கவிதைகள்: பயணக்குறிப்புகள்

This entry is part 18 of 38 in the series 20 நவம்பர் 2011

11

தொடக்கப்புள்ளியிருந்து வெகுதூரம் வந்தாயிற்று-
போகவேண்டிய தூரம் அதிகம் என்ற தெளிவோடு.
சிறுகற்கள் மலைமுகடுகளாய் வழியடைத்த நிலை மாறி
பெரும்பாறைகளும் இன்று துகள்களாகிவிட்ட
ரசவாதம்!
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!!
புரியாமல்
கருத்துப்போர்வையில் கற்களைச் சுருட்டியெடுத்துவந்து
கைபோனபோக்கில் என் ஆறெங்கும் இறைத்துக்கொண்டிருக்கும் நீ
எப்போதுமே
ஐயோ பாவம்!

12
உன் உன்னும் என்னும் முன்னும் பின்னும்
ஒடுங்கும் ஒருமைக்குள்
எதிர்வினைக்கும் அறவுரைக்கும் இடையே நிறையும்
அகழி மறைத்துக் கவியும் காரிருள்.
என் என்னும் உன்னும் இன்னும்
என்னென்னவும்
புதிரவிழ்க்கும் எல்லையின்மைக்குள்
இல்லையாகிவிடும் உன் எல்லாமும்!

13
இருந்தாற்போலிருந்து
ஒரு காலாதீதத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு
வேர்த்துவிறுவிறுவிறுத்துப் பாய்ந்துவந்து
வழியெங்கும் ஆர்ப்பரித்துக் கொட்டி முழக்குகிறது
அறியாமை புரையோடிய அந்த வரி:

”இருண்மை தமிழுக்குப் புதிதோ புதிது”

கேட்டு
சங்ககாலம் தொட்டு நவீன தமிழ்க்கவிதைவெளியெங்கும்
வாயார வயிறுகுலுங்க கவிகள் சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்க்க
எத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறது தெரியுமா?
காயப்படுத்தும் சூழலிலேயே வாழப்பழகியவர்கள்;
கழுவேற்ற மேடை வெகு பரிச்சயமானவர்கள்;
வதைமுகாம்களே வசிப்பிடமானவர்கள்
வடிகட்டிய பாழ் கண்டு
விழுந்து விழுந்து சிரிக்காமல் என் செய்வார்கள்?

இறந்துபோய்விட்டவர்களில் புதைக்கப்பட்டவர்கள்
கல்லறைகளில் புரண்டு சிரிக்க,
எரிந்துவிட்டவர்கள் திரும்ப எழுந்துநின்று
குதிக்கிறார்கள் “ஹே, இது என்ன புதுக்கதை என்று!”

இருந்துவரும் கவிகளின் செவிப்பறைகளை அந்த உச்சபட்ச அபத்த வரி
சென்றடையும் நேரம்
நிச்சயம் சீறத்தொடங்கும் சில எரிமலைகள்.

‘சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா!’

சொன்ன பாரதியாரை வெறும் பிரச்சாரக்கவி
என்பாரை
‘கல்லுக்குள் தேரை கவனித்து’க் கொள்ளும்.

மெல்ல
சன்னமாய் என் காதுகளுக்குள்ளும் ரீங்கரிக்குமாறு
சில்வண்டிடம் வேண்டிக்கொண்டு
தொடரும் என் பயணம்.

14

சாலையோரங்களில் சில வீடுகள்
சிலவற்றில் வெளியே அமர்விடங்கள் உண்டு.
இளைப்பாற வரும் வழிப்போக்கர்கள் பலவகை.
அடுத்தவருக்கு இடம் தராமல் தம்மை விரித்துப் பரப்பிக்கொள்ளும் சிலர்
‘அதனாலென்ன பரவாயில்லை’ என்று தரையமரும் சகபயணியை
சீடராக வரித்துக்கொண்டு சிட்சையளிக்கப் புறப்பட்டுவிடுவார்கள்.
[பீடம் கிடைக்க வேறேது கதி?]
இதற்கு கால்வலியே மேல் என்று எழுந்துகொண்டுவிடுபவரை
வழிமறித்து பிடித்திழுத்து செவிப்பறை கிழியக்கிழிய
சொல்லித்தருவார்கள் –
’சொல்லும் சொல்’ பழகாதவர்கள்.

சொக்கப்பித்தளை யிளிப்பை
சொல்ல வல்லாயோ கிளியே…

15
அன்பிற்காகும்;
அவதூறுக்காகும்.
ஆசுவாசத்திற்காகும்;
அக்கப்போருக்காகும்.
அறிவுக்கூடமாகும்;
அதிகாரபீடமாகும்……

அகழ்வாரைத் தாங்கும் நிலம்.

அதுதானோ திண்ணையும்?

0

Series Navigationபம்பரம்…கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் ! (கவிதை -52 பாகம் -1)
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *