(30.4.2011 அன்று மாலை வாதங்கள் விவாதங்கள், தொகுப்பு வெளியிடப்பட்ட தருணம் கடைசியில் நான் நன்றி கூறு முகமாகச் சொன்னது, இங்கு சற்று ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. )
முஸிபத் கபீ அகேலே நஹி ஆத்தி என்பார்கள். நம்மூரிலெ கூட கேட்டை மூட்டை செவ்வாய் என்று ஏதோ சொல்வார்கள். கஷ்ட காலம் என்று வந்தால் அது தனியாக வராது. நீங்கள் எல்லாம் மூன்று மணி நேரமா உட்கார்ந்திருக்கிறீர்கள். கடைசியில் நான் நன்றி சொல்ல வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது. இவ்வளவு பெரிய நல்ல பேச்சாளர்களை இவ்வளவு நேரமாகக் கேட்டீர்கள். அவர்கள் பேச்சு உங்களைக் கவர்ந்திருக்கிறது. கடைசியாக நான். இவ்வளவு கஷ்டங்கள் போறாதா? சரி, நான் ரொம்ப காலமாக நான் ஒரு எழுத்தாளனே இல்லை என்று நானே சொல்லி வந்திருக்கிறேன். உங்களுக்கெல்லாம் தெரியும். அத்தோடு இன்று நான் ஒரு பேச்சாளனும் இல்லை என்பதை நானே இங்கு நிரூபிக்கப் போகிறேன். ஒரு மேடை கிடைத்து மைக்கையும் கையிலே கொடுத்துவிட்டால் பேச ஆசைப்படாத தமிழன் யாராவது இருப்பானா என்பது சந்தேகம் தான். நான் இருக்கேன். இந்த விதத்தில் பார்த்தாலும் நான் தமிழனே இல்லை என்பதற்கான சான்று கிடைத்து விடும். இது இன்னம் ஒரு சான்றுதான்.. இன்னும் நிறைய எத்தனையோ சான்றுகள் என்னைத் தமிழனே இல்லை என்று ஒதுக்கித் தள்ளக் காத்திருப்பவர்கள் கையில் தயாராக இருப்பதும் வாஸ்தவம் தான். சரி போகட்டும். இது உண்மை. என்னைப் பற்றிய உண்மை எதையும் சொல்வதில் தவறு ஏதும் இல்லை
இது ஒரு முக்கியமான நிகழ்வு. இந்த நிகழ்வு எல்லா இலக்கியக் கூட்டங்களைப் போல இன்னும் ஒரு கூட்டம்தான் இது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இது ஒரு சாதாரணமாக நிகழக் கூடிய ஒரு நிகழ்வு அல்ல. இந்த நிகழ்வை, இன்றைய இந்தக் கூட்டத்தை இன்று நாம் வந்து சேர்ந்திருக்கும் புள்ளியாகக் கொண்டால் அதன் ஆரம்பப் புள்ளியைக் காண ரொம்ப காலம் பின்னால் போக வேண்டியிருக்கும். எனக்கு எழுத்தாளனாக வேண்டுமென்றோ, விமர்சகனாக வேண்டுமென்றோ என்றும் ஆசை இருந்ததில்லை. அதோடு எண்ணமோ திட்டமோ கூட இருந்ததில்லை. இயல்பாக நண்பர்களுக்கிடையே ஏதோ பேசிக்கொண்டிருப்போம். எல்லாவற்றைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்போம். பேச இடமும் ஆட்களும் கிடைக்கவில்லை என்றால் வேறு ஏதாவது செய்து கொண்டிருப்போம்.. மனம் விட்டு எல்லாவற்றையும் பேசுவது என்பது பள்ளி நாட்களிலேயே தொடங்கி விட்ட ஒன்று தான.
1959-ல் ஒரு நாள், தில்லியில், அப்போதிருந்து என் நணபராக இருக்கும் துரைராஜ் என் ஐம்பது வருட கால நண்பர். இதோ இங்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறார். அவருக்குத் தெரியும். கரோல் பாகில் நாங்கள் சாப்பிடும் ஹோட்டலிலிருந்து ஒன்றிரண்டு தெருக்கள் தள்ளி ஒரு தெருவில் வாசக சாலை ஒன்று இருந்தது. வாசக சாலை என்றால் ஒருவர் தன் வீட்டின் காரேஜில் பத்திரிகைகள் எல்லாம் போட்டுவைத்திருப்பார் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் வாசகசாலை என்றால் ஒரு காரேஜில் கொள்ளும் இரண்டு மேஜைகள் சுற்றி, பெஞ்ச். மேஜைமேல் பரப்பிக்கிடக்கும் பத்திரிகைகள். ஆனந்த விகடன், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் இவை. இவற்றோடு அங்கு 1959-ல் ஒரு ஜனவரி மாதம் ஒரு நாள் மாலையில் எழுத்து என்று பத்திரிகையும் இருந்தது. எழுத்து ஒரு பத்திரிகை மாதிரியே இருக்காது. அந்த மாதிரி ஒரு பத்திரிகை வரும் அது அங்கு இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. எழுத்து ஒரு பத்திரிகை என்று பார்த்தால் ஒரு புது கான்செப்ட். அது அங்கு இருந்த மற்ற பத்திரிகைகளோடும், எந்த பத்திரிகைகளோடும் ஒட்டாத ஒன்று. அது அங்கு எப்படி வந்தது? அதுவும் வழக்கத்தை மீறிய விஷயம் தான். அந்த பத்திரிகையைக் கொண்டு வரும் செல்லப்பாவும், கரோல்பாகில் இருந்த, அந்த வாசக சாலை இருக்கும் வீட்டுக் காரரும் நண்பர்கள். செல்லப்பாவின் சின்னமணூர், வத்தலக்குண்டு கால நண்பர்கள். தன் தில்லி நண்பருக்கு செல்லப்பா தன் பத்திரிகை எழுத்து காபி ஒன்றை இலவசமாக அனுப்பி வைத்திருக்கிறார். அப்படித்தான் அது அங்கு வந்திருக்கிறது. மற்றபடி அவருக்குமோ அல்லது படிக்க வந்த மற்ற எவருக்குமோ அந்த பத்திரிகையோடு எந்த சம்பந்தமும் இருந்திருக்காது. படிக்க வருகிறவர்கள் விரும்பிப் படிப்பார்கள் என்ற நினைப்பில் போடப்பட்டதில்லை. பழைய நண்பர் தன் பத்திரிகையை அனுப்பியிருக்கிறார். அதை மற்றதோடு போட்டு வைக்கலாம் என்று போடப்பட்டு கிடப்பது அது. இதுவும் இயல்பான சாதாரணமாக நடக்கும் நிகழ்வு இல்லை.
அது என் கண்ணில் பட்டது. எனக்கு அது ஒரு புதிய குரலாகப் பட்டது. அதற்கு முன்னால் செல்லப்பாவும், க.நா.சுப்பிமணியமும் ஒரு சுதேசமித்திரன் தீபாவளி மலரில் அன்று எழுதப்பட்ட நாவல் சிறுகதைகள் பற்றி எழுதி ஒரு புயலைக் கிளப்பி விட்டிருந்தார்,கள். அது தொடர்ந்து சில வாரங்கள் கடும் வாத பிரதிவாதங்களைக் கிளப்பியிருந்தது. அதற்கு முன்னர் எந்த பத்திரிகையிலும் அது போன்ற ஒரு விவாதம், சர்ச்சை, கருத்துப் பரிமாற்றம் நடந்திருக்கவில்லை. அந்த செல்லப்பா இந்தப் பத்திரிகையைக் கொண்டு வந்திருக்கிறார். அதில் க.நா.சு.வும் எழுதுகிறார். எனக்கு இந்த விஷயம் ரொம்பப் பிடித்திருந்தது.
உடனே எழுத்து பத்திரிகைக்கு சந்தா அனுப்பினேன். அதற்கு அடுத்த மாதம் எனக்கு ஜம்முவுக்கு மாற்றல் ஆயிற்று. ஜம்முவுக்கு எழுத்து வர ஆரம்பித்தது. ஒரு சில இதழ்களுக்குப் பிறகு அதில் ஒரு சிறு கதை வந்திருந்தது. சிறந்த சிறுகதை எப்படி இருக்கும்னு அதற்கு முன்னால் சுதேசமித்திரன் பத்திரிகையில் தொடர்ந்து ஆறு ஏழு இதழ்களில் எழுதிய செல்லப்பா, ஒரு தரமான பத்திரிகையும் எழுத்தும் வரவேண்டும் என்று இந்த எழுத்து பத்திரிகையை ஆரம்பித்த செல்லப்பா iஇந்த கதையைப் போட்டிருக்க வேண்டுமா? என்று அந்த கதை எனக்குப் பிடிக்காது போன காரணத்தையும் அவருக்கு எழுதி வைத்தேன். அவர் அந்த நீண்ட கடிதத்தையும் பிரசுரித்து எனக்கும் அவர் எழுதினார், நீங்க எழுத்துக்கு எழுதுங்க என்று. ஒரு தரமான பத்திரிகையைக் கொண்டுவரும் ஆசிரியரது பத்திரிகையின் நடப்பைக் கண்டித்து ஒருவர் கடிதம் எழுதினால், அந்த ஆசிரியருக்குக் கோபம் வருமே தவிர,, அந்த ஆசிரியர் கடிதம் எழுதியவரை தன் பத்திரிகைக்கு எழுதச் சொல்வார் என்பது எங்காவது நடக்குமா? நடந்தது. நானும் ஒரு எழுத்தாளன் ஆனேன். எழுத்தாளன் என்றால், ஒரு சௌகரியத்துக்காகத் தான் எழுத்தாளன் என்ற வார்த்தையைச் சொல்கிறேன். அப்படி நான் ஒரு எழுத்தாளன் ஆனேன்.
இங்கே முன்னாலே உட்கார்ந்திருக்கிற என் நண்பர் துரைராஜுக்குத் தெரியும். எங்களோட அறையில் இருந்த நாகரத்தினம் என்ற நண்பரிடம் ரொம்ப பெருமையோடு, துரைராஜ், “சாமிநாதன் எழுதியது வந்திருக்கய்யா” என்று எழுத்தில் வந்த ஒரு கட்டுரையைக் காட்ட, அவர் அதைப் படித்துவிட்டுச் சொன்னார். “முதல்லே சாமினாதனைத் தமிழில் ஒழுங்கா எழுதக் கத்துக்கொள்ளச் சொலுய்யா. மற்றதை யெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்? என்று சொன்னாராம். இது நடந்தது 1961-ல். இப்போ நடப்பது 2011. எதிரில் அண்ணா கண்ணன் இருக்கார். அவரைக் கேளுங்க. என் தமிழ் எழுத்தையெல்லாம் அவர் தான் திருத்துவார். இன்னமும் அவர் திருத்திக்கொண்டு தான் இருக்கிறார், இதிலே ‘ச்’ இல்லே அங்கே ‘ப்’ இல்லே. இது தமிழ்ச் சொல்லே இல்லை. இதுக்கு சரியான தமிழ் வார்த்தை இதாக்கும்” என்று. ஆக, தமிழே எழுதத் தெரியாத ஒருத்தன் தமிழ் எழுத்துலகிலே குதித்திருக்கிறான்.
ஆக, தமிழே எழுதத் தெரியாதவன், எழுத்தாளன் ஆகணும்னு எண்ணமே இல்லாதவன் எழுத்துலகுக்கு வந்தாச்சு. இது சாதாரணமாக நிகழக்கூடிய ஒரு விஷயம் இல்லை. தவறிப் போய் நிகழ்ந்திருக்கிறது. Aberration –ன்னு சொல்வோம் இல்லையா? அந்த மாதிரிதான் aberrations – தான் அடுத்தடுத்து நிகழ்ந்து வந்திருக்கிறது என் விஷயத்தி.ல். இன்று வரை.
எழுத்து பத்திரிகையில் செல்லப்பாவின் தயவால் நான் ஒரு எழுத்தாளன் ஆனேன். எழுபதுகளின் ஆரம்பத்தில் செல்லப்பாவுக்கு ராஜபாளையத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. அப்போது செல்லப்பா எழுத்து பிரசுரம் தொடங்கியிருந்தார்.. என் எழுத்து எதையும் அவர் அது வரை தொட்டிருக்கவில்லை.. ராஜபாளையத்திலிருந்து எழுதியவர்கள் மணி, ஞானசோதி, பின் ஜெயபாலன். என மூன்று பேர். அவர்கள் Agriculatural College – ல் ஒன்றாகப் படித்தவர்கள் Deputy Agricultural officers –ஆக வேலை பார்ப்பவர்கள். அவர்களுக்கு சாமிநாதன் எழுத்தைப் புத்தகமாகப் போடவேண்டும் என்று ஒரு என்ணம் உதித்திருக்கிறது. அவர்களுக்கு பிரசுரம் பற்றி ஏதும் தெரியாது. ஆகவே செல்லப்பாவுக்கு எழுதியிருக்கிறார்கள். ”நாங்கள் பணம் கொடுக்கிறோம். நீங்கள் சாமிநாதன் எழுதியதைச் சேர்த்து ஒரு புத்தகம் போடுங்கள். எங்களுக்கு இதில் அனுபவம் கிடையாது. ஆகவே நீங்கள் உதவ வேண்டும்” என்று. அவர்களுக்கு செல்லப்பா எழுதினார்,” சாமிநாதன் இப்போது விடுமுறையில் இங்கு வருவார். அப்போது அவரைச் சந்தித்து இதைச் சொல்லுங்கள். அவர் சம்மதத்தையும் கேட்டுக்கொள்வோம்.” என்று சொல்லி யிருக்கிறார். அதே சமயம் செல்லப்பா விடமிருந்து என் விலாசம் வாங்கி எனக்கும் எழுதியிருந்தார்கள். நான் சென்னை வந்ததும் டேவிட் சந்திரசேகர் என்னும் நான்காமவர் என்னை செல்லப்பா வீட்டில் சந்தித்து விஷயத்தைச் சொன்னார். இப்படித் தான் என் முதல் புத்தகம் பாலையும் வாழையும் பிரசுரமானது. ஒரு புத்தகம் வெளிவருவதற்கான வழக்கமான மார்க்கம் இது அல்ல. இந்த மாதிரி எங்கும் எந்த புத்தகமும் வெளி வந்துள்ளதா எனபது எனக்குத் தெரியாது. அது வரை பதினைந்து வருஷங்களாக நான் எழுதி வந்த போதிலும் எந்தப் பிரசுர கர்த்தரும் என்னைத் தொடவில்லை. ஒரு புதிய மாற்றத்தைக் கொணரவேண்டும் என்று நினைத்துச் செயல் பட்ட செல்லப்பா கூட என்னை நினைத்துப் பார்க்கவில்லை. நானே நினைத்துப் பார்க்கவில்லை. அந்த நினைப்பு எங்கோ இருந்த ராஜபாளையத்திலிருந்த முகம் தெரியாத இலக்கிய சம்பந்தம் இல்லாத மூன்று இளைஞர்களுக்குத் தான் என்னை நினைத்துப் பார்க்கத் தோன்றியிருக்கிறது. அந்தத் தொடர்பு பின்னும் தொடர்ந்தது.
இப்படிப்பட்ட அசாதாரண நிகழ்வு தான், இன்றைக்கு வெளியிடும் தொகுப்பும். ஒன்றிரண்டு வருஷம் முன்னாலே இரண்டு மூன்று பேர், சிலோன்லேயிருந்து சனாதனன், அகிலன், பம்பாயிலிருந்து சத்திய மூர்த்தி, இப்போ பேசியபோது ஆனந்து சொன்னார், அவர்கள் பூசா இன்ஸ்டிட்யூட்டில் இருந்தவர் அவர்கள் ஒரே ஊர்க்காரர், இப்போது சத்திய மூர்த்தியோடு, ஆனந்தும் பம்பாய்க்காரர். இவர்கள் எல்லோரும். பேசிக்கொண்டிருந்ததாகச் சொன்னார், அது எனக்குத் தெரியாது, பின்னர் திலீப் குமார், சத்திய மூர்த்தி, சனாதனன் மூன்று பேரும் பம்பாயில் சந்திக்க நேர்ந்த போது பேசியதாக, இந்த மாதிரி தொகுப்பு ஒன்று உருவாக்குவது பற்றி., ”என்னய்யா இது, சாமிநாதன் ஐம்பது வருஷமா எழுதிட்டிருக்கான் நாம ஏதாவது செய்யணும்”னு. ஐம்பது வருஷமாக எழுதிட்டிருப்பது ஒரு பெரிய விஷயமா என்ன?, dispatch clerk கூட ஐம்பது வருஷமா dispatch பண்ணிட்டிருப்பான். யார் கவனிச்சாங்க. யாருமே கவனிக்கவில்லை. இவங்களுக்குத் தான் இந்த எண்ணம் தோன்றியிருக்கு. இதுவும் ஒரு aberration இயல்பை மீறிய.து தான். சாதாரண நடப்புகளை மீறியது தான். இந்த வழியில் எல்லாம் இம்மாதிரி தொகுப்புகள் வருவதில்லை. இதெல்லாம் ஒரு பல்கலைக் கழகம் நடத்தும். புத்தக பிரசுர ஸ்தாபனங்கள் நடத்தும் சாகித்ய அகாடமி நடத்தும். அல்லது இது போன்ற ஏதோ ஒரு நிறுவனம் நடத்தும். இவர்கள் யாருக்கும் நான் ஒரு பொருட்டே இல்லை. நான் இருப்பது கூட அவர்களுக்குத் தெரியாது. ஆனால் எங்கெங்கோ சிதறியிருக்கும் இவர்கள், இவர்களிடம் இதற்கான பணம் கூட கிடையாது. இந்த மாதிரி எந்த கலாசாரத்திலும் நடந்தது கிடையாது. இப்படி நடப்பது நான் பார்க்க இது ஒன்று தான் அபூர்வமாக நடந்திருக்கு.
இப்படிப் பட்ட அபூர்வமான விஷயங்கள் தான் 1957-லிருந்து 2011 வரை என் விஷயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி சாதாரணமாக நடக்காத விஷயங்கள் அபூர்வமாக நடக்கும் விஷயங்கள் நடந்தாத் தான் நான் தெரிய வருவேன் போல இருக்கு. இதனாலே நான் சொல்ற விஷயங்கள். ஏதும் எனக்கு extraordinary intellectual acumen-ஓ iஇல்லை aesthetic sensibility- ஓ இருக்கிறதினாலே தான் சொல்வதாக நினைக்க வேண்டாம். நான் சொல்வது எழுதுவது எல்லாமே எல்லா மனிதனுக்கும் உள்ள சாதாரண பொது அறிவுக்குப் புலப்படும் விஷயங்கள் தான். அது உங்கள் எல்லாருக்கும் கூட புலப்பட்டிருக்கும். அப்படி இருக்க நான் சொல்வதை மற்றவர் ஏன் சொல்லலை என்றால் அதற்குக் காரணம் அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் அவர்களை சொல்லவிடாமல் தடுப்பது சில கட்டுப்பாடுகள்,. சொல்லாமல் தடுக்கும் கட்டுப்பாடுகள்,. சொன்னாமல் என்ன ஆகுமோ என்னவோ என்ற பயங்கள்,. தனக்காக அல்லாமல் வேறே யாருக்காகவோ சொல்லாமல் இருக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள்
யோசிச்சுப் பாருங்க. திடீர்னு “கட்ட மரத் துடுப்புப் போல இடுப்பை ஆட்டுறா,” ன்னு ஒரு பாட்டு இருபது பேரோ என்னவோ, பாடி ஆடினா, இது பாட்டா? இது டான்ஸா?, இது சினிமாவா? இது என்ன பைத்தியக்காரத்தனம்னு நமக்குத் தோணனும் இல்லையா? இதைப் புரிஞ்சிக்கிறதுக்கு நமக்கு இருக்கற சாதாரண பொதுப் புத்தி போதாதா? இது நம்ம பொதுப்புத்தி ஏற்காத விஷயம் தான். ஆனா, ஏன் அதை. அந்த பைத்தியக்காரத்தனத்தை நாம் பைத்தியக்காரத்தனம்னு சொல்றதில்லே?. என்னமோ எல்லாத் தளங்களிலும் நாம் பைத்தியக் காரத்தனத்தையே பண்ணிட்டு இருக்கோம். இதுக்காக கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து அதை கோடிக்கணக்கான பேர் பார்த்து,….. … இது சினிமாலே மாத்திரம் இல்லே எல்லாத் தளங்களிலும் இந்தப் பைத்தியக்காரத் தனத்தைத் தான் செய்திட்டு இருக்கோம். இது தான் இலக்கியத்திலேயும் நடக்குது. ஓவியத்திலேயும் நடக்குது. அரசியல்லேயும் நடக்குது. இதை ஏன் நான் சொல்றேன்னா என் மனசிலே பட்டதை நான் சொல்றேன். இதுக்கு ஏதும் extraordinary sensibility -யை intellectual ability யை. கடவுள் எனக்குக் கொடுத்துட்டார்னு அர்த்தமில்லை. நான் ஏதும் அவதாரம் எடுத்து வரலை. என் சாதாரண பொதுப்புத்திக்குப் பட்டதைச் சொல்றேன். ஏன் நான் சொல்றேன்னா, நான் எந்த நிறுவனத்துக்காகவும் சொல்ல வேண்டியதில்லை. எந்த கட்சிக்காகவும் நான் சொல்ல வேண்டியதில்லை. எந்த மதத்துக்காகவும் நான் சொல்ல வரலை. வேறு யாருக்காகவும் நான் சொல்ல வேண்டியதில்லை. நான் எனக்காகவே பேசறேன். எழுதறேன். இதை நான் ஒரு ஐம்பது வருஷமாக செய்திட்டு வரேன்.,இதை நான் ஏன் செய்திட்டு வரேன். I think there is some value in it. ஒரு விஷயம் நான் ஒருத்தனா ஏன் இதைச் செய்திட்டு வரேன். என்ன ஆனாலும் சரி, நம் மனசுக்குப் பட்டதைச் சொல்வோம்னு. நாம எல்லாரும் எழுதினோம்னா ஒரு பயமும் இல்லே. ஒருத்தனும் எந்த நிறுவனமும் ஒண்ணும் செய்திடமுடியாது. ஒருத்தனா இருந்தாத்தான் ஆளைப் போட்டு அடிப்பானுங்க. இல்லையா?
இன்னொரு விஷயம். ஆரம்ப காலத்திலிருந்தே, பொதுவாக சமூகத்தில் நிலவும் அபிப்ராயம் சமூகத்தில் உள்ள எல்லோரும் கொள்ளும் அபிப்ராயம் எனக்கு சார்பா இருந்ததில்லை. இருந்தாலும் அவ்வப்போது ஒவ்வொரு கால கட்டத்திலும் எனக்கு உதவியாக சில நண்பர்கள் இருந்து வந்திருக்காங்க. அவர்களை நான் எப்போது நினைத்துப் பார்ப்பேன். ராஜபாளையத்திலிருந்து மணி, ஞான சோதி, பின் ஜெயபாலன். அவர்கள் எனக்கு உதவியாக இருந்திருக்காங்க. அவர்கள் இங்கு இப்போது இருக்கவேண்டும் என்று நான் ஆசைப் பட்டேன். ஆனால் அவர்கள் யாரும் வரமுடியவில்லை. ஒருத்தர் அமெரிக்காவில் தன் பெண் வீட்டில் இருக்கார். இன்னொருத்தர் நாளைக்குக் கல்யாணத்துக்குப் போகவேண்டியிருக்குன்னு வரலை. அவர்கள் இங்கு இருந்திருந்தால் நான் ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பேன். அவர்களும் சந்தோஷப்பட்டிருப்பார்கள். இன்னொருத்தர் தஞ்சைப் பிரகாஷ். அவரைப் போல ஒரு நண்பர் அபூர்வம், ராமானுஜத்துக்கும் தெரியும். எந்த விஷயத்திலும் தன்னை மறந்து, தன் சாத்தியங்களை, தன் நலன்களை மறந்து உதவியவர் எனக்கு உதவியவர், எதற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் மன நிலை அவருக்கு இருந்தது. எந்த நிலையிலும் என் பக்கம் இருந்தவர், அவர் இப்போது இல்லை. அவர் இங்கு இல்லாதது ஒரு இழப்பு தான். அவர் இல்லாமல் எப்படிடா வாழ்க்கை நடக்கப் போறது என்று நான் வருத்தப்பட்ட நாட்கள் உண்டு. ஆனால் காலம் எல்லாத்தையும் அழிச்சுட்டு போயிடறது. நாமும் எப்படியோ சமரசம் செய்து கொண்டு வாழ்ந்து விடுகிறோம்.. இன்னொருவர் தில்லியில், அவரை இங்கே இருக்கும் சுரேஷுக்குத் தெரியும், டண்டன், ஷாந்தி சாகர் டண்டன், ஒரு பஞ்சாபி. பஞ்சாபியின் குணங்கள் எதுவுமே இல்லாத ஒரு பஞ்சாபி. For thirty years, we were together. We spent all the evenings together. இசையாக இருக்கட்டும், நாடகம், சினிமா, டான்ஸ் எல்லாத்துக்குமே, எங்குமே நாங்கள் ஒன்றாகத் தான் போவோம். அவருடன் நாங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வோம். பகிர்ந்து கொள்ளக் கூடிய ரசனை உள்ள நண்பர் அவர். அவர் இப்போது இல்லை. அது ஒரு பெரிய இழப்பு.
இன்னொருத்தர் ஜெயந்தன். அவர் திராவிட இயக்க சார்பு கொண்டவர். கம்யூனிஸ சார்பும் உள்ளவர். இருந்தாலும் என் விஷயத்தில் அவர் அதையெல்லாம் மறந்துவிடுவார். அதெல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சம் மூணாம் பட்சம், இல்லை நாலாம் பட்சம் தான். அவரும் இல்லை இப்போ.
அப்புறம்…. No genius is a hero to his wife – ன்னு சொல்வாங்க. என்னுடைய ஈடுபாடுகளைப் பற்றி பெரிதாக ஏதும் அபிப்ராயம் கிடையாது என் மனைவிக்கு. ஏன்னா, இதிலே பணம் வர்ரதில்லே. வந்ததில்லை. அது மாத்திரம் இல்லை. என் பின்னாலே ஒரு பெரிய கூட்டம் ஏதும் இல்லை. “சார் சார் உங்க கையெழுத்து போட்டுக் கொடுங்க சார்” என்று ஆட்டோக்ராஃப் கேட்டு அலையும் கூட்டமும் கிடையாது எனக்கு. ஆனால், திலீப் குமாரைத் தெரியும். ராஜபாளையம் மணியைத் தெரியும். திலக பாமாவைத் தெரியும். இன்னும் வீட்டுக்கு வருகிறவர்கள் பலரைத் தெரியும். இவர்கள் எல்லாம் சாமிநாதன் கிட்டே இவ்வளவு பாசமாக இருக்கங்கன்னா, இவர்கள் மூலமா என்னைப் பத்தி there must be something in him என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டிருக்கும். அவள் இப்போது இங்கு இருந்திருந்தால்,… ”சரி நம்மாள் கிட்டேயும் ஏதோ விஷயம் இருக்கு போல இருக்கு” என்று நினைத்திருப்பாள் ஒரு திருப்தி ஏற்பட்டிருக்கும். அவள் இல்லை. இந்த வருத்தங்கள் எல்லாம் எனக்கு உண்டு.
ஆனால் இதையெல்லாம் மீறிய ஒரு விஷயம். இந்த ஆள் ஏதோ சொல்றான் போல இருக்குன்னு நினைக்கிறவங்க டோரண்டோவிலே ரண்டு பேர், பம்பாயிலே ரண்டு பேர், சிலோன்லே இரண்டு பேர், நாகர் கோயில்லே சிவகாசியிலே, சென்னையிலே இரண்டு பேர் இபபடி அங்கங்கங்கே உதிரியாக இருக்காங்கங்கறதுக்கான solid proof அவர்கள் எண்னங்களை யெல்லாம் தொகுத்து இந்த புத்தகம் வந்திருக்கு. இது எழுத்தில் சாத்தியம். சினிமாவிலே, நாடகத்திலே சாத்தியம் இல்லை. ஒரு இடத்தில் ஒரு பத்தாயிரம் இருபாதாயிரம் சேர்ந்து இருந்தால் தான் டான்ஸ், சினிமா எல்லாம் சாத்தியம். பம்பாயிலே இரண்டு பேர், விழுப்புரத்திலே ரண்டு பேருக்காக ஒரு சினிமா சாத்தியமா? .இவர்கள் எல்லாம் உதிரியாக எங்கெங்கோ இருக்கறாங்க, இதையெல்லாம் சேர்த்து ஒன்று படுத்த முடியும் என்ற என்ணம் சனாதனன், திலீப் குமார் அகிலன் சத்திய மூர்த்தி எல்லோருக்கும் தோன்றியிருக்கு. அதற்கு சாட்சியமாக இது இருக்கு. இந்த சாட்சியத்தை உருவாக்கி இங்கு முன்னால் வைத்த அவர்களுக்கு என் நன்றி. உங்கள் எல்லோருக்கும் என் நன்றி.
- அள்ளும் பொம்மைகள்
- சில்லறை நோட்டு
- அகநானூறு உணர்த்தும் வாழ்வியல் அறன்கள்
- காதறுந்த ஊசி
- ஜென் ஒரு புரிதல் -26
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –
- ஜெயமோகனுக்கு “முகம் “ விருது
- இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை
- மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் (துருக்கி நாட்டுச் சிறுகதை)
- சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்
- ஏன்?
- கிறுக்கல்கள்
- சிற்றிதழ் அறிமுகம் : சங்கு
- சாந்தகுமாரின் ‘மௌனகுரு’
- தீட்டுறிஞ்சி
- நன்றி உரை
- முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு அறிவிப்பு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (கவிதை – 52 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் – எனக்கொரு குருநாதர் (கவிதை -56)
- கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் மகளுக்கு உதவ
- புத்தகச் சந்தை 2012 – ஸ்கூப் சுவாரஸ்யங்கள்
- ………..மீண்டும் …………..
- பாசாங்குப் பசி
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 5
- பஞ்சரத்னம்
- மார்கழி காதலி
- துளிதுளியாய்….
- கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !
- ஏதோ ஒன்று (கடவுள்? நேரம்? வினை)
- ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் (Shakespeare’s Sonnets : 1) எழில் இனப் பெருக்கம்
- சிலை
- மண் சுவர்
- அழகின் சிரிப்பு
- பூபாளம்
- Learn Hindu Vedic Astrology
- கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா
- பஞ்சதந்திரம் தொடர் 25 முட்டாளுக்குச் செய்த உபதேசம்
- முன்னணியின் பின்னணிகள் – 21 சாமர்செட் மாம்
- முடிச்சு
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 4