பஞ்சதந்திரம் தொடர் 30- முட்டாள் நண்பன்

This entry is part 37 of 40 in the series 12 பிப்ரவரி 2012

நட்பு அடைதல்

இங்கே நட்பு அடைதல் என்னும் இரண்டாம் தந்திரம் தொடங்குகிறது. அதன் முதன் செய்யுள் பின்வருமாறு:

சாதனமும் செல்வமும் இல்லாமற் போனாலும்
அறிவாளிகளும் கல்விமான்களும் – காக்கை,
எலி, மான், ஆமை செய்ததுபோல் – எடுத்த
காரியத்தைத் தொடுத்து முடிக்கின்றனர்.

‘’அது எப்படி?’’ என்று அரசகுமாரர்கள் கேட்கவே, விஷ்ணுசர்மன் சொல்லத் தொடங்கினார்:

தென்னாட்டில் பிரமதாரூப்யம் என்றொரு நகரம் இருக்கிறது. அதற்கு வெகு சமீபத்திலேயே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதன் அடி மரம் பெருத்தும், கிளைகள் தடித்தும் இருந்தன. அதில் பல ஜந்துக்கள் இருந்து வந்தன.

அதன் நிழலில் மான் நித்திரை செய்கின்றது; பசுமையான இலைகளினூடே பறவைகள் வரிசை வரிசையாகக் கூடி வாழ்கின்றன; அதன் பல இடுக்குகளிலும் பொந்துகளிலும் பலவிதமான புழுபூச்சிகள் புகலிடம் பெற்றுள்ளன. அதன் அடிமரத்தில் கூட்டங் கூட்டமாகக் குரங்குகள் தொங்குகின்றன; மலர்க் கொத்துக்களில் வண்டுகள் நிம்மதியாகக் குடிக்கின்றன. அந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல உயிர்களுக்கு ஆனந்த மளிக்கின்றது. அந்த மரம் வாழட்டும்! மரமென்றால் அது அல்லவா மரம்! மற்றவையெல்லாம் பூமிக்குப் பாரம்தான்.

அந்த ஆலமரத்தில் லகுபதனகன் என்று ஒரு காக்கை இருந்தது. ஒருநாள் காலையில் இரை தேடுவதற்காக அது ஊரை நோக்கிப் பறந்து சென்றது. வழியில் ஒரு வேடன் வருவதைப் பார்த்து விட்டது. அந்த வேடன் அந்த வட்டாரத்திலேயே வசிக்கிறவன்தான். பறவைகளைப் பிடிப்பதற்காக அந்த மரத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். அவன் உருவத்தைப் பார்க்க பயங்கரமாயிருந்தது. கைகால்கள் தட்டை குட்டையாயிருந்தன. துணியை முழங்காலுக்கு மேல் தூக்கிக் கட்டியிருந்தான். முகம் விகாரமாக இருந்தது. கண்கள் ரத்தச் சிவப்பேறி இருந்தன. குடுமியை நிமிர்த்தி முடிச்சுப் போட்டிருந்தான். அவன் கைகளிலே வலையும் தடியும் இருந்தன. அவனை வேட்டை நாய்கள் பின்தொடர்ந்து வந்தன. அதிகமாய்ச் சொல்வானேன்? கையில் கயிறு பிடித்து இரண்டாவது யமன் போல் அவன் காட்சியளித்தான். பாவத்தின் அவதாரமோ? அதர்மத்தின் நெருங்கிய நண்பனோ? என்று நினைக்கும்படி அவன் இருந்தான்.

லகுபதனகன் அந்த வேடனைப் பார்த்து மனங்கலங்கி யோசிக்கத் தொடங்கியது: ‘’இந்தப் பாவி என்ன செய்யலாம் என்று நினைக்கிறான்? என் நாசத்தைத் தேடுகிறானா? அல்லது வேறு ஏதாவது செய்ய நினைத் திருக்கிறானா?’’ என்று எண்ணியது. ஆவல் அதிகமாகி, காக்கை அவனைப் பின் தொடர்ந்து போயிற்று.

வேடன் ஒரு இடத்துக்கு வந்து வலையை விரித்தான். அதன் மேல் தானியங்களை இறைத்தான். பிறகு கொஞ்சதூரம் தள்ளி மறைந்து நின்று கொண்டான். ஆனால் பறவைகள் எதுவும் வலையின் பக்கத்தில் வரவில்லை. லகுபதனகனின் ஆலோசனையைக் கேட்டு, தானியங்களை ஆலகால விஷம் என்று வெறுத்து, அந்தப் பக்கத்தை அவை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

அந்த நேரத்தில், சித்ரகிரீவன் என்கிற புறாக்களின் அரசன், நூற்றுக்கணக்கான புறாகக்கள் புழைசூழ, இரை தேடியபடியே சுற்றித் திரிந்து வந்தது. அரிசி இறைந்திருப்பதைத் தூரத்திலிருந்தே கண்டுவிட்டது. லகுபதனகன் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அது கேட்காமல், அரிசி தின்பதில் பேராசை கொண்டு, அந்தப் பெரிய வலையில் வந்து உட்கார்ந்தது. அந்த வினாடியே அதுவும் அதன் பரிவாரங்களும் வலையில் சிக்கிக் கொண்டன. இதில் யாரையும் குற்றம் சொல்லிப் பிரயோஜனம் இல்லை. விதி கெட்டு இருந்ததால்தான் இப்படி நேர்ந்துவிட்டது. ஒரு பழமொழி கூறுவதுபோல்,

பிறர் மனைவியரை அபகரிப்பது குற்றம் என்று ராவணனுக்கு ஏன் தெரியாமல் போயிற்று? பொன்மான் என்று ஒன்றிருக்க முடியாது என்று ராமனுக்கு ஏன் தெரியாமல் போயிற்று, சூதாட்டத்தில் பல அனர்த்தங்கள் உண்டு என்று யுதிஷ்டிரனுக்கு ஏன் தெரியாமல் போயிற்று? விபத்து நெருங்குகிற சமயத்தில் உணர்வு மங்கும். விதி மதியைக் கெடுத்துவிடும்.

காலனின் பாசக் கயிற்றால் கட்டுண்டு, விதி மதியைக் கவ்வுகிற போது, பெரியோர்களின் அறிவுகூட நினைத்திராத பல குறுகிய வழிகளில் செல்கின்றது.

வேடன் மிகவும் சந்தோஷப்பட்டு தடி எடுத்துக்கொண்டு ஓடி வந்தான். வலையில் சிக்கிக்கொண்டதையும் வேடன் ஓடிவருவதையும் பார்த்து சித்ர கிரீவனும் அதன் பரிவாரங்களும் வேதனையடைந்தன என்றாலும், சித்ரகிரீவன் சமயோசித புத்தியோடு, ‘’நண்பர்களே பயப்படாதீர்ள்.

எப்படிப்பட்ட துன்பம் வந்தபோதிலும் யார் அறிவை இழக்காமல் இருக்கிறார்களோ அவர்கள் துன்பங்களைக்கடந்து இன்பம் காண்கிறார்கள்.

நாமெல்லோரும் ஒரே நோக்கத்துடன் இருந்து, எல்லோரும் சேர்ந்தாற்போல் எழுந்து பறந்து வலையை ஆகாயத்தில் தூக்கிச் சென்றுவிட வேண்டும். ஒன்றாய்ச் சேர்ந்து செயல் புரியாவிட்டால் இது சாத்தியமில்லை. ஒற்றுமை இன்றிக் காரியம் செய்தால் சாவுதான் கதி.

ஒரே வயிறும் இரண்டு கழுத்துக்களும் உள்ள பாருண்டப் பறவைகள் முறை பிசகிச் சாப்பிட்டு இறந்ததுபோல், ஒன்றுமை இல்லாதவர்களும் நாசமடைவார்கள்

என்று ஒரு பழமொழி உண்டு’’ என்றது.

‘’அது எப்படி?’’ என்று புறாக்கள் கேட்க, சித்ரகிரீவன் சொல்லத் தொடங்கியது:

Series Navigationமோகம்ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 6) எழில் இனப் பெருக்கம்
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *