தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

16 செப்டம்பர் 2018

ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம் முடிவு) அங்கம் -2 பாகம் – 18

சி. ஜெயபாரதன், கனடா




ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா 
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா


“பீட்டர் !  சல்வேசன் சாவடியை யாரும் மூடப் போவதில்லை.  அதன் அடுப்பில் எப்போதும் கஞ்சி கொதித்துக் கொண்டிருக்கும்.  எப்போதும் உள்ள சலுகை இங்கே உனக்கு இன்னும் இருக்கும்.  என் மேஜர் வேலைதான் இப்போது போய் விட்டது !  நானும் உன்னைப் போல் இப்போது வேலை இழந்து தவிக்கிறேன் !”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (மேஜர் பார்பரா)


மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :

இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது.  அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது.  அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை.  மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார்.  மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.

 

வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா.  ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா !  ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் !  போருக்கு  ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தை யிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள்.  ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள்.  ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை !  அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக்குள்ளானது என்று தள்ளி விடுகிறார்.  எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடை களை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார்.  நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.

மிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter).  சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள்.  அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர்.  அடால்·பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை,  சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.

சிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது.  தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன,  பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார்.  ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

**********************

 

நாடக உறுப்பினர்:    

1.  மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷா·ப்ட் (Major Ms. Barbara Undershaft).  ஆன்ரூவின் மூத்த மகள்.

2.  ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.

3.  மேடம் பிரிட்னி அண்டர்ஷா·ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)

4.  ஸ்டீ·பன் அண்டர்ஷா·ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.

5.  மிஸ். சாரா அண்டர்ஷா·ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.

6.  அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்

7.  சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.

8.  பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45

9.  ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி, பில் வாக்கர் – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் பழைய / புதிய சாவடி வாசிகள்.மிஸிஸ் பெயின்ஸின் வயது 40.

மற்றும் பலர்.

************************

ஏழ்மைக் காப்பணிச் சேவகி
(மேஜர் பார்பரா)

(இரண்டாம் அங்கம்)

அங்கம் – 2 பாகம் – 18

இடம் :  இங்கிலாந்து லண்டன் நகரம்.  வெஸ்ட் ஹாம் ஏழ்மைக் காப்பணிச் சாவடி (West Ham Shelter of the Salvation Army)

நிகழும் ஆண்டு : ஜனவரி 1906

நேரம் : காலைப் பொழுது.

அரங்க அமைப்பு :  ஏழ்மை மனிதரை ஜனவரிக் கடுங்குளிர் நடுக்கத்தில் பாடுபடுத்தும் ஒரு பழைய சத்திரக் கூடம் சல்வேசன் ஆர்மிச் சாவடி.  புதிதாக வெள்ளை அடிக்கப் பட்டுள்ளது.  கறைபடிந்த மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகள் அங்கு மிங்கும் தெரிகின்றன. அறைக் கதவுகள் ஜன்னல்கள் திறந்துள்ளன.  முன்னறையில் ஓர் ஆணும், பெண்ணும் நடமாடி வருகிறார்.  மேஜையில் சாவடி வாசிகள் சாப்பிட்ட தட்டுக்களை மூதாட்டி ஒருத்தி எடுத்துக் கொண்டிருக் கிறாள்.  உலவும் ஆடவன் வேலை இல்லாத வாலிபன்.  வாயாடி மனிதன்.  பெண் நடுத்தர வயது மூதாட்டி.  அவரது உடையிலும், நடையிலும் ஏழ்மை தெரிகிறது.  கடுங்குளிர் நடுக்கத்தைப் பொருட் படுத்தாமல் நாற்காலில் சிலர் அமர்ந்திருக்கிறார்.  காலை உண்டி சாப்பிட்டு அவர் இருவரும் தெம்புடன் இருக்கிறார்.  ஆடவன் குவளையில் உள்ள ஆறிப்போன சூப்பைச் சுவைத்துக் கொண்டிருக்கிறான்.  மேஜர் பார்பரா தன் சகபாடிகள் பலரோடு வாத்தியத் தம்பட்டம் கொட்ட அணிவகுத்துக் கொடி உயர்த்தி நடந்து வருகிறாள்.  மூதாட்டியும், வாலிபனும் வாதாடிக் கொண்டுள்ள போது ஜென்னி ஹில்லும், பீட்டர் ஷெர்லியும் நுழைகிறார்.  பீட்டருக்கு உணவு கொண்டு வருகிறாள் ஜென்னி.  அப்போது மூர்க்கன் வில்லியம் வாக்கர் [William Walker] சல்வேசன் சாவடிப் பின் தோட்டத்தில் வேகமாய் நுழைகிறான்.  ஜென்னியைக் கண்டதும் வெகுண்டு அவள் கூந்தலைப் பற்றி இழுக்கிறான்.  ஜென்னியைக் காப்பாற மேஜர் பார்பரா உடனே அழைத்து வரப் படுகிறாள்.  புதிய நபர்களைப் பார்பரா பதிவு செய்கிறாள்.  அப்போது மேஜர் பார்பராவின் செல்வீகத் தந்தை காரில் வருகிறார். தந்தையை அறிமுகம் ஆகிறார்.  இடையே பார்பராவின் காதலன் அடால்·பஸ் நுழைகிறான்.   அடுத்து மிஸிஸ். பெயின்ஸ் வருகிறாள்.  விஸ்கி தொழில் கோமான் நன்கொடை அளித்த 5000 பவுண்டு பணத்தைப் பற்றிப் பெருமை பேசுகிறாள்.  அடுத்து 5000 பவுண்டு செக்கை பார்பரா தந்தையிடம் கெஞ்சிப் பெற்றுக் கொள்கிறாள்.  பார்பரா அதிர்ச்சி அடைந்து அணிவகுப்பில் கலந்து கொடியுடன் நடத்திச் செல்ல மறுக்கிறாள்.

 

(சென்ற வாரத் தொடர்ச்சி)

மேஜர் பார்பரா:  (அமைதியாக)  வில்லியம் !  உன் ஊதியப் பணத்தை நான் வாங்கிச் சாவடியை காப்பாற்ற வில்லை.  போதும் உன் தொல்லை !  என்னருகில் வராதே !

வில்லியம்:  மேஜர் நீங்கள் அணி வகுப்பை முன்னின்று நடத்தாமல் தயங்கி நிற்பது தவறு.  உங்களை நம்பி இருக்கும் இந்த சல்வேசன் ஆர்மியை விட்டு நீங்கள் எப்படித் தனியாக வாழ்வீர் ?

(வேலைக்காரி ரம்மி உள்ளறையிலிருந்து கண்ணீரோடு வருகிறாள்:

ரம்மி:  (வருத்தமோடு)  மேஜர் !  இந்த சல்வேசன் சாவடி நீங்கள் கட்டிக் காத்த ஆலயம் !  இங்கே கடவுளின் ஆசீர்வாதம் பெற எங்களுக்காக அனுதினமும் இராப் பகலாய் வழிபடும் ஒரே ஆத்மா நீங்கள்தான் !

(அப்போது பீட்டர் ஷெர்லி வருகிறான்)

பீட்டர்:  மேஜர் ! நீங்கள் எமக்காகப் பணி புரியாது ஒதுங்கிக் கொண்டால் சல்வேசன் சாவடியை மூட வேண்டியதுதான்.  பத்தாயிரம் பவுண்டு நிதி கிடைத்தாலும் சாவடியைக் கண்காணித்து நடந்த ஒரு நம்பிக்கையான சேவகி இல்லை !  எல்லாம் இருந்தும் கப்பலை ஓட்டிச் செல்ல ஒரு காப்டன் இல்லை.  எனக்கு யார் இனி வேலை வாங்கித் தருவார் ?

மேஜர் பார்பரா:  பீட்டர் கவலைப் படாதே !  உனக்கு வேலை வாங்கித் தருவது என் பொறுப்பு.  சல்வேசன் ஆர்மி அணிவகுப்பில் நான் கலந்து கொள்ளா விட்டாலும் தனியாக உனக்குப் பணி புரிவதில் எனக்குச் சிரமம் இல்லை.

பீட்டர்:  வேலை கிடைப்பது வரை எனக்கு உண்ண உணவும், தங்க இடமும், படுக்கக் கம்பளியும் யார் இனிமேல் அளிப்பார் ?

மேஜர் பார்பரா:  பீட்டர் !  சல்வேசன் சாவடியை யாரும் மூடப் போவதில்லை.  அதன் அடுப்பில் எப்போதும் கஞ்சி கொதித்துக் கொண்டிருக்கும்.  எப்போதும் உள்ள சலுகை இங்கே உனக்கு இன்னும் இருக்கும்.  என் மேஜர் வேலைதான் இப்போது போய் விட்டது !  நானும் உன்னைப் போல் இப்போது வேலை இழந்து தவிக்கிறேன் !

பீட்டர்:  மேஜர் !  உங்களுக்கு வாலிப வயது !  நான் அறுபது வயதை நெருங்குபவன் !  உங்களுக்கு வேலை கிடைக்கும்.  எனக்கு வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை இப்போது அறவே போய் விட்டது.

மேஜர் பார்பரா:  பீட்டர் !  உனக்கு வேலை வாங்கித் தருவது என் பொறுப்பு.  அதற்கு உறுதி அளிப்பது நான் !  எனக்கு உடல் வலுவும், மன உறுதியும் உள்ளது !  (பையில் உள்ள பணத்தை எண்ணி)  இரு வேளை உணவுக்குப் போதிய பணம் கையில் உள்ளது !  வீட்டுக்குப் போக பஸ் கட்டணம் இருக்குது !  இன்றைய பொழுதைக் கழிப்பதில் எனக்குக் கவலை இல்லை.

 

பீட்டர்:  ஏன் அம்மா இப்படிச் சொல்லும் போது  உங்கள் கண்களில் கண்ணீர் வருகுது ?

மேஜர் பார்பரா:  (வருத்தமுடன்)  ஒரு சில நிமிடங்களில் என் பதவி போனது !  என் தர்ம நெறி தகர்ந்து போனது !  நான் கட்டிய கோட்டை இரண்டாய்ப் பிளந்தது ! என் மதிப்பு மரியாதை போனது !  என் சல்வேசன் பதவிச் சின்னம் தந்தையின் மார்பில் ஏறியது !  உன்னைப் போல் நானும் ஓர் ஏழை !  இனிமேல் நானொரு ஏழ்மைக் காப்பணிச் சேவகி இல்லை !  இப்போது என் உதவிக்கே ஒரு சேவகி தேவை !

பீட்டர்:  மேஜர் !  உங்களைப் போன்ற சேவகிகளுக்கு ஆறுதல் சொல்ல எனக்குத் தெரியவில்லை.

மேஜர் பார்பரா:  பேசு பீட்டர் பேசு !  அதுவே போதும் எனக்கு !  நீ மௌனமாய் இருந்தால் இப்போது என் மனம் இன்னும் மேலும் உடைந்து தூளாகும்.  நாமிருவரும் வேலையின்றிப் போனோம் !  வா போகலாம்.  முதலில் உனக்கும் எனக்கும் சேர்ந்து வேலை தேடப் போவோம் !

(இருவரும் கைகோர்த்து தெரு வழியே செல்கிறார்)

(இரண்டாம் அங்கம் முற்றும்)      

***********************

தகவல் :

Based on The Play : Major Barbara By : George Bernard Shaw, – Penquin Books (Editorial Supervision of Biographer : Dan. H. Laurence) (1960)

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(e) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(f) DVD Video Classics – Bernard Shaw’s Major Barbara Released in August 2007 (2 Hours)

(g) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 3, 2011)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationபொருத்தியும் பொருத்தாமலும்கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -1)

Leave a Comment

Archives