தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

அமீரகத் தமிழ் மன்றத்தின் ‘இந்த நாள் இனிய நாள்’

Spread the love

‘கணினியில் தமிழைப் பரப்பும் முயற்சியில் கடந்த 11 ஆண்டுகளாக துபாயை மையமாக வைத்து செயல்பட்டு வரும்
அமீரகத் தமிழ் மன்றம் தனது உறுப்பினர்களின் மனமகிழ்ச்சிக்காக ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில் ஒரு
மாபெரும் ஒன்று கூடலை கடந்த வெள்ளிக்கிழமை துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் வைத்து மிகச் சிறப்பாக நடத்தியது

இந்த ஒன்|று கூடல் நிகழ்ச்சியில் உறுப்பினர்களும் விருந்தினர்களும் குழந்தைகளுமாக 300 பேர் கலந்து கொண்டனர்
துபாய் மற்றும் சார்ஜா நகரங்களிலிருந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிறப்புப் பேருந்துகள் விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

துபாயின் தற்போது குளிர்காலமென்பதால் இளம்குளிரும் மென்மையான வெயிலும் நிறைந்த இனிய காலநிலையை
அனைவரும் உற்சாகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

காலையில் உறுப்பினர்கள் பதிவு மற்றும் காலைச் சிற்றுண்டியுடன் தொடங்கிய நிகழ்வில் ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும் பல்வேறு வயது பிரிவுகளில் குழந்தைகளுக்காகவும் பல்வேறு சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. போட்டிகளில வயது வித்தியாசமின்றி அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டதால் போட்டிகள் மிகுந்த விறுவிறுப்பாகவும் பார்வையாளர்கள் ரசித்து மகிழும்படியாகவும் இருந்தன. மூன்று வயது குழந்தைகளுக்காகவும் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது

மதிய உணவிற்குப் பின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையே பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடன் அரங்கேறியது அதனைத் தொடர்ந்து சைகை மூலம் பழமொழிகளை அடையாளம் காணும் போட்டியும் பெரும் சிரிப்பொலிகளுக்கிடையே நடந்தது. இந்நிகழ்ச்சியிலும் பெண்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். ஆங்கில சொற்களுக்கான தமிழ்க் கலைச்சொல்லைக் கண்டுபிடிக்கும் போட்டி புதிய கலைச்சொற்களை உறுப்பினர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருந்தது.

மாலை தேநீருக்குப் பின்னர் இலங்கையைச் சேர்ந்த ‘காப்பியக் கோ’ ஜின்னா ஷர்ஃபுத்தீன் அவர்கள் தலைமையில் பரிசுகளை வென்றவர்களுக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் பேசிய ஜின்னா ஷர்ஃபுத்தீன் அவர்கள்” இது போன்ற ஒன்று கூடல்கள் பெருநகர் வாழ்வின் இறுக்கங்களைத் தகர்த்து மனிதர்களுக்கிடையில் மதங்கள் இனங்கள் மறந்த ஒருங்கிணைப்பை உருவாக்குவதால் இதுபோன்ற நிகழ்வுகள் மிக அவசியம்” என்றார். “இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற அமீரகத் தமிழ் மன்றம் முயற்சி செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பின்னர் நடந்த நிகழ்வில் அமைப்பின் தலைவர் காமராசன், செயலாளர் ஜெஸிலா ரியாஸ், கலைச் செயலர் ஃபாரூக் அலியார், பொருளாளர் நஜ்முதீன், இணைச் செயலாளர் இரமணி, ஆலோசகர் அகமது முகைதீன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

விழா நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை ரியாஸ் அகமது, வஹிதா நஜிமுதீன்,பெனாசிர் ஃபாத்திமா, நிவேதிதா, ஶ்ரீவாணி
ஆனந்தன் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டவர்களுக்கு ஆசிப் மீரான் நன்றி கூறினார்.

படங்கள்: இணைக்கப்பட்டுள்ளது

Series Navigationராபர்ட்டின் கிறிஸ்துமஸ்அழுகிணிராசாவும் புளுகிணிமந்திரியும்

Leave a Comment

Archives