த முகமூடி கழண்டு விழுகிறது உண்மையான முகத்தை காண்பித்தபடி. அதன் வலியை., இளஞ்சிவப்புக் கண்களோடு உறைபனியில் நின்ற வெள்ளை முயல் காட்டுக்குள் தொலைந்து போனது போல திருமண வாழ்வில் தொலைந்த முயலான லப்பினோவை எல்லாப் பெண்களின் பிரதியாகவும் உணரலாம்.

வி.எஸ். நைபோலின் தாய்ப்பாசம் கொஞ்சம் வித்யாசம். 7 கணவர்களுக்கு 8 பிள்ளைகள் பெற்றவள் லோரா, தன் மகள் லோணாவை கவட்டைக் கால் கறுப்பு வேசை என அழைக்கிறாள். விநோதம் ஒரு தாய் சொல்லத் தயங்கும் சொல் அது. மேலும் லோணாவுக்கும் லோரா போல பிள்ளை உண்டானபோது அழுவதும், பின் அவள் இறந்ததும் அதை எதார்த்தமாக எடுத்துக் கொள்வதும், படிப்புத்தான் முக்கியம் என தன் பிள்ளைகளைப் படிக்க வைப்பதும் வாழ்வின் முரண்கள்.

ஐசக் டினேசன் என்ற பெயரில் எழுதியவர் ஒரு பெண் எழுத்தாளராம். இவரின் மேலங்கி ஒரு குருவுக்கும் சிஷ்யனுக்கும் அவனது குருபத்னிக்குமான உறவை சொல்வது.. அவர் கலகக்காரர் என பிடிபட்டு மறுநாள் சிரச்சேதம் எனும் போது சிறையில் அவருக்கு பதிலாக அவர் தன் மனைவியை பார்த்து வரும்வரை அவன் பிணையாக இருக்கும் கதை. மூவருக்குமான உறவு, உணர்வுகள் பற்றியும் குருவின் நேர்மை பற்றியும் பேசும் கதை.

பிரான்சிஸ்கோ ஜிமனேஸின் மீண்டும் சிறுகதை திராட்சைத் தோட்டங்களில் கூலித்தொழிலாளியாக புலம் பெயர்பவர்களின் கதை. படிக்க சிலகாலம் வாய்ப்புக் கிடைக்கும் பையனின் மனவோட்டங்கள் , குடும்ப சூழலை கண் முன் நிறுத்திய கதை. பொதுவாக எல்லாரின் அனுபவங்களும். வாழ்வியலும் கலந்துதான் கதைகள் படைக்கப்படுகின்றன என்பதற்கு பியோதர் தஸ்தாவ்யெஸ்கியும் பிரான்சிக்ஸ்கோவும் சிறந்த உதாரணங்கள்.

ரிக் பாஸின் மறியல் வீடு முற்றிலும் வேறான கதை. சொல்பவன் கதை நாயகனினிடம் உதவியாளனாக இருப்பவன். கலேனா ஜிம்மின் இரட்டைக் காதல், கேளிக்கைகள் , கள்ளத்தனம்., வேட்டைப் பிரியம் என நடுத்தர வயதில் இருக்கும் அவன் இன்னும் இளைஞன் போலவே செயல்பட விரும்புவது கதை முழுதும் வருகிறது. ஆனால் அவனின் 19 வயது மகன் ஆயுள் தண்டனை அனுபவித்தபடி மறியல் வீட்டில் இருக்கும்போது இவனது கேளிக்கைகள் அவன் விட்டுப் போன வாழ்வைத் தொடர்ந்து யயாதி போல வாழ்வதாய் இருக்கிறது.

கல்கத்தாவின் சித்ரா திவகருண்ணியின் திருமதி தத்தா கடிதம் எழுதுகிறாள் எனக்கு நாம் கே வாஸ்தே படத்தை நினைவூட்டியது. மகன் அல்லது மகள் வீட்டில் இறுதிக் காலத்தில் அடைக்கலமாகும் ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் குழந்தைகளும் சந்திக்கும் பிரச்சனைகள்தான் இது. இதில் நாடு வித்யாசமே இல்லை. எல்லா இடத்திலும் பெரியவர்கள் பொருந்திக் கொள்வது கஷ்டம். அவர்கள் பிறப்பு வளர்ப்பு பழக்க வழக்கம் அப்படி. இதை அழகாக விவரித்திருக்கிறார் சித்ரா. 3 முதிய பெண்கள் சென்னையில் வீடு எடுத்துத் தங்கள் வயதான காலத்தை அமைதியாக அழகாக கழித்தபடி இருப்பதைப் பார்க்கிறேன். அதன்படி தான் தன் தோழி ரோமாவுன் தன் கடைசிக் காலத்தைக் கழிக்க வரும்போது வீடுகேட்பது மனதைத் தொட்டது. மேலும் வெளிநாடுகளில் நம் ஊர் போல துணி துவைப்பதும் உலர்த்துவதும் கூட மிகக்கடினம்தான் கீதா பென்னட்டின் ஒரு கதையிலும் படித்திருக்கிறேன்.

குஷ்வந்த்சிங்கின் ஔரங்கஷீப் அலம்கீர்:ஹிந்துஸ்தான் பேரரசன் ஒரு மாபெரும் பேரரசின் வாழ்வையும் வீழ்ச்சியையும் கூறியது. மத நேயரான ஔரங்கஷீப்பின் பரம்பரையில்தான் மனிதநேயரான அக்பரும் உதித்திருக்கிறார். மத நேயராய் இருந்தாலும் ஒரு நேர்மையான பேரரசராயும் தூய்மையானவராயும், தன் உணவுக்கு தொப்பி நெய்து , குரான் எழுதி விற்றுச் சம்பாதித்தவராயும் திகழ்ந்தது பிரமிப்பூட்டியது.

ஜும்பா லாஹிரியின் திருமதி சென்னுடைய கதை புலம் பெயர்ந்த பின்னர் உறவினர்களை விட்டுத் தனித்திருப்பதன் கொடுமையையும் சிலர் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள் முடியாமல் இருப்பது விரக்தி அளிப்பதையும் உணர்த்தியது. தற்காலிக பேபி சிட்டராக இருக்கும் அவர் மீன் தேவைக்காக காரோட்டக் கற்பதும், எலியட்டை அழைத்துச்சென்று விபத்து ஏற்படுவதும் பின் பேபி சிட்டிங்கை விடுவதும் கதை. நடுவில் அவள் விருந்தோம்பலாக எலியட்டின் அம்மாவுக்குத்தரும் உணவு அவளுக்குப் பிடித்தமானதாயில்லை என்பது குறிப்பிடப்படுகிறது. பொதுவாக அவர்கள் இந்த மாதிரி அடுத்தவர்களின் நாடு சார்ந்த உணவுகளை விரும்புவதி்ல்லை என பதிவு செய்யப்படுகிறது. அவனின் அம்மாவோடு அலுவலக ஆண் ஒரு இரவில் தங்கிச் செல்வதும் அந்த மக்களின் யதார்த்தமான வாழ்வை காட்டியது.

லியோனார்ட் மைக்கேல்ஸின் குரங்குடன் ஒரு பெண் கதையில் ப்யெட் மனைவியை விவகாரத்து செய்த பின் சந்திக்கும் விலைமாதான இங்கருக்காக தோடுகள் வாங்குவதும், அவள் தான் வளர்க்கும் குரங்குக்கு ஈடாக அவனைச் சொல்வதும் வித்யாசம். அவள்மேல் ஆன்மிகக் காதல் வயப்படுவதும் கடைசியில் அவளையே சந்தித்து வாழவிரும்புவதும் வித்யாசமான கதை.

ரஷியாவின் ஐசக் அசிமோவ் இன்றைய தொழில் நுட்பத்தில் விளைந்த ரோபோவை வீட்டின் சின்னக் குழந்தையாக தத்தெடுப்பதும் பின் ஒரு ஆபத்து வரும்போது தன் மகனைக் காப்பாற்றாமல் ரோபோ குழந்தையின் மேல் கொண்ட அன்பால் அதை முதலில் காப்பாற்றியதுமான ஒரு தாயின் கதை. கொஞ்சம் திகிலடிக்க வைத்தது முடிவு. நாம் எந்த அளவுக்கு எந்திரங்களுக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை யோசிக்க வேண்டும்.

இப்படிப் பல்வேறுபட்ட சூழல்களிலும் நாடுகளிலும் வாழ்ந்திருந்த எழுத்தாளர்களின் கதைகளைப் படிப்பதன் மூலம் நமக்கும் விசாலமான மொழி அறிவு கிடைக்கிறது. இதுபோல் இன்னும் தமிழில் நிறைய எழுத்தாளர்களின் படைப்புக்கள் மொழிபெயர்க்கப்படவேண்டும். தமிழ் எழுத்துக்களும் மற்றைய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படவேண்டும். இதுவே இலக்கிய வளர்ச்சிக்கான வழி. அதை செம்மையாக செய்திருக்கும் திரு கே. என் . மகாலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Series Navigationகூடங்குளம்இதுவும் அதுவும் உதுவும் – 2
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    maduraisaravanan says:

    அருமையான விமர்சனம்… மொழிப்பெயர்ப்பு நூலை சரியான படி புரிந்து விமர்சித்துள்ளதால் தான் , மொழிபெயர்ப்பின் அவசியத்தை பற்றியும் , மொழிப்பெயர்ப்பாளரைப் பற்றியும் தெளிவாக சொல்லி யுள்ளீர்கள்.. பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *