செல்லச்சாமியின் வாழ்வில் ஒரு தினமும் , பெருமாள் முருகனும்

This entry is part 1 of 42 in the series 1 ஜனவரி 2012

1

செல்லச்சாமிக்கு வழக்கம் போல் ஐந்தரை மணிக்கு முழிப்பு வந்து விட்டது . மாடித் தரையில் படுத்திருந்தவரின் கண்கள் மேலே சிமிட்டிக் கொண்டிருந்த வானத்தின் எண்ணற்ற கண்களைச் சந்தித்தன . நீலமும் வெள்ளையுமாக வானில் தெரிந்த புரிபடாத சித்திரங்களில் எதையாவது தேடிக் கண்டு பிடிக்க முடிகிறதா என்று பார்த்தார். அவர் சிறுவனாக இருந்த போது இம்மாதிரி வானில் காணப்படும் ஓவியங்கள் முந்தின ஜன்மத்தில், இதே நாளில் நடந்த காட்சிகளைத்தான் தீட்டிக் காண்பிக்கப் படுவதாக நினைத்ததுண்டு . வெட்ட வெளியிலிருந்து வந்த குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்ற மயக்கத்தில் கண்கள் இன்னும் கொஞ்சநேரம் செருகிக் கிடக்கட்டுமா என்று கெஞ்சின . கூட்டமாக ஒரு குருவிக் கூட்டம் காலை வணக்கம் சொல்வது போல் , கீக் கீக் என்று அவரைப் பார்த்துக் கொண்டே பறந்தன . செல்லச்சாமிக்கு இயற்கையின் மடியில் கிடந்த இந்த செல்வங்களைப் பார்த்து ஒரு நிமிஷம் நெஞ்சு விம்மிற்று .

எழுந்து, வேஷ்டியை உதறி விட்டு கட்டிக் கொண்டார் . பதினோராம் கிராசிலிருந்த மல்லிகை அபார்ட்மென்ட்ஸ் கட்டிடத்திலிருந்து சிறு
பையன்கள் வேத பாராயணம் சொல்ல ஆரம்பிக்கும் குரல் கேட்டது. ரொம்ப வருஷங்களுக்கு முன்னால் அம்மா வந்தாளில் படித்த தோட்டம் துரவுகளுக்கு இடையே இருந்த கிராமீய பாடசாலை இப்போது நாகரீகத்துடன் சேர்ந்து கொண்டு, கல் மரங்கள் நிரம்பிய காட்டுக்குள் வந்து விட்டது காலத்தின் கோலம்தான் என்று நினைத்துக் கொண்டார்.

நின்ற இடத்திலிருந்து வலது பக்கம் திரும்பியதும் கண்ணில் பட்ட
வேணுகோபால ஸ்வாமி கோயில் கோபுரத்தைப் பார்த்து நமஸ்கரித்தார்.
சிறு வயதில் மதுரையில் இதே மாதிரி அதிகாலை எழுச்சி ஆனதும் , மாடியில் நின்று கொண்டு வலது பக்கம் திரும்பி தொலைவில் தெரியும் மீனாக்ஷி அம்மன் கோயில் கோபுரங்களைப் பார்த்தும்
இடது பக்கம் திரும்பி அதே மாதிரி தொலைவில் தெரியும் திருப்பரங்குன்றம் மலையைப் பார்த்தும் தினமும் வணங்கியது நினைவுக்கு வந்தது . படுக்கையை மடித்துக் கையில் எடுத்துக் கொண்டு படிகள் வழியே கீழே வந்தார் . ஹாலில் படுக்கையில் முழித்துக் கொண்டே படுத்திருந்த பாக்கியம் அவரைப் பார்த்ததும் எழ முயன்றாள் .

” பேசாம படுத்திண்டிரு. ராத்திரி தூங்கினாயா ? இப்போ கால் வலி எப்படி இருக்கு ? ” என்று அவள் அருகே சென்றார் .

” மருந்து சாப்பிட்டதாலே , தூக்கமும் கொஞ்சம் வந்தது. வலியும் தேவலை ” என்றாள் அவர் மனைவி. நேற்று காலை படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியவில்லை என்று பெரிய கலாட்டா ஆகி விட்டது . ஆம்புலன்ஸை வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டியதாயிற்று . புஸு புஸு என்று வீங்கிய காலைப் பார்க்கவே பயமாக இருந்தது . ஆஸ்பத்திரியில் வெரிகோஸ் வெயின் பிராப்ளம் என்றார்கள் . காலையில் இருந்து சாயந்திரம் வரை வைத்து வீட்டுக்கு அனுப்பினார்கள் , மூவாயிரம் ரூபாய் பில்லைக் கொடுத்து விட்டுப் போ என்று சொல்லி . எவ்வளவு பணம் செலவாயிற்று என்று அவர் மனைவியிடம் சொல்லவில்லை , அது வேறு ஏதாவது , புதிய வியாதியைக் கொண்டு வந்து விடுமோ என்று . ஆபிஸ் நண்பன் அப்துலிடம் கடன் வாங்கிக் கட்டினார். இன்று ஒரு சம்பள அட்வான்ஸ் வாங்கி அதைத் திருப்பிக் கொடுக்க வழி செய்ய வேண்டும் . அடுத்த மூன்று மாதங்களுக்கு , பிடிப்பு போக குறைவான சம்பளமே வரும்.

செல்லச்சாமி பாத்-ரூமுக்குள் சென்று பல் தேய்த்து விட்டு, முகத்தை அலம்பிக் கொண்டு , சமையல் அறைக்குள் வந்தார் . முதல் நாள் வாங்கி வைத்திருந்த பாலை எடுத்துக் காய்ச்சி இருவருக்குமாகக் காப்பி போட்டு எடுத்துக் கொண்டு வந்து ஒரு டம்பளரை பாக்கியத்திடம் கொடுத்தார். டீ-பாயின் மேலிருந்த அன்றைய தினசரியைப் பிரித்துப் பார்த்தபடி காபியை உறிஞ்சினார் . அன்று புதிதாக ஒரு ஊழல் செய்தியும் இல்லை என்று ஏமாற்றத்துடன் பேப்பரை எடுத்த இடத்தில் வைத்தார் .

” இன்னிக்கு வெத்தக் குழம்பும் கத்தரிக்காக் கறியும் பண்ணிடவா ? என்று மனைவியிடம் கேட்டவாறு எழுந்தார் .

செல்லச்சாமி சமையல் அறைக்குள் நுழைந்து , பாத்திரத்தை எடுத்து , இரண்டு ஆழாக்கு அரிசியைப் போட்டு , நீரை விட்டுக் களைந்தார் . காஸைப் பற்ற வைத்து குக்கரில் நீர் விட்டு , அரிசிப் பாத்திரத்தை அதற்குள் வைத்து மூடினார் . ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து கொஞ்சமாய்ப் புளியைப் போட்டு நீரை ஊற்றி , அது கொஞ்ச நேரம் ஊறட்டும் என்று தனியே வைத்தார் . நாலைந்து சின்ன வெங்காயத்தையும் , பிரிட்ஜிலிருந்து கத்திரிக்காயையும் எடுத்துக் கொண்டு வந்தார் . கத்தரிக்காய் பச்சை நிறத்தில் ‘ இள ‘ ‘ இள ‘ வென்று இருந்தது . சிக்கண்ணாவின் தெரிவு செய்யும்திறமையைக் கண்டு அவர் பல தடவை வியந்திருக்கிறார் . அவன்தான் அவருக்குப் பத்து வருஷங்களாக தினமும் காய் கறிகள் கொண்டு வந்து கொடுக்கிறான். மற்ற பனாதைப் பயல்கள் எல்லாம் புழுவும் பூச்சியும் ஊரும் காய்களை நடுவில் சேர்த்துத் தள்ளி விடும் காலத்தில் , சிக்கண்ணா எப்படித்தான் இப்படி நேர்மையும் தொழில் சுத்தமும் கொண்டவனாக இருக்கிறானோ என்று வியந்தார் .

வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி விட்டு , கத்தரிக்காயை நறுக்கும் போது ,எதிர்பாராவிதமாக கத்தி விரலைப் பதம் பார்த்து விட்டது . ரத்தம் கசிந்து வர , தாங்க முடியாத எரிச்சல் ஏற்பட்டது. நீரில் விரலைக் காண்பித்தவாறு ஒரு நிமிஷம் நின்றார் . இது அவருக்கு அம்மா சொல்லிக் கொடுத்த மருந்து . இதே போல அவள்தான் , மாதத்தில் வீட்டில் இல்லாத மூன்று நாட்களின் போது, செல்லச்சாமியை சமையலில் இறக்கி விட்டது . பதினைந்து வயதுப் பையன் உப்பு , உறைப்பு , வதக்கல் , தாளிப்பு என்று கண் பார்த்து கை செய்கிற வித்தையை அவளிடமிருந்துதான் கற்றுக் கொண்டான். அது இப்போது கை கொடுக்கிறது .

அவர் அடுப்பிலிருந்து குக்கரை எடுத்து வைத்து விட்டு , புளிப் பாத்திரத்தில் இருந்த நீரில் புளியைக் கரைத்து உப்புப் போட்டு கொதிக்க வைத்தார். சற்றுக் கழித்து வெங்காயத் துண்டுகளை அதில் போடலாம் . ஒரு வாணலியை எடுத்து , எண்ணெய் விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்தவுடன் ,கத்தரிக்காய் துண்டுகளைப் போட்டார்.

கடிகாரம் ஹாலில் எட்டு தடவை அடித்தது . ஒன்பது, ஒன்பதே காலுக்குக் கிளம்பி ஆபீஸுக்குப் போக வேண்டும் .அடுப்பை ‘ ஸிம் ‘ மில் வைத்து விட்டு அவர் குளியல் அறைக்கு ஓடினார். இன்றைக்கு பூஜை அறையில் கண்ணை மூடி பத்து நிமிஷம் நிற்க முடியாது . ஆபீஸுக்குப் போகிற வழியில் சுலோகங்களைச் சொல்லிக் கொண்டு போக வேண்டியதுதான்.

குளித்து விட்டு வந்து, சமையல் அறைக் காரியங்களை முடித்து விட்டு , ஹாலுக்கு வந்தார் . பாக்கியம் இப்போது எழுந்து உட்கார்ந்திருந்தாள் . அவர் டைனிங் டேபிள் மேல் வைத்திருந்த மாடர்ன் பிரெட் பாக்கெட்டைப் பிரித்து வெண்ணையும், ஜாமும் தடவி மூன்று துண்டுகளை வைத்து மனைவியிடம் தந்தார் . தானும் ,இரண்டு ரொட்டித் துண்டுகளைப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டார் .

” நான் கிளம்பறேன் . இன்னிக்கு சீக்கிரம் ஆபீஸுக்கு போணும் . ஆடிட்டர்ஸ் வரான்கள் . ” என்றபடி உடைகளை மாற்றிக் கொள்ள உள்ளே சென்றார் . ஆடிட்டர்களை நினைத்து . அவருடைய பாஸ் உதறிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். கணக்கில் தில்லு முல்லு எல்லாம் பண்ணுவது அவனாயிருந்தாலும், அதை சமாளிக்க செல்லச்சாமி வேண்டும். அதுவும் அவரை விரட்டி, அந்த வேலையை வாங்கி விடுவதில் எமகாதகன் . கம்பெனி ஆரம்பித்த காலத்திலேயே வேலைக்குச் சேர்ந்து அங்கேயே தங்கி விட்ட பழம் பெருச்சாளி . எம். டி. க்கு வேணும் என்பதையெல்லாம் கூழைக் கும்பிடு போட்டு பண்ணிக் கொடுத்து விடுவான். ஆனால் , அவனுக்குக் கீழே
இருப்பவர்களிடம் எல்லாம் அதிகாரம் தூள் பறக்கும். இந்த ஆளிடம் எப்படி ஐயா இவ்வளவு வருஷம் குப்பை கொட்டிக் கொண்டு இருக்கிறாய் என்று செல்லச்சாமியைக் கேட்காதவரில்லை. காலம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது .

அவர் காலில் செருப்பை மாட்டிக் கொண்டு பாக்கியத்திடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தார். அப்போது அவரது கைப் பேசி ஒலித்தது . யார் என்று பார்த்தார் . தெரியாத , புதிய நம்பர் . அவர் ” ஹலோ! ” என்றார் .

ஒரு பெண் குரல் கேட்டது . ” செல்லச்சாமி சாருங்களா ? ”

” ஆமா , நீங்க யாரு ? ”

” உங்கள பாக்கணும் . நான் அட்ரஸ் தரேன் . நீங்க வரணும் . ”

அந்தக் குரல் வேண்டுகோள் மாதிரியும் இருந்தது . லேசாகக் கட்டளை இடுவது போலும் இருந்தது .

ஒரு நிமிஷம் அவருக்கு ஒன்றும் புரியவில்லை .

அவரது மௌனத்தால் , பாதிக்கப் பட்டவள் போல , மறுமுனையிலிருந்து ” ஹலோ , ஹலோ ” என்று அழைக்கும் குரல் கேட்டது . தொடர்ந்து ” ஸார் , என் பெயர் கண்மணி , நான் மல்லேஸ்வரம் ஆறாவது கிராசிலிருந்துதான் பேசுறேன் . உங்க வீட்டுக்கு பக்கந்தான் .”

” நீ யாருன்னு தெரியலையே அம்மா . நான் எதுக்கு நீ கூப்பிடற இடத்துக்கு வரணும் ? ” என்று கேட்டார் .

” ஒங்களுக்கு என்னைய தெரியாதுதான். ஆனா எனக்கு உங்களை தெரியும். சம்பத்தோட அப்பான்னு .சம்பத்து விசயமாத்தான் உங்கள வரச் சொல்லுறேன் . ”

அவருக்கு வயிற்றை ‘ நம ‘ ‘ நம ‘ வென்றது .

‘ என்ன ஆச்சு சம்பத்துக்கு ? ”

” அவரு நல்லாத்தான் இருக்காரு. நீங்க பயப்பட வேணாம் . ஆனா நான் உங்கள பாக்கணும் . ”

அவள் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டும் என்று மட்டும் வற்புறுத்துவது அவருக்குக் கோபத்தையும், கலக்கத்தையும் கொடுத்தது . ஆனால் இப்போது அவரால் ஆபீஸைத் தவிர வேறு எங்கும் போக முடியாது .
முதல் நாளே ஆடிட்டர்களை எரிச்சல் படுத்தத் தயாராயில்லை அவர் .
.

” நான் இப்ப ஆபீஸுக்கு போயிண்டிருக்கேன் . சாயங்காலம் பாக்கலாமா ? ” என்று கேட்டார். ” திடீர்னு ஆபீஸுக்கு லேட்டா போக முடியாது . லீவும் போட முடியாது இப்ப . ”

” அப்ப மதியத்துக்கு வாங்க . இந்த நம்பர்ல நீங்க வரதுக்கு முன்னால பேசலாம் ” என்று அவள் போனை அணைத்து விட்டாள் .

அவர் அருகே போய்க் கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி ” டபுள் ரோடுக்கு போப்பா ” என்றார் . மனது அலை பாய்ந்தது . சம்பத் அவருடைய ஒரே பிள்ளை . அவருடைய ஒரே பெண் சாந்தி மைசூரில் இடம் கிடைத்து இஞ்சினியரிங் படித்துக் கொண்டு இருக்கிறாள். சம்பத் படித்து விட்டு வேலை இல்லாமல் ஒரு வருஷமாய் அலைந்து கொண்டிருக்கிறான் . இன்று சீக்கிரம் எழுந்து மங்களூருக்குப் போனான் . அங்கு வேலை பார்க்கும் அவனுடன் படித்த நண்பன் ஒருவன் தன் கம்பனியிலேயே ஒரு இடம் காலி இருப்பதாகக் கூறி அவனை அழைப்பதாகப் போயிருக்கிறான் . அவனைப் பற்றி அவரிடம் பேச வேண்டும் என்று ஒரு பெண் போன் செய்கிறாள் . அவருக்கு மனது நிலை கொள்ளாமல் தவித்தது. அவள் குரலில் தென்பட்ட உறுதியும் , வெளியே அதிகமாக எதையும் தெரிவித்து விடாத அவளது வார்த்தைகளும் அவரைத் துன்புறுத்தின . சம்பத்திடம் போன் பண்ணி யார் இந்தக் கண்மணி என்று கேட்கலாமாவென அலைபேசியைக் கையில் எடுத்தார் . பிறகு , இன்டர்வியுவுக்குப் போய்க் கொண்டிருப்பவனை இடைஞ்சல் செய்யக் கூடாது என்று மறுபடியும் அதைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார் . மறுபடியும் ஏதாவது ஸ்கூட்டர் ஆக்சிடென்ட் என்று மாட்டிக் கொண்டு விட்டானா ? இதுவரை மூன்று முறை அப்படி ஆகிவிட்டது. வண்டியை எடுக்காதே என்றாலும் கேட்க மாட்டேன் என்று வீம்பு பிடித்துக் கொண்டு …

2

செல்லச்சாமி அலுவலகத்தை அடைந்து தன் ஸீட்டில் உட்கார்ந்ததும் , அவரை எதிர் கொண்ட கலாட்டாவில் கண்மணியும், சம்பத்தும் நினைவிலிருந்து மறைந்து விட்டார்கள். வேகமாக அவரிடம் வந்த அவரது உதவியாளன் , கிருஷ்ணா , ” ஸார், ஆடிட்டர்கள் வந்தாச்சு . நேரே கேஷியர் ரூமுக்குப் போய் வேலையை ஆரம்பிச்சிருக்காங்க ” என்றான். தொடர்ந்து
” நேத்தி , நீங்க ஆஸ்பத்திரிக்கு போகணும்னு நாலு மணிக்கே கிளம்பி போனதுக்கு அப்புறம் எம்.டி. யோட பி.ஏ. வந்து நாப்பதாயிரம் ரூபாய் அர்ஜண்டாக எம்.டி. கேக்கறார்னு வாங்கிண்டு போனா .அதை
சஸ்பென்ஸ் வவுச்சர்ல போட்டு வச்சிருக்கேன் ….” என்று அவரைப் பார்த்தான் .

அவர் பதில் எதுவும் கூறாமல் அவனைப் பார்த்தார் , அவன் சொல்ல வேண்டியது இன்னும் இருக்கிறது என்பது போல .

கிருஷ்ணா தயக்கத்துடன் ” சர்ப்ரைஸ் செக் என்று அவர்கள் உள்ளே வந்து விட்டதால் , சஸ்பென்ஸ் வவுச்சரையும் அவங்க பாத்துட்டாங்க. ..”
என்றான். தொடர்ந்து ” இது என்ன வெறும் பேப்பர் ? பணம் வாங்கியது எம்.டி . ன்னா , அவர் ஏன் கையெழுத்துப் போடலேன்னு பிடிச்சுக்கிட்டாங்க. இது நிஜமாவே அவருக்கு கொடுத்ததா, இல்லே ஏதாவது அட்ஜஸ்ட்மென்ட் குளறுபடியான்னு சத்தம் போட்டாங்க ” என்றான்.

” நீ ஒரு முட்டாள் ” என்றார் செல்லச்சாமி . ” சரி, நான் பாத்துக்கிறேன் போ ” என்றார்.

கிருஷ்ணா தயக்கத்துடன் நின்றான். அவர் அவனைப் பார்த்து ” ம், இன்னும் என்ன ? ” என்று கேட்டார்.

” அந்த டீம் லீடர் கிட்ட நான் சொன்னேன், உங்க கிட்ட வந்தா எல்லாம் கிளாரிபை பண்ணிக்கலாம்னு .சரி , அவரை வரச் சொல்லுன்னு சொல்றான் ஸார். “. அவன் குரல் லேசாக நடுங்கிற்று.

அவர் கிருஷ்ணாவைப் பார்த்துப் புன்னகை செய்தார் . பிறகு அவனைப்
போகுமாறு சைகையில் சொன்னார்.

யாரோ சிறு பையன் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டார். இந்த இருபத்தி ஐந்து வருஷ வாழ்க்கையில் எத்தனை ஆடிட்டர்களைச் சந்தித்திருக்கிறார்.! இந்த வருஷம் புது ஆடிட்டர்கள் நியமனம் ஆகி இருக்கிறது. முதல் வருஷம் படபடப்புடன் தான் ஆரம்பிக்கும். அவர்கள் ஐந்து வருஷ காண்ட்டிராக்ட் முடிந்து போகும் போது அவர் தோளில் கை போட்டுக் கொண்டு போவார்கள் , அல்லது வணங்கி விட்டுப் போவார்கள் , அவரவர் வயசுக்கு ஏற்றமாதிரி. ஆனால் ஐந்து வருஷம் கழித்தும் முதல் நாள் ஆரவாரம் குறையாமல் போன கேசுகளும் உண்டு .

ஆனால் இந்த பண விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் . எம். டி. சம்பந்தப் பட்டது என்பதால் என்று செல்லச்சாமி நினைத்தார். ஆடிட்டர்கள் அதைப் பற்றி புகார் செய்வதை அவர் தடுத்து விட வேண்டும் . அவருடைய பாஸ் எம். டி யிடம் போய் செல்லச்சாமி சரியாக இதைக் கையாளவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பான். இதெல்லாம் செல்லச்சாமி புத்திசாலித்தனமாக கையாள வேண்டும், . ஆடிட்டர்களைப் பார்த்து சமாளிப்பது செல்லச்சாமியின் வேலை என்பது அவருடைய பாஸின் தீர்மானமான அபிப்பிராயம் . இந்த நாற்பதினாயிரம் ரூபாய் விஷயத்திலும், நான்கு கேஷ் வவுச்சர்களை அட்வான்ஸ் என்று நாலு பேருக்குப் போட்டு முடித்திருக்க வேண்டியது. கிருஷ்ணா சற்று உஷாராக நடந்து கொண்டிருந்தால் ,பிரச்சனையே எழுந்திருந்திருக்காது .

செல்லச்சாமி ஆடிட்டர்கள் அமர்ந்திருக்கும் அறைக்குச் சென்றார். ஒரு நீண்ட மேஜையின் முன்னும் பின்னும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒரு பக்கம் ஒருவர் மட்டும் அமர்ந்திருக்க , அதற்கு எதிர்பக்கம் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அந்த இரண்டு பேருக்குப் பக்கத்தில் கிருஷ்ணா நின்று
கொண்டிருந்தான். தனியாக அமர்ந்து இருந்தவன் சீனியராக இருக்க வேண்டும் என்று நினைத்தபடி செல்லச்சாமி உள்ளே நுழைந்து எல்லோருக்கும் வணக்கம் சொன்னார். அந்த இருவருக்கு அருகாமையில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தன்னை ஆறுமுகப் படுத்திக் கொண்டார். அந்த இளைஞன் தன் பெயர் சேது என்று சொன்னான்.

பிறகு நேராக அவரைப் பார்த்து ” இந்த மாதிரி சஸ்பென்ஸ் வவுச்சரை எல்லாம் நாங்க ஒத்துக்க முடியாது ” என்றான் , ஒரு தாளைக் காட்டியபடி. ” யார் பணம் வாங்கினாரோ, அவரோட கையெழுத்து இதில இல்லே. கம்பெனி செலவுன்னா நாப்பதாயிரம் ரூபாய்க்கு நீங்க செக்குதான கொடுத்திருக்கணும் . எதுக்கு கேஷ் கொடுத்து சஸ்பென்ஸ் வவுச்சர் ? அப்படீன்னா இது கம்பெனி செலவு ஐட்டம் இல்லையா ? ” என்று கேள்விகளாக இறைத்தான்.

அவர் புன்முறுவலுடன் , ” சரி நான் பார்த்து சரி செஞ்சுடறேன் ” என்றார்.

” இல்ல, இதை நாங்க ரிப்போர்ட் பண்ணணும் . ரூல்ஸ் பிரகாரம் நடக்காததை நாங்க ரிப்போர்ட்ல கொண்டு வரணும்.”

அவன் தன்னை உயர்ந்த பீடத்தில் நிறுத்திக் கொண்டு பேசுவதை அவர் கவனித்தார் . அவர் இறைஞ்ச வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கின்றானா ?

அப்போது பியூன் வந்து அவரை அவரது பாஸ் கூப்பிடுவதாக அழைத்தான்.

அவர் நரசிம்மத்தின் அறைக்குள் நுழைந்த போது வெளி ஆட்கள் யாரோ இரண்டு பேர் உட்கார்ந்திருந்தனர் .

நரசிம்மம் அவரைப் பார்த்து ” நேத்தி நீங்க வரலைன்னா , இன்னிக்கி சீக்கிரம் வந்திருக்கலாமில்லே ” என்றார் .

செல்லச்சாமி எதற்கு இந்தக் கேள்வி என்பது போல் அவரைப் பார்த்தார் .
.
” இன்னிக்கி ஆடிட்டர்ஸ் வரதுக்கு முன்னாலே நீங்க சீக்கிரம் வந்து நேத்து கணக்குகளை எல்லாம் பார்த்து சரி செய்யாதது எப்படி பெரிய ஆபத்துல கொண்டு விட்டுருக்கு , பாரும் ” என்றார் .

இந்த ஆளுக்கு அதற்குள் தகவல் வந்து விட்டதா என்று அவருக்கு ஆச்சரியம் ஏற்பட்டது .

” நீங்கள்ளாம் எப்படி லீவு போடறது , கம்பனிக்கு செலவு வைக்கிறதுன்னுதான் இருக்கீங்களே தவிர , வேலைல கவனமே இல்லே ” என்றார் , துடுக்காக நரசிம்மம்.

செல்லச்சாமிக்கு சினம் ஏற்பட்டது . ஒரு நாள் லீவுக்கு என்ன பேச்சு பேசுகிறான் ? அதுவும் அயலார்களை முன்னுக்கு வைத்துக் கொண்டு ? ஆனால் அவர் கோபத்தை அடக்கிக் கொண்டார். நரசிம்மம்தான் அவருடன் சம்பள அட்வான்சுக்கு அனுமதி தர வேண்டும் .எதிர்த்து இப்போது ஏதாவது சொன்னால் , அவருடைய பேப்பரைக் கிடப்பில் போட்டு விடுவான் .

” இல்லே ஸார் , நான் பாத்துக்கிறேன் ”

” சரி , சரி , முதல் நாளே ஆடிட்டர்களோட சரியா ஆரம்பிக்கலே . ஜாக்கிரதையா வேலைய பாருங்க. சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் நான் வரணும்னு ஆரம்பிச்சா, அப்புறம் நீங்கள்ளாம் என்னத்துக்கு ? ” என்று வந்தவர்கள் பக்கம் திரும்பினார் .

செல்லச்சாமி தன் இடத்துக்குத் திரும்பினார் . அவருடைய பிரிவில் , ‘ மாங்கு மாங்கு ‘ என்று வேலை செய்வது எல்லாம் , அவரும் அவருடைய உதவியாளர்களும்தான் . அவர்கள் எல்லாரும் சின்ன வேலைகளைச் செய்பவர்கள் , அதற்குத்தான் லாயக்கு என்கிறான்.

3

மத்தியானம் ஒன்றரை மணிக்கு காண்டீனிலிருந்து பிஸிபேளா பாத்தும் தயிர் சாதமும் வரவழைத்து சாப்பிட்டார் செல்லச்சாமி . வாயில் வைக்க வழங்கவில்லை . காலையில் அவர் வைத்த குழம்பையும் , கறியையும்
ஒரு டிபன் பாக்ஸில் போட்டு` எடுத்து வந்திருக்கலாம். கிளம்பும் அவசரம் அதை அனுமதிக்கவில்லை . சாப்பிட்டு முடித்ததும் கண்மணி என்ற அந்தப்
பெண்ணைப் பார்த்து விட்டு வரக் கிளம்பிச் சென்றார் . கிளம்பும் முன் , கிருஷ்ணாவைக் கூப்பிட்டு தான் வெளியே செல்வதாகவும் , நரசிம்மம் கேட்டால் , பேங்குக்குப் போயிருப்பதாகச் சொல்லும்படியும் கூறினார் .
.
ஆட்டோ சேஷாத்ரிபுரம் போலீஸ் நிலையத்தைத் தாண்டும் போது அவர் கண்மணிக்குப் போன் செய்தார் .

” ஸார் , நீங்க எங்கே இருக்கீங்க ? ”

அவர் சொன்னார் .

” நான் மந்திரி மால்லேர்ந்து வெளில வந்துட்டிருக்கேன் . நீங்க அதுக்கு எதிர்த்தாப்ல இருக்கற பார்க்குக்கு வந்துடறீங்களா ? நான் மஞ்சளும் கறுப்பும் கலந்திருக்கற ஸாரி போட்டிருக்கேன், நீங்க ஈசியா என்னை அடையாளம்
கண்டு பிடிச்சுரலாம். ” என்றாள் கண்மணி.

அவள் சொன்ன இடத்தில் அவளை எளிதாகவே கண்டுபிடிக்க முடிந்தது . அவளருகே சென்றார்.

” வணக்கம் ஸார் ” என்று கை கூப்பினாள் . ” உங்களை இப்படி தொந்திரவு செஞ்சதுக்கு என்னை மன்னிச்சிரனும் ” என்றாள் .

அவர் எதுவும் பதிலளிக்கவில்லை. எதற்குக் கூப்பிட்டாள் என்று தெரியாத வரையிலும் தப்பு , சரி பற்றி எப்படித்
தீர்மானிப்பது ?

அவர் அவளைப் பார்த்தார். நாற்பது வயது இருக்கலாம். சிறு வயதில் அழகாய் இருந்திருக்கக் கூடிய சாத்தியங்களை, இன்னும் அவ்வளவாக முற்றாத முகமும் , உயரத்துக்கு ஏற்ற அளவான உடம்பும் தெரிவித்தன .
கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியில் சிலுவை டாலர் தொங்கிற்று .எளிமையான ஆடையில் , அதிகமான அலங்காரம் எதுவும் இன்றி பார்ப்பவர் கவனத்தைக் கவருபவளாக இருந்தாள் .

அவர்கள் பார்க்கில் இருந்த கல் பெஞ்சு ஒன்றில் அமர்ந்து கொண்டார்கள். இளம் வெயிலையும் மீறி சுற்றிலும் இருந்த மரங்களிலிருந்து லேசான குளிர் காற்று வீசிற்று .

” நான் சுத்தி வளைச்சு பேசலிங்க . எனக்கு ஒரு பொண்ணு இருக்கு. எவ்லின்னு பேரு . இப்பதா காலேஜு முடிச்சிட்டு
வேலைக்கு சேர்ந்திருக்கா. ட்ரெய்னியா .உங்க கம்பனியில . ”

அவருக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. ஏதாவது அவள் மகளுக்குதன் அலுவலகத்தில் உதவி வேண்டுமா ?சம்பத் இதில் எங்கே வருகிறான் ? ஒரு வேளை சம்பத் ஸ்கூட்டரை இவள் பெண் மீது மோதி ….?

அவர் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்தார் .

“என் வீட்டுக்காரர் எவ்லினுக்கு அஞ்சு வயசாகும் போது இறந்திட்டாரு . என் தம்பிதான், என்னையும் என் மகளையும் காப்பாத்தி விளக்கு ஏத்தி வச்சது எல்லாம் . அவன் இல்லாமா இருந்திருந்தா, நாங்க எப்பவோ மக்கி மண்ணாகி போயிருப்போம் . அவன் கிட்டே மண்டி போட்டு ஆசிர்வாதம் வாங்கறதை விட்டிட்டு , இப்ப என் மக அவன் முதுகில கத்தியை வச்சு குத்தப் பாக்கறாளோன்னு பயமா இருக்கு ” . அவள் குரல் ஆரம்பத்தில் இருந்த உறுதியை இழந்திருந்தது .

செல்லச்சாமி ” என்னம்மா சொல்றே ? ” என்று கேட்டார் .

” என் தம்பிக்கு தன்னோட மகனை என் மகளுக்கு கட்டி வெக்கணும்னு ஆசை. சின்ன வயசிலிருந்து சொல்லிக்கிட்டு இருக்கான். என் மருமவன் எம். பி. ஏ . படிச்சிட்டு இப்ப துபாய்ல வேலையிலே இருக்கான். இவ எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்னு முதல்ல முரண்டு பிடிச்சா . திடீர்ன்னு ஒருநா நான் சம்பத்தை கல்யாணம் பண்ணுவேன்னு இடியத் தூக்கி போட்டா ….”

செல்லச்சாமி இதை எதிர்பார்க்கவில்லை . அவருக்குத்தான் , இப்போது கத்தியால் குத்தப் படுவது போலவும் , இடி தன் மீது விழுந்தது போலவும் இருந்தது .

” உங்களப் பார்க்க நாலைஞ்சு தடவை உங்க பையன் ஆபீஸுக்கு வந்தப்ப, ரெண்டு பேரும் பாத்துட்டு , பழகி …” என்று முடிக்காமல் நிறுத்தினாள் .

செல்லச்சாமிக்கு உளைச்சலாக இருந்தது. இது என்ன எதிர்பாராத விபரீதம் ? அவ்வளவாக உறுதியான மனம் கொண்டிராத அவர் மனைவியால் இதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும் என்பதுதான் அவரது முதல்
கவலையாக இருந்தது . இது ஜாதி ரீதியாகக் கூட இல்லை , மத ரீதியான பிரச்சினைகளைக் கிளப்பும் அவருடைய கல்யாணம் ஆகாத பெண்ணின் வாழ்க்கையை இது சீரழித்து விடும் . இதை நான் எப்படிச் சமாளிக்கப் போகிறேன் ? அவர் உடலில் ஒரு வித நடுக்கம் பரவி ஓடிற்று .

அவர் பதில் எதுவும் கூறாது கண்மணியைப் பார்த்தார்.

” என் பொண்ணை இப்ப ஒரு மாதிரி மாத்தி வச்சிட்டு இருக்கேன். அவதான் சொல்றா , சம்பத்து அவளை விடமாட்டேன்னு தொந்தரவு பண்ணுறதா…..”

செல்லச்சாமி திடுக்கிட்டார் .

” என் தம்பி ரொம்பக் கோவக் காரன் . என் பொண்ணு மேல உசிரையே வச்சிருக்கான். அதனாலே அவனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவன் கோபம் பூராவும் உங்க மகன் மேலதான் விழும் . ஏதாவது விபரீதமா ஆயிடக் கூடாதேன்னு தான் உங்களை வந்து பாக்க வேண்டியதா ஆயிடிச்சு . இள ரத்தம் ஒண்ணு கிடக்க ஒண்ணு செஞ்சு வச்சு, எல்லாருக்கும் பிரச்சினை ஆயிடுச்சுன்னா ? .”

அப்போது கண்மணியின் கைப்பேசி ஒலித்தது. அதைப் பார்த்து விட்டு அவரிடம் ” தம்பிங்க ” என்று சொன்னாள்.. தம்பியிடம் ” நான் மால்லேர்ந்து கிளம்பிட்டேன். வந்து கிட்டே இருக்கேன் ” என்றாள்.

செல்லச்சாமி அவளிடம் ” சரி , நான் என் பையனைக் கண்டிச்சு வைக்கிறேன் ” என்றார் .

” சரி , பாத்து செய்யுங்க .” என்று அவள் எழுந்தாள்.

செல்லச்சாமிக்கு அந்த லேசான குளிரிலும் வியர்த்திருந்தது . அவர் மெதுவாக எழுந்து பார்க்குக்கு வெளியே வந்தார் .

சம்பத் அவரது எதிர்காலத்துக்கு உதவுவான் என்று நினைத்துக் கொண்டிருந்தால் , அவன் நிகழ் காலத்தையே நரகமாக்கி விடுவான் போலிருக்கிறதே என்று மனதில் எண்ணம் ஓடிற்று . வேலை கிடைக்காத ராஸ்கலுக்கு காதல் வேண்டிக் கிடக்கிறதா என்ன ? அதுவும் அந்தப் பெண்ணை இவன் தொந்திரவு செய்யும் அளவுக்குத் துளிர் விட்டுப் போய் விட்டதா ? உலகத்தில் எவ்வளவோ பேர் நிம்மதியாக நடமாடிக் கொண்டிருக்கும்போது, தனக்கு மட்டும் ஏன் இப்படி வாய்க்கிறது ?

செல்லச்சாமி தன் அலுவலகத்தை நெருங்கிய போது , வாசலில் அவரது தங்கை கீதா நின்று கொண்டிருப்பதை கவனித்தார். இவள் எதற்கு மைசூரிலிருந்து இங்கே வந்திருக்கிறாள், நேராக வீட்டுக்குப் போகாமல் என்று நினைத்த படியே , ஆட்டோவிலிருந்து இறங்கி அவனுக்கு பணத்தை கொடுத்து விட்டு வந்தார். சாந்தி ஹாஸ்டலில் இருந்தாலும் கீதாவின் பார்வையில் தன் பெண் இருக்கிறாள் என்று அவருக்கு எப்போதும் ஒரு பாதுகாப்பு உணர்ச்சி இருந்தது . அவளை நெருங்கியதும் ” என்னம்மா கீதா சௌக்கியமா ? ஆத்துக்குப் போகலையா ? பாக்கியம் இருக்காளே அங்க. திடீர்ன்னு எங்கே இந்தப் பக்கம் ?” என்று கேள்விகளை இறைத்தார்.

அவள் ஒன்றும் பதில் அளிக்காமல் தலையைக் குனிந்து கொண்டு நின்றாள் .

” சாந்தி எப்படி இருக்கா ? என்ன ஒண்ணுமே பேச மாட்டேங்கிறே ? சரி , வா , என் ரூமுக்குப் போலாம் ” என்று நடந்தார் அவள் மௌனமாக அவரைத் தொடர்ந்தாள் .

அவர் அறையை அடைந்து , உட்கார்ந்து கொண்டதும் , செல்லச்சாமி தங்கையைப் பார்த்து ” சொல்லும்மா , என்ன விஷயம் ? காப்பி சாப்பிடறயா ” என்று அழைப்பு மணியை அமுக்க முனைந்தார் .

கீதா அவரைத் தடுத்தபடி ,பார்த்தாள். அவள் முகம் கலங்கி இருந்தது போல் அவருக்குத் தோன்றிற்று .

செல்லச்சாமி ” கீதா , ஏன் என்னமோ போல் இருக்கிறே ? ” என்று கேட்டார்.

அவள் பதில் எதுவும் அளிக்காமல் அவரைப் பார்த்தாள் .

அப்போதுதான் அவளது கணவனைப் பற்றி தான் எதுவும் விசாரிக்கவில்லை என்று அவருக்கு உறைத்தது .

” சத்யமூர்த்தி வரலையா உன்கூட ? மாப்பிள்ளை எப்படி இருக்கார் ? ” என்று கேட்டார் .

அவள் ” மாப்பிள்ளையா ? துடைப்பக் கட்டை ! தூ ! ” என்றாள் வெறி பிடித்தவள் போல் .

அவள் குரலின் உக்கிரத்தால், செல்லச்சாமி ஒரு நிமிஷம் அதிர்ந்தார் . அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை . அவர் தன் இருக்கையிலிருந்து எழுந்து அவள் உட்கார்ந்திருந்த நாற்காலியின் பக்கத்தில் சென்று நின்றார் . அவளது தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்தார் .

சில நிமிஷங்கள் நிசப்தமாகக் கழிந்தன . அதை கீதாவே உடைத்தெறிந்து பேசினாள். ” அண்ணா , நீ ஆபிஸில் இருக்கறதுனாலே நான் நிறைய டைம் எடுத்துக்க முடியாது . ஒரு வாரம் பத்து நாளா, நான் ஒரு பக்கமும் , என் புருஷனும், மாமியாரும் ஒரு பக்கமுமா சண்டைன்னா அப்படி ஒரு சண்டை. எனக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகியும் குழந்தை பிறக்கலேன்னு அம்மாவும் பிள்ளையுமா என்னைப் போட்டு வறுத்து எடுக்கறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் . ஆனா இப்ப புதுசா ஆரமிச்சிருக்கிற கூத்து , அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணுமாம் .நான் ஒத்துக்கணுமாம் , அதுக்கு . இல்லாட்டா டைவர்ஸ்னு பயமுறுத்தறான். சரி , போய்ப் பண்ணு , பெரிய ஜீவனாம்சம் கொடுக்க தயாரா இருன்னு கார்த்தால கிளம்பிட்டேன். என் பெட்டி படுக்கையை , ஜெய நகர்ல என் சிநேகிதி மீனா ஆத்திலே போட்டுட்டு உன்னை பாக்க வந்தேன். மன்னியை இப்ப பாத்து அவ மனசைக் கஷ்டப்
படுத்த வேணாமேன்னுதான் ஆத்துக்கு போகலை ” என்றாள் .

அவள் குரலில் தெரிந்த அமைதியும் , உறுதியும் அவரை ஒரு நிமிடம் அயர்த்தி விட்டது. அவர் பார்க்க, வளர்ந்த , வளர்த்த பெண். அவருக்கும் கீதாவுக்கும் இடையில் ஒரு பெண் பிறந்து , வளர்ந்து திடீரென்று காலமாகி விட்டாள் . அவருக்கும் , கீதாவுக்கும் இருபது வருஷ் வித்தியாசம் . அவள் கல்யாணத்துக்கு வாங்கிய கடன் கூட இன்னும் முழுவதுமாக அடை பட வில்லை. அதற்குள் விவாகரத்து. என்ன நடக்கிறது இந்த உலகத்தில் ? இவள் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது ?

அவர் ஒரு முடிவுக்கு வந்தவராக, ” இதோ பாரும்மா , நீ இன்னிக்கு உன் சிநேகிதி வீட்டிலேயே போய் தங்கிக்கோ . நாளைக்கு சனிக் கிழமை. லீவு நாள். நீ கார்த்தால உன்னோட சாமானை எல்லாம் எடுத்துண்டு நம்மாத்துக்கு வந்துடு. இந்த மாதிரி சமயத்திலே , உனக்கு ஆள், ஆதரவு எல்லாம் வேணும். நீ வந்ததுக்கு அப்புறம் மேல என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கலாம். சரியா ? உன் மனசுக்கு கஷ்டமா இருக்கற எந்த ஒரு முடிவுக்கும் நீ கட்டுப்பட வேண்டியதில்லே சரியா ? ” என்றார் .

அவள் அவர் கையைப் பிடித்து அவர் விரல்களுடன் தன் விரல்களை இறுக்கிக் கொண்டாள். பிறகு எழுந்து ” சரி ,நாளைக்கு நான் வந்துடறேன் ” என்றாள் . அவர் அவளை அலுவலக வாசல் வரையிலும் கொண்டு போய் விட்டார்.. திரும்பி அறைக்குச் செல்லும் வழியில், மனது கீதாவின் நிலைமையை நினைத்துக் கலங்கிற்று. இது ஒரு நாளோடு முடியப் போகிற சமாசாரம் இல்லை. இதற்கு ஆதரவை விட எதிர்ப்புக்கள்தான் அதிகம் வரப் போகின்றன.

4

செல்லச்சாமி ஆறு மணிக்கு ஆபிஸை விட்டால் , பொழுதோடு வீட்டை அடைந்து, இரவுக்கு ஏதாவது சமைத்து வைக்கலாம் என்று இருந்தார் , ஆனால் ஐந்தே முக்காலுக்கு , நரசிம்மம் அவரைக் கூப்பிட்டு மறுநாள் காலையில் எம். டி. யுடன் ஒரு மீட்டிங் இருப்பதாகவும் , அதற்கு , போன மாதம் வரையிலான லாப நஷ்ட கணக்கு அறிக்கையை எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்றும் சொன்னார். முக்கால் வாசிப் பேர் ஐந்தரை மணி ஆபிஸை விட்டு, ஐந்தே காலுக்கே போய் விடுகிற போது, இந்த மாதிரி கடைசி நிமிஷத்தில் கழுத்தறுக்கிறானே என்று மனதுக்குள் திட்டிய படியே, அறைக்கு வந்து கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டார் .கிருஷ்ணா மாத்திரம் அவர் கூட இருந்தான். வேலையை முடிக்க எட்டு மணி ஆகி விட்டது .

கிருஷ்ணாவின் வீடு ராஜாஜி நகரில் இருந்தது. அவன் ஸ்கூட்டரில் அவர் மல்லேஸ்வரம் சர்க்கிளில் வந்து இறங்கிக் கொண்டார் . ஒன்பதாவது கிராஸில் , ஆறாவது மெயினில் இருந்த காமத் திண்டி மனேக்குச் சென்று அங்கு கிடைத்த சப்பாத்தியையும், சப்ஜியையும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தார். ஒன்பது மணிக்கே ஊர் அடங்கி விட்டது போல்
ஆறாவது மெயின் அமைதியில் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது .

காற்றில் டிசம்பர்க் குளிர் இறுக்கமாகப் பதிந்திருந்தது. மழை வருமோ என்று நிமிர்ந்து பார்த்தார். வானம் இருண்டு கிடந்தது. அன்று காலை, தன் மனதில் அத்தனை கிளர்ச்சியையும் , பரவசத்தையும் உண்டாக்கிய அதே வானம்தானா என்று அவர் மயங்கினார். அன்று காலையிலிருந்து , இரவு வரை அவருக்கு நேர்ந்த அனுபவங்களும் , அவை ஏற்படுத்திய உளைச்சல்களும் , களைப்பும்தான் , இந்த மயக்கத்துக்குக் காரணமாக இருக்குமோ என்று மனதில் ஓர் எண்ணம் ஓடியது.

பதினோராவது கிராஸ் திருப்பத்தில், செருப்பைத் தேய்த்துக் கொண்டே சென்ற அவரது சப்தம், தன் நித்திரையைக் கெடுத்தது போல் சாலை ஓரம்படுத்திருந்த ஒரு நாய் லொள் என்று ஒரு முறை அவரைக் கோபித்துக் கொண்டு விட்டு வாலைச் சுருட்டிப் படுத்துக் கொண்டது . அதற்கு அதனுடைய கஷ்டம் என்று நினைத்துக் கொண்டே நடந்தார்.

வீட்டுப் படி ஏறும் போது ” குட் ஈவ்னிங் அங்கிள் ” என்று மாடியிலிருந்து குமார் இறங்கி வந்து கொண்டிருந்தான். மாடி வீட்டில் குடியிருக்கும் பையன்.

” என்னப்பா , இந்த நேரத்திலே வெளியே கிளம்பிண்டு இருக்கே ?
சினிமாவுக்கா ? ” என்று சிரித்தார் செல்லச்சாமி .

” இல்லை, இந்த புஸ்தகத்தை என் சிநேகிதன் கிட்டே திரும்ப குடுக்கப் போயிண்டிருக்கேன். அடுத்த கிராஸ்ல அவன் இருக்கான் ” என்று குமாரும் பதிலுக்குச் சிரித்தான். அவன் கையில் தடிமனான புத்தகம் ஒன்று காணப்பட்டது.

” என்ன புஸ்தகம் ? இண்டரெஸ்டிங்கா இருக்கா ? ‘ என்றார் செல்லச்சாமி.

” ரியல்லி நைஸ் புக் அங்கிள் . தமிழ் நாவல். புது ஐடியா. ரொம்ப நன்னா எழுதியிருக்கார் . கதையை கேட்டா நீங்க அசந்து போய்டுவேள் . ஒருத்தன் எவ்வளவு ட்ரை பண்ணினாலும் அவனுக்கு கல்யாணம் ஆக மாட்டேங்கிறது .
வருஷக் கணக்குல அவன் படற கஷ்டம் இது ஒண்ணுதான் . என்னென்னமோ பண்ணிப் பாத்தும், அது எட்டாத , கிட்டாத பழமா போயிண்டு இருக்கேன்னு அப்படி ஒரு கவலை அவனுக்கு, நாள் பூரா , வாரம் பூரா, மாசம் பூரா, ஏன் , வருஷம் பூரா இந்த வெயிட்டிங் பத்தி கவலைப் பட்டு உருகிப் போயிண்டே இருக்கான் ” என்றான் குமார்.

” இது ஒண்ணுதானா அவனோட கவலை வாழ்க்கைல தினம் பூராவும் ? ” என்று செல்லச்சாமி ஆச்சரியத்துடன் குமாரிடம் கேட்டார்.

அவன் ‘ஆமெ’ன்று தலையை அசைத்தான் , புன் சிரிப்புடன்.

” யார் எழுதியிருக்கா ? ” என்று கேட்டார் செல்லச்சாமி .

” பெருமாள் முருகன்னு ஒரு ரைட்டர் . ”

செல்லச்சாமிக்குப் பெருமாள் முருகன் மீது பொறாமை ஏற்பட்டது. .

Series Navigationஇருட்டறை
author

ஸிந்துஜா

Similar Posts

Comments

  1. Avatar
    Rahul Muralidharan says:

    ஸிந்துஜாவின் “செல்லச்சாமியின் ஒரு தினமும் பெருமாள் முருகனும் ” வித்தியாசமான சிறுகதை. ஆசிரியர், பெருமாள் முருகனின் நாவலுக்கு தன் கதையை விமரிசனமாக வைக்கின்றாரா ?

Leave a Reply to Rahul Muralidharan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *