அப்பாவின் நினைவு தினம்

This entry is part 26 of 42 in the series 29 ஜனவரி 2012

அந்த நீண்ட உறாலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருடைய பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. எதிர் வரிசையில் முதல் மேஜையில் இவரைப் பார்ப்பதுபோல் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் இவன். அப்பளம்…அப்பளம்…இன்னும் எனக்குப் போடலை…போடலை.. -கத்தினார் அந்தப் பெரியவர். அய்யாவுக்கு இன்னொரு அப்பளம் கொண்டாப்பா.. -இவன் இலையில் அப்பளம் தீர்ந்துவிட்டது கண்டு எதிரில் அமர்ந்திருந்தவர் உபசரித்தார். எனக்கு வேண்டாம்..முதல்ல அந்தப் பெரியவருக்குப் போடுங்க… என்றான் இவன். லேசாக அவரின் பார்வை இவனின் பக்கம் நிமிர்ந்து தாழ்ந்தது. அதில் ஏதோ ஒரு அதிருப்தி படர்ந்திருப்பதாகத் தோன்றியது இவனுக்கு. இதற்குள் அவரின் இலையில் பரிமாறுபவர் காய் வைக்கப் போக, வேண்டாம் என்றவாறே குறுக்கே கையை நீட்டினார் அவர். புறங்கையில் காய்கள் கொட்ட,பார்த்துப் போடுறதில்லை? என்றவாறே சப்ளையரைப் பார்த்து முறைத்துக் கையை உதறினார் அவர். நான் கவனமாப் பார்த்துத்தான் போடுறேன்..நீங்க கையைக் குறுக்கே நீட்டிட்டீங்க… என்றான் அவன். தெரியும் போய்யா… – அவனை நோக்கி எச்சரிப்பது போல் விரலைக் காட்டி விரட்டினார் அவர். பார்த்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்த இவனுக்கு அவரின் செய்கைகள் விசித்திரமாய்த் தோன்றின. இந்த வயதில், இந்த இடத்தில், இப்படியாக ஒருவரா? வேண்டாம் என்று சட்டென்று அவர் சொன்ன விதம், நினைத்துச் சிரிக்க வைத்தது இவனை. ஏதோவொரு குழந்தைத்தனம் அல்லது அர்த்தமற்ற கோபம் அவரின் செயலில் ஒட்டிக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது. சாப்பிடவென்ற வந்து அமர்ந்தபேதே அவரின் சண்டை ஆரம்பமாகிவிட்டதை நினைத்துப் பார்த்துக் கொண்டான். வரிசையாகப் போட்டிருந்த இலைகள் ஒன்றில் வந்து அமர்ந்துவிட்டு உனக்கென்ன தெரியாதா? அதிகப் பிரசங்கி, எனக்கு இலையைப் போட்டு வச்சிருக்கே? என்னோட தட்டை எடுத்திட்டு வா… என்று இரைந்தவாறே அந்த இலையை எடுத்துச் சுருட்டி விருட்டென்று மூலையில் எறிந்தார் அவர். வாய் பேசாமல் அவருக்கான தட்டை கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனான் சப்ளையர். தொடர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருந்தான் இவன். தண்ணீர் கொண்டுவந்து வைத்தபோது, குனிந்து, குனிந்து, உன்னிப்பாக டம்ளரில் இருந்த அந்தத் தண்ணியையே பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ஏதேனும் தூசிகள் இருக்குமோ என்ற தேடலை விட அப்படி இருந்தால் சத்தமிட்டு விரட்டுவதற்குத் தோதாகுமே என்று தேடுவதுபோல் இருந்தது அவரின் உன்னிப்பான பார்வை. எல்லோருக்கும் வணக்கம். இன்று நம் இல்லத்திற்கு வந்து, தன் தந்தையின் நினைவு தினத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டு அவர் ஆன்மா ;சாந்தியடையவும் அவர் நினைவினைப் ;போற்றிடவும் நம் எல்லோருக்கும் நல் விருந்தளித்து நம்மோடு அமர்ந்து உண்டு மகிழ்ந்து மன சாந்தியும் ;சந்தோஷமும் நிறைவும் பெற்றிட வருகை தந்திருக்கும் திரு ரமணன் அய்யா அவர்களுக்கு நம் எல்லோரின் சார்பான நமஸ்காரத்தையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்வோமாக. அவர் தந்தையாரின் ஆன்மா சாந்தி பெறுவதாக. ஓம் சாந்தி…சாந்தி…சாந்திஉறி.. – முன்னே விரித்த இலையின் முன் அன்னமும், நெய்யும் பரவப்பட்டிருக்க கண்களை மூடி கைகளைக் கூப்பி, ஒரு நிமிடம் எல்லோரும் தன் தந்தைக்காகத் தியானம் செய்த அந்த வேளையில் இவன் மெய் சிலிர்த்துப் போனான். கண்களில் ஏனோ கட்டுப் படுத்த முடியாமல் நீர் பெருகியது, ………..2…………….. – 2 – நெஞ்சம் தவியாய்த் தவித்துப் பரபரத்தது. அப்பாவின் நினைவில் உள்ளம் கசிந்து உருகியது. அன்று அந்த முதியோர் விடுதியில் அவர்கள் எல்லோருக்கும் மதியச் சாப்பாடு நல் விருந்தாக இவன் செலவில் அமைந்திருந்தது. அதற்கான நன்கொடைத் தொகையைச் செலுத்தி அன்றைய பொறுப்பை ஏற்றிருந்தான் இவன். உங்க புண்ணியத்துல எல்லாருக்கும் நல்ல ருசியான விருந்துச் சாப்பாடு இன்னைக்கு. சாதம், சாம்பார், ரெண்டு கறி, ஒரு கூட்டு, ரசம், அப்பளம, மோர், ஊறுகாய்…சரிதானே சார்…திருப்தியா? மேடம், வடையும் பாயாசமும் விட்டுடடீங்களே?அத்தோட சாம்பார் சாதத்துக்கு நெய்யும் போட்ருங்க… – இவன் ஆர்வமாய்க் கூற, அச்சச்சோ…அதெல்லாம் வேண்டாம் சார்…எல்லாரும் வயசானவங்க…இனிப்பெல்லாம் ஒத்துக்காது.. என்றார்கள் அவர்கள். ஒரு நாளைக்கு சாப்பிடுறதுல என்ன வந்துடப் போகுது…எனக்காகச் செய்யுங்க மேடம்…எங்க அப்பா நினைவு தினத்தை திருப்தியா, நிறைவாக் கொண்டாடணும….தயவுசெய்து, மறுக்காதீங்க…எல்லாத்தோடவும் ஒரு வாழைப்பழமும் இலைல வச்சிடுங்க…எக்ஸ்ட்ராவா என்ன உண்டோ அதை நான் பே பண்ணிடுறேன்…அதைப்பத்தி நீங்க ஒண்ணும் நினைக்க வேண்டாம்… இவன் முகத்தையே கூர்ந்து நோக்கினார்கள் அவர்கள். ஓ.கே. சார்…ரொம்ப ஆசையோட கேட்கறீங்க…தவிர்க்க முடியாம இதுக்கு ஒத்துக்கிறேன், சரிதானா? ரொம்ப நன்றி மேடம்… – அந்த திருப்தியோடு பேச்சைத் தொடர்ந்தான் இவன். இந்த மாதிரி சாப்பாடு, டிபன், இதுதான் இங்கே ஏற்பாடா? இல்ல வேறே மாதிரி ஏதேனும் உண்டா மேடம்? உண்டு;சார்…உங்க விருப்பத்தைப் பொறுத்தது அதெல்லாம…இந்த விடுதியைப் பதினைஞ்சு வருஷமா நடத்திட்டு வர்றேன் நான். அரசாங்கம் இடம் கொடுத்து…கட்டிடமும் கட்டிக் கொடுத்தாங்க…மிகக் குறைவான நிதி ஆதாரத்தோடதான் ஆரம்பிச்சது இந்த விடுதி. ஆனா இன்னைக்கு உங்களை மாதிரி சிலர் புண்ணியத்துலே நல்லபடியாவே போயிட்டிருக்கு. இங்கேயி;ருக்கிற டேபிள் சேர், பீரோ, டி.வி., கட்டில், மெத்தை, ஃபேன் இப்படியெல்லாமே நன்கொடையா வந்ததுதான். சிலர் பணமாவே கொடுத்திட்டுப் போயிடுவாங்க…எது விருப்பமோ அதன்படி செய்யலாம்.. – அவர்களின் பதில் இவனுக்கு மிகவும் திருப்தியாய் இருந்தது. இங்கே எத்தனை பேர் இருக்காங்க? -மேலும் தொடர்ந்தான். போனவாரம் வரைக்கும் இருபத்தஞ்சு பேர் இருந்தாங்க சார்…மொத்தம் முப்பது கட்டில் படுக்கை இருக்கு இங்கே…சமயங்களில் முப்பதும் நிறைஞ்சு மேற்கொண்டு நாலஞ்சு பேர் வந்திடுவாங்க…கீழே விரிப்பு விரிச்சு இடம் பண்ணிக் கொடுப்பேன்…பத்து மெத்தை, படுக்கை எக்ஸ்;ட்ராவா வச்சிருக்கேன். எல்லாம் நன்கொடையா வந்ததுதான். இன்றைய தேதிக்கு இருபத்திரெண்டுதான் இருக்கு. மூணு பேர் போன ஒரு வாரத்துலே காலமாயிட்டாங்க… அப்டியா? – அதிர்ச்சியோடு கேட்டான் இவன். ஆமா சார்…;ரொம்ப வயசானவங்க….எண்பதைத் தாண்டினவங்க…தொடர்ந்து ஒரு வாரமா க்ளைமேட்டே சரியில்லை பாருங்க…ஒரே குளிரு…வாடைக்காத்து, மழை வேறே ஊத்தித் தள்ளிடுச்சி….அது தாங்கலை…ஒருத்தருக்கு ஆஸ்துமா…ஒருத்தருக்கு திடீர் நெஞ்சுவலி…ஒருத்தர் தூங்கினமேனிக்கே அப்டியே போய்ச் சேர்ந்திட்டாரு…ரொம்பப் பாவம் சார்…அதவிட நாங்கதான் பாவம்னு சொல்லணும்…பாடியை வாங்கிக்கக்கூட யாரும் வரலை…நீங்களே எரிச்சிடுங்க மேடம்னு போன்ல சொல்றாங்க சார்…என்ன மனுஷங்க சார்…? குறைஞ்சது ரெண்டாயிரமாவது வேணும்…ஒருத்தர் காரியங்களை முடிக்கிறதுக்கு…திடீர்னு ரெண்டு முணு பேர் போயிட்டா?முழிச்சுப் போனேன் சார் நானு…;ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன்… -அவர்களின் பேச்சில் அப்படியே அமைதியாகிப் போனான் இவன். எவ்வளவு பொறுப்பான சேவை இவர்களது? …………………….3…………. —3—- முதியோர் இல்லங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கின்றன என்று அடிக்கடி படிக்க நேரும் செய்திகள் ஏற்கனவே சிந்திக்க வைத்திருந்த நிலையில் இந்த நேரடி அனுபவம் இவன் மனதை மேலும் உலுக்குவதாக இருந்தது. அப்படியே திரும்பி இருபக்கமும் வரிசையாகப் போட்டிருந்த மெத்தைக் கட்;டிலகளில் படுத்திருக்கும் பெரியவர்களை நோட்டமிட்டான் இவன். யாரையும் பார்க்கவே இஷ்டமில்லை என்பதைப் போல் ஒருவர் வெளியே ஜன்னல் வழியாகத் தெரிந்த விரிந்த வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு முதியவர் நிமிர்ந்து படுத்தமேனிக்கு உத்திரத்தைப் பார்த்தவாறே இமை கொட்டாமல் கிடந்தார். ஒரு முறை கூட இமைக்காமல் அவர் அப்படி வெறித்துக் கிடந்தது இவனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இன்னும் சற்றுக் கூர்ந்து கவனிக்க முனைந்தான். கண்களிpலிருந்து கோடாய் நீர்வழிந்து கொண்டிருந்தது. அதைத் துடைக்கக்கூட உணர்வின்றி அவர் கிடப்பதும், உதடுகள் லேசாய்த் துடிப்பது போலவும்…. என்னென்ன நினைவுகளோ மனதில்? பெற்றபிள்ளை வைத்துக் காப்பாற்றாமல் இப்படிக் கொண்டு வந்து அநாதையாய் விட்டுவிட்டுப் போய் விட்டானே, என்று நினைப்பாரோ? மனைவியும் பிள்ளையோடு சேர்ந்துகொண்டு, தன்னை இப்படி விரட்டி விட்டாளே? என்று குமுறுகிறாரோ? மனைவியின் அழகில் மயங்கி, அவள் பேச்சைக் கேட்டு, காமத்தின் வயப்பட்டுத் தன்னை இப்படிக் கழித்துக் கட்டி விட்டானே பாவி…? என்று வேதனை கொள்கிறாரோ? என் பி;ள்ளையை, பிள்ளைகளை வளர்க்க என்ன பாடுபட்டிருப்பேன்? எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்திருப்பேன்? எப்படிப் பாடுபட்டு உழைத்தேன்? எங்கெல்லாம் கடன் வாங்கிச் சீரழிந்தேன்? என் சொந்தத் தேவைகளை எங்ஙனமெல்லாம் குறைத்துக்கொண்டேன்? ஒரு வார்த்தை என்றேனும் என் இழப்புகளைப் பற்றிப் பேசியிருப்பேனா? முடியலை என்று படுத்திருப்பேனா? அவர்களைப் படிக்க வைத்து, நல்ல வேலைக்கு அனுப்பிவிட்டுத்தான் ஓய்வது என்று இருந்தேனே? அந்த வைராக்கியம் உணரப்படவில்லையே? அந்த உழைப்பு அறியப்படவில்லையே? என்ன உலகம் இது? – இப்படித் தவிக்கிறாரோ? பாவி, என்னை மட்டும் தவிக்க விட்டு விட்டுப் போய்விட்டாளே? அவளுக்கு முன் நான் கண் மூடியிருந்தால் இந்தச் சீரழிவு உண்டா? இறைவா, இந்த முதுமையை இந்தத் தள்ளாமையை இந்தக் கொடுமையை, இந்தத் தனிமையை யாருக்கும் கொடுக்காபதே…நீ இரக்கமுள்ளவனென்றால், கருணையுள்ளவனென்றால் என்னின் இந்த நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது.. அவர் இப்போது கண்களை மூடிக் கிடப்பது தெரிகிறது. வலதுபுறம் திரும்பி நோக்கினான். ஒருவர் எந்தச் சலனமுமின்றி செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். படிப்புக்கு இடை இடையே இவனை உற்று உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஒரு மென்மையான சந்தோஷம். ஒரு சிறு மலர்ச்சி. ஒரு வேளை அவர் மகனைப்போல், அவன் சாயலில் இருக்கிறேனோ? வாசலை நோக்கினான். மரங்கள் அடர்ந்த வாயில் புல்வெளியில் நிற்சிந்தையாக ஒருவர் நடந்து கொண்டிருந்தார். குளித்து, படியத் தலைவாரி துவைத்து மடித்த வேட்டி கட்டி பட்டை பட்டையாக விப+தி ப+சி குங்குமமிட்டு கையில் ஒரு மூன்றாவது துணையுடன் நடை பயின்று கொண்டிருந்தார். ஒருவர் வராண்டாவில் உட்கார்ந்துகொண்டு வாசல் கேட்டையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். வாகனங்கள் போக, வருகையில் அவர் கண்கள் பரபரத்தன. இன்னைக்குத் தேதி பத்து சார்…அவர் பையன் வர்ற நாளு..அதை எதிர்பார்த்திட்டு இருக்கார்.. -இவன் அவரையே பார்த்தான். கூடவே வச்சிட்டு கொடுமைப் படுத்துறதுக்கு இது எவ்வளவோ பரவால்ல சார்…ஆடு மாடுகளுக்கு நேரத்துக்குத் தீனி போடுற மாதிரி வெறுமே சாப்பாடு மட்டும் போட்டிட்டு எதையுமே கண்டுக்காம இருக்கிறதுல என்ன சார் இருக்கு…வீட்டுல இருக்கிற பெரியவங்களுக்கு ஆறுதலே அவுங்களையும் மதிச்சு எல்லா விஷயத்துலயும் கலந்துக்கிறதுதான்; அவுங்களோட மனசு விட்டுப் பேசுறதுதான். பெத்து வளர்த்து ஆளாக்கின பெற்றோர்களே எப்படி வேண்டாம்னு ஆகிப் போயிடுறாங்க பாருங்க? சீ, சீன்னு ஒதுக்கிடுறாங்களே…முதுமை எல்லாருக்கும் பொதுவில்லையா? ;அதை யாராச்சும் உணருறாங்களா? ………4…………… –4– வெளியே சத்தமான குரல் அதிர்ந்தது அப்போது. கவனம் பெயர்ந்தது. நீ என்னடா என்னை ஒதுக்குறது? நான் ஒதுக்குறேன்டா உன்னை. உனக்கு இடைஞ்சல் நான் இல்லை. எனக்குதாண்டா நீ இடைஞ்சல். என் சுதந்திரம் உன்னால பாழாகுது. அதை ஒடுக்குறதுக்கு நீ யாரு? என் பென்ஷன் காசு இருக்குடா எங்கிட்ட? அதவச்சு சுதந்திரமா, சந்தோஷமா வாழ்வேண்டா நான்! மனமுவந்து இந்த முதியோர் இல்லத்துக்குக் கொடுத்தாலும் கொடுப்பனேயொழிய உன்னை மாதிரி மரியாதை இல்லாதவன்ட்ட, பாசமில்லாதவன்ட்ட, துரோகிகிட்டக் கொடுக்க மாட்டேன்…நம்பிக் கொடுத்திட்டுத் தெருவுல நிற்க நான் என்ன கிறுக்கனா? -இப்படிச் சொல்லிட்டுத்தான் சார் இங்க வந்து சேர்ந்தேன். நேசிக்கத் தெரிஞ்சவனுக்கு, மனசுல ஈரம் இருக்கிறவனுக்கு எந்த இடமா இருந்தா என்ன? அது என் பிள்ளைட்ட இல்லையே? மரத்தடியில் நடந்து கொண்டிருந்த பெரியவரைக் கையைப் பிடித்து நிறுத்தி, ஓங்காரமாகக் கர்ஜித்துக் கொண்டிருந்தார் ஒருவர். அவரது ஒல்லியான சரீரத்தின் நெஞ்செலும்புகள் விரைப்பதும், கழுத்து நரம்புகள் புடைப்பதுமாய் இருந்தன. கடவுள் உடல் ஆரோக்கியத்தை மட்டும் கொடுக்கணும். அதுதான் நம்மை ஆட்டுவிக்கிற சக்திகிட்டேநான் வேண்டிக்கிறது… அய்யா…அய்யா… ம்ம்ம்…ம்ம்ம்… என்றவாறே நினைவு மீண்டான் இவன். சாப்பிடுங்கய்யா…இலைல வச்சதெல்லாம் அப்டியே இருக்குது…நல்லா திருப்தியா சாப்பிடுங்க… அங்கு வந்ததிலிருந்து அய்யா…அய்யா… என்றே அவர்கள் அழைப்பது இவனை ரொம்பவும் சங்கடப்படுத்திக் கொண்டிருந்ததுஅப்படிக் கூப்பிடாதீங்க… என்று சொல்லியும் விட்டான் இவன். ஆனால் அவர்கள் கேட்பதாயில்லை. அது வேறு இவனை அடிக்கடி கூசச் செய்து கொண்டிருந்தது. பாயசத்தை இலைல விடட்டுமா? இல்ல டம்ளர்ல தரட்டுமா?-சப்ளையர் கேட்டார். அவர்கள் ஒவ்வொருவரையும் மனதில் கொண்டுவந்து வரிசையாக நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சோகமான தருணத்தில் எப்படி இனிப்பான பாயசத்தை மனமுவந்து குடிக்க முடியும்? என்று தோன்றியது இவனுக்கு.. இலையில் விட்ட பாயசம் வழிந்து ஓடி விடாமல் சர்ர்ர்ர்…சர்ர்ர்ர்… என்று உறிஞ்சும் முறையைப் பார்க்கையில் ஏனோ இவன் மனசு சங்கடப்பட்டது. எனக்கும் இலைலயே விட்ருங்க… என்றான். அவர்களைப் போலவே இவனும் கையால் வழித்தெடுத்து, விழுங்க ஆரம்பித்தான். ம்ம்ம்…ம்உற_ம்!!..ம்உற_ம்… விடாத…விடாத…விடாதய்யா…டம்ளர்ல கொண்டா போ.. சட்டென்று இவன் நிமிர்ந்து பார்த்தபோது அந்த எதிர் வரிசைப் பெரியவர் படபடத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. போய்யா…போய் டம்ளர்ல கொண்டு வா… சப்ளையரை விரட்டினார். அதுக்கெதுக்கு இப்படிக் கத்துறீங்க? மெதுவாச் சொல்ல வேண்டிதானே? தெனம் இவரோட பெரிய ரோதனையாப் போச்சுப்பா… -சலித்துக்கொண்டே அந்த ஆள் நகர்ந்தபோது அது நடந்தது. அங்கு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவரும் அதை எதிர்பார்க்கவேயில்லை. எனவே அதிர்ந்தனர் எல்லோரும். என்னடா சொன்னே? ராஸ்கல்…? -சாப்பிட்ட எச்சிற் கையோடு எழுந்த அவர் அவனின் சட்டையைப் பிடித்துத் திருப்பி ‘பளார் என்று அவன் கன்னத்தில் ஒன்று விட்டார். அடித்த அடியில் நிலைகுலைந்து போனான் சப்ளையர். அவன் கையி;லிருந்த வாளி தவறிக் கீழே விழுந்தது. பாயசம் தரையில் கொட்டி ஓடியது. …………5…………….. – 5 – ;அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் திகைத்து நிற்க, சப்ளையர் பொறிகலங்கியவராக வாளியைத் தூக்கிக் கொண்டு தடுமாறியவாறே அடுப்படி நோக்கிப் போனான். அவன் அப்படி அமைதியாகத் திரும்பிப் போனது நம்ப முடியாததாக இருந்தது. எந்த எதிர்ப்புமின்றி எப்படி? உள்ளேயிருந்து சமையற்கார அம்மாள் ஓடி வந்து கீழே கொட்டியிருந்த பாயசத்தை வழித்து எடுத்தவாறே இடத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தது. வாயால சொல்ல வேண்டிதானே? அதுக்காகக் கை நீட்டி அடிக்கணுமா? நாங்க அனாதைதான்…உங்கள நம்பித்தான் இருக்கிறோம்…அதுக்குத்தான் இப்படியா? அழுதுகொண்டே உள்ளே போனது அந்த அம்மாள். வேறு ஏதோவொன்றை வெளிப்படுத்த முடியாத ரூபத்தில், அவரது கோபம் இப்படி வெளிப் பட்டிருப்பதாகவே தோன்றியது இவனுக்கு. வெகு நேரமாகவே இந்தச் சூழல் பிடிக்காமல் ஏதோவொரு விதத் தவிப்போடு அவர் இதை எதிர்கொண்டிருப்பதாக நினைத்தான். இன்று பார்த்து இப்படி நடக்க வேண்டுமா? அய்யா, நீங்க ஒண்ணும் இதுக்காக வருத்தப் பட்டுக்காதீங்க…இது எப்பவும் உள்ளதுதான் இங்கே…அவர்தான் இங்க பிரச்னையே…ஆனாலும் அவரு ரொம்பப் பாவமுங்க…நாங்க எல்லாரும் அவரைப் பொறுத்துக்கிட்டுத்தான் இருக்கோம்…உங்களை மாதிரி உள்ளவங்களை நம்பித்தான் இந்த விடுதி நடந்திட்டிருக்கு…தயவுசெய்து எங்களுக்காக இந்த சம்பவத்தை மறந்திடுங்க…இதைப் பெரிசா நினைக்கப்படாது நீங்க…தொடர்ந்து இங்கே நீங்க வரணும். எங்களை மறந்திடப் படாது.. – அவர்கள் சொல்வதைக் கேட்டவாறே கைகளைக் கழுவிவிட்டு, வெளியே வந்து கொண்டிருந்தான் இவன். அந்த வளாகத்தின் அகண்ட புல்வெளிpப்பகுதியின் வாயிலை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருந்த போது; மனதில் அந்த நிமிடத்தில் இவன் அப்பாவே முழுமையாக நிறைந்திருந்தார். இதே போன்ற ஒரு நிகழ்வின்போது, அப்பா அம்மாவைக் கைநீட்டிப் பலமாக ஒருநாள் அடித்ததும், அன்று முதன் முறையாகத்தான் அப்பாவை எதிர்த்துக் கேட்டதும், அந்த எதிர்ப்பில் அப்பா வெகுவாக நிலை குலைந்து போனதும், அது நடந்த மிகச் சில நாட்களிலேயே அப்பா காலமானதும், கடைசி நிகழ்வாக இப்படி நடந்திருக்க வேண்டாமே என்று வேதனைப்பட்டதும்: அப்பா இறப்பதற்கு முந்திய அந்த இரவில் அம்மாவின் கைகளைப் பிடித்துத் தன் முகத்தில் பதித்துக்கொண்டு அந்த நிகழ்விற்கு மன்னிப்புக் கோருபவராய்க் கதறிய காட்சியும், ஏனடா அன்று அப்பாவை எதிர்த்து அப்படிப் பேசினோம் என்று தான் மனதுக்குள் புழுங்கியதும், அப்படியே அவர் மூச்சு அடங்கிப் போனபோது எல்லோரும் ஸ்தம்பித்ததும், நினைவில் வந்து அழுத்த- அடக்க முடியாமல் அந்தக் கணத்தில் பீறிட்ட அழுகையை யாரும் அறியாதவாறு முகத்தை வலிய மறைத்துக் கொண்டவனாய் வாசல் கதவைத் திறந்து கொண்டு வேகமாய் வெளியேறினான் இவன்!!. ———————————————–

Series Navigationகாலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வைபள்ளி மணியோசை
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    ganesan says:

    The author brilliantly narrates the irritating behaviour of the old man who is wounded by his own kith and kin and forced to stay in the oldage home.The action shows his outlet of his anger and sorrow…good story keep it up!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *