பழமொழிகளில் எலியும் பூனையும்

This entry is part 10 of 40 in the series 12 பிப்ரவரி 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

இறைவன் அனைத்து உயிர்களையும் ஒன்றாகவே படைத்தான். அவ்வுயிரினங்களில் பல ஒன்றோடென்று நட்புறவுடன் வாழ்கின்றன. ஒரு சில உயிரினங்கள் ஒன்றோடென்று பிறவியிலேயே பகையுணர்வுடன் வாழ்கின்றன. அப்பகை காலந்தோறும் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது வியப்பிற்குரியதாகும்.

பாம்பு-கீரி, காகம்-கூகை, பூனை-எலி, உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தும் இயற்கையிலேயே ஒன்றுடன் ஒன்று பகைமை உணர்வுடன் வாழ்கின்றன. இத்தகைய இயற்கையை வைத்து நம்முடைய முன்னோர்கள் பல வாழ்வியல் பண்புகளை எடுத்துரைத்துள்ளனர். அதிலும் பூனை, எலி ஆகியவற்றின் செயல்பாடுகளையும், வாழ்க்கை முறைகளையும் வைத்து வாழ்வியல் நெறிகளை விளக்கி இருப்பது சிறப்பிற்குரியதாகும்.

துன்பம்-மகிழ்வு

சிலர் மற்றவரின் துன்பங்கண்டு மகிழ்வர். அவர்கள் குரூர மனம் (Sadist) படைத்தவர்கள் எனலாம். பிறர் துன்பங்கண்டு மகிழ்பவர் மக்களில் கீழானவர். எந்த அறமும் அவர்கள் அறியாதவர் ஆவர். இத்தகையோரின் பண்பினையும் செயலினையும்,

‘‘எலிக்கு மரணவலியாம்

பூனைக்குக் கொண்டாட்டமாம்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. எலிக்குப் பகை-பூனை, பூனையிடம் அகப்பட்டுக் கொண்ட எலிக்கு மரணமாகிய வலி. ஆனால் எலியைப் பார்த்த பூனைக்கு நல்லுணவு கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சி. இது போன்றே மனிதர்களும் இருக்கின்றனர். சிலரின் துன்பம் சிலருக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இத்தகைய எண்ணத்தை மனிதன் கைவிட்டு நல்லெண்ணததைக் கைக்கொள்ளல் வேண்டும் என்றும் இப்பழமொழி எடுத்துரைப்பது நோக்கத்தக்கது.

தீயவர் இன்பம்

தீயோர் மகிழ்ச்சியுடன் இருந்தால் பிறரைத் துன்புறுத்துவர். தமக்கு மகிழ்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் பிறரைத் துன்புறுத்துவது உண்டு. இவ்வாறிருப்பது பண்புக் குறைபாடுடையதாகும். இதனை,

‘‘பூனைக்குக் கொண்டாட்டம்னா

பீத்தப்பாயிக்குக் கேடாம்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. இங்கு தீயோரை – பூனையும், எளியோரை – பீத்தல்பாய் என்பதும் குறிப்பிடுகின்றது. தீயவர் மகிழ்வு கொண்டால் எளியவரைத் துன்புறுத்துவர். இஃது அவர்களது இயல்பாகும் என்று இப்பழமொழி புலப்படுத்துகிறது.

கருமித்தனம்

சிலர் எப்பொருளாக இருந்தாலும் அதனைத் தமக்கோ, பிறருக்கோ பயன்படாத வண்ணம் மறைத்து வைப்பர். அவ்வாறு வைக்கப்பட்ட பொருள் நாளடைவில் மறைத்து வைக்கப்பட்டவரால் மறக்கப்பட்டு கெட்டுவிடும். அப்பொருள் யாருக்கும் பயன்படாது போகும். இவர்களைக் கருமி என்பர். இவர்களது செயலினை,

‘‘பூனை பீயைப் பொட்டலம் கட்டியது மாதிரி’’

(பீ-பூனை வெளியேற்றும் கழிவு)

என்ற பழமொழி எடுத்துஐரக்கின்றது. பூனை தனது கழிவினை வெளியேற்றி அதனை மண்ணைப் போட்டு மூடிவிடும். அது யாருக்கும் பயன்படாத பொருள். இருப்பினும் பூனைகள் அவ்வாறு செய்யும் பழக்கமுடையது. அது போன்றே சில மனிதர்கள் செயல்படுவர். யாருக்கும் எப்பொருளும் பயன்படக் கூடாது என்று கருதும் மனிதரின் இத்தகைய இயல்பினையே மேற்குறித்த பழமொழி விளக்குகிறது.

இரு மனமுடையோர்

மனிதர்களுள் சிலர் இரு மனமுடையோராக இருப்பர். தவறு செய்பவருக்கும் அதனால் பாதிப்படைபவருக்கும் சார்பாக இருப்பர். இவர்கள் இருபக்கமும் லாபம் பார்க்கும் தன்மையர். யார் எக்கேடு கெட்டுப் போனாலும் தமக்கு அதில் ஏதாவது கிடைக்கின்றதா? என்று குறிப்பாகக் பார்த்துக் கொண்டே இருப்பர். இத்தகையோரின் இழி குணத்தை,

‘‘பூனைக்கும் காவல் பாலுக்கம் காவல்’’

(பூனை-தீமை செய்பவர், பால்-பதிப்படைபவர்)

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

தவறிழைத்தல்

நல்லவர் போன்று பிறர் நம்பும்படி நடித்து மறைமுகமாகப் பிறர் வெறுக்கத்தக்க செயல்களைச் சிலர் செய்து கொண்டிருப்பர். அவரது செயல் என்றேனும் ஒரு நாள் வெளிப்படும்போது இவரா இதனைச் செய்தார் என்று வியப்புறுவர். இதனை,

‘‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. பூனைக்குப் பால் விருப்பபமான உணவு. அதனை விரும்பாத பூனைகள் இல்லை. அதுபோன்று தீயவர்கள் தவறிழைக்காது இருக்கமாட்டார்கள். மற்றவர்களை நம்ப வைப்பதற்காகத் தவறு செய்யாதவர் போன்று நடிப்பர். இத்தகைய கயவர்களின் செயல்பாட்டினை விளக்குவதாக இப்பழமொழி அமைந்துள்ளது. இக்கயவர்களின் செயலை வெளிப்படுத்தி அவரது முகமூடியைக் கிழித்தெரிவது சமுதாயத்திற்குச் செய்யும் நன்மையாகும். இதனை யார் செய்வது? யாராவது செய்து அவரின் முகத்திரையைக் கிழித்து அவரது உண்மை நிலையைப் பிறர் அறியும் வண்ணம் செய்தல் வேண்டும் என்பதனை,

‘‘பூனைக்கு யாரு மணி கட்டுவது?’’

என்ற பழமொழி விளக்குகிறது.

தீயவரைத் தண்டிக்கவும், அவரின் செயல்பாடுகளை வெளிப்படுத்தவும் தயங்கக் கூடாது. அங்ஙனம் செய்தால் தமக்குத் தீங்கு நேரும் என்று கருதுகின்றனர். அவ்வாறு நினைத்துப் பயப்படாது உள்ள உறுதியுடன் கயவர்களின் கயமைத்தனங்களைப் பலரும் அறியும்படி செய்தல் வேண்டும். தீயதைப் பார்த்துக் கொண்டு அதிலிருந்து விலகி இருக்கவும் கூடாது. இது ஒரு சமுதாயக் கடமையாகும் என்ற காலத்திற்கேற்ற வாழ்வியல் நெறியை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.

இப்பழமொழி வழக்குத் தொடர்போன்று இருப்பினும் இஃது வழக்குத் தொடர் அன்று. இது வினாவடிவில் அமைந்த பழமொழியாகும். இங்கு பூனை என்பது தீயவர்களையும், மணிகட்டுவது என்பது அவர்களின் தீய செயல்களை வெளிப்படுத்துவதையும், அவர்களைத் தண்டிப்பதையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

தான் எனும் அகந்தை

மனிதர்களில் பலர் அகந்தை மனத்துடன் இருக்கின்றனர். நிறுவனங்களில் பணிபுரிவோர் சிலர் எல்லாச் செயல்களும் தங்களால்தான் நடந்தது என்றும் தாங்கள் இல்லையெனில் நிறுவனம் செயலற்றுவிடும் என்றும் கூறுவர். இஃது வெறும் அகந்தையாலும், அறியாமையாலும் வெளிப்படும் பேச்சாகும். அவரில்லை என்றாலும் செயல்கள் வேறொருவரால் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இதுவே உலக நியதி. இது அவரே அவரை ஏமாற்றிக் கொள்ளும் நிலையில் அமைந்த பேச்சாகும். யாரில்லை என்றாலும் எதுவும் நின்றுவிடாது. இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் அகந்தை இன்றி வாழ்தல் வேண்டும். இத்தகைய கருத்தினை,

‘‘பூனை கண்ணை மூடிருச்சுன்னா

பூலோகமே இருண்டு போகாது’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. பூனை என்பது மனிதர்களைக் குறித்து வந்த குறியீடாகும்.

வாய்ப்புகள்

வறுமையில் வாடுபவர் வறுமையிலேயே இறப்பது இல்லை. அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வரும்போது அதனைப் பயன்படுததி வாழ்வில் உயர்நிலைக்கு வருவர். ஆனால் இதனைப் பலர் ஏற்றுக் கொள்வதில்லை. ஏழ்மை நிலையில் உள்ளோர் ஏழ்மையாகவே இருந்து மடிவர் என்று அறியாது கூறுகின்றனர். இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒருவாய்ப்பினை நல்கிக் கொண்டே இருக்கின்றான். அவ்வாய்ப்புகள் வரும்போது அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனக்கு வாய்ப்புகள் வராது என்று கருதி சோம்பி இருத்தல் கூடாது. இத்தகைய நம்பிக்கையூட்டும் கருத்தினை,

‘‘யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

வசதிபடைத்தோருக்கு(யானைக்கு) ஒரு வாய்ப்பு வரும்போது வசதிகுவுடையவருக்கும்(பூனை) உறுதியாக ஒரு வாய்ப்பு வந்தே தீரும். இது உலக இயற்கையாகும் என்பதை இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் எடுத்தியம்பியுள்ளனர்.

புரிந்து கொண்டு செயல்படுதல்

எந்தச் செயல் செய்வதானாலும் அதனைப் புரிந்து கொண்டு செய்தல் வேண்டும். அது முழுமையான வெற்றியைத் தரும். ஏதும் புரியாமல் செய்தால் அது வெற்றியைத் தராது. மாறாகத் துன்பத்தைத் தரும். இத்தகைய கருத்தை,

‘‘குருட்டுப் பூனை விட்டத்துல ஏறின கதைதான்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

சிலர் புரியாமல் எதையாவது செய்துவிட்டு என்ன செய்வது என்று அறியாது குழப்பத்தில் ஆழ்வர். அவர்கள் குருட்டுப்(கண்தெரியாத) பூனைக்கு ஒப்பாவர். கண் தெரியாத பூனை வீட்டின் மேலுள்ள விட்டத்தில் ஏறினால் எப்பக்கம் கீழே குதிக்கும்? அவ்வாறு குதித்தால் ஆபத்தின்றி அதனால் குதிக்க முடியுமா? அது விட்டத்தில் ஏறி ஒன்றும் புரியாது குழப்பததில் விட்டத்திலேயே நின்று கொண்டிருக்கும். இங்ஙனம் பூனையில் செயலை வைத்து மனிதர்களின் குணத்தை விளக்குவதாக இப்பழமொழி அமைகின்றது. மேலும் எதனையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்ற விழிப்புணர்வுக் கருத்தையும் இப்பழமொழி நமக்கு வழங்குகின்றது.

தீயவர் நட்பு

மனிதன் நல்வர்களுடன் நட்புக் கொண்டு வாழ வேண்டும். இல்லையெனில் துன்பம் ஏற்படும். தீய நட்பு என்றும் தீராத் துன்பத்தைத் தந்து கொண்டு இருக்கும். சிலர் புரியாது தீயர்வகளுடன் சேர்ந்திருப்பர். அதனால் அவர்களுக்குப் பல இடர்ப்பாடுகள் ஏற்படும். இது எதனால் ஏற்பட்டது என்று பின்னர் அவர்கள் காரம் புரியாது தேடிக் கொண்டிருப்பர். தாங்கள் கொண்ட தீயர் நட்பினால் தான் ஏற்பட்டது என்பது தெரியாது துன்புறுவர். இதனை,

‘‘பூனையைத் தூக்கி மடியில கட்டிக்கிட்டுச்

சகுனம் பார்த்த கதைதான்’’

என்ற பழமொழி விளக்குகின்றது.

எங்காவது செல்லும்போது பூனை குறுக்காகப் பொனால் அது தீய சகுனம் என்று கூறுவர். அவ்வாறு பூனை குறுக்கே போனால் எங்கும் போகாது வீடு திரும்பிவிடுவர். இவ்வாறு பலரிடம் சகுனம் பார்க்கும் பண்பு அதிகம் காணப்படுகின்றது. இத்தகைய பண்பு உள்ளவர்கள் பூனையை மடியில் கட்டி வைத்துக் கொண்டு சகுனம் பார்த்தல் கூடாது. இது துன்பத்தைத் தரும்.

இங்கு பூனை -தீயவர் நட்பினையும், சகுனம் பார்த்தல் – செயல் தடைபட்டதற்குக் காரணம் காணலையும் குறிக்கும். தீயவருடன் நட்புக் கொண்ட பின்னர் தமக்குத் துன்பம் வந்துவிட்டதே என்று கருதுதல் கூடாது. காரணம் தேடவும் கூடாது என்பதை எடுத்துரைத்து நல்லோருடன் நட்புக் கொண்டு வாழ வேண்டும் என்று இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் வலியுறுத்துகின்றனர்.

எலிவளை – தனி வளை

மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் என்பன மிகவும் இன்றியமையாதவையாகும். அதிலும் இருக்கும் இடம் இலா்லையெனில் மிகவும் வருந்த நேரிடும். பிறர் இருக்கும் இடத்துடன் சேர்ந்திருப்போம் எனில் அது பல்வேறு இடர்பாடுகளுக்கு வழிவகுத்துவிடும். தனியான இடத்தில் இருந்தால் எந்தவிதமான பிரச்சனைகளும் அதிகம் வராது. இதனைக் குறிப்பிடவே நமது முன்னோர்கள்,

‘‘எலி வளையானாலும் தனிவளை தேவை’’

என்ற பழமொழியைக் கூறியுள்ளனர்.

மிகவும் சிறியது எலி வசிக்கக் கூடிய இருப்பிடம். அது போன்று சிறியதாக இருந்தாலும் வசிக்கின்ற இருப்பிடம் தனியாக இருக்க வேண்டும். அதுவே நல்லது. இப்பழமொழியைத் தனிக் குடும்பமாக வாழ வேண்டும். கூட்டுக் குடும்பமாக இருத்தல் கூடாது என்று குறிப்பிடுவதாகக் கூறுவர். அத்தகைய பொருளில் நம்முன்னோர்கள் கூறியிருப்பார்களா? என்று சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்.

ஒரே இடத்தில் அனைவரும் தங்கி இருப்பது என்பது இயலாத ஒன்று குறைவான இடத்தில் அதிகமானோர் தங்கி இருந்தால் பல சுகாதாரக் கேடுகள் ஏற்படும் என்பதைக் குறிப்பதாகவே இப்பழமொழிஅமைந்துள்ளது. ஒரே இடத்தில் தனியான இருப்பிடம் இருந்தால் அனைவரும் இனிதாக வாழலாம் என்பதையே இப்பழமொழி வலியுறுத்துகின்றது.

இழிந்த குணம்

எப்போதும் மனிதன் ஒரே நிலையில் பண்பில் மாறாது இருத்தல் வேண்டும். வசதி வாய்ப்பு இருக்கும்போது ஒரு மாதிரியாகவும் வசதியின்யறி இருக்கும்போது வேறொருவகையாகவும் வாழ்தல் கூடாது. கால மாற்றங்களுக்கு ஏற்ப குணத்தை மாற்றிக் கொள்ளக் கூடாது எப்போதும் ஒரே மாதிரியாக இருத்தல் வேண்டும். சிலர் வசதி வந்தவுடன் தங்களது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வர். அவர்களின் செயல் இழிவானதாகும். எப்போதும் ஒரே நிலையில் தடம் மாறா வாழ்க்கை வாழ வேண்டும் என்பதனை நமது முன்னொர்கள்,

‘‘அறுப்புக் காலத்தில் எலிக்கு ஏழு பொண்ணாட்டியாம்’’

என்ற பழமொழி உணர்த்துகின்றது.

ஒரு எலிக்கு இன்னொரு எலி மனைவி. அது எப்போதும் உள்ள இயல்பான காலம். அறுவடைக்காலம் எனில்(அறுப்புக் காலம்) அதிகமான உணவுப் பொருள்கள் கிடைக்கும். அறுவடைக் காலத்தில் எலிகள் அதிகமான தானியங்களை த் தங்களது வளைகளுக்குள் எடுத்துச் சென்று பதுக்கி வைத்துக் கொள்ளும். அப்போது பல பெண் எலிகளுடன் எலி குடும்பம் நடத்தும். அறுவடையில்லாக் காலங்களில் ஒருவகையாகவும், அறுவடைக் காலத்தில் பிறிதொரு வகையாகவும் எலி தனது பண்பினை மாற்றிக் கொள்ளும். இவ்வெலியைப் போன்றே சில மனிதர்களும் உள்ளனர்.

வசதியில்லாத காலத்தில் எந்தத் தீய பழக்கங்களும் இல்லாது வாழ்வர். வசதி வாய்ப்புகள் வந்தவுடன் சீட்டாடல், மதுவருந்தல், தகாத பெண்ணுறவு போன்ற பல்வெறுவிதமான தீய பழக்கங்களில் ஈடுபட்டுவிடுவர். பிறரிடம் பழகும்போதும் வேறுபட்டுப் பழகுவர். இது தவறான நிலைமைக்கு மனிதனை இட்டுச் செல்லும் இழிந்த குணமாகும். இதனை மனிதன் கைவிட்டு நல்ல நிலையில் எப்போதும் ஒரே நிலையில் பண்பு மாறாது வாழ்தல் வேண்டும் என்பதனை எலியின் செயல்பாடுகளைக் கொண்டு நம்முன்னோர்கள் விளக்கியிருப்பது நோக்கத்தக்கதாகும்.

மனிதர்களில் விலர் நன்கு வாழ்ந்து நிலைதாழ்கின்றபோது அவர்களை இழிவுபடுத்துகின்றனர். மேலும் எப்போதும் போல் அவருடன் பழகாமல் பண்பு குறைந்தும் நடந்து கொள்வர். எப்படி இருந்தவன் இப்படியாகிவிட்டான் என்று கேலிபேசி அவமானப்படுத்துவர். இங்ஙனம் பிறர்மனம் வருந்துமாறு நடந்துகொள்ளுதல் கூடாது. அனைவருக்கும் இத்தகுநிலை ஏற்படும். மனிதர்கள் இதனை உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும்.இக்கருத்தினை,

‘‘சிங்கம் இளைச்சா எலிமச்சான் முறை கொண்டாடுமாம்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

சிங்கம் உடல் இளைத்து வலிமைகுன்றி படுத்துவிட்டால் வலிமை குறைந்த எலிகள்கூட சிங்கத்தின் மேல்ஏறி அதனை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொள்ளம். மனிதர்களின் நிலையும் சிங்கத்தின் நிலைபோன்றதே ஆகும். எலி போன்று இழிகுணத்துடன் நாம் நடந்துகொள்ளக் கூடாது.

ஒருவர் செல்வநிலையிலிருந்து இறங்கி வறுமையடைந்து வலிமை குன்றிவிட்டார் என்பதற்காக அவரது மனம் புண்படும் வண்ணம் நடந்து கொள்ளக் கூடாது. அது அறமாகாது. அத்தகைய எண்ணம் அழிவைத்தரும் என்ற வாழ்வியலறத்தை இப்பழமொழி உணர்த்துகின்றது.

பிறர் துன்புறும்போது கேலிபேசாது அவருக்கு உதவி செய்து வாழ்வதே வாழ்க்கையாகும். மேலும் கருமித்தனத்தையும் தீயோர் உறவையும் கைவிட்டு நல்லோர் தாழ்வுற்ற வழி அவரை இழிவுபடுத்தாது அவரையும் மதித்து மாண்புறு வாழ்க்கை வாழப் பழமொழிகள் நமக்க வழிகாட்டுகின்றன.

Series Navigationவாப்பாவின் நாட்குறிப்பைப் போலபாண்டிராஜின் ‘ மெரினா ‘
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

5 Comments

  1. Avatar
    jayashree shankar says:

    பழமொழிகளில் எலியும் பூனையும்…
    முனைவர் சி.சேதுராமன்….அவர்கள் எழுதிய பழமொழிகள் அனைத்தும் அருமை…வழக்கில் இருந்துவரும்
    பழமொழி தான்..இருப்பினும்..விளக்கத்தோடு படிக்கும்போது அதில் இருக்கும் ஆழ்ந்த பொருள் வெளிப் படுகிறது.
    நல்ல படைப்பு.மிக்க நன்றி. படிக்கப் படிக்க மீண்டும் படிக்கத் தூண்டிய பதிவு.
    ஜெயஸ்ரீ ஷங்கர்.
    சிதம்பரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *