பஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்

This entry is part 34 of 41 in the series 13 நவம்பர் 2011

சிங்கமும் தச்சனும்

 

ரு நகரத்தில் தேவகுப்தன் என்றொரு தச்சன் இருந்தான். தினந்தோறும் அவன் சாப்பாட்டைக் கட்டி எடுத்துக்கொண்டு மனைவியோடு காட்டுக்குப் போய் பெரிய மரங்களை வெட்டி வருவது வழக்கம். அந்தக் காட்டில் விமலன் என்றொரு சிங்கம் இருந்தது. அதைச் சுற்றித் திரிந்தபடி மாமிசபக்ஷணிகளான ஒரு நரியும் ஒரு காக்கையும் இருந்தன. ஒருநாள் காட்டில் சிங்கம் தனியே திரிந்து கொண்டிருக்கும்போது அந்தத் தச்சனைக் கண்டு விட்டது. தச்சனும் அந்த பயங்கரமான சிங்கத்தைப் பார்த்துவிட்டான். ‘இனி செத்தோம்’ என்று அவன் எண்ணியிருக்கலாம். அல்லது ஆபத்துக் காலத்தில் சமயோசிதமாக யுக்திகள் தோன்றுமே, அது தோன்றிற்றோ என்னவோ! பலசாலிகளை நேராக எதிர்கொள்வதுதான் சரி என்று முடிவு செய்து, சிங்கத்தை நோக்கிச் சென்று நமஸ்கரித்துவிட்டு,  ”வா, தோழா, வா! உன் சகோதரனின் மனைவி தயாரித்துத் தந்த இந்தச் சாப்பாட்டை நீயும் சாப்பிடு!” என்று சொன்னான்.

 

”நண்பனே, சோறு தின்று நான் வயிறு பிழைக்கிறவன் அல்ல; நான் ஒரு மாமிச பக்ஷணி. இருந்தாலும் பரவாயில்லை. உன் மேலிருக்கும் பிரியத்தால் அதைக் கொஞ்சம் ருசி பார்க்கிறேன். சாப்பாட்டில் ஏதாவது விசேஷமுண்டா?” என்று கேட்டது சிங்கம்.

 

உடனே தச்சன் சர்க்கரை, நெய், திராட்சை, வாசனை திரவியங்கள் கலந்து தயாரித்த மணம் மிகுந்த லட்டு, ஆப்பம், காரமான தின்பண்டங்கள் போன்ற பலவகையான விசேஷ பதார்த்தங்களைச் சிங்கத்தின்மீது வற்புறுத்தித் திணித்தான். அதைச் சாப்பிட்டுவிட்டுச் சிங்கம் நன்றியறிதலோடு அவனுக்கு அபயம் அளித்தது. காட்டில் பயமின்றி எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியவிட்டது. ”நண்பனே, நீ தினந்தோறும் என்னிடம் வா, வேறு யாரையும் அழைத்து வராமல் தனியாக வந்து போய்க் கொண்டிரு” என்று அதனிடம் தச்சன் சொல்லி வைத்தான்.

 

இப்படியே காலம் செல்லச் செல்ல அவர்களிடையே அன்பு வளர்ந்தது. ஒவ்வொரு நாளும் பலவிதமான உணவுகளும், உபகரிப்புகளும் கிடைத்து வந்ததால் மிருகங்களை வேட்டையாடுகிற வழக்கத்தைச் சிங்கம் விட்டுவிட்டது.

சிங்கத்தின் தயவில் பிழைத்து வந்த நரிக்கும் காக்கைக்கும் இரையில்லாமற் போய்விட்டது. அவை பசி வேதனையோடு சிங்கத்தை நெருங்கி, ”சுவாமி! தினந்தோறும் நீங்கள் எங்கே போகிறீர்கள்? போய்விட்டு மனத்திருப்தியோடு திரும்பி வருகிறீர்களே, என்ன விஷயம்? சொல்லுங்கள்” என்று கேட்டன.

 

”நான் எங்குமே போகிறதில்லையே?” என்றது சிங்கம்.

 

அவை விடவில்லை. மேலும் மேலும் பணிவோடு வற்புறுத்திக் கேட்டுக்கொண்டேயிருந்தன. கடைசியில் ”என் தோழன் ஒருவன் தினசரி காட்டுக்கு வருகிறான். அவன் மனைவி அருமையான பல தின்பண்டங்களைத் தயாரித்து அனுப்புகிறாள். அவற்றை ஆசையோடு சாப்பிட்டு வருகிறேன்” என்று சிங்கம் சொல்லிற்று.

அதைக் கேட்ட நரியும் காக்கையும், நாமும் அங்குபோய், தச்சனைக் கொன்று, அவன் ரத்தத்தையும் மாமிசத்தையும் தின்று ரொம்ப காலத்துக்குப் பிழைக்கலாமே!” என்று ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டன. இந்தப் பேச்சு சிங்கத்தின் காதில் விழுந்தது. அது உடனே ”இங்கே பாருங்கள். அவனுக்கு நான் அபயம் தந்திருக்கிறேன். இப்படிப்பட்ட கெட்ட காரியத்தை எப்படி மனத்தால்கூட நினைக்க முடிகிறது உங்களுக்கு? உங்களுக்கும் நல்ல பட்சணங்கள் தச்சனிடம் வாங்கித் தருகிறேன். வாருங்கள்” என்று சொல்லிற்று. நரியும் காக்கையும் ஒத்துக்கொண்டன.

 

பிறகு அவை மூன்றும் தச்சன் இருக்கும் இடத்துக்குப் போகத் தொடங்கின. துன் மந்திரிகளோடு சிங்கம் வருவதைத் தூரத்திலேயே தச்சன் கண்டுவிட்டான். ‘இது நமக்கு நல்லதாகப் படவில்லை’ என்று எண்ணியபடியே மனைவியோடு அவசர அவசரமாக ஒரு மரத்தின்மேல் ஏறிக்கொண்டான். சிங்கம் நெருங்கி வந்து, ”நண்பனே, நான் வருவதைப் பார்த்ததும் ஏன் மரத்தின்மேல் ஏறிக்கொண்டாய்? நான் உன் நண்பன், விமலன் என்கிற சிங்கமாயிற்றே? பயப்பட வேண்டாம்” என்று சொல்லிற்று.

 

அதற்குத் தச்சன் பின்வருமாறு சொன்னான்:

 

‘உன் அருகில் நரி இருக்கிறது; அந்தக் காக்கைக்கும் கூரிய அலகு இருக்கிறது. உன் நண்பர்கள் எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே மரத்தின்மேல் ஏறிக்கொண்டேன்’ என்று,

 

அதைத்தான் நானும் குறிப்பிட்டேன். நீச்சர்கள் சூழ்ந்திருக்கும் இந்த அரசன் அண்டியவர்களுக்கு நன்மை செய்வதில்லை” என்றது சஞ்சீவகன்.

 

கதை சொல்லி முடித்து, மேலும் சஞ்சீவகன் பேசத் தொடங்கியது: ”எனக்கு எதிராகப் பிங்களகனை யாரோ திருப்பி விட்டிருக்கிறான்!

 

மிருதுவான ஜலம்கூட ஒழுகியோடி மலைச்சாரலை அரித்துத் தோஷம் உண்டுபண்ணுகிறது. தந்திரசாலியின் சொல்லுக்குக் காது கொடுத்தால் மிருதுவான மனமும் எங்கேயோ ஓடி ஒளிந்து கொள்கிறது.

 

இந்த நிலைமையில் எது செய்தால் சரியாயிருக்கும்? சண்டை போடுவதைத் தவிர சரியான வழி வேறு ஒன்றும் இல்லை.

 

சுவர்க்கத்தை விரும்புகிறவர்கள் யாகமும், தவமும், தானமும் செய்து அதை அடைகிறார்கள். ஆனால் அதே சுவர்க்கத்தை போர்க்களத்தில் உயிர்த் தியாகம் செய்யும் வீரம் கணப்பொழுதில் அடைந்து விடுகிறான்

 

என்று ஒரு பழமொழி கூறுகிறது. மேலும்,

 

வீரன் இறந்தால் சுவர்க்கம் செல்கிறான். சத்துருவை ஜெயித்தால் சுகம பெறுகிறான். இவை இரண்டும்தான் வீரனுக்கு நன்மை செய்கிற குணங்கள்.

 

பொன்னும் மணியும் அணிந்த மங்கையர், யானை, குதிரை, சிம்மாசனம், செண்சாமரம், களங்கமற்ற சந்திரன் போல ஒளிவீசும் வெண் குடை, செல்வம் இவையெல்லாம் கோழைகளுக்கு இல்லை. தாயைப்போய் கட்டிக்கொள்ளும் பயங்கொள்ளிகளுக்கு இல்லை.

 

என்றது சஞ்சீவகன்.

 

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் தகனகன் யோசிக்கத் தொடங்கியது. ‘இவன் மிகுந்த பலசாலியாக இருக்கிறான். கூர்மையான கொம்புகளும் இருக்கின்றன. விதிவசத்தால் சண்டையில் அரசனை ஒருவேளை இவன் கொன்றாலும் கொன்றுவிடலாம். அப்படி நடக்க விடுவது சரியில்லை.

 

வீரர்களாயிருந்தாலும் என்ன, யாருக்கும் யுத்தத்தில் வெற்றி என்பது நிச்சயமில்லை. அதனால்தான் அறிவாளிகள் முதலில் மூன்று உபாயங்களைச் கையாண்டு பிறகு சண்டைக்குப் போகிறார்கள்

 

என்றொரு பழமொழி கூறுகிறது. ஆகவே எனது புத்திசாதுரியத்தைக் கொண்டு இவனை யுத்தம் செய்யும் எண்ணத்திலிருந்து திருப்பிவிட வேண்டும்’ என்று முடிவு செய்தது. பிறகு, சஞ்சீவகனைப் பார்த்து, ”நண்பனே, நீ சொல்வது சரியான உபாயமில்லை. ஏனென்றால்,

 

சத்துருவின் பலத்தை அறியாமல் சண்டைக்குப் போகிறவன் நீர்க் குருவியிடம் சமுத்திரம் அவமானம் அடைந்தது போல் அவமான மடைகிறான்.

 

என்று ஒரு பழமொழி உண்டு” என்றது தமனகன்.

 

”அது எப்படி?” என்று சஞ்சீவகன் கேட்கவே, தமனகன் கூறத் தொடங்கியது.

Series Navigationநெசமாலும் நாடகமுங்கோசமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 50
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *