தீபாவளி நினைவுகள் — 1
——————————————-
நடு வயதுக்காரர்களுக்கு இப்போதும் தீபாவளி பற்றிய பழைய ஞாபகங்கள் பக்ஷணங்கள்போலவே சுவையாகத்தான் இருக்கும். சின்ன வயதில் ஒரு மாதத்திற்கு முன்பே தீபாவளிக்கு மனசு தயாராகிவிடும். நண்பர்களோடு பேச்சு தீபாவளியைப் பற்றி மாத்திரமே இருக்கும். எத்தனை ஸ்வீட், எத்தனை ட்ரஸ், எவ்வளவு பட்டாசு என்ற பேச்சில் நிறைய புருடாக்கள் இருக்கும். மிஷினுக்குப்போய் மாவு அரைத்து வருவது எனக்குப் பிடிக்காத வேலை. முதல் காரணம் கும்பல். இரண்டாவது, மிளகாய்ப் பொடி அரைக்கவும் மற்றவை அரைக்கவும் தனித்தனி மிஷினும் தனித்தனி வரிசையும். நான் ஒருவனே இரண்டையும் அரைத்துவர அனுப்பப்படுவேன். அண்ணன், தம்பி அக்கா எல்லோருக்கும் நிறைய ஹோம் வொர்க்கோ அல்லது திடீர் வயிற்று வலியோ வந்துவிட நான் மட்டும் பைத்தியம் போல் மாட்டிக்கொள்வேன். கூட இரண்டு முறுக்கு தருவதான பொய் வாக்குறுதியில் ஏமாந்து சிங்காரவேலன் கமல் மாதிரி உடம்பெல்லாம் பைகளையும்( அழுக்கு வெய்ட் வேறு) பாத்திரங்களையும் சுமந்துகொண்டு போய் அம்மாவின் அன்புக்கும் பாத்திரமாவேன்.
மில்லில் முதல் நாளே கல்லை அடையாளமாகப் போட்டுவிட்டுப்போனவர்கள் நான் போய் ஒரு மணி கழித்துத்தான் வந்தாலும் அவர்கள்தான் ஸீனியர்களாகக் கருதப்பட்டு பரமபதத்தில் பாம்பு கடிபட்டவனாய் கடைசிக்குப்போய் விடுவேன்.( இதைச் சொன்னால், எனக்குத் துப்பு இல்லை என்று சொல்வான் வயிற்று வலியால் துடித்துகொண்டிருந்து நான் கிளம்பிப்போன பத்து நிமிஷத்திற்கெல்லாம் வயிறு சரியாய்ப் போகும் என் அண்னன்). ரெண்டு வரிசையிலும் பாத்திரங்களையும் பைகளையும் வைத்துவிட்டு கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். நமக்கு முன் கேழ்வரகு அரைக்க வைத்திருந்தால் நாம் அரிசியோ கடலைப்பருப்போ அரைக்க முடியாது. மறுபடியும் சீனியாரிட்டி தள்ளிப்போகும். அதை வேறு கவனிக்கவேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் துப்புக்கெட்டுப்போய்விடுவேன் என்பதோடு இல்லாமல் முறுக்கும் ஐயர்ன் டானிக் சாப்பிட்டவன் டாய்லெட் போல கருப்பாக இருக்கும். ” ஏண்டி முறுக்கு செவந்துபோச்சு?” என்று கேட்பதற்கு பதிலாக,” ஏண்டி கறுத்துப் போச்சு?” என்று கேட்கும்போதெல்லாம் எல்லோரும் என்னையே முறைப்பார்கள். அடிஷனாலாக இரண்டு இல்லை, எல்லா முறுக்கையும் எனக்கே கொடுத்துவிடுவார்கள்.
கடலை மாவை கடலைமாவு அரைத்தபின்னும், அரிசியையும் அணிமாறாமலும் அரைத்துவரவேண்டும் என்றால் எவனாவது ஒருவன் வீட்டில் திட்டு வாங்கியே ஆகவேண்டும்.
இது தவிர மிளகாய் வரிசையின் பக்கம் கண் வைத்துக்கொள்ளவும் வேண்டும். அங்கும் ஹைப்ரிட் ஆகிவிடக்கூடாது. போஸ்ட் பேஸ்ட் ரிசர்வேஷனைவிட இது கஷ்டம். இதுதவிர, மில்காரன் அம்மாசொல்லிவிட்ட அளவை ஒத்துக்கொள்ளமாட்டான். அரை கிலோ அதிகம் என்று சொல்லி கூடக்காசு வாங்கிவிடுவான். நானே அளவுகளை மாற்றிச் சொல்லி மாட்டிக்கொண்டதும் உண்டு. மிளகாயோடு மல்லி, மஞ்சள், எள், இலை தழை குச்சி என்று எதெதையோ போட்டு வைத்து ( வாசனைக்காம்) அதற்கும் மில்காரனிடம் திட்டுவாங்கவேண்டியிருக்கும். சிலசமயம் இந்த கூட்டணி தான்யங்களால் மிஷின் நின்றுபோனதும் உண்டு. தனித்தனியாய் ( தனியா என்று இதனால்தான் பெயரோ?) லோகல் பாடி எலெக்ஷன் போல அரைத்துவரவும் கட்டளை இருக்கும். இவ்வளவு தடைகளைமீறி அரைத்தபின், பாத்திரங்களை உடனே மூடிஎடுத்துக்கொண்டு வர முடியாது. கொஞ்சம் காற்றாட வைத்துக்கொண்டு வரவேண்டும். பலசமயங்களில் காற்று ரொம்ப ஆடிவிட அதனால் வந்த துன்பங்களும் அதிகம். மிளகாய் அரைக்கும்போது வந்த தும்மலின் தொடர்ச்சியோடு வீடு போய்ச்சேரும்போது மணி எட்டாகியிருக்கும். அம்மா மட்டும் சாப்பிடாமல் எனக்காகக் காத்திருப்பாள். குழைந்த சாதமும் ரசமும் ” உனக்கு மாத்திரம்தான்” என்று போடும் வடாமும் அம்மாவின் அன்பை ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்தில் காட்டும்
தீபாவளி நினைவுகள் – 2
—————————————–
வாங்கிவைத்திருக்கும் வெடிகள் கொஞ்சமாகவே தெரியும் ஒவ்வொரு தீபாவளிக்கும். நண்பர்களின் வீடுகளில் வாங்கியிருப்பது எப்போதும் அதிகமாகவே தெரியும். எல்லோரும் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே வெடிகளை வெடிக்கத் தொடங்கியிருப்பார்கள். இங்கோ தீபாவளிக்கு முதல் நாள்தான் வெடியே வாங்கலாமா என்று யோசிப்பார்கள். எல்லாம் வறுமைதான். அது அப்போது புரிந்ததே இல்லை. வெடிப்பவர்களின் வீட்டின் முன் ரெண்டு காலையும் அகற்றி நின்றுகொண்டு கைகளைப் பின்பக்கம் பிணைத்துக்கொண்டு ஸ்டாண்- அட்- ஈஸில் அவர்கள் வெடிப்பதை நானே வெடித்ததாய் நினைத்து சந்தோஷம் கொண்டிருப்பேன்.
வீட்டில் சகோதரர்களுடன், ரொம்ப லேட்டாக வாங்கிய வெடியைப் பிரித்துக்கொள்வதில் அவ்வளவு சீக்கிரம் உடன்பாடும் காணமுடியாது. வழக்கம்போல நான் இளிச்சவாயனாகி நிறைய கேப் டப்பாக்களோடு லொடுக்கு சீட்கள் கிடைத்த அதிமுக கூட்டணிக் கட்சிமாதிரி வருவேன். கொடுத்த ஒரே ஒரு சர வெடியையும் டிஸ்மேண்டில் செய்து ஒத்தை வெடிகளாக்கி ரொம்ப நேரம் வெடிப்பேன். மதியம் அப்படி வெடித்துக்கொண்டிருந்த ஒரு நாள், தூக்கம் கெட்டுப்போன கடுப்பில் எல்லாவற்றையும் பிடுங்கி சாக்கடையில் போட்டுவிட்டான் பக்கத்து வீட்டுக்காரன். யாரிடமும் சொல்லாமல், வெடிக்காத வெடிபோல நான் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தேன்.
ஒரு தீபாவளின் நாளின் முன்தினம் வெடிவாங்கப்போகும் குழுவில் நானும் சேர்த்துக்கொள்ளப்பட்டு டவுனுக்கு ஐந்து மைல் நடந்துபோனோம். வெடி வாங்கப்போகும் உற்சாகத்தில் நடப்பது ஒன்றும் ஸ்ரமமாகத்தெரியவில்லை. வரும்போது பஸ்ஸில் வந்துகொள்ளலாம் என்று பெரியவர்கள் தீர்மானம் செய்து கொண்டதில் எனக்கு ஒன்றும் பங்கு இல்லை என்றாலும் கூட்டணி தர்மத்தில் சிறிய கட்சிகளின் கருத்துக்கு வாய்ப்பே இல்லை என்பது எனக்கு அப்போதே தெரிந்திருந்தது. பெரிய கடைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு இருப்பதிலேயே வெளிச்சம் கம்மியான கடை ஒன்றைத் தேர்ந்தெடுத்து ( அங்குதான் ரேட் கொஞ்சம் கம்மிஎன்று டேபுலேஷனில் தெரிந்தது) வெடிகளை ரெண்டே செகண்டுகளில் ஆர்டர் செய்துவிட்டார்கள். எனக்கு அங்கு இருந்ததிலேயே ஒரு ராக்கெட்மட்டும்தான் பிடித்திருந்தது. சந்திராயன்போல இருந்த அதை ரொம்ப அலங்காரம்பண்ணி பாதுகாப்பாக வைத்திருந்தான் கடைக்காரன். தாய்க்கலன் சந்திரனில் நிற்பதுபோல நின்றுகொண்டிருந்தது அது. நான் பார்த்துகொண்டிருந்ததை கவனித்த கடைக்காரன், அது ஐந்து ரூபாய் என்று காங்கிரஸ் சின்னத்தைக்காட்டினான். அதோடு, அந்த ராக்கெட் மேலேபோய் ரெண்டு தடவை வெடிக்கும் டபுள்ஷாட் என்று பில்ட் அப் கொடுத்தான். ரஷ்ய க்ரயோஜனிக் உதவியோடு செய்ததுபோல அதை வாஞ்சையோடு எடுத்து தடவிக்கொடுத்தான். ஒரு பக்கம் பார்த்தால் கட்டிங் ப்ளேயர் போலவும் இருந்தது அது. சிகப்புக் கலர் பேப்பர் அலங்காரத்தில் மெல்லிய பளபளப்பான பாலித்தின் பேப்பர் சுற்றப்பட்டிருந்ததில் குண்டு பல்பின் வெளிச்சம் ஒரு மாயாஜாலத்தை ஏற்படுத்தியிருந்தது.’ மொத்தமாகவே ஐம்பது ரூபாய்க்குத்தான் பட்டாஸ் வாங்குவார்கள் போலிருந்த சமயத்தில் ஒரு ராக்கெட் மாத்திரம் ஐந்து ரூபாய்க்கு வாங்குவார்களா என்ன’, என்ற கேள்வியெல்லாம் காதல் கொண்ட மனதிற்கு தெரியுமா என்ன? நான் ஒன்றுமே பேசாமல் ப்ரமை பிடித்ததுபோல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்த திக்கில் என் பெரிய அண்ணனும் பார்க்க நான் அந்த ராக்கெட்டை நோக்கிக் கைகாட்டினேன். அதெல்லாம் நம் குடும்பத்துக்கு சரிவராது ; வேண்டுமென்றால் இதை வாங்கிக்கொள் என்று இருப்பதிலேயே ஒல்லிப்பிச்சானாய் இருந்த ஒரு ராக்கெட்டைக்காண்பித்தான் என் அண்ணன். எனக்கு அழுகை பிய்த்துக்கொண்டுவர, கடைக்காரன் ” புள்ள கேக்குதில்ல, வாங்கிக்குடுங்க சாமி. வருஷத்துக்கு ஒரு தீபாவளிதானே” என்ற உபரியான தகவலையும் கொடுத்தான். என் அழுகை இன்னும் பெரிசாகியது, வருஷத்துக்கு ஒரு தீபாவளிதானே என்ற சோகத்தினால். இப்போது எதிர்பாராமல் என் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தார் எப்போதும் சாந்த ஸ்வருபீயான என் அப்பா. நான் இன்னும் சத்தமாய் அழ ஆரம்பித்தேன். சீன் கிரியேட் ஆவதைத் தவிர்க்க உடனே என் அண்ணன் என்னைக் கூட்டத்திலிருந்து தள்ளிக்கொண்டு வெளியே வந்துவிட்டான். என்னைக் கூட்டிக்கொண்டுவந்ததே தப்பு என்றும் ஒரு முறை திருப்பதியில் நான் டெம்பரரியாகக் காணாமல்போயிருந்தபோது தேடிக்கண்டுபிடித்திருக்கவே கூடாது என்றும் இன்னும் ஃப்ளாஷ் பேக்கில் போய் நான் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அக்கௌண்டில் சரிசெய்யமுடியாத திருத்தங்களை வார்த்தைகளில் போட்டுக்கொண்டிருந்தான். இதனிடையே, அப்பா மீண்டும் சாந்தஸ்வரூபியாகி, என்னை அடித்ததற்கு ப்ராயச்சித்தமாயாய் அந்த ராக்கெட்டையே வாங்கிவந்திருந்தார். கடைக்காரனும், என்னை செட்யுஸ் பண்ணினதற்குப் ப்ராயச்சித்தமாய் ஒரு ரூபாய் டிஸ்கௌண்ட் கொடுத்திருந்தான் ( மொத்தத்தில்தான் ). கதை இங்கே முடியவில்லை.
தீபாவளி அன்று ராக்கெட்டை லான்ச் செய்வதென்றும் வீட்டிற்கு எதிரே உள்ள ட்ரைனேஜ் மூடியை லான்ச்சிங்க் பேடாகவும் இஸ்ரோ ரேஞ்சுக்கு திட்டமிட்டிருந்தோம் நானும் என் அன்புத்தம்பியும். எங்களின் பெருமைமிகு தருணமே அந்த தீபாவளியின் இரவாக இருக்கப்போவதாக பகலையெல்லாம் சாதரணமாகச் சில்லரை விஷயங்களில் கவனம் செலுத்தாது கழித்தோம். அந்தக் குறிப்பிட்ட சுபயோக வேளை நெருங்க நெருங்க அட்ரீனலின் ரொம்பப்படுத்தியது. தம்பிக்கு அந்த ராக்கெட், நிலாவில் போய் லேண்டாகி வெடித்தால் அங்கு வடைசுட்டுக்கொண்டிருக்கும் கிழவிக்கு ஏதாவது ப்ராப்ளம் வந்து நிலா க்ளீன் ஸ்லேட்டாகிவிடுமோ என்ற அச்சம்வேறு. ” எல்லாரும் போந்தாரோ போந்தென்றெண்ணிகொள்” என்று சரஸ்வதி டீச்சர் சொல்லிக்கொடுத்த திருப்பாவையின்படி தம்பி வந்த நண்பர்களை எண்ணிக்கொண்டிருந்தான். மழைவேறு ராகெட்டை விண்ணுக்குள் செலுத்துவதைத் தடை செய்ய சதிபண்ணிக்கொண்டிருந்தது. சரியாக 7.31க்கு கௌண்ட் டவுன் ஆரம்பித்து நானும் என் தம்பியும் சேர்ந்து அந்த ராக்கெட்டின் அனியாயத்துக்குக் கொஞ்சமான திரியில் நடுங்கிக்கொண்டே எரியும் கம்பிமத்தாப்பை வைத்தெடுத்தோம். ஒரு புள்ளி நெருப்பு ஒட்டிக்கொண்டிருந்து எப்போதுவேண்டுமானாலும் அணைவேன் என்று பயப்படுத்திக்கொண்டிருந்தது. எல்லோரும் மகரஜோதிக்குக் காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்போல காத்திருந்தார்கள். தம்பியோ ரெண்டு மூன்றுதடவை டாய்லெட் போய்வந்தான்.
கடைசியாக யாரும் எதிர்பாரா தருணத்தில் ராக்கெட் கிளம்பி சரியாகப் ப த்தடி மேலெழும்பி ஒருதடவையும் உடனேயே அவசரமாக மறந்துபோய்விடக்கூடாது என்பதுபோல ரெண்டாவது தடவையும் வெடித்துவிட்டுத் தாயகம் திரும்பிவிட்டது. நண்பர்களெல்லோரும் ஓவென்று கத்திக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் ஏதோ அபர காரியத்துக்கு வந்தவர்கள்போல் ஓடிவிட்டார்கள். எங்களால் அன்றிரவு மட்டுமல்ல சில வாரங்களுக்கே தூங்கமுடியாமல் போயிற்று. அந்தத் தீபாவளிக்கு வாங்கியதில் மிச்சமிருந்ததையும் வெடிக்கமனமில்லை. ஆனால் என் பெரியண்ணன் மட்டும் ரொம்ப சந்தோஷமாயிருந்ததுபோல எனக்குப்பட்டது.
தீபாவளி நினைவுகள் – 3
—————————————-
ரோட்டி, கபடா ஔர் மாக்கான் என்ற வழக்கு வரிசையில் தீபாவளிக்கு பலகாரம், ட்ரெஸ் மற்றும் வெடி . எங்கள் வீட்டில் பெண்களுக்கு மட்டும் கலர் கலராய், தனித்தனியாய் ட்ரெஸ் வாங்கிக்கொடுப்பார்கள். ஆனால் பசங்களுக்கு அப்படிக்கிடையாது. கடைசி மூன்று பேருக்கு ஒரே கலரில் மிக நீளமாய் அரை பேல் அளவிற்கு சட்டைத்துணியும், அதைவிட அதிகமாய் ட்ரௌஸர் துணியும் வாங்கிவருவார்கள். அப்போது புதிதாய் முளைத்திருந்த சாரதாஸ், கீதாஸ் போன்ற கடைகளையெல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு, யாருமே சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாத— நீண்ட கடைத்தெருவில் நெருப்புப் பெட்டியை செருகிவைத்ததுபோன்ற— ஒரு கடையில்தான் ஜவுளி வாங்குவார்கள். அங்குதான் கடனுக்குத் துணிதருவான். சென்னியப்பா ஸ்டோர்ஸ் என்ற பெயர் இருந்தபோது குண்டு பல்பு அழுதுவடிந்து அந்த கடையின் பெயர் காண்பித்துக்கொண்டிருந்தது, திடீரென்று நேமோலாஜிஸ்ட் உபயத்தில் பூர்விக சென்னியப்பா என்றாகி ட்யூப் லைட்டுக்கு மாறியது ஒன்றுதான் மாற்றம். மற்றபடி, ரெண்டு மூன்று கிழவர்களும் ( ஓனர்ஸ் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் ஒருத்தரை ஒருத்தர் நம்பாமல் இருந்தார்கள் ) ஒரு சின்னப் பையனும்தான் கடையில் எப்போதும் மாற்றமில்லாமல் இருப்பார்கள். அதிக வெரைட்டியெல்லாம் இருக்காது. பெரிய கேள்விகளுக்கு ( பார்ட் சி ) பதில் எழுதுவதுபோல் பெண்களுக்கு மாய்ந்து மாய்ந்து ட்ரெஸ் வாங்குபவர்கள் பசங்களுக்கு என்று வரும்போது அப்ஜெக்டிவ் கேள்விகளுக்கு பதில் தரும் அலட்சியம்தான் இருக்கும். ஏதோ மீன்பிடிக்க வலைபோடுபவன் போல படு அலட்சியமாகத்தான் கடைக்காரக்கிழவனும் துணிசுற்றியிருக்கும் அட்டையை ஒருபக்கம் துணியைப்பிடித்துக்கொண்டு விட்டெறிவான். ஒருசமயம் அப்படிவிட்டெறிந்தபோது ஒரு சிறிய ஓட்டையை ட்ரௌசர் துணியில் பார்த்துவிட்டேன். அதைச்சொன்னபொது முதலில் வேண்டாம் என்று சொன்ன அப்பா கடைக்காரக்கிழவனின் டிஸ்கௌண்ட் ஆசைகாட்டலுக்கு இரையாகி ,வெட்டும்போது டெய்லர் சரிசெய்துவிடுவான் என்று எனக்கு சமாதானம் சொல்லிவிட்டார். டெய்லரும் அதைபார்க்காமல் தைத்துவிட்டான். என் அதிர்ஷ்டம், எப்போதும்போல் அந்த ஓட்டை எனக்குத் தைத்த ட்ரௌசரில் சரியாக மறைக்கப்படவேண்டிய பாகத்திலேயே அமைந்துவிட்டது. முதலில் சின்னதாக யாராலும் உற்றுப் பார்த்தாலொழிய கண்டுபிடிக்கமுடியாமலிருந்தது, பின் ஓஸோன் ஓட்டைபோல் பெரிதாகி இரண்டு மாதத்திலேயே அந்த ட்ரௌசரை போட்டுக்கொள்ளமுடியாமல் செய்துவிட்டது.
இப்படியான ஒரு கடையில் வாங்கிய துணிவகைகள் எங்கள் மூவருக்கும் ஒருபோதும் பிடித்ததில்லை. என்னதான் அழுது புரண்டாலும் காவி சேர்ந்த கலரில் அமைந்த சட்டையும் கருப்புக்கு மிக நெருக்கமான கலரில் அமைந்த ட்ரௌசரும்தான் எங்களுக்கு. அழுக்கு தெரியாது என்பதோடு அதுதான் கடையிலேயே மிகக்குறைந்த விலையில் கிடைப்பதாகவும் இருக்கும். ஒருமுறை நான் ஓவராக சிவாஜி பாணியில் அழுது ட்ரெஸ்ஸுக்கு எதிர்ப்பு தெரிவித்துகொண்டிருந்தபோது என் தம்பியும் ராய்னாவோடு ஆடும் கோலி போல ப்ரமாதமாக ஈடுகொடுத்துக்கொண்டிருந்தான். பேச்சு வார்த்தையில் சமாதானப்படுத்தமுடியாது என்று கண்டுகொண்ட அம்மா ஜெ பாணியில் ” வேணுண்ணா இதப்போட்டுக்கோங்கோ; இல்லேன்னா பெரியவனுக்கு இதையும் கொடுத்துடுவேன். நீங்க அம்மணக்குண்டியோட தீபாவளி அன்னிக்கு அலையுங்கோ” என்ற மிரட்டலில் பொய் எதுவும் இல்லாததுகண்டு, என் தம்பி உடனடியாக ” இவன் போட்டுக்கலைன்னா, நானே போட்டுக்கறேம்மா” என்று பல்டியடிக்க நானும் அம்மாசொன்ன கோலத்தில் தீபாவளியன்று இருப்பது நரகாசுரனுக்குப் பிடிக்காது என்பதால் அமைதியானேன். கொஞ்ச நேரம் கழித்து அம்மா கொடுத்த ஸ்வீட் கொஞ்சம் உப்புக்கரிப்பதுபோல்தான் இருந்தது எனக்கு.
அப்பா அண்ணண்களுக்கு வேஷ்டி ,பெரியவர்களுக்கு டெரிலீன் சட்டை, பட்டாபட்டி அண்டர்வேர் துணி, ஒரு டஜன் துண்டு போன்றவற்றோடு எங்களுக்கான ” ட்ரெஸ் மெட்டீரியல்ஸ்”களை ஒரு பெரிய முரட்டுத் துணியில் கட்டிக்கொடுப்பான் கடைக்காரன். ப்ளாஸ்டிக் பைகளோ, ஷாப்பர்ஸ் பைகளோ கிடையாது. ஆளுக்குக் கொஞ்சதூரம் தூக்கிவரவேண்டும். துணி வாங்கிவருவதைவிட எங்களுக்கு அதிக வருத்தம் கொடுப்பது அதைத் தைக்கக் கொடுக்கும்போதுதான். அளவெடுக்கும்போதே அம்மா டைலரிடம் சொல்லிவிடுவாள், ” வளர்ர பசங்க, அதனால கொஞ்சம் விட்டு அளங்க ” என்று சொல்வதுதான் தாமதம். டைலரின் டேப் தொப்புளுக்குமேலிருந்து முழங்கால்வரை சர்ரென்று போய்விடும். நாங்கள் நுனிக்காலில் நின்று சமாளிக்கப் பார்த்தாலும் தைத்தபின் அது போலிஸ்காரனுக்கு தைத்ததுபோல்தான் இருக்கும். நாங்கள் இருபது வயதுவரை அதைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்ற தொலை நோக்கு அம்மாவுக்கு. ஒன்பதாம் வகுப்புவரைக்கும் வார்வைத்த ட்ரௌஸரை டைகர் தாத்தாச்சாரி மாதிரி போட்டுக்கொண்டு அலைந்தது , ஜிப் வந்தபிறகும் பட்டன் வைத்தே ட்ரௌசர் தைப்பது, பட்டன்களும் அடிக்கடி பிய்ந்துபோவது போன்ற உபத்திரவங்கள் எற்படுத்திய காயங்கள் சொல்லிமாளாது. பெரியண்ணண்களின் கொஞ்சம் விலையுயர்ந்த ஆடைகள் அவர்கள் மேலும் பெரியவர்கள் ஆகும்போது படிப்படியாக சின்னவர்களுக்கு வரும். ஆனால் அது என்வரையில் வருமுன்னரே கிழிந்துபோய்விடும் . அட் ஹாக் ப்ரோமோஷன் வரவிருக்கும் சமயத்தில் போஸ்ட்டே சரண்டர் ஆகிவிடுவதுபோல அல்லது கடைமடைக்குக் காவிரி நீர் போய்ச்சேராதது போல.
இதைவிட சோகம் , என் பக்கத்துவீட்டு அக்கா தைக்கக் கற்றுக்கொண்ட காலம்தான். அவளுக்கு ப்ளௌஸ் தைப்பதைவிட முக்கியம் எனக்கும் தம்பிக்கும் சட்டை தைப்பதுதான். டூ பை டூ, சீட்டி மற்றும் பெண்களுக்கான துணிகளில் எங்களுக்கு சட்டை தைத்துவிடுவாள். ஜாக்கெட்டிற்கு கட்டிங்க் முடிந்த கையோடு எங்கள் சட்டைத் துணியையும் வெட்ட ஆரம்பித்திருப்பாள் எப்போதும். அதனால் நாங்கள் பரந்த நெஞ்சமும் ஒடுங்கிய இடுப்பும்கொண்டு அலைய வேண்டியிருந்தது. போதாக்குறைக்கு எம்ப்ராய்டரி போட்டுத்தருகிறேன் பேர்வழி என்று அவள்போட்ட ரோஜாக்களை மறைக்க அதன் மேல் பாக்கெட் வைக்கவேண்டியிருந்தது.
இப்படிப் பல தீபாவளிகள் கஷ்டத்திற்கு நடுவிலேயும் சந்தோஷமாகத்தான் போனது. அம்மா, அப்பா, அண்ணா என்று ஒவ்வொருவராய்ப் ‘போன’பின் நாங்களே பெரியவர்களாய்ப் போனதில் தீபாவளியின் ஸ்வாரஸ்யம் குறைந்து அது வெறும் லீவு நாளாய்ப் போய்விட்டது.
- வெண்வெளியில் ஒரு திருவாலங்காடு(ALAN GUTH’S INFLATION THEORY)
- வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்!
- கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…
- தமிழ் மகனின் வெட்டுப்புலி- திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 14
- அக்கறை/ரையை யாசிப்பவள்
- முடியாத் தொலைவு
- காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!
- இரவுதோறும் கரும்பாறை வளர்கிறது
- தான் (EGO)
- ‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை
- ”மாறிப் போன மாரி”
- தாலாட்டு
- ராசிப் பிரசவங்கள்
- நேர்மையின் காத்திருப்பு
- விலகா நினைவு
- நம்பிக்கையெனும் கச்சாப்பொருள்
- தீபாவளி நினைவுகள்
- நிரந்தரமாய்…
- என் பாட்டி
- சிலர்
- மீண்டும் முத்தத்திலிருந்து
- நீவிய பாதை
- தமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க.
- புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 .
- இதம் தரும் இனிய வங்கக்கதைகள்
- பழமொழிப் பதிகம்
- நிலத்தடி நெருடல்கள்
- இயலாமை
- நெகட்டிவ்கள் சேமிக்கப்படும்
- உறக்கமற்ற இரவு
- நானும் நம்பிராஜனும்
- அணையும் விளக்கு
- மூளையும் நாவும்
- குளம்
- தோற்றுப் போனவர்களின் பாடல்
- இதுவும் அதுவும் உதுவும் -3
- சரவணனும் மீன் குஞ்சுகளும்
- சனநாயகம்:
- அழகிய உலகம் – ஜப்பானிய நாடோடிக்கதை
- சற்றே நீடிக்கட்டும் இந்த இடைவேளை
- பிறவிக்குணம்
- நன்றி சொல்லும் நேரம்…
- மூன்று தேங்காய்கள்
- பெருநதிப் பயணம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -3)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -5)
- இந்தியா – குறைந்த விலை பூகோளம்
- பஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்
- முன்னணியின் பின்னணிகள் – 12 சாமர்செட் மாம்
- நம்பிக்கை
- பூபேன் ஹசாரிகா –
- தொலைந்து கொண்டிருக்கும் அடையாளங்கள்