சிலர் எழுதும்போது மலர், இலை, அநித்தியம் என்றெல்லாம் தத்துவார்த்தமாய், கவித்துவமாய் பேசுவார்கள். ஆனால், மற்றபடி, ஒருவிதமான உலகாயுதக் கணிதவழிகளிலேயே நிலைகொண்டவர்களாய் அமைந்திருப்பார்கள். இதில் ஏதோவொரு முரண் உணரும் மனது. ஆனால், சிலர் கவிதைகள் எழுதாதபோதும் கவிதையாகவே திகழ்வதுபோல் ஒரு நெகிழ்வுண்டாக்குவார்கள். கவிஞர் அய்யப்ப மாதவன் இரண்டாம் வகை. உலகம் அன்புமயமாக, பசி, பட்டினி, போர், பச்சைத்துரோகம் என்று எதிர்மறைகள் எதுவுமில்லாமல் எல்லோருமே – அணில், சிட்டுக்குருவி, தும்பி உட்பட – வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று மனதார விழையும் மனதுக்குச் சொந்தக்காரர். இத்தகைய மனம் பரவசங்களுக்கும் சரி, பெரிய வலிகளுக்கும் சரி என்றும் அண்மையிலிருப்பது. இந்த வலிகளுக்கும், பரவசங்களுக்கும் வடிகால் தேடுவதாய் அரைக்கண காற்றுக்குமிழ்களைச் சொல்லில் செதுக்கும் தீரா ஆவலுடன் கவிதையாகவும், கதையாகவும், ஆவணப்படங்களாகவும் இடையறாது இலக்கியச் செயல்பாடுகளில் இயங்கிக்கொண்டிருப்பவர். சமீபத்தில் இவருடைய ஹைகூ கவிதைத் தொகுப்பு ஒன்று
குவளை
கைப்பிடியில்
காலம்
என்ற தலைப்பில் தமிழ்வனம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஹை கூ எழுதும்போது சாமான்யனின் வாழ்வைவிட்டு நீங்கிவிடுகிறேன் என்று தனது முகவுரையில் கூறியுள்ள அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுப்பு தானாய் நிரம்பும் கிணற்றடி.
தமிழ்வனம் வெளியீடுதான் இதுவும். பத்துகதைகளைக் கொண்ட இந்த நூல் குறித்து ஒரு கலந்துரையாடல் 10.4.2011 அன்று சென்னை கே.கே.நகரிலுள்ள டிஸ்கவரி புக் பாலஸில் நடந்தது. வட்டமாக இருக்கைகள் போடப்பட்டிருந்ததில் வழக்கமாக கூட்டங்களில் நம்மையறியாமல் நாம் பரிபாலித்துவரும் படிநிலையடுக்குகள் காணாமல் போய் நட்பினர் உரையாடலாக நிகழ்வு அமைந்தது. அதன் காரணமாகவே அய்யப்பன் கதைகளின் பலங்களைச் சுட்டியதோடு பலவீனங்களையும் அவருடைய அன்பு நண்பர்களும், சக எழுத்தாளர்களுமாகிய ஸ்ரீநேசன், ஜி.முருகன் போன்றோர் அழுத்தமாக சுட்டிக்காட்டியதும் இயல்பாகவே அமைந்தது. பாராட்டோ, திட்டோ நட்பினர் அண்மையில் இருப்பதே நிறைவாய் அய்யப்பன் காட்சியளித்தவிதம் ‘சித்திரத்தன்ன செந்தாமரை’யை ஒத்திருந்ததாக நினைக்கத் தோன்றியது!
பேசியவர்கள் இந்தத் தொகுப்பு குறித்தும், அய்யப்பமாதவனின் உரைநடை குறித்தும் முன்வைத்த கருத்துகளில் சில பின்வருமாறு:
ஸ்ரீநேசன்: பொதுவாக இன்று எழுத்தாளர்களிடையே எழுதும் ஆர்வம் இருக்கும் அளவு தனக்கு முன் எழுதியவர்களை வாசிக்கும் ஆர்வம் இல்லை. எனில், எழுத்தாளர்களுக்கு தொடர்ந்த வாசிப்பனுபவம் இருக்கவேண்டும். அது இல்லாத காரணத்தால் தான் கூறியது கூறல் ஏற்படுகிறது.
அய்யப்பனுடைய கதைகளின் முதல் வாசகன் நான். பத்து வருடங்கள் அவரைத் தெரிந்திருந்தும் அதில் வெளிப்படாத ஆளுமை, விஷயங்கள், இந்தக் கதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன.
இந்தத் தொகுப்பிலுள்ள பூனை கதை எனக்குத் தெரியாத பிரதேசத்தைக் காட்டுகிறது. இதுதான் ஒரு கதையின் பல்ம் என்று நான் கருதுகிறேன்.
ஒரு கதையில் ஒரு ‘ஃபாண்டசி’ இருந்தால் போதும். நிறைய இருந்தால் வாசகரைக் குழப்பும்; கதையோட்டத்தைத் தடைசெய்யும்.
’ஓரினப்புணர்ச்சி’ உடல் ரீதியானதா, மன ரீதியானதா என்ற கேள்வியை எழுப்பும் கதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.
பழைய உவமைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
இவருடைய உரைநடையாக்கங்களில் ஏதோ குறைவதாக உணர்கிறேன்.
ஜி.முருகன்: சிறுகதை என்பது கதை கிடையாது. அது ஒரு இமேஜ். ஒரு சிறுகதையின் மையம் ’இமாஜினரி’. அதோடு கதையின் மொத்த கூறுகளும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு சிறுகதையை எழுதிமுடித்த பிறகு அதை நாம் திரும்பத் திரும்பப் படித்துப்பார்க்க வேண்டு. அப்பொழுதுதான் தேவையற்று அதில் இடம்பெற்றிருப்பவை எவை என்று இனங்கண்டு அவற்றை அகற்றிவிட இயலும். அதன் பின், பிரதிக்கென்று ஒரு உயிர் ஏற்பட்டுவிடும்!
அதற்கு ஒரு படைப்பாளி பண்பட்ட ஊடகமாக இருக்கவேண்டும். அவருக்கு வரலாறு தெரிந்திருக்கவேண்டும். வாழ்க்கை குறித்த ஒரு பார்வை அவருக்கு இருக்கவேண்டும்.
நமக்கு சிறுகதை குறித்த ஒரு செறிவான நீண்ட வரலாறு இருக்கிறது. வெற்றிகரமாகச் சிறுகதை எழுதுவது மிகக் கடினம். எனில், இந்த இலக்கிய வகைமையில் நமக்கு நிறைய முன்னோடிகள் தமிழில் உண்டு.
ஒவ்வொரு வரியிலும் ஒரு ‘ஆளுமை’ வரவேண்டும். ஒரு தரமான படைப்பு ஒன்றிற்கு மேற்பட்ட அர்த்த அடுக்குகளைக் கொண்டிருக்கும்.
கதைக்கு எந்த விஷயத்தைத் தெரிவு செய்வது என்பது அய்யப்பனுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், மௌன இடைநிறுத்தங்கள் கதைகளில் இடம்பெறுவதில்லை.
மதுமிதா: இந்தக் கதைகள் ஒவ்வொரு வரியிலேயும் உண்மையைச் சொல்லுகின்றன. உண்மை சுடும்.
வாழ்வின் இருண்மைப் பகுதிகளை மட்டுமே பார்த்திருக்கிறார் இந்தக் கதைகளில். மகிழ்ச்சியின் கீற்று எதிலும் இல்லை. ஏன்?
16 வயது கடந்த, கல்லூரி செல்லும் பதின்மவயதுப் பருவத்தினர் இந்தக் கதைகளை வாசித்தால் நம் வாழ்வில் ஏற்படும் இழப்பு ஆளையே உருக்குலைத்துவிடுவது உறுதி என்று எண்ணத் தலைப்படாதா?
ஒரு ஆண்பெண்களின் உணர்வுகளை கர்ப்பிணிப் பெண் குறித்த கதையில் அற்புதமாக எழுதியிருக்கிறார். ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ‘ஹிஸ்டெரிக்’ மனநிலை உண்டு என்ற அறிவியல் உண்மையும் இதில் இடம்பெறுகிறது.
ஒரு ஆண் தன் போக்குகளை நியாயப்படுத்திக்கொண்டே போவது வழக்கமாக உள்ளது. இதே பெண் செய்தால் நாம் ஏற்றுக்கொள்வோமா?
படைப்பாளி தன் மனச்சுமையை எழுதியெழுதித் தான் குறைக்கவேண்டும்.
பீடி கதையில் ஒவ்வொரு மறுதலிப்புக்குப் பின்னாலும் அவன் சரிவு காட்சிப்படுத்தல் மூலமா தொடர்ந்து அடுத்தடுத்து இடம்பெற்றுக்கொண்டேயிருப்பதை கதை நன்றாகச் சொல்லுகிறது.
அய்யப்ப மாதவனிடம் நல்ல மொழியாளுமை, படைப்புத்திறன் உள்ளது.
லதா ராமகிருஷ்ணன்: அய்யப்பனை பிரதானமாக கவிஞராகத் தான் நான் பார்க்கிறேன். இந்தக் கதைகளிலும் கவித்துவமான வரிகள் ஏராளமாக உள்ளன, பத்து கதைகளில் குறைந்தபட்சம் நான்கு மிகத் தரமானவை என்று தாராளமாகச் சொல்லமுடியும்.
நாம் எல்லோருமே ‘நிபந்தனையற்ற அன்பைத் தான் எந்நாளும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவ்விதமான அன்பு சாத்தியமா, நாம் அதை யாருக்கேனும் தந்துகொண்டிருக்கிறோமா என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்வதில்லை. அறிவுபூர்வமாக நம் எதிர்பார்ப்பு சரியல்ல என்ரு நமக்குத் தெரிந்தேயிருக்கிறது என்றாலும் உணர்வுபூர்வமாக நாம் அந்த எதிர்பார்ப்பிலேயே அமிழ்ந்துகிடக்கிறோம். அய்யப்பமாதவனின் கதைகளில் அறிவுக்கும், உணர்வுக்குமான இந்த அடிப்படை முரண் தான் மையச்சரடாக எனக்குப் படுகிறது.
சில வரிகள்:
”_அவளோ சொற்களில் ஒலிமருந்து தடவி அவனுக்குக் காது வழியே ஊட்டிக்கொண்டிருந்தாள் (பொய்பேசி); காய்ந்த சருகுகளைப் பாதங்களில் மோதிச் சென்றவள் கொடியை நோக்கி வாஞ்சையுடன் தன் கைகளை பூவான தங்கையிடம் நீட்டினாள். அடுத்த கணத்தில் பூத்திருந்த அவளது உடல் 60 நொடிகளுக்குள் மெல்ல தரை நோக்கி தானாகவே உதிர்ந்தது”.
_”ரயில் குலுங்கிக் குலுங்கிக் கிளம்பியபோது அவள் தேகம் இளம் தாவரம் காற்றில் அசைவதுபோல அசைகிறது”.
“பெண்களின் விரல்கள் மேலே பட்டதும் வெய்யில் பட்டுடையும் அண்ட்டார்ட்டிகா பனிப்பாறைகள் போல உருகிச் சிதைந்தான்”/
விவரிப்புகள் கவித்துவமாக இருக்கின்றன. ஆனால், வசனங்கள் அல்லது உரையாடல்கள் கதைகளில் அரிதாகவே இடம்பெற்றுள்ளன.
இவர் கதைகளில் பெண்கள் பலவகையான பரிமாணங்களில் வருகிறார்கள். பெண்குழந்தையை தூர எறிபவள், தங்கையை கிணற்றில் தேடுபவள், தங்கை கணவனால் வல்லுறவற்ற வல்லுறவுக்கு(?) ஆளாக்கப்படுகிறவள், பூனைகளை நேசிப்பவள் – பிறவேறு.
-பூனை வளர்க்கும் பெண் குறித்த கதையில் முதிர்கன்னி என்பதால் உறவுகளற்ற தன் நிலைக்காய் பூனைகள் வளர்க்கிறாள் என்பதான குறிப்புணர்த்தல் தேவையில்லை என்று கருதுகிறேன். காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடிய பாரதியின் நேயத்தை நாம் இயல்பாக ஏற்றுக்கொள்வதைப் போல் ஒரு பெண்ணுக்கு பூனைகள் மேல் இருக்கும் நேயத்தையும் ஏற்றுக்கொள்ளலாகாதா? திருமணமாகாத, ஆக இயலாத பெண் என்பதால் இப்படி என்றவிதமான விவரிப்பு தேவையில்லை. சமீபத்தில் பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா இறந்துபோனவுடன் விஜய் தொலைக்காட்சியில் வேறொரு நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி “உனக்கு ஆயி, அப்பா இருந்திருந்தா திருமணம் முடிச்சிருப்பாங்க” என்று தானே இட்டுக்கட்டிய வரிகளைப் பாடினார். அந்தப் பெண் இவரிடம் வந்து சொன்னாரா – அவர் அண்ணன்கள் திருமணம் முடிக்கவில்லையென்று? இது என்னவிதமான ஆணாதிக்க அஞ்சலி? இறந்த பெண் பாடிய அருமையான பாடல்களை, அவருடைய இசைத்திறனைப் பாராட்டாமல் அவருடைய திருமணமாகாத நிலைக்கு எல்லாம் தெரிந்தாற்போல் அவருடைய குடும்பத்தைக் குற்றம் சொல்ல இவர் யார்? மற்றவர்களுடைய அந்தரங்க அபிலாஷைகளை, இளவயதுத் தொடர்புகளையெல்லாம் மிக ஆர்வமாக எழுத, பேச முன்வருபவர்கள் தங்களுடைய அந்தரங்கங்களையும், அத்துமீறல்களையும் அப்பட்டமாகப் பேச, எழுத முன்வருவார்களா?
பல எழுத்தாளர்கள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்திற்கும், பொருளாதார ரீதியாய் குடும்பத்தை நடத்தவியலாத நெருக்கடிக்கும் இடையே அல்லாடிக்கொண்டி ருக்கிறார்கள். இதற்கான சில பாதுகாப்பு வழிவகைகள், ஒரு அவசரத்திற்கு எழுத்தாளனுக்கு, அதாவது சிற்றிதழ்களில் இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு நெருக்கடி நிலையில் உதவ ‘ஒரு வைப்பு நிதியம் வளர்க்கப்படவேண்டும். இதில் முக்கிய விஷயம், எழுத்தாளர்களுக்கான அமைப்புகளை வெகு எளிதாக ஆக்கிரமித்துக்கொண்டு விடுவதே குறியாக இருப்பவர்கள் – தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கைகளில் இந்த வைப்பு நிதியோ, நன்னல அமைப்போ அகப்பட்டுக்கொண்டுவிடலாகாது. ஒரு அவசரத்திற்கு தங்க, சாப்பிட, நிம்மதியாய் அமர்ந்து எழுத என்று ‘த்வன்யலோகா’ போல் ஓரிடம் இருக்கவேண்டும். இந்த முன்முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும்.
அய்யப்ப மாதவன்: நேசன் என் அற்புதமான நண்பன். இங்கே வந்து வெளிப்படையாக கருத்துகளை முன்வைத்தார். அவற்றை ஏற்கிறேன்.
ஜி.முருகன் தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர். அவருடைய மான் கதை எனக்கு மிகவும் பிடித்த படைப்பு.
அகநாழிகை வாசுதேவன் இந்த நிகழ்வுக்குக் காரணம். நிகழ்வுக்கான நிதிப் பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொண்டார். அவருக்கு என் அன்பு நன்றிகள்.
எழுத்துக்கும் வாசிப்புக்கும் என்ன சம்பந்தம் என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. குழந்தை, “நேற்றிரவு நிலா செத்துப் போச்சு”, என்றது. பின், “ நாலைந்து புது நிலாக்கள் இருக்கு”, என்றது. இதிலிருந்துதான் என் படைப்பு தோற்றம் கொள்கிறது.
கவிதை வார்த்தைகளின் வழியான கண்டுபிடிப்பு. கவி ஒரு அறிவியலாளராய் இயங்குகிறார்.
சினிமா தான் என்னுடைய மிகப்பெரிய கனவு. செழியன் உலகின்
தலைசிறந்த திரைப்படங்களை எனக்கு தினந்தினம் அனுப்புவார். அற்புதப் படங்கள்.
கோட்பாட்டாளர்கள் எல்லாமே சங்கக் கவிதைகளைப் படிக்கணும்.
என் கவிதை மொழியே என்னை எழுதவைக்கிறது.
ஒரு அப்பாவி எழுத்தாளராக, ஒரு அப்பாவிக் கணவனாக உங்கள் முன்னால் பேசுகிறேன்.
இப்பொழுது வாழ்வில் எது வந்தாலும் ஏற்கும் மனநிலைக்கு வந்திருக்கிறேன். முதுகு வலிக்குப் பிறகு வீட்டிலேயே ‘கணினி அச்சாக்கம், புத்தக அமைப்பாக்கம் போன்ற பணிகளைச்
செய்துவருகிறேன். அத்தகைய வேலைகளைச் செய்ய நம்பகமான ஆள் தேவைப்பட்டால் என்னை அணுகலாம். கணினி என்னுடைய மிக நெருங்கிய நண்பனாகிவிட்டது. என் கவிதை மொழியே என்னை எழுதவைக்கிறது. என் கதையில் வெளிப்படையான உரையாடல்களை வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. என் பெரும்பாலான கதைகள் என் தனிப்பட்ட அனுபவங்கள்.
இந்த நூலிலுள்ள கதைத்தலைப்புகளை முதலில் எளிமையானவையாகத் தான் வைத்தேன். பின், கொஞ்சம் நவீனமாகவும், பூடகமாகவும் இருக்கட்டுமே என்று இப்பொழுது இருக்கும்விதத்தில் மாற்றப்பட்டன. நல்ல எண்ணத்துடன் செய்த தவறு இது!
வீட்டுக்குள்ளேயே வாழ்வதால் கதைக்கரு கிடைப்பது கடினமாக இருக்கிறது.
ஆனால், கவிதைக்கான அனுபவம் எப்படியோ கிடைத்துவிடுகிறது!
ஒரு படைப்பாளி வாழ்வதே பெரும் சிக்கலாகிவிடுகிறது.
தமிழில் நல்ல எழுத்தாளர்களின் நிலை அவலமானது. ஆரவாரமில்லாமல் இலக்கியத்துறையில் இயங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு எழுத்தால்
அங்கீகாரமுமில்லை; வாழ்வாதாரமுமில்லை என்பது தான் வருந்தத்தக்க நடப்புண்மை.
இந்தத் தொகுப்புக்கு கையோடு ராயல்டி கொடுத்து என்
கையெழுதுதுப்பிரதியை வாங்கிக்கொண்ட தமிழ்வனம் திரு.காந்தி என்னை உண்மையாகவே அதிர்ச்சியடையச் செய்தார்.
- ரீங்கார வரவேற்புகள்
- தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி
- இவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்
- வார்த்தையின் சற்று முன் நிலை
- யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
- தூசி தட்டுதல்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11
- தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….
- நகர் புகுதல்
- திரிநது போன தருணங்கள்
- உதிரமெழுதும் தீர்ப்பின் பிரதிகள்
- சூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’ –
- முள்ளால் தைத்த நினைவுகளுடன்…..
- இது மருமக்கள் சாம்ராஜ்யம்
- சாலைக் குதிரைகள்
- நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்
- அரசியல் குருபெயர்ச்சி
- சந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்
- முகபாவம்
- உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்
- அகம்!
- அரசியல்
- ஒரு பூ ஒரு வரம்
- பிரதிபிம்ப பயணங்கள்..
- யார்
- மூலக்கூறுக் கோளாறுகள்..:_
- நட்பு
- நம்பிக்கை
- இவைகள் !
- கை விடப்பட்ட திசைகள்..
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)
- ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1
- கவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து …
- இலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’
- இந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,
- தானாய் நிரம்பும் கிணற்றடி! கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா!
- எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்
- இற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது