வரலாற்றை இழந்துவரும் சென்னை

வரலாற்றை இழந்துவரும் சென்னை
This entry is part 25 of 45 in the series 26 பிப்ரவரி 2012

பழம் பெருமை பேசி மகிழ்வதில் தமிழனுக்கு அலாதி இன்பம். தவறில்லை. ஆனால் பேச்சில் உள்ள ஆர்வம் அந்தப் பெருமைக்குக் காரணமான வரலாற்றுத் தடங்களை அழியாமல் பாதுகாக்கும் செயல் என்று வருகிறபோது எந்த அளவுக்கு இருக்கிறது என்று பார்த்தால் மனசு சோர்ந்துதான் போகிறது.
கால ஓட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி அவசியந்தான். ஆனால் ஒவ்வொரு சாதாரண ஊருக்குமேகூட ஒரு பின்னணியும் அதற்கென்றே ஒரு பிரத்தியேக வரலாறும் வடிவழகும் உண்டு. அது சிதைந்துவிடாமல் வளர்ச்சி அமைவதுதான் முறையாக இருக்கும். அதிலும் சென்னை மாதிரி ஒரு மாநகருக்கென்று இருக்கிற பிரத்தியேக அமைப்பும், தனித் தன்மை யும் வரலாற்றுப் பெருமையுடன் குறிப்பிட்டுப் பேசப்பட வேண்டியவை. இந்தச் சிறப்பு அம்சம் நகரின் நிதானமற்ற அசுர வளர்ச்சியாலும் பொறுப்பற்ற உள்நோக்கங்களாலும் பாதிக்கப்பட்டு விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற பிரக்ஞை எந்த அளவுக்கு இருக்கிறது?
இன்றைய சென்னை நானூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. 1639-ல் ஆங்கிலேயக் கிழக்கு இந்திய கம்பெனி தனது பண்டகசாலைக்காகத் தமிழ்நாட்டின் வட கிழக்கில் வங்கக் கடலோரம் ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டதிலிருந்து, மதராசப் பட்டினமாக அது உருவாகத் தொடங்கியது. முதலில் கறுப்பு ஊர் என்று இழிவாகவும் பிறகு பிரிட்டிஷ் பேரரசர் ஜார்ஜின் முடி சூட்டு விழாவை யொட்டி ஜார்ஜ் டவுன் என்று கெளரவமாகவும் அழைக்கப்பட்ட பகுதி, நேட்டிவ்ஸ் என்று துச்சமாகப் பேசப்பட்ட மண்ணின் மைந்தர்களது வசிப்பிடமாக இருந்தது. இன்றைக்கும் அந்தப் பகுதியில் சாதிப் பெயர் நீக்கத்தின் விளைவாக தம்புத் தெரு லிங்கித் தெரு என்றெல்லாம் சுருங்கிப் போனதன் காரணவான்களான தம்புச் செட்டியும் லிங்கிச் செட்டியும் அன்று கும்பினியாருடன் வரவு செலவு செய்து கொடி கட்டிப் பறந்த வணிகப் பெருமக்கள். அவர்கள் தங்களைத் தம்புச் செட்டி, லிங்கிச் செட்டி என்றுதான் அழைத்துக் கொண்டார்கள். அதைப் பொருட்படுத்தாமல் சாதி மறுப்பு என்ற பெயரில் அவர்களின் பெயரை நம்மிஷ்டத்துக்குச் சுருக்கிவிடுவதும் நகரின் வரலாற்றுக்கு சேதாரந்தான்.

அன்றைய மதராசப் பட்டினத்தில் ஆர்க்காடு நவாபுகளின் மேலாதிக்கம் செல்லாக் காசாகிவிட்ட போதிலும், கும்பினி கவர்னர்மார்களது விசேஷங்களின் போதெல்லாம் அவர்களது பிரசன்னமும் மக்கள் மத்தியில் பெருங்காயம் வைத்த டப்பாவாகச் செல்வாக்கும் ராஜ மரியாதைகளும் அவர்களுக்குச் சாத்தியமாகவே இருந்தன. இதற்கு அடையாளமாக நல்ல வேளையாய் இன்றளவும் பெயர் மாற்றப்படாமல் நீடிக்கும் வாலாஜா சாலையும், மெரீனா கடற்கரை ஓரம் இந்தோ ஸார்ஸெனிக் கட்டிடக் கலை பாணியில் நீலக் கடலை நிமிர்ந்து நோக்கியவாறு எடுப்பாக விளங்கும் சிவப்பு நிறக் கட்டிடங்களும் இருந்து கொண்டிருக்கின்றன.
எனினும், சென்னையின் பாரம்பரியமான கட்டிடங்கள் ஒவ்வொன்றாக மறைந்து வருகின்றன. சென்னைக்கே அடையாLளம்போல் இருந்த மூர் மார்க்கெட் கட்டிடமும் மவுண்ட் ரோடில் இருந்த ஸ்பென்ஸர் கட்டிடமும் இப்போது இல்லை. இக்கட்டிடங்கள் அவை இருந்த பகுதிக்கே ஓர் அழகும் கம்பீரமும் சேர்த்தவை. அவற்றுக்கு பதிலாக இன்று எழுப்பப்பட்டுள்ள மாற்றுக் கட்டிடங்கள் வெறும் வணிகக் கண்ணோட்டத்தில் உருவானவை.
சென்னையின் பாரம்பரியப் பெருமை பேசும் எஞ்சியுள்ள ஒரு சில கட்டிடங்களில் கடைசியாக அழிவுப் பாதையில் அடியெடுத்து வைத்திருப்பது, சேப்பாக்கம் அரண்மனையென்றும் கலாஸ் மஹால் என்றும் மதராசப் பட்டினத்தில் அறியப்பட்டு இன்று தமிழ் நாடு மாநில அரசின் பொதுப் பணித்துறை அலுவலக வளாகமாக மாறிப்போன சிவப்பு நிற இந்தோ ஸார்ஸெனிக் பாணி கட்டிடம். ஏறத் தாழ 225 ஆண்டுகளுக்கு முன் வாலாஜா நவாபால் கட்டப்பட்ட கட்டிடம் இது. சென்னையின் பாரம்பரியக் கட்டிடங்கள் எல்லாம் சொல்லிவைத்தாற்போல் மின்சாரக் கசிவினால் விளையும் தீ விபத்தால் சேதமடைந்து அந்தச் சாக்கில் இடித்துத் தரைமட்டமாகி, அந்த இடத்தில் இரும்பும் காங்க்ரீட்டுமாக ஒரு பிரமாண்ட அடுக்கு மாடிக் கட்டிடம் எழும்பிவிடுவதுபோல் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மின் கசிவால் தீ விபத்துக்குள்ளான சேப்பாக்கம் அரண்மனையின் தலைவிதியும் அமைந்துவிடக் கூடும். ஆனால் தகவல் அறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரம்பரியப் பெருமைக் குரிய கட்டிடங்களை அவற்றின் அசலான வடிவத்திலேயே புனர் நிர்மாணம் செய்வது குறித்துக் கட்டிடக் கலை நிபுணர்களை அழைத்துப் பேசி யிருப்பதாகச் செய்தி வந்திருப்பது ஒரு நல்ல சகுனமாக நம்பிக்கை தருகிறது.
இது இப்படியிருந்தாலும், திடீர் திடீரெனப் பழைய சாலைகளுக்கெல்லாம் முன்யோசனையின்றிப் பெயர் மாற்றம் செய்து, சென்னையின் வரலாற்று அடையாளங்களைத் துடைத்து எறியும் சோகமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
சுதந்திரம் வந்த புதிதில் கரைபுரண்டு ஓடிய உற்சாகத்தில் சில முக்கிய மான சாலைகளின் பெயர்கள் தலைவர்களின் பெயர்களாக மாறின. ஆனால் அவையும் பேச்சு வழக்கில் எம்.ஜி. சாலை என் எஸ் ஸி போஸ் சாலை என்றெல்லாம் சுருக்கப்பட்டு நோக்கம் மறைந்து ஒழிந்தன. மக்கள் மனதில் பதிவு பெறாத அவை, பழைய பெயர்களாலேயே சுட்டப்படும் நிலைமையும் நீடித்துக் கொண்டுதானிருக்கிறது.
இந்தப் போக்கில்தான் அண்மையில், சாந்தோம் எம். ஆர். ஸி. நகரில் தொடங்கி ஆந்திர மஹிள சபா மருத்துவ மனை நாற்சந்தி வரையிலான ஒரு பாதி கிரீன்வேஸ் சாலை டி.ஜி.எஸ். தினகரன் சாலை என மாற்றப்பட்டுள்ளது.
முதலில் தூய தமிழ்ப் பெயர் சூட்டும் ஆர்வத்தில் வரலாற்றுக் கண்ணோட்டம் சிறிதுமின்றி நேர்மொழி பெயர்ப்பாக பசுமை வழிச் சாலை என்று அதன் பெயரை மாற்றினார்கள். கிரீன்வேஸ் சாலையின் மறு பாதி இன்றும் பசுமைவழிச் சாலையாகவே தொடர்கிறது. வாட்டர் ஃபால்ஸ் என்பதை நீர் வீழ்ச்சி என்று சொல்லுக்குச் சொல் மொழி மாற்றம் செய்தது போலத்தான் இதுவும்!
ஆனால் உண்மையில் கிரீன்வேஸ் என்பது 1800-களில் அங்கு வாழ்ந்த எட்வர்டு க்ராஃப்ட் கிரீன்வே என்ற ஆங்கிலேய நீதிபதி ஒருவரின் பின்னொட்டைக் குறிப்பதுதானே தவிர, தனித் தமிழ் ஆர்வலர் நினைத்ததுபோலப் பசுமை வழியை அல்ல!
வரலாற்றுப் பிரக்ஞை இல்லாததால்தான் இப்படிப்பட்ட அபத்தங்கள் நேர்ந்து விடுகின்றன. பெயர் மாற்றத்திற்குள்ளான கிரீன்வேஸ் சாலையில்தான் தமிழ் இசை இயக்கத்தை முன்னின்று நடத்தியவரும், முதல் முதலில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்கலைக் கழகம் ஒன்று தமிழ் நாட்டில் உருவாகக் காரணமாயிருந்தவருமான செட்டிநாட்டு அரசர் ராஜா ஸர் அண்ணாமலை செட்டியார் வாழ்ந்த மாளிகை உள்ளது. அவரது நினைவாகப் பெயர் மாற்றம் செய்திருந்தாலாவது அதிலும் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருப்பதாக ஆறுதல் கொள்ளலாம். ஆனால் தமிழ் நாட்டின் அரசியல், சமூகம், பண்பாடு என எந்தவொரு கோணத்திலும் பங்களிப்பு எதுவும் இல்லாத ஒருவரின் பெயரை சென்னை மாநகராட்சி 2009-ல் அதற்குச் சூட்டி, அப்போதைய மாநில அரசும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டது! டி ஜி எஸ் தினகரன் என்பவர் கிறிஸ்தவ மதப் பிரசாரகராக வாழ்க்கை நடத்தியவர் என்பதற்குமேல் தமிழர் வாழ்வியலுடன் தொடர்பு எதுவும் பெற்றிருந்தவர் அல்லர். கல்வி என்பது வணிக மயமாகிக் கற்பித்தலுக்குப் பதிலாகக் காசு பறிப்பதே குறி என்றாகிவிட்ட கால கட்டத்தில் அவர் தொடங்கிய கல்லூரிகளும் தமிழ் நாட்டின் கல்வித் துறையிலோ பொது வாழ்விலோ நினைவு கூரத் தக்க பணி எதையும் செய்துவிடவில்லை. பிறகு எதற்கு சாதனைகள் பல செய்த அண்ணாமலை அரசரின் பெயரைக் கூட வைக்காமல், தமிழகத்தின் பொது வாழ்வில் எவ்வித முத்திரையும் பொறிக்காத ஒரு பெயரால் கிரீன்வேஸ் சாலை அழைக்கப்பட வேண்டும்?
பாரதத்தின் முதல் நவீன மாநகரம் என்கிற பெருமைக்குரிய சென்னையின் வரலாற்றுத் தடம் மெல்ல மெல்ல அழிந்துகொண்டே வரும் துன்பியலின் மெளன சாட்சிகளாய் நாம் நிற்கிறோம்.

நன்றி: நம்ம சென்னை (ஃபிப்ரவரி 16-29, 2012) மாதம் இருமுறை தமிழ்-ஆங்கிலம் இருமொழி இதழ்,, 70 ஆரிய கெளடா சாலை, சென்னை 600033 nammachennai2009@gmail.com

Series Navigationஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

12 Comments

  1. Avatar Kavya

    மலர்மன்னனின் கட்டுரையும் படமும் ஏதோ இவர் சென்னையின் பாரம்பரியம் அழிகிறதே என்று கவலைப்படுகிறாரோ என்று நினைத்துப்படிக்கும் போது இறுதியில் அது டி.ஜி. தினகரன் சாலையில் போய் முடிந்தவுடன் உள்ளோக்கம் புலனாகிறது. ஏன் இந்த நரித்தனம்? நேரடியாகவே அப்பெயரைப்பற்றியே முழுக்கட்டுரையை வரைந்திருக்கலாமே?

    அது கிடக்க. தில்லியில் ஒரு சாலையின் பெயர் காமகோடி மார்க். அது என்ன பெயரென்று அவ்வூர் மக்களுக்குத் தெரியாது. ஆனால் நமக்குத் தெரியும். காஞ்சி சங்கராச்சாரியார் மார்க் என்றாவது பெயர் வைத்தால் அவர் ஒரு பெரிய ம்ஹான் என்று சொல்லிவிடலாம். காஞ்சி காம கோடி மார்க் என்றால் அந்த மடத்தைப்பற்றியல்லவா ? அம்மடம் தில்லி மக்களுக்கு என்ன செய்தது? இல்லை அவர்களுக்குத்தான் தெரியுமா? இல்லை அத்தெருவில் எங்காவது காஞ்சி மடத்துக்கிளையோ அதன் கோயிலோ உண்டா? ஆமெனில், ஒரு லாண்டமார்க் பெயரெனலாம். ஒன்றுமே இல்லை. வைக்கக்காரணம் அந்நாட்களில் ஜனாதிபதியாக இருந்த ஆர்.வியின் அழுத்தத்தால்.

    இதுவும் கிடக்க. இப்போது சிறிது தள்ளி வருவோம். அங்கே ஒரு தெருவின பெயர் வேதாந்த தேசிகன் மார்க். ஆனால் அத்தேசிகன் யார் என்று அம்மக்களுக்குத் தெரியாது. இருப்பினும் அத்தெருவின் நடுவில் இருப்பது ஒரு தமிழ் வைண்வக்கோயில் மட்டுமன்று; \சிரிரங்கம் ஆண்டவன் ஜீயர் மடமும் உண்டு. எனவே அஃதொரு லாண்ட்மார்க பெயர். கோயிலிருந்தால் அக்கோயில் பெயரை தெருவுக்கிடுவது வழக்கம். சர்ச் இருந்தாலும், மசூதியிருந்தாலும் அப்படியே; ஆயிரம் விளக்கு, மசூதித்தெரு வடபழனி முருகன் கோயிலுக்கு எதிரில் உள்ளது.

    இப்பெயர்களை மக்கள் சட்டை செய்வதில்லை. அவை வெறும் பெயர்கள் அவர்களைப்பொறுத்தவரை. மதச்சாயம் பூசி இசுலாமியரும் கிருத்துவரும் கோல் மூட்டவில்லை.

    இப்போது வருவோம் சென்னைக்கு. டி.ஜி.தினகரன் பெயரில் ஒரு சாலை. நானும் முதலில் பார்த்தபோது ஆச்சரியப்பட்டுபோய்விட்டேன். ஒரு கிருத்துவரின் பெயரை வைக்க விரும்பினால், அது மலர்மன்னன் சொன்னது போல பொதுவாக எல்லாமக்களுக்கும் அல்லது பொது சமூகத்துக்கு ஏதாவது செயதவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் கிருத்துவ பெரியார் தமிழகத்திலோ சென்னையிலோ வாழ்ந்ததில்லையா? நினைவிருக்கட்டும் ஒரு கிருத்துவரின் பெயரில் இசுலாமாபாத்தில் ஒரு சாலை இருக்கிறது. அவர் பாகிஸ்தானியருக்குத் தொண்டுபுரிந்தவர். எல்லாரும் மனமார ஆதரித்தார்கள். அந்நாடு எப்படிப்பட்ட தீவிர இசுலாமிய நாடு ! தினகரன் ஒரு எவாஞ்சலிஸ்டு. பரவலாக கேட்கப்பட்டவர். ஆனால் அவரின் தொண்டு ஒரு மத சமூகத்துக்கு மட்டுமே. எனவே ஏன் அவர் பெயரையிட்டார்கள்? பெரும் தொகை கைமாறியிருக்கலாம்.

    அதே வேளையில் ஒரு தனிப்பட்ட சமூகத்துக்கோ மதத்தினருக்கோ சேவை, அல்லது பிடித்தவராயிருப்பவரின் பெயரை அச்சமூகத்தினர் கணிசமாக வாழுமிடத்து இடலாம். தவறில்லை.

    இப்படியெல்லாம் நேரடியாக எழுதினால் பிறர் தம்மை மதத்துவேசியென்றிடுவார்களோ என நினைத்து சென்னையின் பாரம்பரியத்துக்காக கண்ணீர் விடுவது போல ஏன் நடிக்க வேண்டும்? அந்த நாடகத்துக்கு ஒரு படம் ! அடடே !!

    இதோ நான் ஒப்பனாக சொல்கிறேன். தினகரன் குடும்பத்தினர் ஏதாவது கொடுத்து அழுத்தம் பண்ணி பெயரை வாங்கிவிட்டார்கள். நான் என்ன துவேசி என்று எவர் சொன்னாலும் கவலையில்லை.

  2. Avatar punai peyaril

    மதச்சாயம் பூசி இசுலாமியரும் கிருத்துவரும் கோல் மூட்டவில்லை.– ஆனால் இந்த் இருவரின் குள்ளநரித்தனத்தால் தான் இத் தேசம் இப்படியானது… தினகரன் பெயர், அப்படி வைத்தால் பெரும் பங்கு ஓட்டு கிடைக்கும் என்றே. எஸ் ரா சற்குணம் என்ற ஒருவர் வந்து கருணாநிதி பக்கத்தில் மதநல்லிணக்கம் என்ற பெயரில் நிற்பாரே , அவர் தான் சொல்ல வேண்டும் இது பற்றி…ஆனா, கிரீன்வேஸ் என்று படையெடுத்தவன் பெயரை ஏன் வைக்க வேண்டும்…? அங்குள்ள அடையார் முகத்துவார சாலை என்றிருந்தால், பார்க்கும் மக்களுக்கு இயற்கையின் அற்புத கிரீக் எப்படி அம்பேத்கார் மணி மண்டபம், செட்டிநாடு வகையறா பள்ளி, கோவில், சண்டிவி பில்டிங்க் அப்புறம் செம்மொழியோ இல்லை தொல்காப்பிய பூங்காவோ என்ற பெயரில் பொம்மை பறவைகள் கூடமாகிப் போனது புரியும். இதில் மத வேற்றுமைகளே கிடையாது. ம.மவிற்கு ஒன்று, ஆடிப் பெருக்கு என்ற பெயரில் அமாவாசை திதி என்ற பெயரில் நீர் நிலைகளை நாசம் செய்யும் இந்து மதத்தினருக்கு மன்னிப்பே கிடையாது… மம தான் நடுநிலைவாதி என்றால், காஞ்சிமடத்தின் “காம”கேடியை பற்றி எழுதவும் வேண்டும். நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்று வாழ வேண்டும்.

  3. Avatar Kavya

    தினகரன் நாமத்தைச்சூட்டினால் ஓட்டுக்கள் கிடைக்குமென்பது அதீத கற்பனை. அவருக்கு கிருத்துவர்கள் மத்தியில் என்ன பெயர் தெரியுமா? எப்படி காஞ்சி ஜயேந்திரருக்கு இன்று இந்துக்களிடமோ அப்படி. பணத்தைப் பெருக்க இயேசு ஜீவிக்கிறார். இன்று பெர்கமான்ஸிடமும் சாம் செல்லத்துரையிடனும்தான் செம கூட்டம். But the late DGS Dinakaran was an attractive preacher more than others. But his son Paul is not so.

    ஆயினும் அவர் குடும்பத்தாருக்கு வேண்டியவர்கள் பெருந்தலைகள்; அவர்களுள் சற்குணமும் ஒன்று. சி.எஸ்.ஐ நாடார்கள் சென்னையில் பரவலாக அதிகமில்லை. தாம்பரத்தில்தான் கொஞ்சம் அதிகம் அவர்கள். எனவே ஓட்டு வங்கியில்லை. தென்மாவட்டங்களில் பலமான ஓட்டுவங்கி அவர்கள். ஆனால் அதற்கு சி.எஸ் அய் நாடார்களில் எவ்வளவோ பெரியா ஆட்கள் இருந்தார்கள். அவர்கள் பெயரை வைத்தால்தான் அந்த ஓட்டுவங்கியைப்பெறலாம். நாகர்கோயில் பேருந்து நிலையத்து அண்ணா, பெரியார் என்றெல்லாம நாமங்கள் கிடையா. பிஷப் கிரிஸ்டோபர் பேருந்து நிலையம். இதுவே அந்த ஓட்டு வங்கியைப்பெறும். மேலும் கால்டுவெல்லின் வீட்டை நினைவாலய்ம் ஆக்கியது அந்நாடார்களிடம் செல்வாக்கைப்பெறத்தான்.

    தினகரன் நாமத்தைச்சூட்டியதற்கு வேறு காரணங்கள் இருக்கவேண்டும்.

    ஒரு அரசு சிலவேளைகளில் லாபிகளைத் திருப்திபடுத்தித்தான் தீரவேண்டும். அவ்வேளைகளில் இதுவும் ஒன்று. தமிழ்பார்ப்பனர்கள் லாபி தில்லியில் மஹாபிரசித்தம். அவர்களுக்கு வேண்டியவர்களில் நாமங்கள் சாலைகளுக்கிடப்படும்.

    சென்னையில் அம்பிகா, ராதா சஹோதரிகள் தங்கள் இல்லம் இருக்கும் தெருவுக்கு அவர்களின் தாயாரின் பெயரைச் சூட்டும்படி செய்துவிட்டார்கள். எப்படியிருக்கு? கேரளாவில் இவர்களால் இப்படி முடியுமா? இதற்கு தினகரன் நாமம் பெட்டராகத்தான் படுகிறது.

  4. Avatar Kavya

    கிரீன்வேஸ் சாலை அப்படியொரு ஆங்கிலேயரின் நாமத்தாலா என்பதெல்லாம் எவருக்கு வேண்டும்? எனவே அதனை பசுமை வழிச்சாலை என்ற தமிழாக்கம் செய்ததைப்பாராட்டுகிறேன்.

    வெள்ளைக்காரர்களில் பெயர்களில் சாலைகள் இருந்தால் பிரச்சினையில்லை. ஆனால் தமிழர் ஜாதிப்பெயர்களில் இருக்கும்போதுதான் பிரச்சினை.

    நாடார் தெரு, முதலி தெரு, செட்டி தெரு, ஐயர் தெரு, பிள்ளைத் தெரு என்றிருக்கும் போது அப்பெயருடையவர் அனைத்து ஜாதிமக்களிடம் அன்பைப்பெற்றவராக இருக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சி துறைமுகம் எனப்பெயரிட்டதற்கு அவ்வூர் மக்கள் எவரிடம் எந்தவித எதிர்ப்பும் இல்லை. எல்லாரும் ஒரு மனதாக வரவேற்றார்கள். அதே வேளையில் மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத்தேவரின் பெயரை வைக்க வேண்டுமென அவர் ஜாதி அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கிவருகின்றன. எதிர்ப்பும் வலுக்கிறது. அரசு வைத்தால் பிரச்சினைதான். தேவர் அவர் ஜாதிமக்களுக்கு மட்டுமே தலைவராக விளங்கினார். பொதுச்சொத்துக்கு அவர் பெயரை வைப்பது எதிர்க்கப்படும். அதே வேளையில் மதுரையில் பத்து பூங்காக்கள் இருந்தால், அதில் ஒன்றுக்கு இவர் பெயரை சூட்டினால், மற்றவைகளுக்கு பிறர் பெயரைச்சூட்டும்போது பங்கம் வராதல்லவா? ஆனால் இருப்பதோ ஒரே ஒரு விமான நிலையம்.

    வைத்தியநாத ஐயரின் பெயரைச்சூட்டினால் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள். ஐயர்களைத்தவிர. வரும் பயணிகள் இவர் யாரென்று கேட்டுத்தொலைப்பார்கள். நாமும் பழைய கதைகள் சொல்லவேண்டும். அப்படியா நடந்தது என மூக்கில் விரலை வைப்பார்கள். இதெல்லாம் தேவையா? எங்க ஜாதியை இவ்வளவு கேவலப்படுத்த வேணுமா? என்று ஐயர்கள் கேட்பார்கள். மதுரை மீனாட்சியம்மன் கோயில் சைவக்கோயில். அங்கு பூஜை செய்பவர்கள் ஐயர்கள். இவர்களிடம்தானே வைத்தியநாதர் சண்டைபோட்டார் இல்லையா?

    கடைசியில் இப்பெயரும் பிர்ச்சினதான். மதுரை விமான நிலையம் என்றே இருக்கட்டும்.

  5. Avatar punai peyaril

    தேவர் அவர் ஜாதிமக்களுக்கு மட்டுமே தலைவராக விளங்கினார்.— வரலாறு தெரியாத வெட்டிப்பேச்சு. தேவரை சுற்றி இருந்தவர்கள் பிள்ளை, ஆதி திராவிடர் என உண்டு. நேதாஜி இயக்கத்தில் இருந்தவர் , ஐ என் ஏ விற்கு அதிகமான ஆட்களை அனுப்பியவர் . இவர் தேச பக்தர். காவ்யா காட்டுத்தனமாக பேச வேண்டாம்…

  6. Avatar punai peyaril

    தேவர் அதிகமாக நாட்களை நகர்த்திய கண்ணகி பிரஸ் ஓனர் என்ன ஜாதி என்று காவ்யாவிற்கு தெரியுமா…? தேவர் தனது சொத்துக்களை அதிகமாக எழுதி வைத்தது ஆதிதிராவிடர்களுக்குத் தான். வ உ சி யே இங்கு ஜாதிய அடையாளம் ஆகிப் போன வழியில் தான் தேவரையும் ஆக்கினார்கள். மேலும் அவர் மறவர், இன்றோ கள்ளர், அகமுடையோர் கூட தேவரை படமாக்குகிறார்கள். அவரை போற்றி பாடடி பெண்ணே என்று வாழ்த்தியவர் கமல் – அய்யங்கார். அந்த பகுதியாளர் என்பதால், தேவர் பற்றி தெரியும்… காவ்யாவிற்கு என்சைக்கிளோபீடியா என்று நினைப்பு.. அனைத்தும் அறிந்தவர் போல் பேச வேண்டாம்…

  7. Avatar punai peyaril

    அய்யா அனைத்தும் தெரிந்த சிகாமணி, ஈ சி ஆரில் போய் பாருங்கள் – சி எஸ் ஐ நாடார்களின் ஆதிக்கத்தை… உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது என்பது போன்று பேசி திரிய வேண்டாம்…

    • Avatar Kavya

      ஒரு சமூகம் என்பது அனைத்து தரத்திலும் உள்ளவர்களை அடக்கியது. சி.எஸ்.ஐ நாடார்களில் கடைநிலையிலுள்ள பனையேறி நாடார்களையும் கூலி வேலை செய்யும் நாடார்களையும் கன்யாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காணலாம். நாடார்கள் என்றால் சரவணபவன் முதலாளியும் சரவணா ஸ்டோர்ஸ் முதலாளியும் தினத்தந்தி முதலாளிகளுமே கிடையாது. அனைவரும் சேர்ந்ததே ஒரு ஓட்டு வங்கி. அப்படிப்பட்ட ஸி.எஸ்.ஐ நாடார்கள் ஓட்டு வங்கி சென்னையில்லை.

  8. Avatar Kavya

    அப்படியானால் மதுரை மக்கள் அனைவருமே அவர் பெயரைச்சூட்ட தமிழக அரசிடம் கேட்கலாமே? ஏன் தேவரியக்கம் மட்டுமே கேட்கிறது?

  9. Avatar punai peyaril

    அது தான் வ உ சி, தேவர், காமராஜர் கக்கன் இவர்களுக்கு நேர்ந்த அவமானம். ஜாதிய தலைவர்கள் போல் இந்த தலைமுறைக்கு ஆகிப் போனது. அப்புறம் அய்யா எங்களுக்கும் பனையேறி நாடார்கள், அப்புறம் காமராஜர் சிஎம் ஆக இருந்த போது அவரது அறையிலிருந்து போன் செய்து பின் வாங்கிக் கட்டிக் கொண்ட நாடார் தலைவர், ஐஜிஆக இருந்து இனம் பாசம் கொண்டிருந்த நாடார் என்று பல ஆழமாகத் தெரியும்.. கம்பு சுத்தாமல் விஷயத்தில் நிலை கொள்ளுங்கள். சென்னையில் சி எஸ் ஐ நாடார் ஓட்டு வங்கி இருக்கிறது அது போக தென்ன மரத்தில தேள் கொட்டின கதையா ஓட்டு அங்கிங்கெனாத படி இருக்கும். அது சரி எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் நீங்க தானோ…?

  10. Avatar punai peyaril

    கூலி வேலை செய்யும் அய்யர்கள், பார்பர் ஷாப் வைத்திருக்கும் பார்ப்பான்கள் என்று உண்டு. அய்யர்கள் லா காலேஜில் சேர்ந்த காலங்களில் ரவுடிகள் கம்மியாக லா படித்தார்கள். இன்று நம்ம ஜாதியிலும் தேறாத கேஸிங்க தான் அதிகமாக லா காலேஜில்.. இவனுங்க தான் நாளைக்கு நமக்கு நீதி வழங்கப் போகும் நீதிமான்கள். அய்யருங்களை விட இவனுங்கிட்ட போய் நிற்கிறது தான் கேவலமா இருக்கும். இன்னும் இருவது வருடம் கழித்து கோர்டிற்கும் கட்டபஞ்சாயத்து கேடி இடத்திற்கும் வித்தியாசம் இல்லாம போகப் போகுது.. அப்ப சொல்வீங்க… அய்யருங்கல விரட்டின சாபமோ என்று….

  11. Avatar Sathyan. S

    Looks like leadership is a rare phenomenon among Tamils, who are, and who will remain fragmented on caste and religious lines. Anyway a pig stye will remain a pig stye, no matter, how it is called or identified. I am feeling very ashamed to be a Tamil nowadays. From the first citizen to the beggar in the streets of Chennai, no one is identifiable.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *