சென்னை போன்ற பெரு நகரங்களில் சைக்கிள் ஓட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதை காண முடிகிறது. கடைநிலை ஊழியர்களுக்கான வாகனம் சைக்கிள் என்றாகிவிட்டது. தபால்காரர், கொத்து வேலை செய்பவர், பிளம்பர் போன்றோர்கள் தான் சைக்கிள் உபயோகிக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் சைக்கிள் உபயோகிப்பதை நிறுத்தி நீண்ட நாட்களாகிவிட்டது. என் நண்பன் ஒருவன் பள்ளிக்கூடம் போகும் போது வாங்கிய சைக்கிளை இன்றும் சென்னையில் வைத்திருக்கிறான். சரஸ்வதி பூஜை அன்றைக்கு மட்டும் துடைத்து பொட்டு வைப்பான். வாகனம் என்பது அவரவர் வசதியை(convenient) பொறுத்த விசயம் என்ற நிலை மாறி அந்தஸ்தின் குறியீடாக ஆகி விட்ட ஒரு சமூகத்தில் சைக்கிள் ஓட்டுவது என்பது ஏதோ கேவலமான செயல் என்றாகிவிட்டது. இப்பொழுதெல்லாம் நிற்கின்ற சைக்கிளை வீட்டுக்குள் ஓட்டுவது தான் கவுரவமான செயல் என்றாகிவிட்டது. மேலும் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாகனம் ஓட்டுவது என்பதே மிக சிரமமாக இருக்கின்ற நிலையில் யாரும் சைக்கிளை விரும்புவதே இல்லை.
சென்னையில் சைக்கிள் ஓட்டிகளை கூர்ந்து கவனிக்கும் போது மிகுந்த சுவாரசியமானவர்களாக இருப்பதை காண முடிகிறது. பெரும்பாலும் அவர்கள் தலை போற வேகத்தில் ஓட்டுவதே இல்லை. இந்த அவசர வாழ்க்கையிலும் நிதானமாகவே இருப்பது போல் படுகிறது. பெரும்பாலும் சைக்கிள் ஓட்டிகள் சிக்னல்களை மதிப்பதே இல்லை என்ற குறைபாடு பலராலும் சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் இடது ஓரங்களில் அவர்கள் அமைதியாகவே செல்வது போல் தெரிகிறது.
இன்றும் நகரங்களில் பசங்களுக்கு முதலில் 3 சக்கர சைக்கிளும் பின்பு 2 சக்கர சைக்கிளும் வாங்கி தரப்படுகிறது. பசங்களும் முதலில் மிகுந்த ஆர்வமுடன் கற்றுக்கொள்கிறார்கள். இன்றும் பசங்கள் பள்ளிக்கு சைக்கிளில் செல்வதை பார்க்க முடிகிறது. அரசு பள்ளிக்கு செல்லும் பசங்கள் அரசின் இலவச பச்சை சைக்கிளில் செல்வதை பார்க்க முடிகிறது. ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் பசங்களுக்கு சைக்கிள் மீதான ஈர்ப்பும் குறைந்து விடுகிறது. இரு சக்கர மோட்டார் வாகனங்களில் செல்வதையே கவுரவமான விசயமாக கருதுகிறார்கள். தற்போதைய திரைப்படங்களில் எல்லாம் கதாநாயகன் சைக்கிளில் செல்வது மிக அரிதானதே. அதையும் மீறி கதாநாயகன் சைக்கிளில் சென்றால் அது ஒரு கிராமத்து படமாகத்தான் இருக்க வேண்டும். திரைப்படத்தின் தாக்கம் மிகுந்த இந்த இளைய சமூகத்தில் சைக்கிளில் இளைஞர்கள் செல்வது எல்லாம் நினைத்தே பார்க்க முடியாது.
இன்றளவும் உலக சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத சினிமாவாக உள்ள “Bicycle Thieves” (இயக்கம் – Vittorio De Sica, 1948) என்ற இத்தாலிய திரைப்படத்தின் கதாநாயகனே ஒரு சைக்கிள் தான். தொலைந்து போன தங்கள் சைக்கிளை தேடி கதாநாயகன் அண்டோனியோவும் அவர் மகன் புருனோவும் அலையும் காட்சிகள் மிகுந்த நேர்த்தியானவை. அவர்களின் வாழ்வாதரமான சைக்கிள் கடைசி வரை கிடைக்காமல் போவதும் ஒரு நேர்மையான மனிதன் முதன் முதலில் ஒரு சைக்கிளை திருடுவதும், பின்பு பிடிபடுவதும், மகனின் முன்பு அவமானப்படுவதும் நம் மனத்தில் ஒரு சொல்லொனா துயரை உருவாக்குகிறது. அவமானப்பட்ட அப்பாவை புருனே பார்க்கும் பார்வை இன்றும் கூட என்னவோ செய்கிறது. இன்றும் யாருக்கேனும் வாழ்வாதாரமாக சைக்கிள் உள்ளதா? தெரியவில்லை.
சிறிய ஊர்களில் சைக்கிள் ஓட்டுவது என்பதே அலாதியான இன்பமான விசயமாகத்தான் இருந்தது. முன்பெல்லாம் குரங்கு பெடல் போட்டு பசங்க சைக்கிள் ஓட்டி செல்வதை பார்க்கலாம்.. சிறிய சைக்கிள் எல்லாம் ஓட்டாமல் நேரடியாக பெரிய சைக்கிள் ஓட்ட கற்கும் போது பசங்க பாருக்குள்ளாக ஒரு காலை விட்டு ஓட்டி கற்றுக்கொள்வார்கள். அது தான் குரங்கு பெடல். இப்பொழுதெல்லாம் சிறிய சைக்கிள் ஓட்டி பழகிவிட்டு பெரிய சைக்கிள் ஓட்டும் போது அதற்கெல்லாம் அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. சைக்கிள் ஓட்ட தெரியாது என்பதே பெரிய அவமானகரமான விசயமாக இருந்த நிலை எல்லாம் போய்விட்டது. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தான் சைக்கிள் கற்றுக்கொண்டேன். அதுவரை பெரிய அவமானம் தான். சைக்கிளில் இரண்டு வகையில் ஏறலாம். பெடலில் காலை வைத்து தட்டி தட்டி ஏறுவது என்பது ஒன்று. இல்லை நேரடியாக பார் மீது காலை போட்டு ஏறி பின்பு ஓட்டுவது என்பது ஒன்று. இன்றளவும் எனக்கு தட்டி தட்டி ஏறுவது என்பது கைவராத விசயமாக தான் இருக்கின்றது.
சைக்கிளுக்கும் ஒரு நம்பர் இருப்பது எல்லாம் யாராவது கவனிக்கிறோமா தெரியவில்லை. சீட்டுக்கு கீழாக அந்த எண் இருக்கும். அது நன்றாக தெரிய சுண்ணாம்பை அதன் மீது தடவியது நன்றாக நினைவுள்ளது. அது எந்த முறையில் தரப்படுகிறது, ஒவ்வொரு சைக்கிளுக்கும் அது பிரத்யேகமானதா தெரியவில்லை. எங்கள் வீட்டு சைக்கிள் ஒன்று திருடு போன போது அந்த நம்பரை குறிப்பிட்டு போலிஸீல் புகார் அளித்தது நினைவுள்ளது. இப்பொழுதெல்லாம் சைக்கிள் திருடு போகிறதா? இல்லை திருடர்கள் கூட சைக்கிளை மறந்துவிட்டார்களா?
பக்கத்து ஊர்களுக்கு திருவிழா காண சைக்கிளில் நண்பர்களோடு செல்வது என்பதே இன்பமயமானது. யார் பின்னால் உட்காருவது யார் ஓட்டுவது என்ற சண்டை எல்லாம் இன்று இல்லவே இல்லை. கல்லூரிக்கு இப்போழுதெல்லாம் சிறிய ஊர்களில் கூட மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் தான் செல்கிறார்கள். கல்லூரிக்கு சைக்கிளில் வகுப்பு தோழிகளொடு பேசிக்கொண்டே செல்வதெல்லாம் எங்கே போனது? சைக்கிளில் செல்லும்போது ஒருவரோடு ஒருவர் அருகருகே பேசிக்கொண்டே வண்டி ஓட்டலாம். அப்படி செல்லும் போது பயணக்களைப்பை போக்கும் விசயமாக அது இருந்தது.
அப்பொழுதெல்லாம் சிறிய ஊர்களில் பஸ் ஸ்டாண்டை ஒட்டி மக்கள் கூடும் இடங்களில் 3 நாட்கள் ஒரு வட்டத்தில் தொடர் சைக்கிள் ஓட்டம் நடைபெறும். அவர் கனம் குறைந்த சைக்கிளில் 3 நாட்கள் சுற்றி சுற்றி வருவது ஆச்சர்யமாக இருக்கும். சாகசங்கள் வேறு செய்வார். இரவு நேரங்களிலும் உண்மையிலேயே சைக்கிள் ஓட்டுவாரா என்ற சந்தேகம் இன்றும் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?
இன்றெல்லாம் சைக்கிள் பந்தயம் எங்காவது நடைபெறுகிறதா?
டைனமோ பொருத்திய சைக்கிள் எல்லாம் இப்பொழுது காண முடிவதில்லை. முன்பெல்லாம் போலிஸ்காரர்கள் டைனமோ இல்லாத சைக்கிள்களை இரவு நேரங்களில் பிடித்து அபராதம் போடுவார்கள். சைக்கிளில் 3 பேர் சென்றால் பிடித்து வால் டியூபை பிடிங்கி காற்றை இறக்கி விடுவார்கள். இவை எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது. இப்பொழுதெல்லாம் போலிஸ்காரர்கள் இதை கவனிக்க வேண்டிய அவசியமே இல்லை.
பெரிய சைக்கிள் நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களை விற்கும் நிலையில் இருப்பது ஆச்சர்யமானது தான். ( TI Cyles நிறுவனம் தங்களின் ”டைம் ஹவுஸ்” கட்டிடத்தை விற்றது பலருக்கும் நினைவு இருக்கலாம்). சைக்கிள் விற்பனை அவ்வளவு குறைந்து விட்டது.
ஐரோப்பிய நாடுகளில் சைக்கிள் ஓட்டிகளுக்கென்றே தனியாக பாதை இருப்பதை அறிய முடிகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லை என்பதால் அங்கெல்லாம் சைக்கிள் ஓட்டுவது என்பது ஊக்குவிக்கப்படுகிறது. டென்மார்க் போன்ற நாடுகளில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் சைக்கிள் மட்டுமே ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படுகிறதாம்.
ஆட்டோ ரிக்சாக்கள் சிறிய ஊர்களில் கூட வந்து விட்ட நிலையில் வாடகை சைக்கிள்கள் எல்லாம் எங்கே போய்விட்டன? நேரத்தை கணக்கிட்டு வண்டி வாடகை கணக்கிட வேண்டிய அவசியம் எல்லாம் இப்பொழுது இல்லை. அட சைக்கிள் கடைகளையே காணோமே!!!
சென்னையில் எல்டாம்ஸ் ரோட்டில் இன்றும் சைக்கிள் ரிப்பேர் செய்யும் ஒரு கடையை பார்க்க முடிகிறது. ஒரு வீல் காற்று – 0.50, இரண்டு வீல் காற்று – 1.00 என்று ஒரு சிலேட்டில் ஒரு தாத்தா எழுதி வைத்திருக்கிறார். அவரும் கம்பிரஸர் வைத்து தான் காற்று அடிக்கிறார். கை பம்பு எல்லாம் அருங்காட்சியகத்திற்கு போய் விட்டது. சென்னை சைக்கிள் ஓட்டிகள் எங்கே சென்று சைக்கிளை ரிப்பேர் செய்கிறார்கள் தெரியவில்லை. சைக்கிள் கடைகளை எல்லாம் மூடி ரொம்ப நாளாகிவிட்ட மாதிரி தான் தெரிகிறது.
பொதுவாக நடுத்தர மக்களின் வாங்கும் திறன் அதிகமாகி உள்ள நிலையில் சைக்கிள் என்பது பெரு நகரங்களில் சீக்கிரம் அருங்காட்சியகம் போய்விடும் போல தான் இருக்கின்றது.
நவீன மயமாக்கல், உலகமயமாக்கல் எல்லாம் வரமா? சாபமா? எதை விற்று எதை வாங்குகிறோம்?
- கோமாளி ராஜாக்கள்
- மோனநிலை..:-
- பலூன்
- சொர்க்கவாசி
- பம்பரம்
- இவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12
- கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்
- வழங்கப்பட்டிருக்கின்றதா?
- மிச்சம் !
- இருள் போர்வைகளின் முடிச்சுக்கள்
- தக திமி தா
- யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்
- ஒரு கொத்துப் புல்
- ராக்கெட் கூரியர்
- அடங்கிய எழுத்துக்கள்
- வட்டத்தில் புள்ளி
- வேரற்ற மரம்
- பிறப்பிடம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)
- ஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 மே 20, 2011
- தொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்
- இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்
- “தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு
- ஏதுமற்றுக் கரைதல்
- போராட்டத்திலிறங்கும் இடம்பெயர்ந்த மக்கள்
- காஷ்மீர் பையன்
- பாதைகளை விழுங்கும் குழி
- பண்பாட்டு உரையாடல்
- பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்
- தாமரை இலையும் சின்னக்குத்தூசியும்
- செக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்
- உறையூர் தேவதைகள்.
- காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி
- குழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம்! (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)
- மீன்பிடி கொக்குகள்..
- செல்வி இனி திரும்பமாட்டாள்!
- வழக்குரை மன்றம்
- சில மனிதர்கள்…
- ’ரிஷி’யின் கவிதைகள்:
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)